I LOVE TAMIL


Monday, February 28, 2011

தலையங்கம்: துணிவுமில்லை, மனமுமில்லை

எந்தவொரு நாடும் உலக அரங்கில் மதிக்கப்படுவது அதன் ராணுவ பலத்தாலோ, பொருளாதார பலத்தாலோ, மக்கள்தொகை அல்லது நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமல்ல. அந்த நாடு தனது குடிமக்களை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது, அவர்களது உரிமைகளை மதிக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு நாடும் அதன் தலைமையும் மதிக்கப்படுகிறது, மரியாதை பெறுகிறது. சமீபகாலமாக நிகழும் சில சம்பவங்கள் இந்தியாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சீன சரக்குப் படகு ஜப்பானியக் கடலோரக் காவல்படையின் ரோந்துப் படகின்மீது மோதிவிட்டது. ஜப்பானியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் அந்தச் சீனப் படகின் கேப்டனைக் கைது செய்துவிட்டனர்.

சீனா கொதித்தெழுந்துவிட்டது. இது நமது நாட்டின் தன்மானத்துக்கே இழுக்கு என்று கருதி, அதை ஒரு தேசியப் பிரச்னையாக்கிவிட்டது. எல்லா விதத்திலும் ஜப்பானுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது சீனா.


முதலில், அனைத்து மட்டங்களிலுமான ஜப்பானியத் தொடர்புகளை நிறுத்தி வைத்தது. நிலக்கரி மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புக்கான கூட்டுமுயற்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஜப்பானிய எலெக்ட்ரானிக் தொழிலுக்குத் தேவைப்படும் முக்கியமான சில தாதுப்பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.

பயந்துபோய், நமக்கேன் வம்பு என்று ஜப்பான் அந்தப் படகின் கேப்டனை நிபந்தனையின்றி விடுவித்து, சீனாவுடன் சமாதானம் செய்துகொண்டது. ஏதோ ஒரு தனியார் படகின் கேப்டன் என்று பாராமல், ஒரு சீனக் குடிமகன் என்கிற கண்ணோட்டத்துடன்தான் பிரச்னையை அணுகியது அந்த அரசு.

ரெய்மண்ட் டேவிஸ் ஓர் அமெரிக்கப் பிரஜை. இவர் ஓர் அமெரிக்க ஒற்றர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் கிடையாது. பாகிஸ்தான் சென்றிருந்த இவரை இரண்டு பாகிஸ்தானியர்கள் பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்தவர்கள் என்றும், வரம்புமீறி ரெய்மண்ட் டேவிஸ் துப்பறிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை அந்த இருவரும் பின்தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. சிலர், அந்த இரண்டு பாகிஸ்தானியர்களும் சமூகவிரோதிகள் என்றும், ரெய்மண்ட் டேவிஸின் பர்சையும், கைப்பேசியையும் பறிப்பதற்குத்தான் 
பின்தொடர்ந்தார்கள் என்றும் கூறுகின்றனர்.

ரெய்மண்ட் டேவிஸ் தன்னைப் பின்தொடர்ந்த அந்த இருவரையும் குருவியைச் சுட்டுத் தள்ளுவதுபோல சுட்டுக் கொன்றுவிட்டார். ரெய்மண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலைக் குற்றமும் சாட்டப்பட்டிருக்கிறது. கொலைக் குற்றத்துக்கான எல்லா ஆதாரங்களும் பாகிஸ்தானிடம் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா தனது நாட்டுக் குடிமகன் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்கிறதா என்றால், இல்லை.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் நிதி உதவி முற்றிலுமாக முடக்கப்படும் என்று அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு விட்டன. ரெய்மண்ட் டேவிஸ் விஷயத்தில் பாகிஸ்தான் நடந்து கொள்வதைப் பொறுத்துத்தான் அமெரிக்க - பாகிஸ்தானிய உறவு இருக்கும் என்று அழுத்தம்திருத்தமாகப் 
பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தி விட்டிருக்கிறது அமெரிக்க அரசு.

தனது நாட்டு ஒற்றருக்காக, தனது நாட்டுக் குடிமகனுக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறது அமெரிக்கா. இது அந்த நாட்டின் சுயமரியாதைப் பிரச்னை. அமெரிக்க உதவியால் மட்டுமே உயிர் வாழும் நாடாக இருந்தாலும், கொலையுண்ட தனது நாட்டுக் குடிமக்கள் இருவருக்காகப் போராடுகிறது பாகிஸ்தான். இது பாகிஸ்தானின் தன்மானப் பிரச்னை என்றும், வெளிநாட்டவர் ஒருவர் தங்களது நாட்டில், தங்கள் நாட்டுப் பிரஜைகளை சுட்டுக்கொல்வதைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும் 
கூறுகிறது பாகிஸ்தான்.

முடிவில், அமெரிக்காவிடம் சரணாகதி அடையும் என்றாலும் முடிந்தவரை தனது நாட்டுப் பிரஜைகளுக்காகப் போராடுகிறது பாகிஸ்தான்.

இனி நமது இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள்மீது காரணமே இல்லாமல் நிறவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதுவரை நமது இந்திய மாணவர்களைத் தாக்கிய ஒருவரைக்கூட ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டித்ததாகத் தெரியவில்லை. இந்திய அரசும் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. இதுதான் ஓர் இந்தியக் குடிமகனுக்கு நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு 
தரும் மரியாதை!


அமெரிக்காவில், வனவிலங்குகளின் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கக் கட்டிவிடப்படும் கழுத்துப் பட்டைகளைப்போல, பல லட்சம் ரூபாய் செலவழித்துப் படிக்கப்போன இந்திய மாணவர்களுக்கு "ரேடியோ டாக்' அணிவித்து மகிழ்கிறது அமெரிக்க அரசு. நமது அரசு அதற்கு உரத்த குரலில் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடத் தயங்குகிறது. கேட்டால், அந்நிய முதலீடு பாதிக்கப்படும், அமெரிக்க உறவு சிதைந்துவிடும் என்று வியாக்கியானம் கூறுகிறார்கள். ஓர் இந்தியக் குடிமகனின் தன்மானத்தையும்,  சுயமரியாதையையும் விடவா, அந்நிய முதலீடு பெரியது? இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்?
பக்கத்தில் இருக்கும் "கண்ணீர்த் துளி' அளவிலான நாடு இலங்கை. இந்தியாவையே கேலிசெய்வதுபோல சர்வசாதாரணமாக நமது மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்கிறது அந்நாட்டு ராணுவம். நாம் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கிறோமே தவிர, நமது தன்மான ரத்தம் துடிக்கவில்லை. இதுவே, ஒரு சீன அல்லது அமெரிக்க மீனவருக்கு இலங்கை ராணுவத்தால் அப்படி ஏற்பட்டிருக்குமேயானால், இப்போது  
இலங்கை என்கிற ஒரு தீவே இருந்திருக்காது.
அதெல்லாம் போகட்டும். ஈழப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்காக, இந்தியாவிலிருந்து நமது வரிப்பணத்திலிருந்து, நம்மால் அனுப்பப்பட்ட 500 டிராக்டர்கள், இலங்கை அரசால் தென்னைமர வளர்ச்சிக் கழகத்துக்கும், முந்திரி கார்ப்பரேஷனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 50,000 வீடுகள் கட்ட நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு அளித்த நிதியுதவி வெறும் 1,000 பேருக்குத்தான் சென்றடைந்திருக்கிறது. இதை மேற்பார்வை இடவோ, கேள்வி கேட்கவோ நமது இந்திய அரசுக்குத் துணிவும் இல்லை, மனமும் இல்லை.

"அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ-கிளியே ஊமைச் சனங்களடீ'.


நன்றி: www.dinamani.com -   28 Feb 2011


Saturday, January 8, 2011

ஆம்புலன்ஸ் உருவான வரலாறு: இன்று ஆம்புலன்ஸ் தினம்

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் "இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் "108' என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, "108' ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "108'ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

நன்றி : www.dinamalar.com - 08-Jan-2011


Tuesday, December 28, 2010

பசி போக்குவோம்!

பசி போக்குவோம் ! - டிச., 28 - மதுரையில் படியளந்தருளிய லீலை!

மார்கழி அஷ்டமியன்று மதுரை மீனாட்சியம்மன் கோவி லில் நடக்கும் படியளந்தருளிய லீலை நிகழ்ச்சி சிறப்பானது. கண்ணுக்குத் தெரியாத உயிர்களில் இருந்து மனித இனம் வரை, எல்லாருக்குமே ஆண்டவன் படியளக்கிறான். சிலருக்கு பெரும் பணத்தைக் கொடுத்திருக்கிறான். அது, அவர்களுக்காக மட்டுமல்ல, இல்லாதவர்களுக்கும் கொடுத்து உதவட்டுமே என்பதற்கும்தான். பசியுள்ள ஒருவனிடம் ஆன்மிகத்தைப் போதித்தால், அவனது காதுகளில் அது ஏறாது. முதலில் சாப்பாடு... பின்பு அவனிடம் என்ன சொன்னாலும் கேட்பான். 

உயிர்கள் பசியின்றி இருக்க தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விழாவே இது.
ஒரு கதை மூலம் இதை விளக்கலாம்... ஒரு ஏழை, கடும் பசியுடன் திரிந்தான். வழியில் ஒரு மாந்தோப்பு தென்பட்டது. பழங்கள் கண்ணைக் கவரும் வகையில் தொங்கின. தோட்டத்துக்குள் புகுந்து விட்டான் அந்த ஏழை. அது, அரசருக்குரிய தோட்டம் என்பது அவனுக்குத் தெரியாது. பசி வேகம் கண்ணை மறைக்க, கல்லை விட்டெறிந்தான்; பழம் கீழே விழுந்தது. ஆர்வமாக பழத்தைச் சாப்பிட்டான் அவன். ஆனால், வீசி எறிந்த கல், சற்று தூரத்தில், தன் மனைவியருடன் மரத்தடியில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அரசனின் தலையில் விழுந்தது. நல்ல வேளையாக அரசர் கிரீடத்துடன் இருந்ததால் தப்பித்தார். அவர், அதை பெரிதுபடுத்தவும் இல்லை. ஆனால், அங்கே காவலுக்கு நின்றவர்கள், அரசரிடம் நற்பெயர் பெறுவதற்காக உடனடி நடவடிக்கை எடுத்தனர். பழம் தின்று கொண்டிருந்த ஏழையைப் பிடித்து வந்து அமைச்சரிடம் நிறுத்தினர். அவர், அவனுக்கு மரணதண்டனை விதித்தார். இந்த தகவலை மன்னரிடம் ஓடோடி வந்து சொல்ல, மன்னர் அவனை தன் முன்னால் கொண்டு வரும்படி சொன்னார். அவனை இழுத்து வந்தனர். அவன் கல் வீசியதற்கான காரணம், பசி என்பதை புரிந்து கொண்டார். அவனை விடுவிக்கச் சொன்னார் அரசர். "அமைச்சரே... அறிவே இல்லாத இந்த மரம் கூட ஒரு கனியைக் கொடுத்து, இந்த மனிதனின் பசியைப் போக்கியிருக்கிறது. அறிவுள்ள ஜீவன்களான நாம், நம் நாட்டிலுள்ள இவனைப் போன்ற மக்களின் வறுமையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இவனை விடுதலை செய்யுங்கள். இனி, ஏழைகளே இந்நாட்டில் இருக்கக்கூடாது. அவர்களைக் கணக்கெடுத்து உரிய பணி கொடுத்து பசியை விரட்டுங்கள்...' என உத்தரவு போட்டார்.

பார்வதிதேவிக்கும், பரமேஸ்வரனுக்கும் ஒருமுறை வாக்கு வாதம் வந்தது. "நீங்கள் எல்லாருக்குமே படியளப்பதாக சொல்கிறீர்களே... இதோ... இந்த செப்புக்குள் ஒரு எறும்பை விடுகிறேன். இதற்கு எப்படி படியளக்கிறீர்கள் என பார்க்கலாம்...' என்றாள். சிவன், அந்த செப்பை திறந்து பார்க்கச் சொன்னார். செப்பின் ஓரத்தில் ஒரு அரிசித் துகள் கிடந்தது. அதை, எறும்பு வாயில் கவ்விக் கொண்டிருந்தது. இவ்வாறாக, உயிர்களின் பசி போக்குவதை இறைவன் தன் கடமையாகக் கொண்டுள்ளது போல, நாமும் பிறர் பசி போக்க வேண்டும் என்பதை உணர்த்த பவனி வருவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர். அந்த சப்பரத்தில் நெற்கதிர்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் இருந்து சிந்தும் நெல்மணிகளை சிறு உயிர்கள் எடுத்துக் கொண்டு உயிர் வாழும். இந்த நன்னாளில், பசியில்லாத உலகம் அமைய அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டுவோம். *** 


நன்றி : www.dinamalar.com - 26-Dec-2010

Wednesday, December 8, 2010