I LOVE TAMIL


Friday, April 23, 2010

தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்!


தகவல் தொழில்நுட்பம் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது. இதனால் உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களைத் தமிழால் தொடர்புகொள்ள முடிகிறது. தமிழ்ப்பணிகள் தனியொருவர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து பலரும் இணைந்து குழுப்பணியாகச் செய்யும் நிலை உருவாகியுள்ளது. 

 தமிழ் நூல்கள் மின்னூல்களாக மாறியதும், தமிழ் இதழ்கள் தேசம் கடந்த வாசகர்களைப் பெற்றதும் தமிழ் இணையத்தால் எனில் மிகையன்று. அச்சு ஊடகங்களில் இருந்த தகவல்கள் மின்னணு ஊடகங்களுக்கு வந்ததால் தகவல்கள் பலமுனை வசதிகளைக் கொண்டதாக மாறியது.  

அவ்வகையில் அச்சில் இருந்த அகரமுதலிகள் இணையத்தில் மின் அகரமுதலிகளாக மாறியதும், சொற்களுக்குப் பொருள்கள் என்ற நிலையிலிருந்து மாறி, கூடுதல் தகவல்களைக் கொண்டதாக மலர்ந்தது (ஒலிப்புமுறை, படங்கள், வரைபடங்கள், தொடர்புடைய சுட்டிகள், தொடர்புடைய பிறமொழிச் சொற்கள்). தமிழ் அகரமுதலிகள் பல இணையத்தில் மின் அகரமுதலிகளாக உள்ளன. அவற்றுள் ஒன்று விக்கிமீடியா நிறுவனத்தின் தமிழ் விக்சனரியாகும்.  

உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது. விக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன. அதாவது ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரவரிசையில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது.

ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது. 2002 டிசம்பர் 12-ல் ஆங்கில விக்சனரி உருவானது. 172 மொழிகளுக்கான விக்சனரிகள் விக்கிப்பீடியா வழியாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் விக்சனரி இலக்கியம், இலக்கணம், அறிவியல்,தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்ச்சொற்களுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தருகிறது. 

தமிழ்மொழியில் உள்ள சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004-ல் தொடங்கப்பட்டது. தமிழ் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தொடக்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களாகவும் அதற்குரிய விளக்கங்களாகவும் உள்ளன. பலதுறை சொற்களாக இன்று விரிவுபெற்று காணப்படும் தமிழ் விக்சனரி 1,05,390 சொற்களைக் கொண்டு (23-2-2010) உலக அகரமுதலிகளில் 14-ம் இடத்தில் உள்ளது. 

தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் (எ.கா. ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி, மலையாளம், கன்னடம்) உள்ளன. ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. தமிழில் ஒலிப்புமுறை தொழில்நுட்பம் முழுமை பெற்றால் தமிழ் விக்சனரியையும் ஒலிப்புமுறை கொண்ட வசதியுடைய மின் அகரமுதலியாக மாற்ற முடியும். தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.

தமிழ் விக்சனரியைப் பயன்படுத்த நேரடியாகத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் சென்று, தமிழ் விக்சனரி என்ற தலைப்பை அழுத்தி அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து, சொற்களுக்கு உரிய பொருள் அறியலாம். அல்லது கூகுளில் சென்று ஆங்கிலச் சொல்லைத் தட்டச்சிட்டு, தமிழ் என்று அருகில் அச்சிட்டால் நமக்குரிய தமிழ்ச்சொற்பொருள் விக்கிப்பீடியாவில் கிடைக்கும்.

தமிழ் விக்கிப்பீடியாவை முறையாகப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று. நம்முடைய பயனாளி பெயர், கமுக்கக்குறியீடு உள்ளிட்டவற்றை வழங்கி, கலைந்த எழுத்துகளை உற்றுநோக்கி,நம் மின்னஞ்சல் முகவரி வழங்கிப் பதிந்தால் நம் பெயரை ஏற்றுக்கொண்டு, நமக்கு மின்னஞ்சல் வழி விக்கிமீடியா நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பும். அம்மடலைத் திறப்பதன் வழியாக நாம்தான் கணக்குத் தொடங்கியுள்ளோம் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு விக்சனரி பக்கத்தில் புகுபதிவு செய்துகொண்டு நாம் விக்சனரியைப் பயன்படுத்தலாம். புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச் செய்யலாம். நம் கணிப்பொறியின் ஐ.பி.எண் விக்கிப்பீடியா தளத்தில் பதிவாகும். எந்தக் கணிப்பொறியிலிருந்து திருத்தப்பட்டது என்ற விவரத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

தமிழ் விக்சனரியில் தொகுக்கப்பட்டுள்ள சொற்கள் பெரும்பாலும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி மற்றும் புகழ்பெற்ற பதிப்பாளர்களின் அகராதிகள் மற்றும் தனியாரின் பங்களிப்பும் உண்டு.

தமிழ் விக்சனரியை வளப்படுத்துவதன் வழியாகத் தமிழின் சிறப்பை உலகுக்கு அறிவிக்க முடியும். இதற்குப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள்,துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பு மிகவும் தேவையாக உள்ளது.

விக்சனரி தன்னார்வலர்களால் உருவாக்கப்படுவது. எனவே தமிழார்வம் ஒன்றையே பற்றுக்கோடாகக்கொண்டு பணிபுரியும் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவத்துறை சார்ந்த ஆர்வலர்கள் எழுதும் தமிழில் உள்ள பிழைகளை,வழுக்களை நீக்குவதில் தமிழறிந்தோர் முன்னிற்கலாம். அதற்குரிய எளிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டால் இப்பிழை நீக்கப் பணியில் இணையலாம். நமக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்க விக்கி ஆர்வலர்கள் ஆர்வமாக இருப்பதால் நம் அறியாமையாலும் கவனக்குறைவாலும் செய்யும் சிறுபிழைகள் தொடர்பாகக் கவலைகொள்ளாமல் பணியாற்றலாம். உலகெங்கும் பரவி வாழும் தமிழார்வலர்களும் விக்கி ஆர்வலர்களும் இவற்றை உடனுக்குடன் கண்ணில்பட்டதும் சரி செய்துவிடுவார்கள்.

காப்புரிமை என்ற பெயரில் தமிழின் சொல்வளம், குடத்திலிட்ட விளக்காக ஒரு சிலரிடத்தில் இருக்கிறது. நிதியுதவி செய்யும் ஆதரவாளர்கள் இருந்தும், தரமாகத் தமிழில் தட்டச்சு செய்யப் பங்களிப்பாளர்கள் இல்லை.

வளர்நிலையில் இருக்கும் தமிழ் விக்சனரிக்கு, தமிழ் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முனைப்பாகச் செயல்படுபவர் வேண்டும். அத்தகையவர் தமிழ் விக்சனரியின் ஆலமரத்தடி என்ற பகுதியில் தங்கள் பெயரை, மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்தால், பதிவு செய்தவருக்கு உரிய நேரத்தில், செய்ய வேண்டிய பணிகள் குறித்து குறிப்புகள் அனுப்பப்படும். அதில் அவரவருக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்ப்பணி செய்யலாம். தமிழ் விக்சனரி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தமிழ்வளம் காட்டும் களமாகவும் தளமாகவும் உள்ளது.

நன்றி: www.dinamani.com - 23-APR-2010

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் இயக்க 'கிரீன் சிக்னல்'

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் என நான்கு மாவட்டங்களில் வசிக்கும் ஒரு கோடி மக்களின் பல ஆண்டு கனவு இன்று நிறைவேறுகிறது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப் பட்டுள்ள அகல ரயில் பாதையில் இன்று முதல் ரயில்கள் ஓடும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரயில் சேவை 1853ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 1856ம் ஆண்டு, 'சென்னை ரயில்வே கம்பெனி' என்ற பெயரில் தென்னக ரயில்வே துவங்கியது. இந்த தென்னக ரயில்வேயில் இயக்கப்பட்ட 'போட் மெயில் சர்வீஸ்' என்ற சென்னை - ராமேஸ்வரம் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தகவல் தொடர்பிறகு பெரும் உதவியாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கடிதங்கள் சென்றாக வேண்டும் என்பதால் தினமும் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கும் இடைநில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலில் பயணிகளும் சென்று வந்த நிலையில், 'போட் மெயிலுக்காக' தனி பெட்டிகள் இணைக்கப்பட்டன. இலங்கையில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி வரை கப்பல் மூலம் வந்து அங்கிருந்து, 'போட் மெயில்' ரயில் மூலம் சென்னைக்கும், சென்னையிலிருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கும் சென் றனர். கப்பலில் செல்வதற்கான கட்டணமும் ரயில்வே நிர்வாகமே வசூலித்தது.

சென்னை - ராமேஸ்வரம் (விழுப் புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை வழி) ரயில் பாதை சென்னை முதல் விழுப்புரம் வரையிலும், மயிலாடுதுறையிலிருந்து ராமேஸ்வரம் வரையிலும் சில ஆண்டுகளுக்கு முன் அகலப் பாதையாக மாற்றப்பட்டது. விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை, 'மீட்டர் கேஜ்' ஆக இருந்ததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் ரயில் பயணம் செய்ய பெரும் சிரமத்திற்குள்ளாயினர். மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் - மயிலாடுதுறை வரையிலான 122 கிலோ மீட்டர் தூர 'மீட்டர் கேஜ்' பாதையை அகல பாதையாக மாற்ற கடந்த 2006ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதையொட்டி, அதே ஆண்டு டிசம்பர் மாதம் இப்பாதையில ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகலப் பாதை பணியை கடந்த 2007ம் ஆண்டு ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்.,) நிறுவனம் 270 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் துவங்கியது. மூன்று பகுதியாக நடந்த இப்பணியில் 31 பெரிய பாலங்கள் உட்பட 380 பாலங்கள், ஆளில்லாத 48 கேட்கள், ஆட்கள் உள்ள 52 கேட்கள் அமைக்கப் பட்டுள்ளன. இப்பாதையில் ரயில் 2009 ஜூன் 30ம் தேதி இயக்கப்படும் என 2007 மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த வேலு தெரிவித்தார்.

கொள்ளிடம் பாலம் முடிக்க காலதாமதமானதால் அதே ஆண்டு டிசம்பரில் ஓடும் என்றனர். ஆனால், பயணிகள் ரயில் இயக்குவதில் தாமதம் நீடித்தது. தற்போது ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப் பட்டுவிட்டன. ரயில்வே நிலையங் களும் கம்ப்யூட்டர் மயமாக்கப் பட்டுள்ளன. சிக்னல், கிராசிங் பாயின்ட்கள் என நவீன தொழில்நுட் பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கோடை காலமாக இருப்பதால் பள்ளி விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர மத்திய அரசு பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வரிசையில் இன்று முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இயங்கும் ரயிலும் இடம் பெறும்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நிம்மதி: நான்கு ஆண்டுகளுக்கு பின், விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் இயக்கப்படுவதால் வியாபாரிகள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் நிம்மதியடைந்துள்ளனர். திருச்சி முதல் சென்னை வரை 336 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதை பணி கடந்த எட்டு ஆண் டிற்கு முன்பே 13 மாதங்களில் முடிக்கப்பட்டது. ஆனால், 122 கி.மீ., தூரமேயான விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதைக்கு நான்கு ஆண்டு காலம் ஆகிவிட்டது. அதுவும் ரயில்வே நிர்வாகம் இப்பாதையை சவாலாக எடுத்துக் கொண்டு முடித்து விட்டதாக மார்தட்டிக் கொள்கிறது.

தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை இணைக்கும் பாதையான விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையில் ரயில் நிறுத் தப்பட்டதால் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். அவர்கள் சென்னை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளுக்கு தொழில் ரீதியாக சென்று வருவதற்கும், பொருட்களை கொண்டுவர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அத்துடன் வயது முதிர்ந்தவர்கள் பஸ்களில் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர். சிதம்பரம், வேளாங் கண்ணி மற்றும் தென்மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள், முக்கிய இடங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பாதித்தனர். முக்கியமாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் படித்து வரும் நிலையில் அவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும், வீடு திரும்புவதற்கும் தவியாய்த் தவித்தனர். அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பு மக்களும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு ரயில் வசதியின்றி தவித்துவந்த நிலையில், தற்போது ரயில் இயக்கப்படுவது அனைவரையும் நிம்மதியடைய செய்துள்ளது.

கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரும் மூலப்பொருட்கள் சென்னை துறைமுகத்தில் இறக்கி அங்கிருந்து சாலை மார்க்கத்தில் கொண்டு வரப்படுகிறது. இனி வரும் காலங்களில் சென்னையிலிருந்து ரயில் மூலம் எளிதாக கொண்டு வர முடியும். இதனால் நேர விரயத்தையும், கூடுதல் செலவையும் தவிர்க்க முடியும். அதே போன்று இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நேரடியாக முக்கிய துறைமுகங்களுக்கோ அல்லது நாட்டின் பிற பகுதிகளுக்கோ கொண்டு செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கட்டணம் எவ்வளவு? விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில் இன்று காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து ரயில் புறப்படுகிறது. விழுப்புரம் மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து எட்டு கோச்சுகளுடன் பயணிகள் ரயில் இன்று காலை 6.10 மணிக்கு புறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் துவக்கி வைக்கின்றனர். பயணிகள் ரயில் நேற்று மாலை பையோ டீசல் இன்ஜினுடன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. மயிலாடு துறையிலிருந்து இயக்க ஒரு டீசல் இன்ஜின் நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது. விழுப்புரத்திலிருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பண்ருட்டி, கடலூர், சிதம்பரம் வழியாக காலை 9.50க்கு மயிலாடுதுறை சென்றடையும். இதே போல் முன்னதாக மயிலாடுதுறையிலிருந்து அதிகாலை 5.30க்கு புறப்படும் ரயில் காலை 9.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். பின், விழுப்புரத்திலிருந்து மாலை 6.20க்கு புறப்படும் பயணிகள் ரயில் இரவு 10 மணிக்கு மயிலாடுதுறைக்கு சென்றடைகிறது. இதே போல், மயிலாடுதுறையிலிருந்து மாலை 6.10க்கு புறப்படும் ரயில் இரவு 10 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது.

விழுப்புரம்- மயிலாடுதுறைக்கு பழைய கட்டணமாக உள்ள 19 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 50 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட உள்ளது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் உள்ளிட்டப் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளதால், குறைந்த வேகத்திலேயே பயணிகள் ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று இரவு வரை கட்டணம் குறித்த தகவல் வராததால் ரயில் டிக்கெட்டுகள், முன்பதிவு செய்யப்படவில்லை. இந்த பாதையில் ஓரிரு நாட்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகள் ரயில் அவசரமாக இயக்கும் பின்னணி: சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இன்றுடன் கெடு முடிவதால் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறை பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் உடனடியாக ரயில் இயக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாக மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் 5ம் தேதி டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எலிப் தர்மராஜ், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதில், டில்லி ரயில்வே துறை செயலக அதிகாரி மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் நீதிபதிகள் முன் னிலையில் ஆஜராகி மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு ரயிலை இயக்க முடியாது. அந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, விரைவில் மயிலாடுதுறை- விழுப்புரம் வழியாக ரயில் இயக்கப்படும் என உறுதியளித்தனர்.

பின், வழக்கு மீண்டும் 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை நேரில் ஆஜராகி உறுதியான வாக்குமூலம் தெரிவிக்க வேண்டும் என, நீதிபதிகள் தெரிவித்தனர். 23ம் தேதி நடந்த விசாரணையில், நான்கு வாரத்திற்குள் விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். இதற்கிடையே அறிவித்த தேதிபடி ரயில் இயக்கவில்லையெனில், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என, ரயில்வே அதிகாரிகளுக்கு வக்கீல் ராஜேந்திரன் பதிவு தபால் மற்றும் தந்தி மூலம் நோட்டீஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில், இன்றுடன்(ஏப்., 23ம் தேதி) ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த கெடு முடிவடைவதால், ரயில்வே நிர்வாகம் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வலியுறுத்திய 'தினமலர்': விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை பணிகளை விரைவாக முடித்து, ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து படங்களுடன் கட்டுரைகள், செய்திகளை வெளியிட்டது. பணியில் ஏற்படும் கால தாமதம், நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்களின் பாதிப்புகளை 'தினமலர்' தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது. 'தினமலர்' நாளிதழின் தொடர் முயற்சி காரணமாக விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் போக்குவரத்து இன்று சாத்தியமாகியுள்ளது.
                                                                                           - நமது சிறப்பு நிருபர் -








 

Monday, April 19, 2010

தலையங்கம்: நம்மை நாமே ஏமாற்றுகிறோம்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரகுமார் குஜ்ராலைச் சந்திக்க வியட்நாமிய அமைச்சர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பதையும் நமது உணவுக்கிடங்குகள் நிரம்பி வழிவதையும் சொன்னபோது புன்னகைத்தார்.

"ஏன் நீங்கள் இதை நம்பவில்லையா?' என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்

""பிறகு ஏன் தெருவோரங்களில் பலர் உங்கள் நாட்டில் பிச்சையெடுக்கிறார்கள்? ஒரிசா மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகச் செய்தி வருகிறதே, அது எப்படி? பலர் பட்டினி கிடக்கும்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டதாகவும், உணவு ஏற்றுமதி செய்வதாகவும் நீங்கள் கூறுவது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமை தொடருமானால், இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்நாட்டுக் குழப்பம்தான் ஏற்படும்''.

1991-ல் இந்தியா பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டபோது அடுத்த பத்துஆண்டுகளில் நமது நாடு பூலோக சொர்க்கமாகப் போகிறது என்று உறுதியளித்தவர்களில் அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய பிரதமருமான மன்மோகன் சிங்கும் ஒருவர். பத்து ஆண்டுகளாகியும் சொர்க்கம் தென்படவில்லை என்பது இருக்கட்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லோருக்கும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேறவில்லை. பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பயன் இப்போதுதான் மேல்தட்டு மக்களிடமிருந்தும் பெருநகரங்களிலிருந்தும் மெல்ல மெல்ல கீழ்நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகவும் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையும், பசி பட்டினியும், வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்காது என்றும் ஆட்சியாளர்களும் பொருளாதார மேதைகளும் உறுதி அளித்தனர்.

அடுத்த பத்து ஆண்டுகளும் இப்போது உருண்டோடிவிட்டன. இன்றைய நிலைமை என்ன தெரியுமா? மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி மத்திய திட்டக்கமிஷனுக்கு அளித்திருக்கும் அறிக்கையின் 2004-05 ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கீழே வாழ்பவர்களின் எண்ணிககை 37.2 சதவிகிதம். அதாவது, ஏறத்தாழ 40.71 கோடி மக்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இது நிச்சயமாக அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்காது.

மத்திய திட்டக்கமிஷனின் கடந்த மார்ச் 2007 புள்ளிவிவரப்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 27.5 சதவிகிதம். அதாவது 30.17 கோடி. திட்டக்கமிஷனின் புள்ளிவிவரத்தை நம்புவதா இல்லை சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை நம்புவதா என்பதில் மத்திய அமைச்சரவைக்குக் குழப்பம் ஏற்பட்டு இபபோது பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வழங்க சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை ஏற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

வேடிக்கை இத்துடன் நின்றுவிடவில்லை. அனைவருக்கும் உணவுதிட்டத்தின்படி பயன் அடையப்போவது திட்டக்கமிஷனால் அடையாளம் காட்டப்பட்ட 30.17 கோடிப் பேரோ சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியால் குறிப்பிடப்படும் 40.71 கோடிப் பேரோ அல்ல. வெறும் 10 கோடிப்பேர் மட்டும்.

ஏன் என்று கேட்கிறீர்களா? இந்தப் பத்துக் கோடிப் பேருக்குத்தான் இருப்பிடம் என்று பெயருக்கு ஒரு குடிசையாவது, விலாசமாவது இருக்கிறது. ஏனையோர் தெருவோரங்களிலும் பொதுஇடங்களிலும் உண்ண உணவும், உடுக்க உடையும், செய்ய நிரந்தரத் தொழிலும் இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள். இல்லையென்றால், காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள்.

மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் சரிதானா? இன்னொருபுறம் நடந்து கொண்டிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் தந்தேவாடா  பகுதியில் ஆதிவாசிகள் வசிக்கும் சுமார் 258 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள். இதேபோல, டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரமும் பல ஆதிவாசிக் கிராமங்களைக் கணக்கில் எடுக்காமல் தானே தனது அறிக்கையைத் தயாரித்திருக்கும்?

உணவுப் பாதுகாப்பு என்கிற பெயரில் அனைவருக்கும் உணவு என்று திட்டம் தீட்டி பொது விநியோக முறை மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது அத்தியாவசியத் தேவை. இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், முறையாக நிறைவேற்றப்படாத நல்ல திட்டம் என்பது முறைகேடுகளின் ஊற்றுக்கண்ணாக மாறி, மக்கள் மனதில் கொந்தளிக்கும் எரிமலையாக மாறிவிடுமே என்பதுதான் நமது கவலை.

ஒருபுறம், வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் மட்டுமல்ல, விவசாய நிலங்களும் கபளீகரம் செய்யப்படுகின்றன. இன்னொருபுறம் 60 ஆண்டுகளாகியும் இன்னும் இந்தியா முழுவதும் முறைகேடுகள் இல்லாத பொது விநியோக முறையை ஏற்படுத்தாமல் இருக்கிறோம். பல மாநிலங்களில் ரேஷன் கடைகள்கூட கிடையாது என்பதுதானே யதார்த்த உண்மை? அப்பழுக்கில்லாத பொதுவிநியோகச் சங்கிலியைக் கூட நம்மால் முறைப்படுத்தி நெறிப்படுத்த முடியாத நிலையில் அனைவருக்கும் உணவு எப்படிச் சாத்தியம்?

விலாசமே இல்லாத - ரேஷன் அட்டைக்கு அருகதையில்லாத - தெருவோரவாசிகள் இந்தியப் பிரஜைகள் அல்லாமல் போய்விடுவார்களா? அவர்களின் பசியை யார், எப்போது, எப்படிப் போக்குவது? அவர்களைப் பற்றிக் கவலைப்பட இங்கே யாருமே இல்லையா?

பொருளாதாரத் தாராளமயமாக்கல் என்று சொன்னபோது செல்வம் தாராளமயமாக்கப்படும் என்றும் குடிசைகள் கோபுரங்களாக மாறும் என்றும் கனவு கண்டோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் புரிகிறது தாராளமயமாக்கப்படுவது செல்வம் அல்ல, வறுமை என்று. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்கள் இந்திய அரசின் ஆளுமையில் இல்லை என்று. ஆண்டுதோறும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று... 

முன்னாள் பிரதமர் குஜ்ரால் வீட்டில் சந்தித்த வியட்நாமிய அமைச்சருடனான உரையாடல் ஏனோ நினைவை உலுக்குகிறது. நமது ஆட்சியாளர்கள் போடுவது தப்புக்கணக்கு என்று எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை!        

நன்றி: www.dinamani.com - 19 Apr 2010

  

Tuesday, April 13, 2010

தலையங்கம்: குடிநீர் கொள்ளை

'கோடை வரும் பின்னே,​​ குடிநீர்த் தட்டுப்பாடு வரும் முன்னே' என்பதுதான் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்னை.​ எல்லா நகரங்களிலும் குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை.​ நகர்ப்புறங்களில்,​​ உள்ளாட்சி நிர்வாகம் விநியோகம் செய்யும் குடிநீர்,​​ குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.​ அதே நேரத்தில் ஊரகப் பகுதியில் குடிக்கத் தகுதியான நீருக்காகப் பல கிலோமீட்டர் நடந்தும் சைக்கிளிலும் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது.

தமிழகத்தின் குடிநீர்த் தேவையின் பெரும்பகுதி நிலத்தடி நீரை-​ அதாவது ஏரி,​​ குளம்,​​ கிணறு ஆகியவற்றை நம்பித்தான் இருக்கிறது.​ ஆனால் தமிழகத்தில் நிலத்தடி நீர் போதுமானதாக இல்லை.​ ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.​ தமிழகத்தில் உள்ள ​ சுமார் 7 லட்சம் பாசனக் கிணறுகளில் 50 விழுக்காடு கிணறுகளில் நீர் இல்லை.​ 10 விழுக்காடு கிணறுகள் பயன்பாடே இல்லாமல் தூர்ந்துவிட்டன என்பதுதான் புள்ளிவிவரம் சொல்லும் தகவல்.​ நல்ல குடிநீருக்காக ஊரக மக்கள் படும் துன்பம் வார்த்தைகளில் அடங்காது.

அரசின் குடிநீர்த் திட்டங்கள் பெரும்பாலும் நதிகளை ஆதாரமாகக் கொண்டவை.​ ஆனால் நதிகள் அனைத்தும்,​​ ஏதோவொரு தொழிற்கூடத்தால் மாசுபடுத்தப்பட்டு,​​ ரசாயனத்தை வெளியேற்றும் வாய்க்காலாகத்தான் ஆகியுள்ளது.​ ​

திருப்பூர் சாயத் தொழிற்சாலைகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நொய்யல் ஆறு மாசுபட்டதற்காக விவசாயிகள் ரூ.100 கோடி இழப்பீடு பெற வழி ஏற்பட்டது.​ ஆனால்,​​ காவிரி,​​ பாலாறு,​​ தாமிரபரணி ஆறுகளை நாசப்படுத்தும் தொழிற்சாலைகள்,​​ நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு இல்லை என்பதாகச் செயல்படுகின்றன.​ ​

தமிழக அரசின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில்கூட,​​ வேலூர் குடிநீர்த் ​ திட்டத்துக்காக ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.​ ஆனால்,​​ இதற்கான நீர் ஆதாரம் எங்கே இருக்கிறது?​ மேட்டூர் அருகே காவிரியிலிருந்துதான் தண்ணீர் கொண்டு வந்தாக வேண்டும்.​ கோடையில் மேட்டூர் அணையே வறண்டு கிடக்கும்போது இத்தனை கோடியிலான திட்டம் எந்த அளவுக்குப் பயன்தரும்?​ நிலத்தடி நீரும் இல்லை.​ நதிகளிலும் நீர் இல்லை.​ இருந்தாலும் அவை மாசுபட்டுக்கிடக்கின்றன என்றால் தமிழகத்தின் குடிநீர்ப் ​ பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடும் இற்றை நாளில்,​​ அதைக் காசாக்கிக் கொள்ளை லாபம் சம்பாதிக்க அரசியல்,​​ அதிகார வர்க்க ஆதரவுடன் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.​ சில இடங்களில்,​​ குடிக்கத் தகுதியான நீரின் விலை ஒரு குடம் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாயாக இருக்கிறது.​ இதைவிட பகல்கொள்ளை என்னவென்றால்,​​ இதே குடிக்கத் தகுதியான நீரை 20 லிட்டர் கேன்களில் அடைத்து,​​ அடைக்கப்பட்ட குடிநீர் ​(Pa​c‌k​a‌g‌e‌d D‌r‌i‌n‌k‌i‌n‌g Wa‌t‌e‌r)​​ என்ற முத்திரையுடன் ஒரு கேன் ரூ.25 முதல் 30 வரை விற்கிறார்கள்.​ நகர்ப்புறங்களில் வீடுகளிலும்,​​ அலுவலகங்களிலும் இத்தகைய அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை மூலம் யாரோ கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.​ ​

இந்த விலை என்பது,​​ இந்தியத் தர நிறுவனச் சான்று பெற்று,​​ முறையாக மறுசவ்வூடு பரவல் உள்ளிட்ட சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி,​​ நீரைத் தூய்மைப்படுத்திய குடிநீருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை.​ ஆனால்,​​ வெறும் அடைக்கப்பட்ட குடிநீருக்கும் அதே விலை வைத்து கொள்ளை அடிக்கிறது ஒரு கூட்டம்.

தமிழகத்தில் உள்ள 6,700 மதுபானக் கடைகள் மூலம்,​​ வெறுமனே விற்பனை வரி,​​ தீர்வை ஆகியவற்றால் மட்டுமே அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது.​ இதே அளவுக்கான வருவாய்,​​ பிளாஸ்டிக் பைகளில் 250 மி.லி.​ அளவு அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை மூலம் யார்யாருக்கோ போய்க் கொண்டிருக்கிறது.​ மதுபானக் கடைகளில் கிடைக்கும் இத்தகைய பிளாஸ்டிக் பைகளில் பெயர் உள்ள நிறுவனங்கள் முறையான அனுமதி பெற்றவைதானா என்பதுகூட சந்தேகம்தான்.​ ​

இத்தகைய அடைக்கப்பட்ட குடிநீர் அல்லது தூய்மைப்படுத்திய குடிநீர் தயாரிப்பு ஆலைகள்,​​ தங்களுக்கான நீர் ஆதாரமாக நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துகின்றன.​ தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்ச் சட்டம் -2003-ம் ஆண்டு பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது.​ இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே நிலத்தடி நீரைத் தவறாகவும்,​​ மாசுபடுத்தவும்,​​ லாப நோக்கில் பயன்படுத்தவும் செய்யும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான்.​ ஆனால்,​​ இந்தச் சட்டம் எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டது.

நிலத்தடி நீரை மாசுபடுத்துதல்,​​ முற்றிலுமாகப் பயன்படுத்தி,​​ மக்களுக்குக் கிடைக்காமல் செய்தல் ஆகியவற்றுக்காக எத்தகைய தண்டனை அளிக்கமுடியும்.​ ​ ​ கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோகோ கோலா ஆலைக்கு ரூ.​ 216 கோடி அபராதம் விதிக்கலாம் என்று அப்பகுதியில் பாதிப்புகளை ஆய்வுசெய்த ​ ​ உயர்நிலைக் குழு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.​ இதில் குடிநீர் ஆதாரங்களை மாசுபடுத்தியதற்காகவும்,​​ உள்ளாட்சிகளில் லாரிகள் மூலம் நல்ல குடிநீர் கிடைக்கச் செய்ய ஏற்பட்ட செலவுக்காகவும் விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.82 கோடி.

தமிழகத்தின் குடிநீர் என்பது பெரும்பாலும் நிலத்தடி நீரைச் சார்ந்து இருப்பதால்,​​ நிலத்தடி நீரை முறைகேடாகப் பயன்படுத்துவோர்,​​ அளவுக்கு மீறி பயன்படுத்தி நிலத்தடிநீரை இல்லாமல் ஆக்குவோர்,​​ நதிகளை மாசுபடுத்துவோர் எல்லோர் மீதும் அபராதம் விதிப்பதன் மூலம்தான் தமிழகத்தின் நீர் ஆதாரங்களைக் காப்பாற்ற முடியும்.

குடிநீர்க் குழாய் இணைப்பு,​​ பிற பயன்பாட்டுக்கான தண்ணீர் இணைப்பு என இரு இணைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.​ இதைச் செய்வதும்கூட குடிநீர் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.​  

​இன்றைய முதல் தேவை-​ குடிக்கத்தகுந்த குடிநீர்,​​ அடைக்கப்பட்ட குடிநீர்,​​ தூய்மை செய்யப்பட்ட குடிநீர் ஆகியவற்றுக்கு அரசே நியாயமான விலை நிர்ணயம் செய்வதும்,​​ அனுமதியில்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் மக்களுக்குப் பெரும் நன்மை சேர்க்கும்.​ குடிநீருக்காகப் பணத்தை தண்ணீராய்ச் ​ செலவழிக்க முடியுமா என்ன? 
          
நன்றி: www.dinamani.com - 23 Mar 2010
 

நம்பிக்கை தரும் இந்தியா

அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது போலவும், இந்தியா தான் கவனக் குறைவாக இருப்பது போலவும், இந்தியாவில் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பேசியும், எழுதியும் வருகின்றனர். ஆனால் யூகங்களும், உண்மையும் வேறுவிதமாக உள்ளன என்பதை சர்வேக்கள் காட்டுகின்றன. நில மாசுபாடுக்கு அடிப்படைக் காரணமாக பூச்சிக்கொல்லிகள் உள்ளன. இவை நிலத்தை மட்டுமின்றி நீர் நிலைகளையும் பாதிக்கின்றன. உலகில் பயன்படுத்தும் மொத்த பூச்சிக்கொல்லி மருந்துகளில், விவசாய நாடான இந்தியா, வெறும் 3 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. ஆனால் உலகில் விளையும் மொத்த தானிய உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு 16 சதவீதமாகும். அண்டை நாடான சீனா ஒரு எக்டேருக்கு 10.8 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியா ஒரு எக்டேருக்கு 380 கிராம் பூச்சிக் கொல்லி மருந்து மட்டுமே பயன்படுத்துகிறது. ஜப்பானில் ஒரு எக்டேருக்கு 16.56 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துகிறது. இந்த பட்டியலில் இந்தியா தான் கடைசியில் உள்ளது என்பது ஆறுதலான விஷயம்.

Wednesday, March 31, 2010

Your savings bank account will now earn 16-18% more

MUMBAI: From Thursday, every rupee that you keep in your savings bank account will earn more money. According to a Reserve Bank of India (RBI) mandate, from April 1, banks will calculate interest paid on money kept in the savings bank account on a daily basis. This is a departure from the earlier practice of calculating interest on the lowest balance after the 10th of every month.

This change in calculation of interest paid on money kept in one's savings bank account, made possible by the use of technology in banking, will translate to about 16-18% higher earnings for the depositor, top bankers said. This means that if a person now earns around Rs 100 annually as interest income from his savings bank account, from the next financial year, the amount will jump to Rs 116-Rs 118.

There is a caveat though: although the interest will be calculated on a daily basis, it will be credited to the account only at the end of each quarter or the half year. Top bankers also pointed out that this new structure for interest calculation will force interest paid on ultra short-term fixed deposits, say for 15 days to 45 days, to go up substantially.

At present, the rate of interest in your savings bank account is 3.5% per annum as mandated by the government. But going by the current structure of calculating interest rate, the effective rate applicable to customers is about 2.90-2.95%, said Bipin Kabra, CFO, Dhanlaxmi Bank. In the new structure, this will be exactly 3.5%.

Since the RBI had announced to move to this structure one year ago--in its April 2009 policy meeting--all the banks got sufficient time to get their IT infrastructure ready. "All the test runs...dummy runs have been done. The technology has been tested to move to a system of daily calculation of interest (in savings bank)," said Seshan Ramakrishnan, head, retail liabilities product group, HDFC Bank. "Technology plays a huge role in this," he added.

The move to daily calculation of interest also has the potential to push up interest rate paid on very short-term FDs. This is because a number of banks pay just about 2.5-2.75% per annum on these FDs. But now that depositors can earn at least 3.5% in savings banks, and that too without any lock-in like in FDs, customers will have the freedom to arbitrage between the two types of deposits. "Savings bank accounts give liquidity, but here the interest income is credited at the end of the quarter or half year. On the other hand, in FDs, one could get the interest income at the end of term (that could be on the 46th day)," pointed out Ramakrishnan. "So it needs to be seen how customers behave under the new structure."

While account holders will earn some extra money, banks will be hit. Banks with a higher percentage of funds in their total liabilities coming from savings bank accounts would be affected more. According to balance sheet of banks for the year ended March 2009, SBI had 27% of its liabilities in savings bank accounts and HDFC Bank had 24%. Similarly, Axis Bank had 22%, Federal Bank had 20% and Dhanlaxmi Bank 15% in savings banks.

Thanks to: http://timesofindia.indiatimes.com/biz/india-business/Your-savings-bank-account-will-now-earn-16-18-more/articleshow/5744619.cms

Saturday, March 27, 2010

தலையங்கம்: நல்லது நடக்கட்டும்

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் கருணாநிதியின் நேரடிப் பார்வையில் தனித்துறை அமைக்கப்படும் என்று அண்மையில் நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.​ இத்தகைய தனித்துறை அமைக்கப்படுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் முதலில் நடைபெறுகிறது.​ 

​இதுநாள்வரை,​​ மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சமூக நலத் துறையின் கீழ்,​​ சமூக நல அமைச்சரின் பொறுப்பில் நடைபெற்று வந்தது.​ தற்போது முதல்வர் நேரடிப் பார்வையில் இத்துறை செயல்படும் என்றாலும்கூட,​​ இத்துறைக்கென தனி அமைச்சரை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.​ ஏனெனில் அதற்கான தேவை இருக்கிறது.​  

​இந்தியாவில் கடந்தமுறை எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி 2.9 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள்.​ தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை 16.42 லட்சம்.​ அதாவது 2.6 சதவீதம்.​ இதில் மிகவும் சிக்கலானதும்,​​ முக்கியமானதும் என்னவென்றால்,​​ இவர்களில் 70 சதவீதம் பேர் கிராமங்களில் உள்ளனர்.​ நகர்ப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அரசின் நலத் திட்டங்களின் பயனைப் பெற முடிகிறது என்பதும்,​​ கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அரசின் பயனையும் பெறாமல் கல்வியும் பெறமுடியாமல் மெல்ல மெல்ல காலவெள்ளத்தில் பின்தள்ளப்படுகிறார்கள்.​ மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் 1.25 லட்சம் பேர் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.​ இவர்கள் மட்டுமே அரசின் பலன்களை பெறுகிறார்கள்.​ மற்றவர்கள் அரசின் நலத்திட்டம் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர்.​   

​மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டத்துக்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.176 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.​ இத்திட்டத்தில்,​​ மாணவர்களாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் உணவுப் படி ரூ.200 லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.​ ஆயினும்,​​ இன்னும் செய்யவேண்டியவை நிறைய இருக்கின்றன.​ அவற்றைச் செய்யும்போது இன்னும் நன்றாக இருக்கும். 

உடற்குறையால்,​​ பார்வையிழப்பால்,​​ செவித்திறன் குறைவால் 40 சதவீதம் பாதிக்கப்பட்டோர்,​​ மூளைவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை மாற்றுத் திறனாளிகள் என்று வகைப்படுத்துகிறார்கள்.​ ஆனால்,​​ இவர்களுக்காக நடைபெறும் சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை,​​ சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர் எண்ணிக்கையைக் கணக்கிட்டால்,​​ அவை தேவைக்குத் தகுந்தபடியாக இல்லை.  

இத்தகைய மாற்றுத் திறனாளிகளின் கல்விக்காக சில திட்டங்கள் இருந்தாலும்கூட,​​ இன்றைய நவீன உலகத்துடன் போட்டியிடும் வகையிலான தொழிற்கல்வி அளிக்கும் புதிய பயிற்சிகள் அரசு நிறுவனங்களில் கிடைப்பதில்லை.​ வழக்கமாக சொல்லித்தரும் அதே காலாவதியான அதே தொழிற்பயிற்சிகளைத்தான் அளிக்கின்றனர்.​ சில தனியார் அமைப்புகள்,​​ வெளிநாட்டு நிதியுதவியைக் கொண்டு அமைத்துள்ள,​​ மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சிக் கூடங்கள் ஆச்சரியத்தை தந்தாலும்,​​ அரசுத் தரப்பில் இத்தகைய முயற்சிகள் இதுவரை இல்லை என்பதே உண்மை.​ 

​மாற்றுத் திறனாளி என்பவர் இரண்டு வகையிலும் பாதிக்கப்பட்டிருப்பவர்.​ அவரால் மற்றவர்களைப்போல செயல்பட முடியாது என்பது ஒரு பாதிப்பு.​ மற்றவர்களுக்கு இணையாகச் சம்பாதித்தாலும்,​​ தனது ஊனத்தை சரிக்கட்ட ஒரு தனிநபரை அமர்த்திக்கொள்ளும் கட்டாயம் இருப்பதால் அவரது வருமானத்தின் கணிசமான பகுதி அதற்காக செலவாகிப் போகிறது.​ ​ 

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக தன்னார்வ அமைப்புகள் நடத்தும் பகல்நேர மையம்,​​ உண்டுறைப் பள்ளி ஆகியவற்றுக்கு அரசு நிதியுதவி அளிப்பதுடன்,​​ மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்றபடி கட்டடங்கள் கட்டுவதற்காக மானியம்கூட தருகிறது.​ ஆனால் மிகச் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே உண்மையான தொண்டினை அளிக்கின்றன.​ மற்றவர்கள் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு,​​ வெறுமனே தலைகள் கணக்கைக் காட்டி சம்பாதிக்கின்றன என்பதுதான் நடைமுறை உண்மை.​ இத்தகைய மோசமான தன்னார்வத் ​ தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வதன் மூலம்,​​ ஓரளவு ஒழுங்கை நிலைநிறுத்த முடியும். 

அரசு அலுவலகங்கள் மிகச் சிலவற்றில் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்தள மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.​ குறிப்பாக,​​ இத்தகைய சாய்தள வசதி கொண்ட பள்ளிகள் எத்தனை என்று கணக்கிட்டால்,​​ விரல்விட்டு எண்ணிவிடலாம். 

விமான நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி கழிவறைகள் உள்ளன.​ அவை அவர்தம் ஊனத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள்.​ ஆனால் இத்தகைய கழிப்பறைகள் அரசு அலுவலகங்களிலோ அல்லது பள்ளிகளிலோ கிடையாது.​ உடற்குறை,​​ பார்வை குறையுள்ளவர்கள் மற்றவர் உதவியில்லாமல் இந்தக் கழிவறையைப் பயன்படுத்த முடியாது.​ கழிவறையில் உட்கார்ந்தபின் ஊன்றி எழுவதற்கு ஏதுவாக,​​ சுவரில் கம்பிகள் பொருத்தப்பட்ட கழிவறைகளே இல்லை.​ பேருந்துகளில்கூட ஊனமுற்றவருக்காக ஒரு இருக்கை உள்ளதே தவிர,​​ அந்த இருக்கை சாதாரண மனிதர் அமரும் அதே இருக்கைதான்,​​ 40 சதவீத உடற்குறை உள்ளவர் இந்த இருக்கையில் அமர்ந்து எழ முடியாது.​  

​மூளை வளர்ச்சி குன்றியவர்கள் நீங்கலாக,​​ மற்ற மூன்று வகைகளில் பாதிப்புகள் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான ஊதியத்தை சம்பாதிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர அரசினால் முடியும்.​ மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போலவே,​​ மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தலாம்.​ இவர்தம் திறமைக்கேற்ப அரசுத்துறை வேலைகளையே அயல்பணி ஒப்பந்தமாக செய்துகொள்ள முடியும்.​ மேலும்,​​ கோயில்களில் காலணி பாதுகாத்தல்,​​ பஸ்நிலையங்களில் சைக்கிள் ஸ்டாண்டுகள்,​​ பேருந்து நிலையங்களில் ஓய்வறை நிர்வாகம்,​​ பொருள் வைப்பு நிர்வாகம் ஆகியவற்றை இத்தகைய மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களுக்கு மட்டுமே வழங்கினால்,​​ அவர்கள் பொருளாதார ரீதியில் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமையும்.


நன்றி: www.dinamani.com - 27 Mar 2010