I LOVE TAMIL


Tuesday, March 9, 2010

தலையங்கம்:பேர ​பா​யம் காத்​தி​ருக்​கி​றது...!

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக. 

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை. 

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்? 

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. 

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா?  இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது. 

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை? 

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை. 

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. 

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது. 

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? 

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி? 

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது. 

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?


நன்றி: www.dinamani.com - 09 Mar 2010

Saturday, March 6, 2010

Brothers in arms: Rajpal and Zeeshan eye top prize


Referred By: Mr. M. Chinnamaruthu
Thanks to : http://dc-epaper.com on 27-Feb-2010

Friday, March 5, 2010

தலையங்கம்:விவசாயத்துக்கு அப்"பால்'...

இந்திய விவசாயத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாகவும், விவசாயிகளின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் உறவாகவும் தொடர்வது கால்நடைப் பராமரிப்பு. சமீபகாலமாக, விவசாயம் பின்னடைவுகளைச் சந்தித்துவரும் வேளையிலும், இந்தியாவில் பால் உற்பத்தி கணிசமாக அதிகரித்திருக்கிறது என்பதும், இறைச்சி ஏற்றுமதியும் கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்திருக்கிறது என்பதும் வெளியில் பேசப்படாத வெற்றிகள்.

இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி, 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இரண்டு பங்கு அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமா? 2007-08-ம் நிதியாண்டுக்கான புள்ளிவிவரப்படி, அரிசி (ரூ. 95,038 கோடி), கோதுமை (ரூ. 71,579 கோடி), கரும்பு (ரூ. 33,691 கோடி) ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பைவிட, பால் உற்பத்தியின் மதிப்பு (ரூ. 1,62,136 கோடி) அதிகம். சொல்லப்போனால், இந்தியாவின் மிகப்பெரிய விவசாய வளம் எது என்று கேட்டால், பால்வளமாகத்தான் இருக்கும்.


இவ்வளவு இருந்தும், பால் உற்பத்தியும், கால்நடைப் பராமரிப்பும் நமது அரசின் சிறப்புக் கவனத்தைப் பெறவில்லை என்பது மட்டுமல்ல, விவசாயிகள் மத்தியிலும் பெற வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கப் பெறாமல் தொடர்கிறது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை, விவசாயத்துடன் இணைந்த அல்லது விவசாயம் சார்ந்த ஒன்றாகத்தான் கருதுகிறார்களே தவிர, முன்னுரிமை பெற்ற ஆதாயம்தரும் செயல்பாடாக ஏனோ கருதுவதில்லை.


அரை நூற்றாண்டுக்கு முந்தைய இந்தியச் சூழலில், கிராமங்களைச் சுற்றிலும் ஏராளமான மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. மாடு அல்லது ஆடு மேய்ப்பது என்பதேகூட ஒரு பிழைப்பாக இருந்த காலம் உண்டு. நெல் பயிரிடும்போது கிடைக்கும் துணைப்பொருளான வைக்கோலுக்கு மிகவும் குறைவான விலைதான் கிடைத்தது என்பதுடன், விவசாயியைப் பொறுத்தவரை வயலில் கிடைத்த வைக்கோலை வீணாக்காமல் உபயோகிப்பதற்குக் கால்நடை வளர்ப்பு என்கிற நிலைமை இருந்த காலம் அது.


இன்றைய நிலைமை அதுவல்ல. விளைநிலங்கள் குறைந்து வருகின்றன என்பதுடன், அதிகரித்த கரும்பு, வாழை போன்ற பணப்பயிர் விவசாயம், வைக்கோல் விலையை அதிகரித்து விட்டிருக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கமும், வளர்ச்சிப் பணிகளும் மேய்ச்சல் நிலங்களை வெகுவாகக் குறைத்து விட்டிருக்கின்றன.


இந்த நிலையில், கால்நடைப் பராமரிப்புக்காக அத்தியாவசியத் தேவைகள் என்று கருதப்படும், புல், வைக்கோல், கால்நடைத் தீவனம் போன்ற எல்லாமே இலவசமாக இருந்ததுபோய் ஒரு செலவினமாக மாறிவிட்டிருக்கிறது.


பராமரிப்பு தவிர வேறு எந்தவிதச் செலவும் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த கால்நடை வளர்ப்பு என்பதை இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது என்கிற நிலைமை. இனிமேல், பால் உற்பத்தியையும், கால்நடை வளர்ப்பையும் ஒரு முழுநேரத் தொழிலாக அல்லது விவசாயத்துக்கு நிகரான முக்கியத்துவமுள்ள ஒரு தொழிலாக இந்திய விவசாயி கருதியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.


பால் உற்பத்திக்காகவே புல் வளர்ப்பு, கால்நடைகளின் மருத்துவப் பராமரிப்பு, கால்நடைத் தீவனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது என்பது விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். பால் உற்பத்தியை அதிகரிக்க அதிக அளவில் பால் சுரக்கும் பசு மற்றும் எருமை இனங்களை வாங்குவதில் முதலீடு செய்வதுடன் நின்றுவிடாமல், புல், வைக்கோல், மருந்துகள், கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றிலும் முதலீடு செய்தால்தான், கால்நடை வளர்ப்பு என்பது பயனளிப்பதாக இருக்கும்.


பால் உற்பத்தியிலும், கால்நடைப் பராமரிப்பிலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு காட்டிய ஆர்வம்தான் இன்று பால் உற்பத்தி, ஏனைய விவசாய உற்பத்திகளைவிட அதிகமாக இருப்பதன் காரணம். கடந்த 30 ஆண்டுகளாக, நாம் தனியார் கால்நடைப் பண்ணைகளை ஊக்குவிப்பதில் காட்டும் முனைப்பை, கால்நடைப் பராமரிப்பை ஒரு தனிப்பட்ட விவசாயியை முன்னிறுத்தித் தருவதில் காட்டாமல் விட்டிருக்கிறோம்.


கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்பது கிராமத்துக்கு கிராமம் அமைக்கப்பட்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் பரவலாகக் கலப்பின கறவை மாடுகளை வாங்கவும், பராமரிக்கவும் கடனுதவி வழங்கப்பட்டு எழுபதுகளில் "வெள்ளைப் புரட்சி' என்கிற பெயரில் பால் உற்பத்திப் பெருக்கத்துக்கு வழிகோலியதை நாம் மறந்து விட்டோம் என்றே தோன்றுகிறது.


இன்றைய நிலையில் தேசிய அளவிலான பால் உற்பத்தி என்பது சுமார் 100 மில்லியன் டன்கள். இதில் பால் பண்ணைகளின் பங்கு வெறும் 15 விழுக்காடுதான். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சேகரிக்கப்படும் பாலின் அளவு வெறும் 9 மில்லியன் டன்கள் மட்டுமே. இன்னொரு புள்ளிவிவரம்கூட இருக்கிறது. தேசிய அளவிலான பால் உற்பத்தியின் சரிபாதி, குஜராத் மாநிலத்தின் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கமும், கர்நாடக அரசின் நந்தினி பால் பண்ணையும் தரும் பங்களிப்பு.


கூட்டுறவு முறையில் பால் பண்ணைகள் கிராமம்தோறும் அமைப்பதும், அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை அந்தச் சங்கங்களுடன் இணைந்து கால்நடைகளின் மருத்துவத் தேவைகளையும், இனப்பெருக்கத் தேவைகளையும் பூர்த்தி செய்வதும், கால்நடைப் பராமரிப்பை ஒரு விவசாயத் தொழிலாகக் கருதி வங்கிகள் கடனுதவி வழங்குவதும்தான் பால் உற்பத்தி பெருகுவதற்கும், பாலின் விலை கட்டுக்குள் அடங்கி இருப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும். சில தனியார் பண்ணைகள், இடைத்தரகர்கள் மூலம் பால் சேகரிப்பது, அரசுப் பண்ணைகள் தாங்களே கால்நடைகளை வளர்ப்பது போன்ற போக்கு பாலின் விலையை அதிகரிக்க மட்டுமே உதவும்.


கால்நடைகளின் பராமரிப்பில் விவசாயிகளை அதிக கவனம் செலுத்த ஊக்குவிப்பது, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தி மற்றும் சேகரிப்பை உறுதிப்படுத்துவது, வங்கிகளின் பங்களிப்பு ஆகியவை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல முடுக்கிவிடப்பட்டால், உலகத்துக்கே பால் விநியோகம் செய்யும் நிலைமைக்கு இந்தியா உயர முடியும். சராசரி இந்திய நகர்ப்புறவாசிக்குக் குறைந்த விலையில் பால் கிடைக்கவும் வழிகோல முடியும்...


விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது!


நன்றி: www.dinamani.com - 05 Mar 2010

Monday, February 22, 2010

ஆயிரமாவது ஆண்டில் தஞ்சைப் பெரிய கோயில்


உலகப்பாரம்பரியச் சின்னமாகப் புகழ்பெற்று விளங்கும் தஞ்சைப்  பெரிய கோயிலைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இச்சுற்றுலா தலத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான அயல்நாட்டினர் வருவதால் நம் நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கிறது. நம் நாட்டினரும் அயல்நாட்டினரும் இக்கோயிலின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள தொல்லியல்துறை தகுந்த ஏற்பாடுகளைச் செய்து சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும். 

பெரியகோயில் வளாகத்துக்குள் சுமார் 200 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு திரை அரங்கம் ஏற்படுத்தலாம். இவ்வரங்கு குளிர்சாதன வசதியுடையதாக இருந்தால் மிகவும் நன்று. 

இக்கோயிலைப்பற்றிய செய்திகளையும் கதைகளையும், சிற்பங்களையும், ஓவியங்களையும், குறுந்தகடுகள் மூலம் பெரிய திரையில் ஒளிபரப்பலாம். குறுந்தகடுகள் 15 நிமிடங்கள், 30 நிமிடங்கள், ஒரு மணி நேரம் காணக்கூடியதாக இருத்தல் நன்று. 

இதில் முக்கியமாகப் பலமொழிகளில் இக்குறுந்தகடுகள் இருத்தல் மிகமிக அவசியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, இந்தி, ஒரியா, உருது, ஆங்கிலம், பிரெஞ்சு, டச்சு, இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகீசு போன்ற மொழிகளில் இருக்கலாம். 

இக்கோயிலைக் காண ஏழைகளும், செல்வந்தர்களும், படித்தவர்களும், படிக்காதவர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் வருகின்றனர். 

இந்திய மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும், வருபவர்கள் பலருக்குத் தமிழோ, ஆங்கிலமோ தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கு தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதிவைத்துள்ள செய்திகளைப் படித்து அறிந்து கொள்ள முடியாது. எனவே, இக்கோயிலைப் பற்றிய செய்திகளையும், கதைகளையும் தங்கள் தாய்மொழியில் கேட்டும், கோயிலின் அழகையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் வெண்திரையில் பார்த்தும் மகிழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரையில் ஒரு மொழியில் செய்திகளைச் சொல்லும்போது அத்திரையின் அடிப்பகுதியில், அடிக்குறிப்பின் மூலம் வேறு ஒரு மொழியில் அதாவது தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ செய்திகளைத் தெரியப்படுத்தலாம். 

குறுந்தகடுகளின் நேரத்துக்கேற்றபடியும், அரங்கின் பராமரிப்புக்கேற்றபடியும் பார்வைக்கட்டணம் நிர்ணயிக்கலாம். குளிர்சாதன வசதியுடன் காட்டப்படும் காட்சிகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கலாம். பொதுவாக லாப நோக்கமில்லாமலும், பராமரிக்கும் செலவுக்கேற்றவாரும் கட்டணம் வசூலித்தல் நன்று. சுற்றுலா பயணிகள் தங்கள் பொருளாதார நிலைக்கேற்றவாரும், காலநிலைக்கேற்றவாரும் குறுந்தகடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அயல்நாட்டினரும், சுற்றுலா ஆர்வமுடையவர்களும், ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் ஒரு மணிநேர குறுந்தகட்டினைக் காண வாய்ப்புள்ளது. தனிப்பேருந்துகள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள அனுமதிக்கலாம். பள்ளி, கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் இவ்வரங்கில் காட்சிகளைக் காண்பிக்கலாம். 

குறுந்தகடுகளில் கூறப்படும் முக்கிய செய்திகளையும், காட்டப்படுகின்ற ஒளிப்பதிவுகளையும், வல்லுநர்களைக் கொண்டு இறுதிசெய்யலாம். காட்சிகளைக் காண்பிக்கும்போது, வாத்தியங்களின் இசையைப் பயன்படுத்துதல் நலமாக இருக்கும். மேலும் கீழ்க்கண்ட செய்திகளைப் பதிவுசெய்தல் நன்று. 

சோழப்பேரரசின் தலைநகரான தஞ்சை மாநகரில் ஒரு பெரிய கோயிலை அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜசோழன் கட்டினான். இக்கோயில் வியத்தகு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டதால் அவனுடைய புகழ் உலகெங்கும் இன்றும் பரவியிருக்கிறது. 

பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில், 793 அடி நீளம், 397 அடி அகலம் கொண்டது. நடுவிமானம் 216 அடி உயரத்தில் உள்ளது. உச்சியில் உள்ள கருங்கல்லின் எடை 80 டன் ஆகும். இவ்வாலயக் கட்டுமானப்பணி முடிய 4 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. கி.பி. 1010 -ம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டதால் கி.பி. 2010 -ம் ஆண்டில் ஆயிரமாவது ஆண்டுவிழா காண்கிறது.  

தஞ்சை மாவட்டத்தில் மலைகளைக் காண முடியாது. ஆதலால் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தே கருங்கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இக்காலத்தில் உள்ளதுபோல் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை. ஆகையால் மிகவும் இன்னலுற்றே இக்கோயில் திருப்பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.  

கோயிலில் நுழைந்தவுடன் நம் கண்முன்னே காணும் மிகப்பெரிய நந்தி காண்போரைக் கவரும் வகையில் உள்ளது. சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் இந்நந்தி, ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இது 19 1/2 அடி நீளமும், 8 1/4 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரே கல்லைக்கொண்டு செதுக்கப்பட்ட பெரிய நந்தி இதுவேயாகும்.  

அக்காலத்தில் ராஜராஜன் இலங்கைமீது படையெடுத்து அந்நாட்டின் ஒரு பகுதியை தன் ஆட்சியின்கீழ் கொண்டு வந்துள்ளான். தன் ஆட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள சில கிராமங்களை தஞ்சைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளான். இச்செய்தி அங்குள்ள ஒரு கோயில் கல்வெட்டுமூலம் தெரியவருகிறது.  

  தஞ்சைக் கோயில் கல்வெட்டுகள் மூலம் ராஜராஜனின் மேலைச்சாளுக்கிய படையெடுப்புகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாலயத்திற்கு ராஜராஜன், அவனைப் பின்தொடர்ந்த அரசர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள் அளித்த அறக்கட்டளைகள் பற்றியும், நன்கொடைகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. 

மற்றொரு கல்வெட்டின் மூலம் ""ராஜராஜேச்சுவர நாடகம்'' இருந்ததாகத் தெரியவருகிறது. விழாக்காலங்களில் இந்நாடகம் தமிழ்மொழியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நாடகம் நடத்துவதற்கு 120 கலம் நெல் ராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டுள்ளது. இந்நாடகம் இப்போது கிடைக்கப் பெறவில்லை. ஆலயங்களின் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் எவ்வாறு சோழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையை விவரிக்கின்றன என்பதைத் தெரியப்படுத்தலாம். 

பெரியகோயிலில் உள்ள கருவறையைச் சுற்றிக் காணப்படும் ஓவியங்களையும், ஓவியங்களில் காணப்படும் கதைகளையும் கூறலாம். காலத்தால் அழியாத ஓவியங்களை அக்காலத்தில் மூலிகைகள், பூக்கள், வேர்கள், பட்டைகள், முட்டை, வச்சிரம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளனர். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் நாட்டில் சிறப்புற்று விளங்கும் நடனக்கலை பற்றிய விளக்கங்கள் சிற்பவடிவில் இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சுமார் 400 நடன மங்கையர்களுக்குமேல் பணிபுரிந்துள்ளனர் என்ற செய்தி வியக்கத்தக்க ஒன்றாகும். 

தஞ்சை கோயிலில் 13 அடி உயரமுள்ள லிங்கமும், நந்தியும் மிகப்பெரிய உருவில் காட்சியளிப்பதால் இக்கோயிலை "பெருவுடையார்கோயில்' என்று அழைக்கின்றனர். இப்பெரிய சிவன்கோயிலைக் கட்டியதால் ராஜராஜன் சிவபாதசேகரன் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறான். இந்தச் சிவன்கோயிலில் ஒரு சிறிய புத்தர்சிலை செதுக்கப்பட்டுள்ளது விந்தையாக இருக்கிறது. மேலும் நாகப்பட்டினத்தில் அயல்நாட்டு அரசனால் கட்டப்பட்ட புத்தர் கோயிலுக்கு ராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரை தானமாக வழங்கிய செய்தியை செப்பேட்டில் செதுக்கியுள்ளான். மேலும் திருமாலுக்கு மணலூரில் ஒரு வைணவத் திருக்கோயிலும் எடுத்துள்ளான். இதிலிருந்து இவ்வரசனின் சமயப்பொறை தெளிவாகத் தெரிகிறது.  

ராஜராஜனுக்குப்பின் அரசாண்ட அவனது மைந்தன் ராஜேந்திரன் தஞ்சைக்கோயிலைப் போலவே ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஒரு சிவன்கோயிலைக் கட்டியுள்ளான். இத்தலமும் தமிழகத்தில் ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.  தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளும், சிற்பங்களும், கலைக்கூடங்களும், கட்டடங்களும், ஓவியங்களும், செப்புப்படிமங்களும் சோழர்களின் இயல், இசை, நாடகம், கலை, பண்பாடு, கலாசாரம், நாகரிகம் போன்றவற்றின் பெருமைகளையும், பழமையையும் பறைசாற்றுகின்றன. ஓராயிரமாண்டு பழமையான தஞ்சை பெரியகோயிலின் புகழை இத்தரணி மக்களுக்குத் தெரியப்படுத்துவது அரசின் கடமையாகும். 

கட்டுரையாளர்: கல்லூரி முதல்வர் (ஓய்வு) 

நன்றி: www.dinamani.com - 19 Feb 2010

Wednesday, February 10, 2010

நாடாளுமன்றத்தின் மொழிப் பிரச்னை


உலகில் எந்த நாட்டிலும் உள்ள மக்களுக்கும் தம்முடைய விருப்பங்களையும் கருத்துகளையும் எளிதாக உணர்வுடன் வெளியிட அவர்களின் தாய்மொழிதான் முதன்மையான சாதனமாகும்.​ அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் வளமையும் தொன்மையும் மிக்க தாய்த்தமிழைப் போற்றிடும் ஆர்வமும் பண்பாடும் ஆழ்ந்து ​ அமைந்துள்ளன.​ ​ 

​ ​ ​தமிழர்களின் தாய்மொழிப் பற்று இலக்கிய அளவுடன்,​​ வரலாற்று நாகரிகப் பெருமையுடன் நிற்கவில்லை.​ 1937-ல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜாஜியால் பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயமாகப் புகுத்தப்பட்டபொழுது,​​ தாய்த்தமிழைக் காத்திட தமிழர்களின் போராட்டம் நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றது.​ ராஜாஜி அமைச்சரவை நீங்கியதும்,​​ 1939-ல் கட்டாய இந்தி கைவிடப்பட்டது. 

ஆயினும்,​​ அதற்குப் பின்னரும் தமிழகத்தின் மொழிப் போராட்டம் விரிவடைந்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவியது.​ 1950-ல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகும் என்பதற்கான கோரிக்கை அரசியல் நிர்ணய சபையில் இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது.​ இறுதியில்,​​ இந்தி,​​ ஆங்கிலம் இரண்டும் ஆட்சி மொழிகளாக ஏற்கப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடிவெடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.​ 

​பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்,​​ 1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்று மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா அறிவித்ததும்,​​ தமிழக மக்களின் மொழிப் போராட்டம் உச்ச நிலையை அடைந்தது.​ தென் மாநிலங்களுக்கும் அப்பால்,​​ மேற்கு வங்காளம்,​​ வடமேற்கு மாநிலங்கள்,​​ பஞ்சாப்,​​ காஷ்மீர் ஆகிய பல்வேறு திசைகளிலும் அது பரவியது.​ 1937-ல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முனைந்த ராஜாஜியே ​ 1965-ல் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை ஆட்சி மொழியாக்கினால் இந்திய ஒற்றுமை சிதறுண்டுபோகும் என்று எச்சரித்தார்.​ 

​1957-ல் அறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகப் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவைக்கு இரு உறுப்பினர்களும்,​​ மாநிலச் சட்டசபைக்கு 15 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.​ 1962 தேர்தலுக்குப் பிறகு சட்டசபையில் 50 உறுப்பினர்களும்,​​ நாடாளுமன்றத்தில் 8 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.​ அப்பொழுது அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார்.​ 1967-ல் அண்ணா முதலமைச்சராகும் வகையில் கழகத்துக்குப் பெரும் வெற்றி கிடைத்தது.​ ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அண்ணா தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்,​​ ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே ஆட்சி மொழிகளாக இருக்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.​  

​நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 120-ம் பிரிவு கூறுகிறது.​ அத்துடன்,​​ இந்தி அல்லது ஆங்கிலத்தில் போதுமான அளவில் நன்கு பேச முடியாத உறுப்பினர்கள் அவைத்தலைவரின் அனுமதி பெற்றுத் தம் தாய்மொழியில் பேசலாம் என்று அந்தப் பிரிவில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

இந்தப் பிரிவின்படி இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தெளிவாகப் பேச முடியாதவர்கள் மட்டுமே அவைத் தலைவரின் அனுமதியுடன் தம் தாய்மொழியில் பேசலாம் என்பதை மாற்றி,​​ அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள தேசிய மொழிகளில் ஒன்றில் பேச உறுப்பினர்களுக்கு அடிப்படை உரிமை இருக்க வேண்டும் என்றும், அதற்கான வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் ஒரு மசோதா​ மூலம் நான் வலி​யுறுத்தினேன்.​  

​அப்பொழுது அவையில் வீற்றிருந்த துணைத் தலைவர் ஆர்.கே.​ கடில்கர் என்னுடைய பேச்சின் தொடக்கத்திலேயே குறுக்கிட்டு,​​ அவைத் தலைவர்களாகிய நாங்கள் இப்பொழுது உறுப்பினர்கள் தம் மொழியில் பேச வாய்ப்புத் தருகிறோமே,​​ எதற்கு இந்த மசோதா என்றார்.​ ​ ​ 

அதற்கு நான் அளித்த பதில்:​ இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் மட்டுமே தாய்மொழியில் பேசலாம் என்றும்,​​ அதற்கும்,​​ அவைத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் இப்பொழுது 120-வது பிரிவில் ஒரு கட்டாயம் இருக்கிறது.​ இதை மாற்ற வேண்டும்.​ இந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் பேச முடியும் என்றாலும்,​​ தம் தாய்மொழியில் பேசும் அடிப்படை உரிமை எங்களுக்கும் வேண்டும்.​ அதற்கு யாருடைய அனுமதியும் எங்களுக்குத் தேவை என்று இருக்கக் கூடாது.​ ​ 

மேலும் சில ஆதாரங்களை நான் முன்வைத்தேன்:​ இந்தியாவில் பதினைந்து தேசிய மொழிகள் உள்ளன.​ அவை ஒவ்வொன்றுக்கும் வாய்ப்பளிக்க இயலாது என்று சிலர் கூறலாம்.​ சோவியத் கூட்டமைப்பில் இருக்கும் உயர்மட்ட சட்டசபையில் பதின்மூன்று மொழியினர் தம் மொழியில் பேசுவதற்கும்,​​ அவை உடனடியாக மற்றவர்களுக்கு மொழிபெயர்த்துத் தருவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.​ சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் ​(முதலிடம்),​​ மலாய்,​​ சீனம்,​​ தமிழ் ஆகிய நான்கு மொழிகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.​ பதினோரு லட்சம் மக்களையுடைய சுவிட்சர்லாந்தில் ஜெர்மன்,​​ பிரெஞ்சு,​​ இத்தாலி,​​ ரொமான்ஷ் ஆகிய நான்கும் தேசிய ஆட்சிமொழிகளாக இருக்கின்றன.​ சின்னஞ்சிறு நாடுகளில்கூட நான்கு மொழிகளுக்குத் தரப்படுகிற உரிமை,​​ ஒரு துணைக் கண்டமாக ஐம்பது கோடி மக்களையுடைய இந்தியாவில் பதினான்கு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு வசதிகளைத் தர ஏன் முடியாது?​ ​ ​என்று கேட்டேன். 

அன்றைய தினம் நேரம் போதாமல் என் பேச்சுடன் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.​ ​இரண்டு வாரங்கள் கழித்து என் மசோதாவை ஆதரித்து 16 உறுப்பினர்கள் பேசினர்.​ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷியோ நாராயண் ஒருவர் மட்டும்தான் எனது மசோதாவுக்கு எதிராகப் பேசினார்.​ ​ 

விவாதத்துக்குப் பதிலளித்த உள்துறை இணையமைச்சர் வி.சி.சுக்லா இந்த மசோதாவின் உணர்வை நாங்கள் வரவேற்றாலும்,​​ அதனையொட்டி பதினைந்து மொழிகளையும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என்றாலும், ஒரு முக்கியமான பிரச்னை இப்பொழுது ஆட்சி மொழிகளாக இரு மொழிகள் இருக்கின்றன என்றாலும்,​​ கடைசியில் ஒரு மொழி மட்டுமே ஆட்சி மொழியாக நிலைபெறும் என்ற சூழ்நிலையில் பதினைந்து ஆட்சி மொழிகளாகச் சேர்க்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றார். 

விவாதத்தின் முடிவுரையில் நான் முதலில் சிறிது நேரம் தமிழில் பேசிவிட்டு,​​ பிறகு ஆங்கிலத்தில் மசோதாவுக்கு ஆதரவு தந்த உறுப்பினர்களுக்கும்,​​ மற்ற தலைவர்களுக்கும்,​​ உறுப்பினர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன்,​​ என்னுடைய மசோதாவின் முக்கிய நோக்கம் 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தி பேசாத பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெருவாரியாக இந்த அவைக்கு வந்துள்ளார்கள்.​ அவர்களுக்கும் பேசுவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்தால்தான் ஜனநாயக முறையில் மக்கள் விருப்பு,​​ வெறுப்புகளுக்கு மதிப்பளிப்பதாக ஆகும் என்று வலியுறுத்தினேன். 

கடைசியில், ​​ வாக்கெடுப்பில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.​ அது காங்கிரஸ் பெரும்பான்மை பலமுடைய அரசாங்கத்தின் போக்கு என்பது முன்கூட்டியே எங்களுக்குத் தெரிந்த ஒன்றாகும். 

1968-ல் நான் கொடுத்த மசோதா நிறைவேறியிருந்தால் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இந்தி,​​ ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஏனைய தேசிய மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசுவதற்கான உரிமை சட்டப்படி கிடைத்திருக்கும்.​ ஆனால்,​​ அப்பொழுது 520 உறுப்பினர்களையுடைய மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 283 உறுப்பினர்களைக்கொண்ட பெரும்பான்மை பலம் இருந்ததால் எதைப்பற்றியும் கவலைப்படாமல்,​​ இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக நிலைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வரவேற்கத்தக்க உணர்வுடைய என் மசோதாவை அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி தோற்கடித்துவிட்டது.​ இப்பொழுது நிலைமை மாறி இருக்கிறது.​ மத்தியிலும்,​​ மாநிலங்கள் பலவற்றிலும் காங்கிரஸ் கட்சி காலப்போக்கில் பலவீனமடைந்து 2009 தேர்தலுக்குப் பிறகு 545 உறுப்பினர்களைக்கொண்ட மக்களவையில் 206 இடங்களை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மற்றும் பல கட்சிகளின்பெரும்பாலான மாநிலக் கட்சிகளின்ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.​ 1968-ல் காங்கிரஸ் கட்சி காட்டிய ஆணவப்போக்கு இப்பொழுது செல்லுபடியாகாது.​ ​  

​120-வது பிரிவை மாற்றியமைக்க முன்பு நான் எடுத்த முயற்சி பற்றி இங்கு ​ கூறுவதற்குக் காரணம்,​​ இப்பொழுது நாடாளுமன்றத்தில் தாய்மொழியில் பேச உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவதைப்போல,​​ அமைச்சர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரசாயன உரத்துறை அமைச்சர் மு.க.​ அழகிரி எழுப்பியுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.​ அமைச்சரும் ஓர் உறுப்பினர் என்ற அடிப்படையில் இது பற்றி அவைத் தலைவர் எத்தகைய முடிவை எடுத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.​ நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர்​ வரு​கிற 22-2-2010 அன்று தொடங்​கு​கி​றது.​ அதற்கு முன்னதாக,​​ இந்த மொழிப் பிரச்னை பற்றி அவைத் தலைவரின் முடிவு வெளியானால் நல்லது.​ ​ ​

​நாடாளுமன்றத்தில் இப்பொழுதுள்ள கட்சிகளின் பலத்தைக் கணக்கிட்டால்,​​ தேசிய மொழிகள் அனைத்தும் ஆங்கிலத்துடன் இணைந்து நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் விதத்தில் அமைய திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட்ட மற்ற கட்சிகள் அனைத்தும் முயற்சி செய்தால் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற முடியும். 

நன்றி: www.dinamani.com - 09 Feb 2010

Tuesday, February 2, 2010

விதிகளை மறந்த கோபுரங்கள்

புதுதில்லியில் உள்ள நொய்டா பகுதியில் பல்வேறு தனியார் செல்போன் நிறுவனங்கள் அமைத்துள்ள 400 நுண்ணலை கோபுரங்களில் (செல்போன் டவர்ஸ்) அரசின் முறையான அனுமதி பெறாத 190  நுண்ணலை கோபுரங்களுக்கு மின்இணைப்பைத் துண்டித்த நொய்டா அதிகாரிகள், அவற்றுக்குப் பூட்டு போட்டு மூடியுள்ளனர் . 

இந்த திடீர் நடவடிக்கை ஒரே நாளில் நடத்தப்பட்டதால், அந்தப் பகுதியில் கைபேசி வைத்துள்ள 4 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு (அங்கு மக்கள் தொகை 7 லட்சம்) அழைப்புகள் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அனுமதி பெறாததுதான் இதற்குக் காரணம் என்ற உண்மையை மறைக்க முடியாத நிலையில், அதிகாரிகள் முறைப்படி நோட்டீஸ் கொடுக்காமல் மூடியதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவித்துள்ளது இந்திய கைபேசி நிறுவனங்களின் சங்கம்.  

இந்தியத் தலைநகர் புதுதில்லி பக்கத்திலேயே காணப்படும் இதே நிலைமைதான் தமிழ்நாட்டிலும் இருக்க முடியும். அதே தனியார் தொலைபேசி நிறுவனங்கள் அதே போன்றுதான் அனுமதி இல்லாமல் நுண்ணலை கோபுரங்களை அமைத்திருப்பார்கள் என்பது நிச்சயம். 

செல்போன் நிறுவனங்கள் தடங்கல் இல்லாத சேவை அளிக்க வேண்டும் என்றால் நுண்ணலை கோபுரங்கள் அவசியம் இருந்தாக வேண்டும். வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக, நுண்ணலை கோபுரங்கள் அமைப்பதில் வேகம் காட்டும் நிறுவனங்கள், இதற்காக எத்தகைய விதிமுறைகளையும் மீறத் தயங்குவதில்லை. தனியார் செல்போன் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால், எங்கே இடம் கிடைத்தாலும் நுண்ணலை கோபுரங்களை அமைத்து விடுகிறார்கள். இதற்காக அவர்கள் தரும் வாடகை நகரம் மற்றும் அதன் மையப் பகுதியைப் பொறுத்து ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை. அதோடு, இடத்தின் உரிமையாளருக்கு இலவச செல்போன் மற்றும் கட்டணமில்லா அழைப்புகள் செய்யும் வசதி எல்லாமும் கொடுத்து மயக்கி விடுகிறார்கள். 

இதற்கான அனுமதி அந்தந்த உள்ளாட்சிகளால் வழங்கப்பட வேண்டும். அதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்துவதைத் தவிர்க்க விழையும் இந்த செல்போன் நிறுவனங்கள், வீட்டு உரிமையாளருக்கு அளித்த அதே சலுகைகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் கொடுக்கிறார்கள். பல நேரங்களில் இந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளே இடம் பார்த்துக் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் உள்ளாட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. 

இத்தகைய நுண்ணலை கோபுரங்கள் குடியிருப்புப் பகுதியில் அமையும்போது, மிக அருகில் இருக்கும் குடியிருப்புகளில் வசிப்போருக்கு முதலில் தூக்கமின்மை நோயும் பின்னர் அதன் தொடர்ச்சியாக பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பறவைகள்கூட இந்த நுண்ணலை கோபுரங்களைத் தவிர்த்து, விலகிச் செல்கின்றன என்பதும் சூழலியல் வல்லுநர்களின் குற்றச்சாட்டு. 

இவற்றைச் சுட்டிக் காட்டிய மும்பை உயர் நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்கள், குடியிருப்புகளின் மீது இத்தகைய நுண்ணலை கோபுரங்களை அமைக்கும்போது, தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், செல்போன் நிறுவனங்கள் அதைப் பொருள்படுத்துவதே இல்லை.

இத்தகைய நுண்ணலை கோபுரங்களால் பாதிக்கப்படுவோர், இவை முறையான அனுமதி பெறவில்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டால் தகவல் தரப்படுவதில்லை. உள்ளாட்சிகளுக்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய முறைகேடுகள் தடுக்கப்படுவதுடன், இத்தகைய நுண்ணலை கோபுரங்களில் அரசின் அனுமதி பெற்றுள்ள நுண்ணலை கோபுரங்கள் எவையெவை என்பதை உள்ளாட்சி வாரியாக இணைய தளத்தில் அறிவித்தால், முறைகேடாக அமைக்கப்பட்ட கோபுரங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ளவும், புகார் கொடுக்கவும் அல்லது நீதிமன்றத்தை அணுகவும் முடியும். இதைச் செய்வது உள்ளாட்சித் துறைக்கு எளிமையானதும்கூட. மேலும், தமிழகத்தில் எத்தனை இடங்களில் முறைகேடாக இம் மாதிரியான  கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் மூலமாகவே தெரிந்துகொண்டுவிட நல்லதொரு வாய்ப்பு உருவாகும். 

செல்போன் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுபவையாக இருக்கின்றன. நுண்ணலை கோபுரங்கள் அமைக்க அனுமதிக்கப்படும் இடத்துக்கான சொத்துவரியைப் பல மடங்காக உயர்த்தினால், உள்ளாட்சிக்குக் கூடுதல் வருவாய் கிடைக்க வழி ஏற்படும். மேலும், இதற்கான மின்இணைப்புக் கட்டணத்தையும் உயர்த்தி நிர்ணயிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

நன்றி: www.dinamani.com - 01 Feb 2010 (தலையங்கம்)

ரூ.180 கோடியில் தென்பெண்ணையாறு- செய்யாறு இணைப்பு

திருவண்ணாமலை, பிப். 1: ரூ.180 கோடி செலவில் தென்பெண்ணையாறு- செய்யாற்றை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனூரில் கட்டப்பட்டுள்ள அணையின் மொத்த உயரம் 119 அடியாகும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையில் மொத்தம் 107 அடி உயரம் நீர் உள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, தமிழக அரசு உத்தரவின்படி சாத்தனூர் அணையின் வலது, இடதுபுறக் கால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு திங்கள்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:

தமிழகத்தில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. மொத்த பாசனப் பரப்பு 35.6 லட்சம் ஹெக்டேராகும். ரூ.2,547 கோடி செலவில் 6.5 லட்சம் ஹெக்டர் நிலங்கள் பயன்பெறும் வகையில், மாநில நீர்வளத் திட்டம் 6 ஆண்டுகள் செயல்படுத்தப்படுகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ரூ.248 கோடி செலவில் 5,570 ஏக்கர் நிலங்கள் இத்திட்டத்தின் மூலம் புனமரமைப்பு செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.54.6 கோடி செலவில் 24,291 ஏக்கர் நிலங்கள் பயனபெறும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டு ரூ.197 கோடி செலவில் 14,633 ஏக்கர் நிலங்கள் சீர்ப்பெறும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தண்ணீர் வராததாலும் சாத்தனூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. வரும் ஏப்.24-ம் தேதி வரை 44 நாள்கள் 6 தவணைகளாக 2158 மில்லியன் கன அடி நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என்றார் வேலு.

விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் பேசியது:
சாத்தனூர் அணையின் இடது, வலதுபுறக் கால்வாய்கள் கடந்த ஜனவரி மாதமே திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போதிய நீர் இருப்பு இல்லை. மேலும் கடந்த ஆண்டு 90 நாள்கள் நீர் திறந்து விடப்பட்டது. நடப்பாண்டு 44 நாள்கள் மட்டுமே நீர் திறக்கப்படுகிறது.

வேலூருக்கு அடுத்து திருவண்ணாமலையில்தான் அதிக நீர்த்தேக்கங்கள் உள்ளன. செண்பகத்தோப்பு, குப்பநத்தம், மிருகண்டா நதி அணைகள் உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் வராக நதியின் படுகையில் உள்ள 30 ஏரிகள் ரூ.2.48 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 47 ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டன. வரும் ஆண்டு துரிஞ்சலாறு படுகையின் கீழ்  உள்ள செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் உள்ள 58 ஏரிகள், 38 அணைக்கட்டுகள் ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

மேலும் பாம்பனாறு மற்றும் வரட்டாறு படுகையில் உள்ள 20 அணைக்கட்டுகள், 3 ஏரிகளை ரூ.3 கோடியில் சீரமைக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என்றார் ராஜேந்திரன்.

மக்களவை உறுப்பினர் த.வேணுகோபால், எம்எல்ஏ கு.பிச்சாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.விஸ்வநாதன், கோட்டாட்சியர் பத்மா, நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், தண்டராம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவர் பன்னீர்செல்வம், துணைத் தலைவர் ஆர்.வணங்காமுடி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் குழந்தைவேலு, நீர்ப்பாசனத் சங்கத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


நன்றி: www.dinamani.com - 02 Feb 2010