I LOVE TAMIL


Saturday, April 11, 2009

கடமையைச் செய்! பலனை எதிர்பார்!!

ஐந்து ஆண்டுகள் முழுவதுமாக முடிந்து அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

எவர் வந்து வேப்பிலை அடித்தாலும் இறங்கப் போவதில்லை விலைவாசி விஷம். எனவே ஒற்றையா, இரட்டையா போட்டுப் பார்த்து வாக்களிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்குச் சிலர் வந்திருப்பர். சிலரோ குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என முன்பே தீர்மானித்திருப்பர்.

இந்த ஆண்டும் வாக்களிக்காமல் இருப்பதன் மூலம் வயது பதினெட்டு ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றொரு வகை வாக்காளர்களின் முடிவாக இருக்கும்.

தேர்தலில் தகுதியற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நல்லவர்கள் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழப்பதற்கும் இதுபோன்ற வாக்காளர்களே காரணம்.

குறிப்பிட்ட கட்சிக்குத்தான் நமது வாக்கு என முதலிலேயே முடிவு செய்துவிடாமல், வேட்பாளர்களின் தகுதி, இதுவரை தொகுதிக்கு அவர்களது கட்சி ஆற்றிய பணி, தொகுதி மக்களுக்குப் பாடுபடுபவரா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

ஒருமுறை நன்கு உண்டுவிட்டால் இரண்டு, மூன்று நாள்களுக்குப் புலி உணவு உண்ணாது. அரசியல்வாதிகள் சிலரும் அப்படித்தான். எப்பாடு பட்டாவது தொகுதியில் நின்று வென்றுவிட்டால் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்குக் கவலையில்லை என்ற கணக்கில் எப்படியாவது சீட்டைப் பெற்று, வென்றும் விடுகின்றனர்.

இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அத்தகையோர் அரசியலுக்கு வந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க அல்லது வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வாக்காளர்களுக்கு அரசியல் குறித்து விழிப்புணர்வும், சமூகக் கண்ணோட்டமும் அவசியம் இருக்க வேண்டும்.

யோசித்து வாக்களிப்பதைக் "கடமை'யாகக் கருதாமல் தேர்தல் நாள் வந்தது, சென்றோம், வாக்களித்தோம் என ஏதோ "கடமைக்கு' வாக்களித்தால் பின்னர் உரிமைகளுக்காக ஓயாமல் குரல் கொடுத்து ஏமாற வேண்டிய நிலைமையே ஏற்படும்.

இலவசங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கைகளுக்கும், தேர்தல் கால அன்பளிப்புகளுக்கும் மயங்கி, வாக்காளர்கள் தங்களை அடகு வைத்தால் பலனாகக் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கிடைக்க வேண்டிய உரிமைகள் மீட்கப்படாத பொருளாக மூழ்கிப்போய்விடும்.

மற்ற விஷயங்களில் எப்படியோ தேர்தல் விஷயத்தில், வெற்றிபெறும் வேட்பாளரால் தொகுதிக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று பலனை எதிர்பார்த்தே கடமையைச் செய்ய வேண்டும்.

நல்ல, நாணயமான, பரந்துபட்ட மக்களின் நல்வாழ்வில் நாட்டமுள்ள தொண்டராக உழைக்கும் வேட்பாளரையே வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

அதிகம் படித்த மேல்தட்டு மக்கள் "வாக்காளர் பட்டியலில்' தங்கள் பெயர் இடம்பெற வேண்டும் என விரும்புவர். ஆனால், வாக்களிப்பதை கடமையாகவோ உரிமையாகவோ கூட அவர்கள் நினைப்பதில்லை.

வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் காத்திருந்து வாக்களிப்பது என்பது வெட்கப்படும்படியான செயலாகவும், தங்களது தகுதிக்குக் குறைவான செயலாகவும் அதிகம் படித்தோரால் கருதப்படும் நிலை உள்ளது.

இதுவே பல நேரங்களில் வேட்பாளர்களின் வெற்றியும், தோல்வியும் படிக்காத, அதிகம் படிக்காத வாக்காளர்களால் நிர்ணயிக்கப்பட காரணமாக அமைந்துவிடுகிறது.

தேர்தல் வெற்றியை பணப்பெட்டிகள் தீர்மானிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமெனில் வாக்குப்பெட்டிகள் தங்கள் சக்தியை நிரூபிக்க வேண்டும்.

நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது இதுவரை எந்தத் தேர்தலும் காணாத ஒன்று. அது இயலாத காரியமும்கூட. என்றாலும் முடிந்தவரை அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

எல்லோரும் வாக்களிப்பதன் மூலம் கள்ள ஓட்டுகளைத் தடுக்கலாம்.

நல்லவரைத் தேர்ந்தெடுத்தலே, கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, சந்தர்ப்பவாத அரசியலுடன் கொள்ளையடிக்க நினைப்போருக்கு விழும் முதல் அடி. அதுவே ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கான முதல்படி.

ஜெயிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதைவிட எந்தக் கட்சி ஜெயிக்க வேண்டும் என்று நாம் தீர்மானித்து அதற்கு வாக்களிப்பதற்குப் பெயர்தான் வாக்குரிமை. இந்த அடிப்படை உண்மையை நமது வாக்காளர்கள் புரிந்து கொண்டால் போதும், ஜெயிக்க வேண்டிய கட்சி ஜெயித்து விடும். வாக்குச் சீட்டின் மதிப்பும் மரியாதையும் காப்பாற்றப்படும்.


Thanks - www.dinamani.com - April 9 2009

கொடுத்ததை திருப்பிக் கொடுக்கும்

இந்திய தீபகற்பத்தில் 7500 கி.மீ. நீளக் கடற்கரை இருக்கிறது. ஆனால், இந்த கடற்கரையை நாம் எந்த அளவுக்கு அழகாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க அக்கறை செலுத்துகிறோம் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

கடற்கரையில் மனிதர்கள் போடும் பிளாஸ்டிக் பை குப்பைகளை எடுக்க மாணவ, மாணவியரைப் பயன்படுத்துகின்றன பெருநகர அமைப்புகள். ஆனால், கடலின் மடியில் கொண்டு சேர்க்கும் கழிவுகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

இந்தியக் கடற்கரையின் பெரும்பகுதி சுகாதாரமானவை அல்ல என்பது வெறும் மனிதக் கழிவுகளைப் பற்றியது அல்ல. கடலோரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளும், பெரு நகரங்களும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடலை மாசுபடுத்துவதால் நேர்ந்துவரும் அவலம்தான் இது! தற்போது நாம் கடலை மாசுபடுத்தும் வேகத்தைப் பார்த்தால், அடுத்த தலைமுறையினர் நம் பெருநகரத்தின் கடற்கரையில் நிற்பதற்கும் முகமூடி அணிந்து, கால்களுக்கு உறை அணிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.

இந்தியக் கடலுக்குள் ஒரு நாளைக்கு 1,600 மில்லியன் டன் சாக்கடைமண் கலக்கிறது. தொழில்துறை கழிவுகள் 50 லட்சம் மில்லியன் டன் எனப்படுகிறது. மும்பை, சென்னை, கோல்கத்தா போன்ற பெருநகரங்களில் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 23 கோடி லிட்டர் தொழிற்கழிவுகள் கடலில் கலக்கின்றன. சாக்கடை நீர் 220 கோடி லிட்டர் கலக்கிறது. இவை சாதாரண நாட்களில்! மழைக் காலத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை அப்படியே நதிகளில் கலந்து விடுகின்றன. அவை யாவும் நேராகக் கடலுக்குத்தான் வந்து சேர்கின்றன. சென்னை நகரவாசிகளுக்கு கூவம் நதி எவ்வாறு ஒவ்வொரு மழைக்காலத்திலும் இயல்பாகத் தூய்மை பெறுகிறது என்பது தெரிந்த ஒன்றுதான். நாம் கலக்கும் நச்சு போதாதென்று, வெளிநாட்டு கதிர்வீச்சுக் குப்பைகளை கப்பலில் ஏற்றிவந்து கொட்டிவிட்டுப் போவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு பெருநகரின் மொத்த அழுக்கையும் சாக்கடை மற்றும் நச்சுக்கழிவையும் காலடியில் இருக்கும் கடலில் கலந்துவிட்டு, சுகாதாரம் தேடி கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வதுபோல வாழ்க்கையின் முரண் வேறு ஏதும் இருக்க முடியாது.

இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் அனைத்தும் ஆபத்தான நச்சுகளைக் கொண்டவை என்பதுடன், இந்த நீரில் வாழும் கடல் மீன்கள் மக்களுக்கு உணவாக வந்து சேரும்போது, மீன்களில் தேங்கியுள்ள நஞ்சு, மனிதருக்கு பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது. இது மனிதர்களுடன் நின்றுபோவதில்லை. அருகிவரும் உயிரினங்களையும் பாதிக்கிறது.

ஒரிசா கடற்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள தொழிற்கழிவு மாசுகளாலும், மீன்பிடி இயந்திரப் படகுகளாலும் ஆலிவ் ரெட்லீ என்று அழைக்கப்படும் ஆமைகளின் இனப்பெருக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இந்த கடல் ஆமைகள் அருகிவரும் உயிரினப் பட்டியலில் இடம் பெற்றவை. இலங்கைக்கு அருகிலிருந்து பல ஆயிரம் மைல்கள் நீந்தி வந்து, ஒரிசா கடற்கரையில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன.

ஆனால், ஒரிசா அரசுக்கு ஆலிவ் ரெட்லீ ஆமைகளைவிட, தொழிற்கூடங்கள்தான் மிக முக்கியமாக இருக்கிறது. ஒரிசாவின் கடற்கரை நகரமான கலிங்கநகர் என்ற இடத்தில் 1300 ஹெக்டேர் நிலப்பரப்பில் டாடா நிறுவனம் மிகப் பெரிய தேனிரும்புத் தொழிற்சாலையை அமைக்க மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, பணிகளைத் தொடங்கிவிட்டது. இதுகூடாதென்று பலத்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும்கூட, இந்தப் போராட்டங்களில் சுமார் 13 பேர் இறந்த பிறகும்கூட, இந்தத் தொழிற்சாலையை அமைக்கும் பணி நிற்கவே இல்லை.

இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான மீனவர்கள் கடலை நம்பித்தான் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் சுமார் ரூ.7000 கோடி அன்னியச் செலாவணியை கடல்மீன்கள் ஆண்டுதோறும் பெற்றுத்தருகின்றன. ஆனால் இதுபற்றிய எந்த உணர்வும் இல்லாமல் இந்திய நகர மக்களும், தொழிற்கூடங்களும் நதிகளையும், கடலையும் நாசம் செய்து வருகின்றனர்.

கடற்கரையை மாசு இல்லாமல் வைத்துக் கொள்வதில் வெளிநாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பிரமிப்பைத் தருகின்றன. நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து எண்ணெய் கசடுகள் கரையொதுங்கினால், நாம் அதைப் பற்றி கவலைப்படவே மாட்டோம். ஆனால், வெளிநாட்டினர் சும்மா இருப்பதில்லை. கரையொதுங்கும் அந்த எண்ணெய்க் கசிவுகளை அகற்றும் முயற்சிகளில் இறங்குகின்றனர். கடற்கரையையும் கடலையும் சுத்தமாக வைத்திருக்க பொருள்செலவு பாராமல் அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர்.

ஏனென்றால் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது: "கடல் எதையும் தன்னிடத்தில் வைத்துக்கொள்வதில்லை; மனிதரும் நதிகளும் கொண்டு வந்து கொட்டும் அதே சாக்கடையை, அதே நஞ்சினை, கடலலையில் எற்றுண்டு கரையொதுங்கும் பிணத்தைப் போலவே, மீண்டும் வந்த வழியிலேயே திருப்பி விடும்' என்று!


Thanks to www.dinamani.com -April 11 2009

Friday, March 20, 2009

இரைச்சல் இந்தியா!

இரைச்சல் இந்தியா!

இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடுகளின் சாலைகளிலும் இந்த அளவுக்கு வாகன இரைச்சலும், காற்றொலிப்பான் அலறலும் இல்லை. ஆப்பிரிக்காவில் பின்தங்கிய நாடாகக் கருதப்படும் உகாண்டாவில்கூட இந்தியாவின் இந்த அவல நிலை கிடையாது.

இன்னொரு விநோதமும் இந்தியாவில்தான் காணப்படுகிறது. அதாவது, பஸ்நிலையம், ரயில்நிலையம், விமானநிலையம், நெடுஞ்சாலை அருகில் உள்ள நிலம், கட்டடங்களுக்கு விலை அதிகம். இந்த இடங்களை வாங்க விரும்புவோரும், இந்தப் பகுதிகளில் வாழ விரும்புவோரும் அதிகம். ஆனால், அயல்நாடுகளில் நிலைமை தலைகீழ். இத்தகைய இடங்களை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். அத்துடன், இந்த இடங்களுக்கு விலை மிகமிகக் குறைவாக இருக்கும். அவர்களுக்கு இல்லம் என்பது அமைதியின் உறைவிடம்.

வாகனங்களில் காற்றொலிப்பான் பொருத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்று எழுத்தில் உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. முன்செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாரும் காற்றொலிப்பானை அலற விடுகிறார்கள். இது ஏதோ மாநகரின் சிக்னல் பகுதியில் மட்டுமே நடக்கும் நிகழ்வு அல்ல. நெடுஞ்சாலையில் வாகனங்களை முந்திச் செல்லும்போதும், பயணிகளின் அடிவயிற்றை கலக்கும்படியாக, காற்றொலிப்பானைத் தொடர்ச்சியாக அலற விடுவது சர்வ சாதாரணமாகக் காணும் காட்சி.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, நூற்பாலைகள் உள்ளிட்ட சில தொழிற்சாலைகளில் மட்டுமே மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் சோதனைகள் நடைபெறுவதும், தொழிலாளர்களுக்கு காது கேட்புத் திறன் குறையாமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ள வலியுறுத்துவதும் நடைமுறையில் இருந்தது. ஆனால் இப்போது ஒலி மாசு என்பது தொழிற்சாலையின் பிரச்னையாக மட்டும் இல்லை. இது சாலை, கடைவீதி, கலைஅரங்கம் என எல்லாவற்றையும் கடந்து வீடு வரை வந்துவிட்டது. வீட்டில் "ஹோம் தியேட்டரில்' படம் பார்ப்பதும், இசை கேட்பதும் அளவு கடந்த ஓசையுடன்தான் நடைபெறுகிறது. சில தனியார் சேனல்களில் விளம்பரம் மட்டும் அதிக சப்தத்தில் வெளிப்படும்படியாக ஒளிபரப்புகிறார்கள்.

தற்போது பல பெயர்களில் அழைக்கப்படும் "டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம்' கொண்ட அனைத்து ஒலிக் கருவிகளும், துல்லியமான இசையை, நுட்பமான இசைக் கலவையை ரசிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் அந்த நுட்பத்தை ரசிக்கத் தெரியாமல் இந்த ஒலிக்கருவிகளை கையாளுகிறோம். அதிக இரைச்சல் நல்ல இசை என்கிற எண்ணம் எப்படியோ ஒரு தொற்றுநோய்போல நம் மனதில் குடியேறிவிட்டது.

திரையரங்குகளில் வசன உச்சரிப்புகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக தனி "டிராக்' தரப்பட்டாலும், பாடல் காட்சி மற்றும் சண்டைக் காட்சிக்காக மட்டுமே இந்த ஒலிக்கருவிகள் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. திரையரங்கத்தைவிட்டு வெளியே வரும்போது, காது கேட் - காது என்ற நிலைமைதான்.

பேருந்துப் பயணம், கார் பயணங்களிலும்கூட, பாட்டுச் சப்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சில பேருந்துகளில் மற்ற பயணிகளுக்கும் கேட்கும்படியாக உரக்கச் சொன்னால்தான் உரிய இடத்துக்கு டிக்கெட் கிடைக்கும்.

இருக்கிற இரைச்சல்கள் போதாதென்று இப்போது கைபேசிகளும் தங்கள் பங்குக்கு நம் காதுகளை செவிடாக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இதில் வெளிப்படும் ஒலிஅலைகளின் தன்மை. இவை உள்காது நரம்புகளைப் பாதிக்கச் செய்கின்றன. எப்போதும் "ஹியர் போன்' வைத்துக்கொண்டிருந்தால், நிச்சயம் "ஹியரிங் எய்டு' தேவைப்படும்.

90 டெசிபல் அளவுக்கான ஒலியைத் தொடர்ந்து 6 மணி நேரம் கேட்டால் காதில் உள்ள ஒலிநரம்புகள் பாதிக்கப்படுகின்றன. காது கேட்புத்திறன் குறைந்துவிடும் அல்லது காது இரைச்சல் போன்ற வேறு பல தொல்லைகள் ஏற்படும். அத்துடன் உயர் ரத்த அழுத்தம், மனஇறுக்கம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கும் இந்த இரைச்சல் இட்டுச்செல்லும். அத்தோடு நிற்பதில்லை. முதுமையில் இயல்பாகவே தோன்றக்கூடிய நோய்களைத் தீவிரப்படுத்தவும் செய்கிறது இந்த ஒலி மாசு.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் இரைச்சல் பகலில் 55 டெசிபல், இரவில் 45 டெசிபல் அளவுக்கு மட்டுமே. மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இந்த ஒலி மாசுக் கட்டுப்பாடு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்தெந்த விஷயங்களில் தலையிட்டு ஒலி மாசுவைக் கட்டுப்படுத்தும் என்பது நமக்குத் தெரியவில்லை.

அரசு ஒரு பொது ஒழுங்கை சட்டத்தின் மூலம் ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், நம் வாழ்க்கை முறையை நாம் தகவமைத்துக் கொள்ளும் பண்பாடுதான் ஒரு சமூகத்தைக் காக்கும். தேவையற்ற ஓசையைத் தவிர்க்க முயல்வோம்.

சொன்னால் கேளுங்கள்... இல்லாவிட்டால், பிறகு யார் சொன்னாலும் கேட்காது!

Thanks : www.dinamani.com - Wednesday March 18 2009

Wednesday, March 11, 2009

வாக்குச் சீட்டின் வலிமை!

வாக்குச் சீட்டின் வலிமை!

இந்தியா தன்னை ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்துக் கொண்ட பிறகு நடக்கும் 15-வது பொதுத்தேர்தலில் 71 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். வருகிற ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி மே மாதம் 13-ம் தேதிவரை நீண்டு நிற்கும் ஐந்து கட்டத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களும் இணைந்து நடத்தப்படுகின்றன.

சுமார் 4 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் கடந்த பொதுத் தேர்தலைவிட அதிகமாகப் பங்குகொள்ள இருக்கின்றனர். 1,41,402 வாக்குச் சாவடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமா? 41 லட்சம் அரசு ஊழியர்கள் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், 21 லட்சம் பாதுகாப்புப் படையினருமல்லவா எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடக்க உதவ இருக்கின்றனர். உலகிலேயே இத்தனை வாக்காளர்கள், வாக்குச் சாவடிகள், பாதுகாப்புப் படையினர் என்று ஒரு தேர்தலில் பங்கு பெறுவது இந்தியாவில் மட்டும்தான்.

இந்தத் தேர்தலில் மிகவும் முக்கியமான அம்சம், தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 82 சதவீத வாக்காளர்களுக்கு, அவர்களது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதுதான். அசாம், நாகாலாந்து மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்கள் தவிர ஏனைய எல்லா மாநிலங்களிலும் முறையாகப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்ல. இந்த முறை, வாக்காளர் பட்டியலிலும் அவர்களது பெயர்களுடன் புகைப்படமும் இணைக்கப்பட இருக்கிறது.

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில், அத்தனை தொகுதிகளிலும் முதன்முதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால், கள்ள ஓட்டுப் போடுவது நின்றுவிடுமா என்றால், நிற்காது. ஆனால், குறையும். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் நான் ஓர் இந்தியன் என்று கூறிக்கொள்ள ஓர் அடையாளம் இப்போதாவது தரப்பட்டிருக்கிறதே, அதுவே பெரிய விஷயமல்லவா!

சுமார் 50 முக்கியமான அரசியல் கட்சிகள் பங்கு கொள்ளும், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்தச் செலவு சுமார் 16,000 கோடிக்குக் குறையாது என்று கருதப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் தேர்தலை நடத்துவதற்காக அரசுக்காகும் செலவு என்று 9,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள், ஒரு மக்களவைத் தொகுதிக்கு அவரவர் வசதிக்கேற்ப நான்கு முதல் பன்னிரெண்டு கோடி ரூபாய்வரை செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்களின் செலவுக்குத்தான் தேர்தல் ஆணையம் வரம்பு வைக்க முடியுமே தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் அனுதாபிகள் செலவழிப்பதைத் தடுக்க முடியாது.

அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு எதைச் செய்தாவது வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் போதும் என்கிற மனநிலையை மாற்றிக் கொள்ளாத வரையில், மக்கள் தங்களது பொன்னான நேரத்தையும், வாக்குகளையும் வீணாக்குவதைத் தவிர்க்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மக்களவையில் எந்தவித விவாதத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்தவர்கள், அளவுக்கு அதிகமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் சொத்து சேர்த்தவர்கள் போன்றவர்களை அரசியல் கட்சித் தலைமையே, மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காமல் இருப்பதன் மூலம் அரசியல் முதிர்ச்சி ஏற்பட வழிவகுக்க முடியும்.

மகளிர் ஒதுக்கீடு மசோதா பற்றி வாய்கிழியப் பேசும் அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர் பட்டியலில் மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கிப் புரட்சி செய்வதுதானே? இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பளித்து, வயதானவர்களைக் கட்சிப் பணியில் ஈடுபடுத்துவதைப் பற்றி ஏன் அரசியல் கட்சிகள் யோசிப்பதே இல்லை? ஜாதி ரீதியாக, மத ரீதியாகச் சிந்திப்பதை விட்டுவிட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் தேச முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் எண்ணம் ஏன் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படவில்லை?

வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் அந்த மாற்றத்தைத் தர எந்த அரசியல் கட்சியுமே, கட்சிகளின் கூட்டணியுமே தயாராக இல்லை. எது மோசம், எது படுமோசம் என்று தீர்மானிக்கும் நிலையில்தான் வாக்காளர்கள் இருக்கிறார்களே தவிர, நல்லதற்கும் கெட்டதற்கும் இடையே உள்ள தேர்வாக நமது தேர்தல்கள் இல்லை. அதுதான் வேதனை தரும் விஷயம்.

அதனால் என்ன? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற சுமார் 180 நாடுகளில், அதிக மக்கள்தொகை கொண்ட, மிக அதிகமான இன, மொழி, மத, ஜாதிப் பிரிவுகள் உடைய நாடு இந்தியாதான். ஆனால் 62 ஆண்டுகளாக சுதந்திர நாடாக, குடியரசாகத் தொடர்கின்ற, வலிமையான மக்களாட்சியாக 15-வது பொதுத் தேர்தலைச் சந்திக்கிற ஒரே நாடும் நமது பாரதம் மட்டுமே! தேர்தலுக்குத் தேர்தல் நமது மக்களாட்சி வலுப்பெறுகிறது. என்றாவது ஒருநாள் வாக்குச் சீட்டு வலிமை பெறும் காலம் வராமலா போய்விடும்?

மக்களாட்சியில் மாற்றங்கள் மெதுவாகத்தான் நிகழும்!

Thanks: www.dinamani.com - Saturday March 7 2009

Wednesday, January 21, 2009

ஊருக்குத்தான் உபதேசமா!

ஊருக்குத்தான் உபதேசமா!

மக்கள் மன்றம் பல விசித்திரமான வழக்குகளை சமீபகாலமாகச் சந்தித்து வருகிறது. அதில் ஒன்றுதான் நீதித்துறைக்கும், தலைமைத் தகவல் ஆணையத்துக்கும் இடையில் நடைபெறும் ஒரு விவாதம். நீதிபதிகள் மக்கள் மன்றத்தின் பார்வைக்கும் கேள்விக்கும் அப்பாற்பட்டவர்கள் என்கிற பாதுகாப்பு வளையம் உடைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது இந்தப் பிரச்னை.

1997-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி நடந்த அகில இந்திய நீதிபதிகள் மாநாட்டில், எல்லா நீதிபதிகளும் தங்களது சொத்துக் கணக்கைத் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி எல்லா நீதிபதிகளும் தங்களது சொத்து விவரங்களைத் தந்திருக்கிறார்களா? அப்படியென்றால், அந்த விவரங்கள் தனக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு ஒன்றைச் சமர்ப்பித்தார் எஸ்.சி. அகர்வால் என்பவர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இருக்கும் இந்தத் தகவலை யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தலைமை நீதிபதி தர மறுத்துவிட்டது முதல், விவாதம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

தலைமைத் தகவல் ஆணையர் இந்த விஷயத்தில் மனுதாரரின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இருக்கும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை மனுதாரருக்குத் தரும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதை எதிர்த்து, இப்போது உச்ச நீதிமன்றப் பதிவகம், தலைமைத் தகவல் ஆணையரின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் அல்ல என்றும், அதனால் நீதிபதிகள் பற்றி விவரங்களைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மனுதாரருக்குத் தர வேண்டிய அவசியம் கிடையாது என்றும், அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றப் பதிவகமும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகமும் வேறு வேறு என்றும் முன் வைக்கப்பட்ட வாதங்களைத் தலைமைத் தகவல் ஆணையர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பது பொதுநன்மை குறித்த தகவல்களைப் பெறுவதற்காகத்தானே தவிரத் தனிநபர் பற்றிய விவரங்களைப் பெறுவதற்காக அல்ல என்பது நீதிமன்றத்தின் வாதம். மேலும், தன்னிடம் தனது சக நீதிபதிகள் நம்பிக்கையின் பேரில் அளித்த தகவல்களைப் பொது மக்களுடன் பகிர்ந்து கொள்வது நம்பிக்கைத் துரோகம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் சட்டத்தின்படியும், நீதிபதிகள் நியமனம் மற்றும் செயல்முறை சட்டப்படியும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கையோ, ஏனைய விவரங்களையோ தலைமை நீதிபதியிடம் தரவேண்டிய அவசியம் கிடையாது என்பது நீதிபதிகள் தரப்பு வாதம். அகில இந்திய நீதிபதிகள் மாநாட்டில் அதிகாரபூர்வமற்ற தீர்மானமாகத்தான் சொத்துக் கணக்கைத் தலைமை நீதிபதிக்கு சமர்ப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதே தவிர எந்தவிதத் தீர்மானமோ சட்டமோ நீதிபதிகளைக் கட்டுப்படுத்தாது என்பது நீதித்துறையினரின் வாதம்.

இதெல்லாம் சரி. அரசியல் சட்டம் கூறவில்லை, சட்டத்தில் இடமில்லை, சம்பிரதாயம் சம்மதம் தரவில்லை, எங்களைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்றெல்லாம் இனியும் எத்தனை நாள்கள்தான் நீதித்துறை கூறிக்கொண்டு மக்களின் கண்காணிப்பு வளையத்துக்கு உள்படாமல், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மனநிலையில் தொடரப் போகிறது?

அரசியல்வாதிகளின், அதிகார வர்க்கத்தின், ஆட்சியாளர்களின் அழுக்கையெல்லாம் அலசிப் பிழிந்து, குற்றம் காணும்போது துணிந்து குட்டி, தடம் புரளும்போது தடுத்து நிறுத்தித் தட்டிக் கேட்கும் நீதித்துறைமீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது ஒருபுறம்.

கையும் களவுமாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஊழலில் ஈடுபட்டிருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டது. ஊழல் நீதிபதிகளை என்ன செய்வது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே கையைப் பிசைந்து கொண்டு பரிதாபமாகத் தனது இயலாமையை வெளிப்படுத்திய காட்சியும் அரங்கேறியது.

நீதிபதியின் நேர்மை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் நீதிபதியின் தீர்ப்பு விமர்சனத்துக்கு உட்பட்டதுதான். ஊருக்கு உபதேசம் செய்பவர்கள், ஒழுக்கசீலர்களாகவும், உத்தமர்களாகவும் இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் உத்தமர்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடந்து காட்டவும் வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கூடத் தனது சொத்துக் கணக்கை மக்கள் மன்றத்தில் வைத்தாக வேண்டும் எனும்போது, பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும் மட்டும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பது என்ன நியாயம்?

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும் என்பார்கள். அதேபோல, நீதிபதிகளும் தங்களது சொத்துக் கணக்கை மக்கள் பார்வைக்கு உட்படுத்தி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? ஊருக்குத்தானா உபதேசம்?

Thanks - www.dinamani.com - Monday January 19 2009

Thursday, January 1, 2009

இன்சூரன்ஸின் நோக்கம் என்ன?

இன்சூரன்ஸின் நோக்கம் என்ன?

வாகன விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அளித்துள்ள தீர்ப்பு சற்றே வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. வாகன உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும், வாகனத்தில் "ஓசி'யில் உட்கார்ந்து செல்பவர்களும் ஒருங்கே கருத்தில் கொள்ள வேண்டிய தீர்ப்பு இது.

மோட்டார் சைக்கிள் (பைக்) சொந்தக்காரர் ஒருவர் தன்னுடைய மகனிடம் வண்டியை ஓட்டக்கொடுத்தார். அந்த இளைஞர் தனது நண்பனை பின்னால் உட்காரவைத்து ஓட்டிச் சென்றார். திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது. அதனால் "பைக்' ஓட்டிச் சென்ற இளைஞர் படுகாயம் அடைந்து இறந்தார், பின்னால் உட்கார்ந்திருந்தவர் காயம் அடைந்தார்.

அந்த தகப்பனார் தன்னுடைய மகன் இறப்புக்கு இழப்பீடு கேட்டு மனுச் செய்தார். "நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்தது. தந்தைக்கு மகன் சொந்த உறவு என்பதால், அவரை ""மூன்றாவது நபராக'' கருத முடியாது, எனவே இழப்பீடு தர முடியாது என்று கூறியது.

அவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அவர் மீது பரிதாபப்பட்டு, இழப்பீடு தருமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனம் உடனே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா, சிரியாக் ஜோசப் அடங்கிய "பெஞ்ச்' விசாரித்தது. ""இன்சூர் செய்தவரின் மகன் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது நடந்த விபத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமா?'' என்பதுதான் இப்போதைய கேள்வி என்ற பெஞ்ச், 2006-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கை சுட்டிக்காட்டியது.

திலக் சிங் என்பவர் யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு அது. அந்த வழக்கில், இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்திருந்தவர் அடைந்த காயத்துக்கு நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் ஆகியிருந்தது. ""2 சக்கர வாகனத்தின் பின்னால் உட்காருபவர், ஓட்டுபவர் இரக்கம் காட்டி ஏற்றிச் செல்வதால் (ஓசியில்) பயணிப்பவர் ஆவார்; எனவே அவருக்கு இழப்பீடு பெற தகுதி ஏதும் கிடையாது'' என்று அந்த வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டது. இதையே உச்ச நீதிமன்ற "பெஞ்ச்' இந்த வழக்கிலும் தீர்ப்புக்கு முன்னுதாரணமாகப் பின்பற்றியிருக்கிறது.

2 சக்கர வாகனங்களை இன்சூர் செய்யும்போது அந்த வண்டியின் இழுவைத் திறன், அதன் வகை, அதன் விலை மதிப்பு ஆகியவற்றுடன் அதில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. அப்படி இருக்கும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதிராக இருக்கிறது. 2 பேர் செல்லக்கூடிய வாகனம் என்று குறிப்பிட்டு இன்சூர் செய்வது எதற்காக?

""தற்செயலாக ஏற்படும் விபத்துகளுக்கு கம்பெனி ஜவாப்தாரியல்ல'' என்ற பழைய கண்ணோட்டமே இத்தீர்ப்பில் வெளிப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஆயினும் இத் தீர்ப்பானது முக்கியமான ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறது. வாகன உரிமையாளரைத் தவிர மற்றவர்களுக்கு இழப்பீடு பெற உரிமையில்லை என்பதே அது.

வாகன விபத்துகளும் அதிகரித்து, வழக்குகளும் அதிகரித்துவரும் இந்நாளில் மத்திய சட்ட அமைச்சகமும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அமர்ந்து இத் தீர்ப்பின் அடிப்படையில் விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். மருத்துவச் செலவு அல்லது மரணம் ஆகியவற்றால் வேதனைப்படும் நிலையில் இத்தகைய நிவாரண மறுப்பு வேதனையை அதிகப்படுத்தவே செய்யும்.

மற்றொன்றையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறோம். வாகன விபத்து வழக்குகளில் வாகன ஓட்டிகளை மட்டும் போலீஸôர் எதிரிகளாகச் சேர்க்கின்றனர். சாலையை மோசமாக வைத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையினரையும், போதிய விளக்கு வசதி செய்யாத உள்ளாட்சிமன்ற அதிகாரிகளையும் விட்டுவிடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் பல இன்சூரன்ஸ் துறையில் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்கி இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சட்டதிட்டங்களும், அரசின் கட்டுப்பாடும் இல்லாமல் போகுமானால், தீர்ப்புகள் மட்டுமல்ல, அரசாங்கமே வெகுஜன விரோத ஆட்சியாக மாறிவிடும் ஜாக்கிரதை! இதனால் விபத்துகளுக்கு வாகனங்களின் நிலையும் வாகன ஓட்டிகளும்தான் காரணம் என்ற பிரமை ஏற்பட்டு விடுகிறது. இதில் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவையும் சேர்ப்பது விரும்பத்தக்கது.

Thanks - www.dinamani.com - 31.12.2008