I LOVE TAMIL


Monday, November 16, 2009

அபாயத்தின் அறிகுறி!

வளிமண்டலம் மாசடைந்து புவிவெப்பம் அதிகரிப்பது உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் பாதிக்கிறது என்பது தெரிந்த விஷயம். நிலத்தில் வாழும் உயிரினங்களைவிட மிகஅதிகமாகப் பாதிக்கப்பட இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான் என்பது பெரிய அளவில் ஏன் நம்மைக் கவலைப்பட வைக்கவில்லை என்பது தெரியவில்லை.


அண்மையில் மீன் மற்றும் மீனளம் (ஃபிஷ் அண்ட் ஃபிஷரீஸ்) என்கிற மேலைநாட்டுப் பத்திரிகை ஒன்றில் படித்த விஷயம், நம்மைத் திடுக்கிட வைக்கிறது. புவிவெப்பமாதல் காரணமாக பல்லுயிர்பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் மீன் இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படவுள்ளன என்பது பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறது அந்தப் பத்திரிகை.

கடல் நீரின் தட்பவெப்பத்தைப் பொறுத்துத்தான் பலவகை மீன் இனங்கள் அந்தந்தப் பகுதியில் காணப்படுகின்றன. தட்பவெப்பம் மாறும்போது, இந்த மீன் இனங்கள் அங்கே வாழ முடியாமல், சாதகமான தட்பவெப்பம் நிலவும் பகுதியை நோக்கி நகர வேண்டும்; இல்லாவிட்டால் அழிந்துவிடும் அபாயம்தான் ஏற்படும்.

குறிப்பாக, பூமத்திய ரேகையையொட்டிய, வெப்பம் அதிகமுள்ள கடல் பகுதியில் காணப்படும் மீன் இனங்கள், புவி வெப்பமாவதைத் தொடர்ந்து குளிர்ப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தாக வேண்டும். அப்போதுதான் தங்களது உடல்வெப்பத்தை தகவமைத்து வாழ முடியும். ஆனால், துருவப் பகுதிகளில் உள்ள குளிரைத் தாங்கி இந்த மீன் இனங்களால் வாழ முடியுமா என்பதும் சந்தேகம்தான்.

துருவப் பகுதிகளில் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவு. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள், புவி வெப்பமாதலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் மீன்களின் எண்ணிக்கையே குறைவுதான் என்பதால் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்பதும் ஆறுதல்.

வெப்ப மண்டலங்களிலும், துருவப் பகுதிகளுக்குக் கீழேயுள்ள பிரதேசங்களிலும் ஏற்பட இருக்கும் புவிவெப்ப மாற்றங்கள், ஏறத்தாழ 60 விழுக்காடு மீன் இனங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் என்பதுதான் அச்சப்பட வைக்கும் விஷயம். இந்த மாற்றம், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். கடலின் ஆழத்தில் அல்லது மேற்புறத்தில் வாழும் மீன்கள் எவையாக இருந்தாலும் பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உடனடி பாதிப்பு கடலின் மேற்பகுதியில் வாழும் மீன் இனங்களுக்குத்தான். குறைந்தது 600 கி.மீ. தூரத்துக்காவது இடம் பெயர்ந்தால் மட்டுமே வெப்பப் பகுதியில் வாழும் 90% மீன்இனங்கள் உயிர்வாழ முடியும் என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வுக்கட்டுரை.

இந்தப் பிரச்னை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் அச்சுறுத்தக் காரணம், மீன் இனங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் உலகில் உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதுதான்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். மீன்கள் கிடைக்காதென்றால் பல மீனவர் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நேரும்.

வளர்ந்த நாடுகளில் சுமார் 28 கோடிப் பேர் தங்களது தினசரி உணவில் மீனைச் சேர்த்துக்கொள்கிறார்கள். மீனுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமானால், அதன் நேரடி விளைவாக மாமிசத் தேவை அதிகரிக்கும். உலகம் புதிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பயமுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், புவிவெப்பமாதலால் மீன் வளமும் குறையுமேயானால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மேலும், மீன் பிடிப்பு குறையக் குறைய இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பும், மீனவர்களுக்குத் தொழில்நசிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இப்பொழுதே கடலில் முன்பு போல மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறை நிறையவே இருக்கிறது. இந்நிலையில், புவி வெப்பமடைதலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பும் கடல்மீன்களுக்கும் அதன் இனப்பெருக்கத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுமெனில், விளைவுகள் படுமோசமாக மாறிவிடும்.

இதன் உடனடித் தாக்கம் உணவுப் பஞ்சம். தொடர் விளைவு, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு நிரந்தரப் பாதிப்பு. உலக நாடுகள் ஒன்றுகூடி உடனடியாகத் தீவிர ஆலோசனைகளை நடத்தியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


Thanks to : www.dinamani.com - 16 Nov 2009

கரையும் மலைகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தாலும், 40-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும்!


அதிக அளவு மழை பெய்திருப்பதை நிலச்சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறினாலும், இதை இயற்கையின் பேரிடர் என்பதைக் காட்டிலும், மானுடத்தின் பிழை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

1994-ல் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில், மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவின் போதே, இதற்கான காரணங்களையும், இனிவரும் காலங்களில் எத்தகைய அணுகுமுறை மூலம் இதைத் தவிர்க்க முடியும் என்பது குறித்தும், பல்வேறு அமைப்புகள் கருத்துத் தெரிவித்த பிறகும், அது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வேறு என்னதான் சொல்ல முடியும்?

நீலகிரியில் நிலச்சரிவு என்பதே 1970-க்குப் பிறகுதான் சிறிய அளவில் ஏற்படத் தொடங்கியது.

நீலகிரியில் உள்ள குன்றுகள் அனைத்துமே முழுக்கமுழுக்கப் பாறைகளால் அமைந்தவை அல்ல. பெரும்பாலான குன்றுகள் கால்பங்கு பாறை, முக்கால் பங்கு மண்ணாக இருப்பவை. சில இடங்களில் பாறைகள் பாதி, மண் பாதி கலந்து நிற்கிறது. அந்தந்தக் குன்றுகளில் உள்ள பாறை, மண் விகிதம் மற்றும் கடல்மட்டத்தின் உயரத்துக்கு ஏற்ப தனக்கான தாவரங்களையும் மரங்களையும் நீலகிரி மலை தனக்குத்தானே வளர்த்து செழித்திருந்தது - திப்பு சுல்தானிடமிருந்து பிரிட்டிஷ் அரசின் கைக்கு மாறும்வரை.

பிரிட்டிஷ் அரசின் அன்றைய கோயமுத்தூர் கவர்னர் ஜான் சலைவன் இந்த மலைக்கு முதலில் சென்ற பிரிட்டிஷ் அதிகாரி. மலையின் அழகும், அதன் குளுமையும் பிடித்துப்போனதால், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான கோடை வாசஸ்தலமாக மாற்றினார். சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் அதிகாரிகள் வருவதற்காகவே மலை ரயில் பாதை (இரு தண்டவாளங்களுக்கு இடையே பல்சக்கரங்களுடன் ஒரு தண்டவாளம் இருக்கும் வகையில்) அமைக்கப்பட்டது. கவர்னர் சலைவனின் இந்த ஊடுருவலை மலைவாழ் மக்களான படுகர், தோடா இனத்தவர் எதிர்த்தனர். அந்தப் பழங்குடி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதான் தனது விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடிந்தது.

கோடை வாசஸ்தலம் என்பதோடு, இங்கே தேயிலை பயிரிட முடியும் என்பதையும் கண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக காடுகளை அழித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த மலையின் பாறை - மண் கலப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் கிடைத்த இடங்களையெல்லாம் தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காகக் காட்டை அழித்தனர்.

1970-களில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்ததால் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. எத்தகைய மழையிலும் வேர்களால் மண்ணைப் பிடித்துக் காத்துநின்ற மரங்களும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டபிறகு, மழையில் வெறும் மண் கரைந்தது. நீர் ஊறி, ஓதம் தாளாமல் மண்முகடுகள் சரிந்து, மனிதர்கள் இறப்பது வாடிக்கையானது. நீலகிரியின் பல்லுயிர்ப்பெருக்கம் (பயோ டைவர்சிட்டி) முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.

தேயிலைத் தோட்டங்களுக்காக மலை அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, சுற்றுலாத் தலமாக மாறியதால் பயணிகள் எண்ணிக்கை பலநூறு மடங்கு அதிகரித்தது. இவர்களுக்காக காடுகள் மறைந்து, கட்டடங்கள் முளைத்தன. உதகை, குன்னூர் இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 500 விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன. சரியான கழிவுநீர் வாய்க்கால்கூட உதகை, குன்னூரில் இல்லை என்பது சிக்கலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.

1994 மரப்பாலம் நிலச்சரிவின் போதே, தொலையுணர் தொழில்நுட்பத்தின் மூலம் மலையின் தன்மையையும், காட்டின் அளவையும் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தொலையுணர் தொழில்நுட்பத்தில் பலபடிகள் முன்னேறியுள்ள நமக்கு, நீலகிரி மலைகளின் வகைகளையும், எத்தகைய காடுகள் அங்கே இருந்தால் நிலச்சரிவு ஏற்படாது என்பதையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

ஆக்கிரமிப்பாலும், காடு அழிப்பாலும் முற்றிலும் மாறிக்கிடக்கும் "ஒத்தக் கல் மண்டூ' என்கிற உதகமண்டலம், குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைகளில் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகள் வழியாக மழை நீர் கீழே இறங்குகிறது என்பதைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் நீர் வெளியேற வாய்க்காலும், மண்கரையாமல் இருக்கக் காடுகளும் வளர்க்க முயல வேண்டும்.

பாறையின்றி மண்மேடுகள் மட்டும் இருக்கும் பகுதிகளில் வீடுகள் கட்டத் தடை விதிப்பதும், போக்குவரத்து வசதி என்ற பெயரில் நீலகிரியில் புதிய சாலைகள் அமைப்பதைக் கைவிடுவதும்கூடப் பயன்தரும்.

நீலகிரி மலையில் சமவெளியாகப் பரந்து கிடக்கும் புல்வெளிகூட, தன் வேர்களால் அந்த மண்மலையைத் பிடித்துக் காத்து நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான், மலையரசி "கரையாமல்' நிற்பாள்; மனிதரையும் அழ வைக்க மாட்டாள்.

Thanks to : www.dinamani.com - 13 Nov 2009

சிக்கலில் "சிங்காரா' காடுகள்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் முக்கியப் பகுதியான சிங்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிப்புறப் பகுதியாகவும் இந்தப் பகுதி அமைந்துள்ளது.
  கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் வனப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான யானைகள் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகச் செல்லும் வழித்தடத்தில் முக்கியப் பகுதியாக சிங்காரா அமைந்துள்ளது.
  676 அரிய வகைத் தாவரங்கள், பூச்சிகள் முதல் யானைகள் வரையிலான 173 அரிய வகை உயிரினங்கள் தங்களது வாழ்வாதாரமாக சிங்காரா வனப்பகுதியை நம்பியுள்ளன.
  உயிரியல் மற்றும் சூழலியல் அடிப்படையில் மிகமுக்கியமான பகுதியாகக் கருதப்படும் சிங்காரா பகுதியில், அணுத்துகள்கள் குறித்த உயர் ஆய்வுகளை மேற்கொள்ள "நியூட்ரினோ' ஆய்வுக்கூடத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து அணுசக்தி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 20 நிறுவனங்கள் சார்பாக அணுசக்தித் துறை மூலம் இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  சிங்காரா வனப்பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் ரூ. 917 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள, இந்தத் திட்டத்துக்காக அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு 35 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்படும். இதன் வழியாக சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடப் பணிகளுக்காகப் பல ஆயிரம் டன் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்.
  மேலும், இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் அதற்கு நாளொன்றுக்கு 3.42 லட்சம் லிட்டர் தண்ணீரும், 3 மெகாவாட் மின்சாரமும் தேவைப்படும் என திட்டத்தை உருவாக்கியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
  இவை எல்லாம் நிகழ்ந்தால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் பேராபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
  நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
  நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டத்தை எவ்விதச் சிக்கலும் இன்றி நிறைவேற்ற ஒத்துழைப்புக் கோரி தமிழக முதல்வரை அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்தார். ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு வலுவாக உள்ள நிலையில் தமிழக அரசு இதில் எந்த முடிவையும் எடுக்க இயலாது என முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாயின.
  வனப்பகுதி நிலங்களை இந்தத் திட்டத்துக்காக அளிக்க வேண்டும் என அணுசக்தித் துறையின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி கடந்த செப்டம்பரில் தெரிவித்தார்.
  ஆனால், "நியூட்ரினோ' ஆய்வுக்கூடம் அமைக்க சிங்காராவே சிறந்த இடம் என மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் கருத்தை மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
  இது தமிழக அரசு மட்டுமல்லாது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  இதேபோல, கால் நூற்றாண்டுக்கு முன்னால், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் குந்திப்புழா பகுதியில் நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் அணை கட்டுவது உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. பறவைகள் ஆய்வாளர் சலிம் அலி, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் உள்ளிட்ட வல்லுநர்கள் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியை ஆய்வு செய்து, இந்தப் பகுதியில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், இதனை தேசியப் பூங்காவாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அறிக்கை அளித்தனர்.
  இதன் பின்னர் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசு கேரள மாநில அரசை வற்புறுத்தியது. இதையடுத்து, அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
  கால் நூற்றாண்டுக்கு முன்னால், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டத்தை தடுத்த மத்திய அரசு, இன்று தமிழக அரசின் கருத்தையும், மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பது ஏன்?
  1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அமைதிப் பள்ளத்தாக்கின் சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறை இன்று சிங்காராவை பாதுகாப்பதில் காணாமல் போனது எப்படி?
  இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அணுசக்தித்துறை வளர்ச்சி தேவைதான் என்றாலும், அதற்காக அடிப்படை வாழ்வாதாரமான சுற்றுச்சூழலை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்பதே உண்மை.
  ஆட்சியாளர்களால் அழிக்கப்பட இருந்த அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போதாவது ஆட்சியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து திருந்துவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.



Thanks to : www.dinamani.com - 14 Nov 2009

Friday, November 6, 2009

பயன்படாத பயிர்க் காப்பீடு

பி.எஸ்.எம்.ராவ்
நாட்டின் 100 சதவீத உணவுத் தேவையைப் பூர்த்தி  செய்வதுடன், கிட்டத்தட்ட 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இத்தகைய பெருமைமிகு விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால், விவசாயத்தைக் காக்கும் திட்டங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாகவோ போதுமானதாகவோ இல்லை.   

ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகள் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டன. காரீப் பருவத்தில் பயிரிடப்பட்ட பெருமளவு பயிர்கள் மடிந்தன. நஷ்டமடைந்த விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பித்தனர். பல மாதங்களாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை. முதல்வர் ரோசய்யாவும், வேளாண் அமைச்சரும் பலமுறை கடிதம் எழுதிய பிறகும்கூட எதுவும் நடக்கவில்லை. இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசின் பங்குத் தொகை இன்னும் கிடைக்காததே இதற்குக் காரணம்.   

மத்திய அரசு தர வேண்டிய ரூ.358.58 கோடியால் மட்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பெரிய நிவாரணம் கிடைத்துவிடப்போவதில்லை. எனினும், விவசாயிகளின் பிரச்னையில் மத்திய அரசுக்கு உரிய அக்கறையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள இது ஓர் உதாரணமாக அமைந்துவிட்டது.  

ஆந்திர விவசாயிகள் கோரியிருக்கும் மொத்த இழப்பீட்டுத் தொகையே ரூ. 806.07 கோடிதான். நஷ்டத்தில் சிறு துரும்புதான் இது. இதற்குக் காரணம் விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீடு என்கிற பாதுகாப்பின்கீழ் வராததுதான்.  

பயிர்க்காப்பீடு செய்தவர்கள்கூட, அவர்களாக முன்வந்து அதைச் செய்யவில்லை. அவர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதன் விளைவாக, வேறு வழியில்லாமல் இந்தத் திட்டத்தில் அவர்கள் சேர்ந்தார்கள்.   

நடைமுறையில் சிறு விவசாயிகளும், குத்தகைக்கு விவசாயம் செய்வோரும் வங்கிகள் மூலமாகக் கடன் பெறுவதில்லை. இதனால், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த விகிதத்தில் இருக்கிறது. அதுவும், தானாக முன்வந்து காப்பீடு செய்வோர் மிகச் சொற்பம்.  

காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பிரீமியத் தொகை அதிகமாக இருக்கிறது. பருவத்தையும், பயிரையும் பொறுத்து 2 முதல் 20 சதவீதம் வரை பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. கடன்களுக்கு அரசு வழங்கும் வட்டித் தள்ளுபடியைக் காட்டிலும் இது அதிகமானது என்பது வருந்தத்தக்க விஷயம்.  

நாடு விடுதலையடைந்த காலத்திலேயே பயிர்க்காப்பீட்டின் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள். 1947-48-ல் இதுபற்றி ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. இரண்டுவிதமான காப்பீட்டு மாதிரிகளை இந்தக் குழு ஆய்வு செய்தது. பயிர்கள் நாசமாகும்போது, ஒவ்வொரு விவசாயியின் நஷ்டத்தையும் தனித்தனியே கணக்கிட்டு அதன்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முதலாவது மாதிரி. அப்படியில்லாமல், ஒரே மாதிரியான பருவநிலை கொண்ட கிராமம், யூனியன், தாலுகா போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் மொத்த நஷ்டத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு தரலாம் என்பது இரண்டாவது மாதிரி.  

ஒவ்வொரு விவசாயியின் தனித்தனி இழப்பீட்டைக் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படும் எனக் கருதப்பட்டது. தவறான நஷ்டக் கணக்கு காட்டப்படலாம், வேறு மாதிரியான முறைகேடுகளும் சாத்தியம் என்பதால், இந்தியாவில் முதலாவது மாதிரி, நடைமுறைக்கு ஒத்துவராது என முடிவு செய்யப்பட்டது.  

இதையடுத்து இரண்டாவது காப்பீட்டு மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களின் ஒப்புதல் கோரி மத்திய அரசு அனுப்பியது. எனினும், இந்தத் திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் காரணம் காட்டி பல மாநிலங்கள் இதை ஏற்க மறுத்தன. 

1965-ம் ஆண்டில் மீண்டும் இதே திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இதே கதைதான். மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டும் வகையில், மறுகாப்பீடு செய்யும் பணியை மத்திய அரசே செய்யும் எனக் கூறியபிறகும், எந்த மாநிலமும் திட்டத்தை ஏற்க முன்வரவில்லை.  

1970-ல் எச்-4 பருத்திக்கு மட்டும் பிரத்யேகமான காப்பீட்டுத் திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியது. அந்தச் சூழலில் 1972-ம் ஆண்டு காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டது. இதனால், ஜிஐசி எனப்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனம் எச்-4 பருத்திக்குக் காப்பீடு வழங்கும் பணியை ஏற்றது. இதன்பிறகு, நிலக்கடலை, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. எனினும், தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1978-79 வரை அமலில் இருந்த இந்தத் திட்டத்தில், ரூ. 3,110 விவசாயிகள் மட்டுமே சேர்ந்திருந்தனர். மொத்தம் வசூலான பிரீமியத் தொகை ரூ. 4.54 லட்சம். காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 37.88 லட்சம். 

இதன் பிறகு, 1979-ல் விவசாயக் கடன் பெறுவோர் கட்டாயமாகப் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் அறிமுகமானது. 1984-85 வரை ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 6.23 லட்சம் விவசாயிகள் சேர்ந்தனர். இந்தத் திட்டத்தில் ரூ.1 கோடியே 97 லட்சம் பிரீமியத் தொகை வசூலானது. ரூ. 1 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.   

ஒட்டுமொத்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் புதிய திட்டம் 1985-ம் ஆண்டில் அறிமுகமானது. 1999-வரை இந்தத் திட்டத்தில் 7.62 கோடி விவசாயிகள் சேர்ந்தனர். ரூ. 24 ஆயிரத்து 922 கோடி மதிப்பிலான பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் ரூ. 403 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டது. ரூ. 2,365 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.  

இந்த இழப்பீட்டுத் தொகையில் ரூ. 803 கோடியை மாநிலங்களும் மீதியை மத்திய அரசும் வழங்கின. பிரீமியத் தொகையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை மிக அதிகமாக இருந்ததால், பிரீமியத் தொகையை மாற்றியமைக்கத் திட்டக்குழு முடிவு செய்தது.   

இதையடுத்து, 1999-ல் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்கிற புதிய திட்டம் அறிமுகமானது. முன்பிருந்த காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையின் மூன்றில் ஒருபகுதியை காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. புதிய திட்டத்தில் காப்பீட்டு நிறுவனத்தின் பங்களிப்பு நீக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதியாகப் பகிர்ந்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  

இதன் பிறகு வேளாண் காப்பீட்டு நிறுவனம் 2002-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பொதுக் காப்பீட்டு நிறுவனம், நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் நபார்டும் சேர்ந்து இந்த அமைப்பை நிறுவின. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதே இதன் பணி.  

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 19 பருவங்கள் முடிந்திருக்கின்றன. இழப்பீடு கோருவதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்துக்கு இதுவரை ரூ.1,762.46 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் ரூ.801.20 கோடி நிலுவையில் உள்ளது. அதேபோல், தமிழகத்துக்கு ரூ.436.5 கோடி இழப்பீடு கிடைத்திருக்கிறது. இன்னும் ரூ.663.82 கோடி வர வேண்டியுள்ளது.  

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த ஆண்டின் இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.663.82 கோடியாக இருக்கிறது.   

இது இந்தியா முழுவதுமான ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். ஆனால் பலன் பெறுவது என்னவோ வெறும் 11 லட்சம் விவசாயிகள் மட்டுமே. மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவு.  

காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடையவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் முழுக் காரணம் அரசின் வணிக ரீதியான அணுகுமுறைதான்.    

தற்போதைய அனுபவத்தின் மூலமாவது, விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். பயிர்கள் மடிந்த பிறகு, மிகத் தாமதமாக இழப்பீடு வழங்குவது நடைமுறைக்கு ஒவ்வாதது.   உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கி, தொடர்ந்து பயிரிடுவதற்கான வழியை ஏற்படுத்தித் தரவேண்டும். விவசாயத்தின் உண்மையான பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ கணக்கீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவதால் மட்டும் இந்தச் சிக்கல்கள் தீர்ந்துவிடாது. 
நன்றி : www.dinamani.com - 06.11.2009


Monday, October 26, 2009

நாட்டுப்பற்று எங்கே?

விகடன் பொக்கிஷம்


ந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு காலத்தில் மாஸ்கோதான் வழிபடும் கோயி லாக விளங்கியது. ஸ்டாலின்தான் அவர்கள் தலைவணங்கி வந்த கடவுள். புரட்சி, வர்க்கப் போர், முதலாளித்துவ ஒழிப்பு, ரத்தக்களறி ஆகிய வார்த்தைகள் அவர்களு டைய மூலமந்திரங்களாக விளங்கின.

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு சீனாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமலுக்கு வந்தது. உடனே பீகிங் நகரை மாஸ்கோவுடன் தங்கள் இரண்டாவது கோயிலாகச் சேர்த்துக்கொண்டனர். மாஸேதுங் மற்றொரு கடவுளானார்.
திடீரென்று கம்யூனிஸ்டு சீனா, இந்திய எல்லையில் ஊடுருவி பன்னிரண்டாயிரம் சதுர மைல்களைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டுவிட்டது. இந்த ஆக்கிரமிப்புக் காரணமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாட்டில் அதற்கிருந்த சிறிதளவு ஆதரவை யும்கூட இழக்க நேர்ந்தது. கேரளத்தில் நடைபெற்ற மறு தேர்தலிலும் சரி, நாட்டின் பொதுத் தேர்தலிலும் சரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அடியோடு குடை சாய்ந்தது.
''இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதெப்படி?'' என்பதைச் சென்ற வாரம் ஹைதராபாத்தில் கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் யோசிக்க லாயிற்று. சீனா பற்றி மிக நாசூக்கான வகையில் ஒரு தீர்மானம் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பைப் பெரிதுபடுத்தாமலும், அதே சமயத்தில் இந்திய அரசாங்கத்தின் 'சீன'க் கொள்கையை ஆதரித்தும் அத்தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. ஆனால், 'சீனா பலாத்காரமாக இந்திய மண்ணை ஆக்கிரமித்துள்ளது அநியாயம்' என்று கண்டித்து ஒரு வார்த்தைகூடக் காணப்படவில்லை.
''ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பகுதியிலிருந்து சீனப் படைகள் பின் வாங்கி, எல்லையில் ஒரு ராணுவ சூன்யமான பிரதேசம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மேலும் சம்பவங்கள் நடைபெறாமலிருக்கும். இதற்கு ஒப்புக் கொண்டால்தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும்'' என்ற இந்தியப் பிரதமரின் கோரிக்கைக்கு சீனா இணங்க வேண்டுமென்று தீர்மானம் வற்புறுத்தாதது ஏன்? நாட்டின் பாதுகாப்பைவிட, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சீனாவின் நல்லெண்ணம்தான் முக்கியமாகத் தோன்றுகிறது.

'நம் எல்லை எதுவோ அது நமக்கே சொந்தம். அதை விட்டுக் கொடுக்க மாட் டோம்' என்று புதிர் போடுகிறார் கம்யூனிஸ்டு தலைவர் டாங்கே. ஆனால், எது நம் நாட்டின் எல்லை என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஒருவேளை, சீனப் படங்களில் குறிப்பிட்டுள்ள எல்லையைத்தான் சொல்லுகிறாரோ?

Thanks to : www.vikatan.com - 28.10.2009

Thursday, October 22, 2009

விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?


லேனாவின் ஒரு பக்கக் கட்டுரை
  
பொறுமை என்பது இயலாமையின் மறுவடிவமே. “நான் நன்றாக இல்லை; இவன் மட்டும் நன்றாக இருக்கிறானே; நான் இப்படி வீணாய்ப் போனேனே!’ என்கிற சிந்தனைக் கோணத்தில் உள்ள பொறாமை உணர்வு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அத்துணை ஆண் மக்களும் செல்வ நிலையில் ஒரே மாதிரியாக இல்லை. இவர்களுள் வளர்ந்து உயர்ந்து வாழ்பவர்கள் மூவர் என்றால், மூவருக்கும் அதிர்ஷ்டம் இருந்தது; நல்ல மாமனார் வீடு வாய்த்தது; அவர்கள் கைதூக்கி விட்டார்கள்; இவர்கள பிடித்துக் கொண்டார்கள் என்று நான்காவது மகனோ ஐந்தாவது மகனோ வயிறு எரியலாம்; நாம் தோற்றதற்கான - வளராததற்கான வியாக்யானங்களும் சொல்லலாம்.
ஆனால் நல்ல வாய்ப்புகள் (மாமனார் வீட்டினரால்) கிடைத்தும் அவற்றை நழுவ விட்டுவிட்டு, நல்லுறவைக் கெடுத்துக் கொண்டு தோல்வியை அணைத்துக் கொண்ட மாப்பிள்ளைகளும் உண்டு.
அதே நேரத்தில், எவரது துணையும் ஆதரவும் உதவியும் பக்க பலமும் இன்றி சுயமாக உழைத்து, போராடி முன்னேறிய தனிமகன்களும் உண்டல்லவா? களங்களைக் காரணங்களாக்குகிறவர்கள் மேல் இரண்டு பாராக்களுக்கும் நமக்கு என்ன சமாதானம் சொல்லிவிடமுடியும் - முயற்சியின்மையைத் தவிர? ஆக, அதிர்ஷ்டம் வாய்த்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் ஒருவிதத் திறமையும் முயற்சியும் தேவைப்படுகின்றன.
பல்லக்கில் பயணிக்கிறவனுக்கு அரச குடும்பத்தில் பிறந்த அதிர்ஷ்டம் வாய்த்து இருக்கலாம். ஆனால் அதைத் தூக்க நேருகிறவன் பொறாமைப்பட்டுச் சாகாமல், நானும் ஒரு நாள் பல்லக்கில் பயணிப்பேன் என்று எண்ணி ஏன் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை? இந்த முயற்சியில் உண்மையும் நேர்மையும் இருந்தால் குறைந்த பட்சம் பல்லக்குத் தூக்குகிற வேலையை விட்டுவிட்டு, ஒரு குதிரையிலாவது பல்லக்கிற்கு இணையான உயரத்தில் பயணிக்கலாமே! எல்லாத் திறமைகளும் இருந்தும் வீணாய்ப் போகிறவர்கள் உண்டு. ஏன்? நேர்மை இல்லை; செயல்களைவிட வாய்ப்பேச்சு அதிகம்; உழைப்பு இல்லை. சரியான களங்களில் சரியான நேரத்தில் விதைகளை விதைக்காமல் நம் நிலத்தில் விளைச்சல் இல்லையே என்று ஏங்குபவர்கள் இனியாவது மனமாற்றம் பெறுவார்களா?


Thanks to : www.tamilvanan.com - 18.09.2009



Monday, October 19, 2009

உணவுப் பற்றாக்குறை - காத்திருக்கும் ஆபத்து!

உலகம் வெப்பமயமாகி வரும் சூழல் காரணமாக ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்கள், விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகின்றன.

இதன் காரணமாக ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் வரலாறு காணாத மழை வெள்ளம் என மக்களை அச்சுறுத்தி வருகிறது இயற்கை.

இந்தியாவில் பெருகி வரும் மக்கள்தொகை காரணமாக, விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. இதனால் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போதிய மழை பெய்யாத காரணத்தால், உணவு தானியங்களின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

எனவே, உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விளைநிலங்களுக்குப் போதிய பாசன நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீர் வள கமிஷன் பரிசீலித்து வருவதாக அண்மையில் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். இரண்டு அல்லது மூன்று ஆறுகளை இணைப்பது சாத்தியம் என்றும் அது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாக இருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்பட்சத்தில் வெள்ளச்சேதம் தடுக்கப்படுவதுடன், வேளாண் பயிர்களுக்குக் குறைவின்றி பாசன நீர் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும். இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என நம்பலாம்.

இந்நிலையில், உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும், சீனாவும் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய 2050-ம் ஆண்டில் வேளாண் துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (எப்ஏஓ) தெரிவித்திருக்கிறது.

இத்தாலியின் தலைநகர் ரோமில் அண்மையில் நடைபெற்ற எப்ஏஓ உயர்நிலைக் கூட்டத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்து வரும் மக்கள்தொகையால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், எனவே அதற்கு ஏற்ப வேளாண் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், அதற்காக இப்போதே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்காக வேளாண் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலீடுகளை அதிகரிப்பது அவசியம் என்றும், அதற்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் உள்நாட்டில் விவசாயிகளை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான நவீன தொழில்நுட்பங்களின் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்கிறோம்.

ஆனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்ற கேள்வி வரும்போது, சாதகமான பதிலைச் சொல்ல முடிவதில்லை.

பிகார் மாநிலத்தின் கயா, சீதாமாரி ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்திருப்பதாக எழுந்துள்ள புகார்களைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது பாதகமான பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக, நீரில் மூழ்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட உணவு தானியப் பயிர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் சேதமடைந்துவிட்டன.

இதனால் உற்பத்தி பெருமளவில் குறையும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, உணவுப் பற்றாக்குறை அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அரசு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருள்களைச் சேதமின்றிப் பாதுகாத்து மக்களுக்கு விநியோகம் செய்ய முனைப்புக் காட்ட வேண்டும்.

வேளாண் உற்பத்திக்குத் தேவையான மின்சாரம், இடுபொருள்களைத் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்கி, தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை
அதிகரிக்க அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Thanks to : www.dinamani.com - 16.10.2009