I LOVE TAMIL


Wednesday, January 21, 2009

ஊருக்குத்தான் உபதேசமா!

ஊருக்குத்தான் உபதேசமா!

மக்கள் மன்றம் பல விசித்திரமான வழக்குகளை சமீபகாலமாகச் சந்தித்து வருகிறது. அதில் ஒன்றுதான் நீதித்துறைக்கும், தலைமைத் தகவல் ஆணையத்துக்கும் இடையில் நடைபெறும் ஒரு விவாதம். நீதிபதிகள் மக்கள் மன்றத்தின் பார்வைக்கும் கேள்விக்கும் அப்பாற்பட்டவர்கள் என்கிற பாதுகாப்பு வளையம் உடைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது இந்தப் பிரச்னை.

1997-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி நடந்த அகில இந்திய நீதிபதிகள் மாநாட்டில், எல்லா நீதிபதிகளும் தங்களது சொத்துக் கணக்கைத் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி எல்லா நீதிபதிகளும் தங்களது சொத்து விவரங்களைத் தந்திருக்கிறார்களா? அப்படியென்றால், அந்த விவரங்கள் தனக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு ஒன்றைச் சமர்ப்பித்தார் எஸ்.சி. அகர்வால் என்பவர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இருக்கும் இந்தத் தகவலை யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தலைமை நீதிபதி தர மறுத்துவிட்டது முதல், விவாதம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

தலைமைத் தகவல் ஆணையர் இந்த விஷயத்தில் மனுதாரரின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இருக்கும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை மனுதாரருக்குத் தரும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதை எதிர்த்து, இப்போது உச்ச நீதிமன்றப் பதிவகம், தலைமைத் தகவல் ஆணையரின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் அல்ல என்றும், அதனால் நீதிபதிகள் பற்றி விவரங்களைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மனுதாரருக்குத் தர வேண்டிய அவசியம் கிடையாது என்றும், அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றப் பதிவகமும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகமும் வேறு வேறு என்றும் முன் வைக்கப்பட்ட வாதங்களைத் தலைமைத் தகவல் ஆணையர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பது பொதுநன்மை குறித்த தகவல்களைப் பெறுவதற்காகத்தானே தவிரத் தனிநபர் பற்றிய விவரங்களைப் பெறுவதற்காக அல்ல என்பது நீதிமன்றத்தின் வாதம். மேலும், தன்னிடம் தனது சக நீதிபதிகள் நம்பிக்கையின் பேரில் அளித்த தகவல்களைப் பொது மக்களுடன் பகிர்ந்து கொள்வது நம்பிக்கைத் துரோகம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் சட்டத்தின்படியும், நீதிபதிகள் நியமனம் மற்றும் செயல்முறை சட்டப்படியும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கையோ, ஏனைய விவரங்களையோ தலைமை நீதிபதியிடம் தரவேண்டிய அவசியம் கிடையாது என்பது நீதிபதிகள் தரப்பு வாதம். அகில இந்திய நீதிபதிகள் மாநாட்டில் அதிகாரபூர்வமற்ற தீர்மானமாகத்தான் சொத்துக் கணக்கைத் தலைமை நீதிபதிக்கு சமர்ப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதே தவிர எந்தவிதத் தீர்மானமோ சட்டமோ நீதிபதிகளைக் கட்டுப்படுத்தாது என்பது நீதித்துறையினரின் வாதம்.

இதெல்லாம் சரி. அரசியல் சட்டம் கூறவில்லை, சட்டத்தில் இடமில்லை, சம்பிரதாயம் சம்மதம் தரவில்லை, எங்களைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்றெல்லாம் இனியும் எத்தனை நாள்கள்தான் நீதித்துறை கூறிக்கொண்டு மக்களின் கண்காணிப்பு வளையத்துக்கு உள்படாமல், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மனநிலையில் தொடரப் போகிறது?

அரசியல்வாதிகளின், அதிகார வர்க்கத்தின், ஆட்சியாளர்களின் அழுக்கையெல்லாம் அலசிப் பிழிந்து, குற்றம் காணும்போது துணிந்து குட்டி, தடம் புரளும்போது தடுத்து நிறுத்தித் தட்டிக் கேட்கும் நீதித்துறைமீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது ஒருபுறம்.

கையும் களவுமாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஊழலில் ஈடுபட்டிருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டது. ஊழல் நீதிபதிகளை என்ன செய்வது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே கையைப் பிசைந்து கொண்டு பரிதாபமாகத் தனது இயலாமையை வெளிப்படுத்திய காட்சியும் அரங்கேறியது.

நீதிபதியின் நேர்மை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் நீதிபதியின் தீர்ப்பு விமர்சனத்துக்கு உட்பட்டதுதான். ஊருக்கு உபதேசம் செய்பவர்கள், ஒழுக்கசீலர்களாகவும், உத்தமர்களாகவும் இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் உத்தமர்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடந்து காட்டவும் வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கூடத் தனது சொத்துக் கணக்கை மக்கள் மன்றத்தில் வைத்தாக வேண்டும் எனும்போது, பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும் மட்டும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பது என்ன நியாயம்?

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும் என்பார்கள். அதேபோல, நீதிபதிகளும் தங்களது சொத்துக் கணக்கை மக்கள் பார்வைக்கு உட்படுத்தி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? ஊருக்குத்தானா உபதேசம்?

Thanks - www.dinamani.com - Monday January 19 2009

Thursday, January 1, 2009

இன்சூரன்ஸின் நோக்கம் என்ன?

இன்சூரன்ஸின் நோக்கம் என்ன?

வாகன விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அளித்துள்ள தீர்ப்பு சற்றே வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. வாகன உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும், வாகனத்தில் "ஓசி'யில் உட்கார்ந்து செல்பவர்களும் ஒருங்கே கருத்தில் கொள்ள வேண்டிய தீர்ப்பு இது.

மோட்டார் சைக்கிள் (பைக்) சொந்தக்காரர் ஒருவர் தன்னுடைய மகனிடம் வண்டியை ஓட்டக்கொடுத்தார். அந்த இளைஞர் தனது நண்பனை பின்னால் உட்காரவைத்து ஓட்டிச் சென்றார். திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது. அதனால் "பைக்' ஓட்டிச் சென்ற இளைஞர் படுகாயம் அடைந்து இறந்தார், பின்னால் உட்கார்ந்திருந்தவர் காயம் அடைந்தார்.

அந்த தகப்பனார் தன்னுடைய மகன் இறப்புக்கு இழப்பீடு கேட்டு மனுச் செய்தார். "நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்தது. தந்தைக்கு மகன் சொந்த உறவு என்பதால், அவரை ""மூன்றாவது நபராக'' கருத முடியாது, எனவே இழப்பீடு தர முடியாது என்று கூறியது.

அவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அவர் மீது பரிதாபப்பட்டு, இழப்பீடு தருமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனம் உடனே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா, சிரியாக் ஜோசப் அடங்கிய "பெஞ்ச்' விசாரித்தது. ""இன்சூர் செய்தவரின் மகன் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது நடந்த விபத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமா?'' என்பதுதான் இப்போதைய கேள்வி என்ற பெஞ்ச், 2006-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கை சுட்டிக்காட்டியது.

திலக் சிங் என்பவர் யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு அது. அந்த வழக்கில், இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்திருந்தவர் அடைந்த காயத்துக்கு நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் ஆகியிருந்தது. ""2 சக்கர வாகனத்தின் பின்னால் உட்காருபவர், ஓட்டுபவர் இரக்கம் காட்டி ஏற்றிச் செல்வதால் (ஓசியில்) பயணிப்பவர் ஆவார்; எனவே அவருக்கு இழப்பீடு பெற தகுதி ஏதும் கிடையாது'' என்று அந்த வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டது. இதையே உச்ச நீதிமன்ற "பெஞ்ச்' இந்த வழக்கிலும் தீர்ப்புக்கு முன்னுதாரணமாகப் பின்பற்றியிருக்கிறது.

2 சக்கர வாகனங்களை இன்சூர் செய்யும்போது அந்த வண்டியின் இழுவைத் திறன், அதன் வகை, அதன் விலை மதிப்பு ஆகியவற்றுடன் அதில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. அப்படி இருக்கும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதிராக இருக்கிறது. 2 பேர் செல்லக்கூடிய வாகனம் என்று குறிப்பிட்டு இன்சூர் செய்வது எதற்காக?

""தற்செயலாக ஏற்படும் விபத்துகளுக்கு கம்பெனி ஜவாப்தாரியல்ல'' என்ற பழைய கண்ணோட்டமே இத்தீர்ப்பில் வெளிப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஆயினும் இத் தீர்ப்பானது முக்கியமான ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறது. வாகன உரிமையாளரைத் தவிர மற்றவர்களுக்கு இழப்பீடு பெற உரிமையில்லை என்பதே அது.

வாகன விபத்துகளும் அதிகரித்து, வழக்குகளும் அதிகரித்துவரும் இந்நாளில் மத்திய சட்ட அமைச்சகமும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அமர்ந்து இத் தீர்ப்பின் அடிப்படையில் விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். மருத்துவச் செலவு அல்லது மரணம் ஆகியவற்றால் வேதனைப்படும் நிலையில் இத்தகைய நிவாரண மறுப்பு வேதனையை அதிகப்படுத்தவே செய்யும்.

மற்றொன்றையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறோம். வாகன விபத்து வழக்குகளில் வாகன ஓட்டிகளை மட்டும் போலீஸôர் எதிரிகளாகச் சேர்க்கின்றனர். சாலையை மோசமாக வைத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையினரையும், போதிய விளக்கு வசதி செய்யாத உள்ளாட்சிமன்ற அதிகாரிகளையும் விட்டுவிடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் பல இன்சூரன்ஸ் துறையில் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்கி இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சட்டதிட்டங்களும், அரசின் கட்டுப்பாடும் இல்லாமல் போகுமானால், தீர்ப்புகள் மட்டுமல்ல, அரசாங்கமே வெகுஜன விரோத ஆட்சியாக மாறிவிடும் ஜாக்கிரதை! இதனால் விபத்துகளுக்கு வாகனங்களின் நிலையும் வாகன ஓட்டிகளும்தான் காரணம் என்ற பிரமை ஏற்பட்டு விடுகிறது. இதில் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவையும் சேர்ப்பது விரும்பத்தக்கது.

Thanks - www.dinamani.com - 31.12.2008