I LOVE TAMIL


Thursday, August 30, 2018

Activity

அனைவரும் பின்பற்ற வேண்டிய
நாகரிகங்கள் படித்ததில் பிடித்தது:-

1.#அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..பண்ண நினைக்காதீர் ...

2.#முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்..

3.#கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்தவரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்...

4.#பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டுவிடுஙகள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்விகேக்காதீர்கள்...

5.#பெருமைக்கு எருமை மெய்க்காதீர் ...

6.#ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல், தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள்....
வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

7.#பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா? என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள்.
த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை சீட்டில் வைக்காதீர்கள். ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.

8.#நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள்.
(இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !).
அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள்.
அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

9.#கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

10.#ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

11.#ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ  , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள். அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்...

12.#பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள். கேமராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்...

13.#பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.

14.#பஸ்ஸிலும்,ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் எற வேண்டும்.

15.#பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள். டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

16.#நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின்  personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

17.#சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?).
அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !

18.#ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

19.#ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.

20.#நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு ,எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.

21.#முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' (வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.)

22.#நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

23.#யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.

24.#வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

25.#உங்களை விட வயதில் சிறியவர்களிடம்  உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.

26.#வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்கள் பாத்ரூம் சென்ற பிறகு  தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

27.#புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.

28.#உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். allow them freedom ! அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் . 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.

29.#ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

30.#பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி  உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

31.#ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.

32.#உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.

33.#ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

34.#வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.

35.#ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

36.#கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள்.

37.#பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

38.#ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!

39.#டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

40.#Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.

41.#மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!

42.#ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த  போட்டோவை மட்டும் பாருங்கள்.

43.#அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.

44.#முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அல்லது அழைப்பு விடுக்காதீர்கள்

#குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத் தாதீர்கள்.

WhatsApp
28.Aug.2018

Wednesday, August 15, 2018

Simple money habits that will help you build wealth


vikatan.com

Simple money habits that will help you build wealth | ஆட்டோமேஷன் டு முதலீடு... பணக்காரராக மாற்ற உதவும் 10 பழக்கங்கள்! | Tamil News
7-8 minutes

வேலையோ, சொந்தத் தொழிலோ அல்லது பிசினஸோ எந்த வகையில் பணம் ஈட்டினாலும், அதைப் பல மடங்காகப் பெருக சில புத்திசாலித்தனமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றினாலே போதும், செல்வத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள். உண்மையில் சொல்லப்போனால் பழக்க வழக்கங்கள்தாம் செல்வம், வறுமை, மகிழ்ச்சி, சோகம், மன அழுத்தம், ஆரோக்கியம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான நல்லுறவு மற்றும் பகை போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.
முதலீடு

Sponsored

அப்படிப் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் 10 பழக்க வழக்கங்கள் இங்கே...

Sponsored

1) உங்களது சேமிப்பு, மாதாந்திரக் கட்டணங்களை ஆட்டோமேஷன் ஆக்குங்கள்

Sponsored

உங்களது எஸ்ஐபி முறையிலான மியூச்சுவல் ஃபண்டு முதலீடு, வங்கி சேமிப்பு, திருமணம், பிள்ளைகளின் படிப்பு, இன்ஷூரன்ஸ் போன்ற எந்த வகையிலான சேமிப்பு, முதலீடுகளுக்கு உங்களது வங்கிக் கணக்கிலிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட தொகை, ( ECS போன்று) குறிப்பிட்ட கணக்குக்குத் தானாகவே பணம் செல்லுமாறு ஆட்டோமேஷன் செய்து விடுங்கள். இதுவரை அப்படிச் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக அதைச் செய்து விடுங்கள்.

மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், அவ்வாறு பணப் பிடித்தம் செய்யும்போது உங்களுக்கும் அந்த முதலீடு அல்லது சேமிப்பு மீது அக்கறை இருக்கும். தாமதத்துக்காக வங்கியில் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவேனும் போதுமான பணத்தை உங்கள் கணக்கில் விட்டு வைக்கும் பழக்கம் வந்துவிடும். மேலும் இதனால் உங்களுக்கு நேரமும் மிச்சமாகும்.

2) டீ, சிகரெட் போன்ற சில்லறைச் செலவுகளில் கவனம்

அலுவலகம் வந்த பின்னர் வெளியே தேநீர் கடைகளுக்குச் சென்று தேநீர் அருந்துவதாக இருந்தால், நாளொன்றுக்கு 2 அல்லது அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதுவுமே வேலைப் பளு அல்லது வேலையால் ஏற்படுகிற சலிப்பு போன்றவற்றிலிருந்து `ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக மட்டும்' என்ற அளவிலேயே இருக்கட்டும் ( அறவே இப்பழக்கம் இல்லாமல் இருந்தால் அது இன்னமும் உத்தமம்). அதிக முறை தேநீர் அருந்தும் மற்றும் சிகரெட் புகைக்கும் பழக்கம் உங்களது பணத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைத்துவிடும். நாளொன்றுக்கு, கூடுதலாக 50 ரூபாய் செலவழிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, மாதத்துக்கு ரூ.1,500, வருடத்துக்கு ரூ. 18,000. இதையே வருடத்துக்கு 10 சதவிகிதம் லாபம் தரக்கூடிய நிதித் திட்டங்களில் சுமார் 30 அல்லது 40 வருடங்களுக்கு முதலீடு செய்தால், அது உங்களது மகன் அல்லது மகளின் உயர் கல்வி செலவுக்கோ அல்லது அவர்களின் திருமணச் செலவுக்கோ மிகவும் கைகொடுக்கும்.
சில்லறை செலவுகளில் கவனம்

3) எதிர்பாராமல் கிடைக்கும் பணத்தைச் சேமியுங்கள்

பிறந்த நாள் பரிசு, சம்பள போனஸ், அரியர்ஸ், பரம்பரைச் சொத்து விற்பது அல்லது பாகப்பிரிவினை மூலமாகக் கிடைக்கும் பணம் போன்று எதிர்பாராதவிதமாகக் கிடைக்கும் பணத்தைச் செலவழித்து விடாதீர்கள். அது எத்தனை சிறிய தொகையாக இருந்தாலும் எதிர்பாராத செலவினங்களுக்காகவோ, மருத்துவச் செலவுக்காகவோ ஒதுக்கி வையுங்கள். அல்லது ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் போன்ற வட்டிச் செலுத்தக் கூடிய கடன் ஏதேனும் இருந்தால், குறைந்தபட்சம் அதை அடைக்கவாவது அந்தத் தொகையைப் பயன்படுத்துங்கள்.

4) பணக்காரர் ஆகும் தகுதி உள்ளதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்

பணக்காரர் ஆகும் முதல் தகுதி என்னவென்றால், அத்தகுதி உங்களுக்கு இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதுதான். இந்த ஒற்றை நம்பிக்கையே உங்களை அதற்கான செயலில் ஈடுபட வைத்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

நம்மில் பலர், ``பணக்காரர் ஆவதற்கு நானெல்லாம் தகுதியே இல்லாத ஆள்... நானெல்லாம் அதை நினைத்தே பார்க்க முடியாது..." என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், அதுபோன்று சொல்வதை விட்டு, ``நான் ஏன் பணக்காரர் ஆகக் கூடாது?" என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் உலகம் முழுவதுமுள்ள பணக்காரர்களெல்லாம் செய்தது இதைத்தான்.

5) எஞ்சிய பணத்தை முதலீடு செய்யுங்கள்

உங்களது செலவு போக எஞ்சியிருக்கும் பணத்தை, அது 500 அல்லது 1,000 ரூபாய் என மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் கூட அதனை முதலீடு செய்யுங்கள். ஏனெனில் சிறிய தொகை முதலீடு கூட, கூட்டுவட்டி முறையில் நாளடைவில் பெரிய தொகையாகச் சேர்ந்து உங்களை ஆச்சர்யப்படுத்திவிடும். பெரும்பாலானோர் நினைப்பது போல முதலீட்டைத் தொடங்குவதற்கு பெரிய தொகையெல்லாம் தேவையில்லை. மைக்ரோ முதலீட்டுக்கென்றே பல ஆப்ஸ்கள் இப்போது உள்ளன. அதில் ஒன்றை டவுன்லோடு செய்து எளிய முறையில் முதலீட்டைத் தொடங்கலாம்.

6)  எவ்வளவு பணம் தேவை என இலக்கு நிர்ணயித்துக்கொள்ளுங்கள்

நம்மில் பலர் தமது தேவை என்னவென்றே அறியாமல் அல்லது சொல்லத் தெரியாமல் இருக்கின்றனர். எனவே, உங்களது தேவைகள் என்னவென்பதை சொல்லிப் பழகுங்கள். அப்படியான பழக்கம் இருந்தால்தான் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதையும் சொல்லி, அதற்கான இலக்குகளை நிர்ணயித்து, அதாவது நமது ஆண்டு வருமானம் அல்லது சொத்து எவ்வளவு சேர்க்கப்பட வேண்டும் எனத் திட்டமிட்டு செயலாற்ற முடியும். அதே சமயம் இலக்குகளை நிர்ணயிப்பதில் சாத்தியமானவற்றை நிர்ணயித்து, பின்னர் மெள்ள மெள்ள இலக்குகளை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள்.
முதலீடு

7) உங்கள் கடிகார அலாரம் முன்கூட்டியே அடிக்கட்டும்

வெற்றியாளர்கள், சாதனையாளர்கள், பணக்காரர்களெல்லாம் நேரத்தின் அருமை உணர்ந்து, அதனை உபயோகமாகப் பயன்படுத்தி, தங்களது லட்சியங்களை நிறைவேற்றியவர்கள். எனவே, பணக்காரர் ஆவதற்கான உழைப்புக்கான நேரத்தைச் செலவிடவும், திட்டமிடவும் அன்றைய நாளின் தொடக்கத்தை அதிகாலையிலேயே, குறைந்தபட்சம் காலை 5 மணிக்காவது தொடங்கிடுங்கள். வெற்றியாளர்கள் பெரும்பாலானோர் சூரிய உதயத்துக்கு முன்னர் கண் விழித்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது மற்றவர்களைக் காட்டிலும் 3 மணி நேரத்துக்கு முன்னரே தங்கள் பணிகளைத் தொடங்கி விடுபவர்களாக இருப்பார்கள்.

8) உங்கள் செலவுகளைக் கண்காணியுங்கள்

உங்களது வங்கிக் கணக்கில் அல்லது பணப்பெட்டியில் வந்து சேரும் பணத்தைக் காட்டிலும் அதிகமான தொகை வெளியேறிக் கொண்டிருந்தால் பணக்காரர் ஆகும் லட்சியத்தை அடைய முடியாது. எனவே, உங்களது அன்றாடச் செலவுகளைக் கண்காணித்து, அநாவசியமான செலவுகளுக்குக் கட்டாயம் 'நோ' சொல்லிப் பழகுங்கள்.

9) அதிக வட்டிக் கடனை வைத்திருக்காதீர்கள்

அனைத்து வகையான கடன்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு வட்டி விகிதம் கொண்டவையாக அல்லது வட்டியே இல்லாததாகவும் இருக்கும். எனவே, அதிக வட்டிகொண்ட கடன் ஏதேனும் இருந்தால், அதற்கு முன்னுரிமை கொடுத்து அதனை விரைவாகக் கட்டி முடிக்க முன்னுரிமை கொடுங்கள். பின்னர் படிப்படியாக அனைத்துக் கடன்களையும் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். கடன் இருக்கும் வரை முதலீடோ அல்லது சேமிப்போ செய்ய முடியாது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடனை ஒழித்துக் கட்டுங்கள்.

10) வெற்றியாளர்கள், அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்கட்டும்

பணக்காரர் ஆக வேண்டும் என்ற உங்களது லட்சியம் ஒருபுறம் இருந்தாலும், அதனைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் வெற்றியாளர்கள் மற்றும் அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களிடையே இருப்பது நீங்களும் வெற்றியாளராகவும், அதிகம் சம்பாதிப்பவராகவும் மாற உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அப்படியான நபர்கள் உங்களுக்கு அருகில் இல்லையென்றால், அதுபோன்ற நபர்கள் வரும் க்ளப்பில் சேருங்கள். அல்லது நகரில் அவர்கள் வரும் உயர்தரமான ஓட்டலுக்கு மாதம் ஒருமுறை, குறைந்தபட்சம் ஒரு தேநீர் அருந்தவாவது செல்லுங்கள். அப்படிச் செல்வது அதுபோன்ற நபர்கள் புழங்கும் இடம், சூழல் ரீதியாக உங்களை அந்நியமாக்காது. அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் வித்தியாசமானவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்.
வெற்றியாளர்களைச் சுற்றி இருங்கள்....

கடைசியாக ஒன்று... மேலே குறிப்பிட்டவற்றையெல்லாம் படிப்பதோடு விட்டுவிடாமல், செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் பணக்காரர் ஆவது சாத்தியமான ஒன்றே!

நன்றி. விகடன்

Published Date: 31 JULY 2018 11:54AM

Tuesday, April 25, 2017

அக்கறையுடன் செயல்படு


* எதையும் அலட்சியமாக அணுககூடாது. சிறிய விஷயத்திலும் அக்கறையுடன் செயல்படு.
* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையே.
* உழைப்பதற்கு இரு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் அளித்திருக்கிறார்.அதன் மூலம் நற்செயலில் ஈடுபடு.
* அனுபவத்தால் எதையும் அறிய வேண்டும் என்பதில்லை. பெரியவர்களின் அறிவுரையை கேட்டாலே அனுபவம் கிடைத்து விடும்.

- காஞ்சிப்பெரியவர்
www.dinamalar.com - 11.04.2017

Tuesday, December 20, 2016

சென்னை சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் தேவை!

சென்னை சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் தேவை!

By ஆர்.ஜி.ஜெகதீஷ்  |   Published on : 20th December 2016 01:06 PM  |   அ+அ அ-   |  

tree


சென்னை மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் இருக்க வேண்டும் என இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் கணக்கிட்டுள்ளனர்.
ஆனால், பல்வேறு காரணங்களால் மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதால், சென்னையில் இப்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வர்தா புயலுக்கு முன்பாக 3.75 மரங்கள் இருந்ததாகவும், வர்தா புயல் தாக்கத்துக்கு பின் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே உள்ளதாகவும் தனியார் தொண்டு அமைப்பின் கணக்கெடுப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சென்னை மாநகரில் சுவாசக் கோளாறுகள், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, கண் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜி.பி.எஸ். கணக்கெடுப்பு: இந்தியாவின் அனைத்து முக்கிய மாநகரங்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மரங்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வை "ட்ரீ பேங்க்' தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து அண்மையில் மேற்கொண்டன.
மக்கள் நெருக்கத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு மாநகரிலும் எத்தனை மரங்கள் இருக்கவேண்டும் என்பதைக் கணக்கிடவும், குறைவாக உள்ள மாநகரங்களில் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இந்த ஆய்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகரில் மக்கள் நெருக்கத்துக்கும், மரங்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்தது.
அதாவது, சென்னை மாநகரில் 65 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இத்தனை மக்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சுத்தமான காற்று கிடைக்க, 15 லட்சம் மரங்கள் இருப்பது அவசியம். ஆனால், இப்போது இருப்பதோ வெறும் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்ததற்கான காரணம் என்ன? பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 10 லட்சம் மரங்கள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிறகு, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மேம்பாலப் பணி, மெட்ரோ ரயில் பணி, சாலை அகலப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்படியாக மரங்கள் வெட்டப்பட்டதன் காரணமாகவும், அண்மையில் தாக்கிய வர்தா புயலின் காரணமாகவும் இப்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே சென்னை மாநகரில் எஞ்சியிருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரங்கசாமி கூறியது:
ஒரு மரம் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் வாழ் நாளுக்குத் தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. அதாவது, ஒரு மரம் 118 கிலோ அளவிலான பிராண வாயுவை நாள்தோறும் வெளியிடுகிறது.
சென்னையைப் பொருத்தவரை இப்போது 20 வகையான மரங்கள் உள்ளன. பல்வேறு நகரமயமாக்கல் பணிகளுக்காக வெட்டப்பட்டதன் காரணமாக, 19,865 கிலோ ஆக்ஸிஜனை நாம் இழக்க வேண்டியச் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால், 104 பேர் தங்கள் வாழ்நாள் முழுவதற்குமான ஆக்ஸிஜனை இழக்க நேரிடும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த அபாயத்தை உணர்ந்து வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றார் அவர்.
மரக் கழிவுகளை அப்புறப்படுத்த ஒரு வாரமாகும்..!

சென்னையில் வர்தா புயலால் விழுந்த மரங்களையும், அதன் குப்பைகளையும் அகற்ற இன்னும் ஒரு வாரமாகும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியின் கணக்குப்படி வர்தா புயலால் விழுந்த 17,133 மரங்களில் இதுவரை 12,135 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களை அகற்றும் பணியில் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சியின் 19,411 பணியாளர்கள், பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3,200 பணியாளர்கள் என மொத்தம் 22,611 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 743 லாரிகள், 416 ஜே.சி.பி. வாகனங்கள், 560 மர அறுவை இயந்திரங்களைக் கொண்டு மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வீடுகள், தனியார் அலுவலகங்கள், பண்ணைகளில் விழுந்திருப்பவை கணக்கில் வராது. மேலும், மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தனியாரும் ஈடுபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மரங்கள் மற்றும் மரக்கழிவுகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள 54 இடங்களில் கொட்டலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் மரங்களின் வகைகள்!
1. தென்னைமரம்
2. புளிய மரம்
3. மா
4. வேலி காத்தான்
5. சீமை வேலிகாத்தான்
6. செம்மயிற்கொன்றை (குல்மொஹர்)
7. மழை மரம்
8. வேம்பு
9. சாம்பல்
10. செப்புநெற்று
11. இந்தியக் கடற்கரை மரம்
12. கருவேலம்
13. மஸ்து மரம்
14. வளைகுடா மரம்
15. எலுமிச்சை
16. கொய்யா
17. அரசு
18. ஆல்
ஏற்ற மரங்கள் எவை?

வர்தா புயலின் தாக்குதலில் சென்னையில் வளர்க்கப்பட்ட பலவிதமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் பல மரங்கள் சென்னை மண்ணின் தன்மைக்கு ஒவ்வாத மரங்களாகும். இந்தக் கடும் புயலிலும் நம்நாட்டு மரங்கள் இன்னும் கம்பீரத்துடன் செழித்து வளர்ந்து நிற்கின்றன. நிழல் எனும் தன்னார்வ மரம் வளர்ப்பு நிறுவனம் சென்னை மாநகர் கடலோரப் பகுதி என்பதால் அதற்கேற்ப 16 விதமான மரங்களை பட்டியலிட்டுள்ளது.
அவை வருமாறு:
1. புன்னை
2. புங்கை
3. பூவரச மரம்
4. புரசை மரம்
5. நுணா
6. நாட்டு பாதாம்
7. வேப்ப மரம்
8. காட்டு பூவரசம்
9. வால்சுரா
10. சமுத்திரப்பழம்
11. வன்னி
12. குட்டிப்பலா
13. துரிஞ்சி
14. வேப்பாலை
15. வென்னாங்கு அல்லது தடா
16. கல்யாண முருங்கை ஆகியவையாகும்.




Thanks: www.dinamani.com - 20.12.2016

Monday, December 5, 2016

மண்ணானாலும் நாம் பாதுகாப்போம்!

1982லிருந்து 2007 வரை 14 மில்லியன் ஏக்கர் விதைநிலம் 'நாட்டின் வளர்ச்சி' என்னும் பார்வையில் தொலைந்து போனது. வளமான மண் அதிகளவு நீரினை சேமித்து வைக்கும்.

ஒரு ஏக்கரில் உள்ள 6 இன்ச் அளவு மண்ணில் உள்ள ஒரு சதவீத கரிம தாதுக்கள், ஒரு லட்சம் லிட்டர் அளவு நீரினை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நாம் நமது பூமிக்கு அதிகளவு தீங்கு விளைவித்து விட்டோம். அதை சரிசெய்யும் நிலையில் இப்போது உள்ளோம். ஒரு நாடு தனது மண் வளத்தை அழித்து விட்டால், அது அந்த நாட்டினையே அழிப்பதற்கு சமம் என்று சொன்ன அமெரிக்காவின் 32வது அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் கூற்று இப்பொழுது உண்மையாகிறது.

புயல் மற்றும் வெள்ளத்திற்கு காரணமான மண் அரிப்பு தடுக்கப்படவேண்டும் என அவர் தன் நாட்டின் அனைத்து கவர்னர்களுக்கும் 1937 பிப்., 26ம் நாள் கடிதம் எழுதினார். மண்ணே ஊட்டச்சத்து 95 சதவீத உணவானது நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவின் ஊட்டச்சத்து மதிப்பு, மண்ணின் வளத்தை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

மண் மாதிரியில் சராசரியாக 45 சதவீதம் தாது உப்புகளும், 25 சதவீதம் நீர், 25 சதவீதம் காற்று மற்றும் 5 சதவீதம் கரிமப் பொருட்களும் உள்ளன. மண்ணில் உள்ள ஒவ்வொரு கிராம் கரிமக் கார்பனானது, 8 கிராம் நீரினை தன்னகத்தே தேக்கி வைக்கும் திறன் உள்ளது. உலகினுடைய 10 சதவீத கார்பன் வெளியேற்றத்தை மண் தன்னிடையே தக்க வைத்துள்ளது.

மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் பிற உயிரிகளின் கூட்டு முயற்சியினால் மண் வளப்படுத்தப்படுகிறது.உயிரிகளினால் நீர் மண்ணில் செல்வதற்கும், தாது மற்றும் ஊட்டச்சத்து சுழற்சிக்கும் பயன்படுகிறது. பூஞ்சை, பாக்டீரியா மற்றும் மண்புழுக்கள் மண்ணில் உள்ள கரிமப் பொருட்களை வேதிமாற்றத்தினால் ஊட்டச்சத்து பொருட்களாக மறுசுழற்சி செய்து மண்ணிற்கு கொண்டுவருகிறது.

பருப்பே மண்வள ஆதாரம்

உலக மண் தினம் கொண்டாடப்படும் இந்நாளில், இந்த ஆண்டு, மண் மற்றும் பருப்பு வகைகள் கூட்டால் மண் அரிப்பை தடுக்கலாம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளது. ஆதலால் பருப்பு வகைகளை பயிரிடுவதன் மூலம், மண்ணின் வளத்தை நாம் திரும்பப் பெறலாம் எனவும் மண் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் பருப்பு வகைகள், உலர் விதைகள், உலர்ந்த பீன்ஸ் பருப்பு மற்றும்பட்டாணி பெரும்பாலும் அறியப்படும் மற்றும் பயன்படுத்தும் பருப்பு வகைகள் ஆகும்.

இந்த பருப்பு வகைகள், அதிக சத்துக்கள் நிரம்பிய மற்றும் ஒரு உயர் புரதம் அடங்கிய அத்தியாவசிய பயிர்கள். இறைச்சி மற்றும் பால் உணவை உண்ணாத பிரதேசங்களில், மனிதனுக்கு தேவையான புரதத்தினை கொடுக்கக்கூடியது. பருப்பு வகைகளில் கொழுப்பு குறைந்த மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும்.

இந்த குணங்களினால்தான் நீரிழிவு மற்றும் இருதய மேலாண்மைக்கு இந்த பருப்பு வகைகள் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. பயறு வகைகள் உடல் பருமனை குறைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிலம் வளமாகும்

விவசாயிகளுக்கும் பருப்பு வகைகள் ஒரு முக்கியமான பயறு வகையாகும். ஏனெனில் அவைகளை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் ஏற்றது. விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குகிறது. பருப்பு வகைகள் இழைச்சத்து பண்புகளை, மண்ணில் நிலைநிறுத்தி, விவசாய நிலத்தை வளப்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க
செய்கிறது.

இதனை ஊடுபயிராக பயன்படுத்துவதால், விவசாயிகள் விவசாய பல்லுயிர் மற்றும் மண் பல்
லுயிர்களை ஊக்குவிக்க முடியும். பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்க முடியும்.பருப்பு வகைகள் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதிலும், செயற்கையான உரங்களை நம்பி
யிருக்க வேண்டிய நிலையை குறைப்பதிலும் மிகப் பெரிய பங்காற்றுகிறது.

இந்த செயற்கை உரங்கள் உற்பத்தி சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். எனினும் பருப்பு வகைகள் இயற்கையாக மண்ணில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது மற்றும் மண்ணில் உள்ள பாஸ்பரஸ் சத்தினை விடுவித்து செயற்கை உரப்பயன்பாட்டினை குறைக்கிறது.

உணவு, வெப்ப அச்சுறுத்தல்

மண் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உணவு உற்பத்திக்கும், வெப்பநிலை மாற்றத்திற்கும் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளன. உணவு மற்றும் விவசாய அமைப்பு கூற்றின்படி, பூமியின் மண் கிட்டத்தட்ட 33 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கிறது. 40 சதவீதம் மண் சிதைந்த பகுதியானது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பிரதேசங்கள் ஆகும்.

அதே நேரத்தில் நமது பூமியின் மக்கட்தொகையானது இப்போதுள்ள 7 பில்லியன்களிலிருந்து, 9 பில்லியன்களாக 2050ல் உயரும் போது 70 சதவீதம் உணவு உற்பத்தி தேவைப்படுகிறது. இதற்கான தீர்வாக மக்களின் பிரதான உணவாகவும், குறிப்பிடத்தக்க சத்து நிறைந்ததாகவும் பயறு வகைகள் உள்ளன.

பல்வேறு வழிகளில் மண்ணின் வளத்தினை மேம்படுத்தி, மண் உயிர்மத்தினையும், மண் அமைப்பினையும் மண்ணில் வாழும் பல்லுயிர்களையும் பாதுகாக்கிறது.வளமான மண் மற்றும் பயறு வகைகள் மூலம் மட்டும்தான் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2030 குறிக்கோளான, உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு கொடுப்பதை செயல்படுத்தமுடியும்.

காலம் சென்ற தாய்லாந்து அரசர் பூமிபோல் அடல்தேஜ், என்ற மண் விஞ்ஞானியின் நினைவாக தான் அவரது பிறந்த தினம் உலக மண் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஏனெனில் அவர் நிலையான மண் மேலாண்மைக்காக போராடினார். இந்த உலக மண் நாள், சர்வதேச அளவில், மனித வாழ்க்கைக்கு முக்கியப் பங்காற்றும் முகமாக, மண்ணினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

'வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்'
என்ற அவ்வையார் கூற்றுப்படி, விவசாய நிலத்திற்கு தேவையான மண்ணை பாதுகாக்க, இந்நாளில் உறுதியேற்போம்.

- பேராசிரியர் எம். ராஜேஷ்
மதுரை. 94433 94233

Thanks - www.dinamalar.com - 05.12.2016

Saturday, November 26, 2016

சிறப்பு வாய்ந்த மகா பிரதோஷம்!

பிரதோஷங்களில் சிறந்தது சனி பிரதோஷம். அன்று பிரதோஷ வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினால் 5 ஆண்டு தினமும் சிவாலயம் சென்று வழிபாடு நடத்திய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை! இம்மாதம் 26-ஆம் தேதி வரும் மகா பிரதோஷத்துக்கு மற்றொரு சிறப்பு உண்டு. கார்த்திகை மாதம் சனிக்கிழமை, திரயோதசி திதியில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டார் என்பதால் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் சனிக்கிழமையில் திரயோதசி திதி வருவதால் இந்த மகா பிரதோஷம் மிகவும் சிறப்புப் பெற்றது. 
பிரதோஷங்களில் 20 வகைகள் உள்ளன. அந்நாள்களில் நடத்தப்படும் வழிபாடுகள் அதன் பலன்கள்:

1. சோமவார பிரதோஷம்: திங்கள்கிழமையும் திரயோதசி திதியும் வரும் நாள் சோமவார பிரதோஷம். அன்று சிவ வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பு. குறிப்பாக ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் துயரங்கள் விலகும். 

2. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான சுக்லபட்ச திரயோதசி திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு சிறப்பு. பறவையோடு தொடர்புள்ள லிங்கங்கள் உள்ள ஊர்களில் வழிபாடு நடத்துவது பலமடங்கு பலனைத் தரும். 

3.  மாதப் பிரதோஷம்: பெளர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்ச திரயோதசி மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்: திரயோதசி திதி வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும்.

6. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும்.

7. தீபப் பிரதோஷம்: திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்து ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்: வானில் "வ' வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே சப்தரிஷி மண்டலம் ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். 

9. மகா பிரதோஷம் : ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது உத்தமம்.

10. உத்தம மகா பிரதோஷம் : சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில் சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்சர பிரதோஷம் என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ அத்தனை முறை ஓதுங்கள். 

12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் : வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.

14. பிரம்மப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால் அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம், தோஷம் நீங்கும்.

15. அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். ஈசன் பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.

16. கந்தப் பிரதோஷம் : சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால் கிருஷ்ணர் பிறந்தார். 

18. அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் : அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

- எஸ்.சந்திரசேகர்
www.dinamani.com - Published on : 25th November 2016 02:35 PM