விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததற்குக் காரணம் ..எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது மட்டுமல்ல, தெருவில் இறங்கிப் போராடுவதற்குக்கூடத் திராணியற்ற நிலையில் விலைவாசியால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர வகுப்பினர் இருப்பதுதான்.
கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாகக் காணப்படும் பொருளாதார மந்த நிலைமை, உலகளாவிய அளவில் உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்புக்கு உதவியிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 20 ஆண்டுகளாக விவசாய வளர்ச்சியில் காட்டப்படும் அக்கறையின்மைதான் இப்போது காணப்படும் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் என்று தோன்றுகிறது.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கை, வளரும் பொருளாதாரங்களில், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், அடுத்த பத்தாண்டுகளில் மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படுவதற்கான எல்லா காரணிகளும் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறது. நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் கீழே, அதாவது சுமார் ஐம்பது ரூபாய்கூட வருமானம் இல்லாத 80 கோடிப் பேர் உலகில் வாழ்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதில் 20 கோடிப் பேர் இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்.
கடந்த மூன்றாண்டுகளாக ஜுர வேகத்தில் ஏறி இப்போது பழைய நிலைமைக்குத் திரும்பாமல் இருக்கும் விலைவாசியால் இந்தியாவில் வாழும் சுமார் 60 விழுக்காடு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் குறிப்பொன்று கூறுகிறது. கடந்த நாடாளுமன்றத் தொடரில் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். சராசரி இந்தியன் தனது மாத வருமானத்தில் ஏறத்தாழ 60 விழுக்காட்டைத் தனது குடும்பத்தின் உணவுத் தேவைக்காகச் செலவழிப்பதாக இன்னொரு குறிப்பு தெரிவிக்கிறது.
முற்றிலும் விவசாயம் சார்ந்த நாடான இந்தியா, உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதற்கு, பெருகி வரும் நமது மக்கள்தொகை ஒரு முக்கியமான காரணி என்பதை மறுக்க இயலாது. அதேநேரத்தில், மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தொலைநோக்குப் பார்வையுடன் கணக்கிட்டு உணவுப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க ஊக்குவிக்காதது யார் குற்றம்?
கடந்த பத்து ஆண்டுகளாக நமது மத்திய, மாநில அரசுகள் தொழில்வளத்தைப் பெருக்குவதிலும், கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதிலும், இலவச அறிவிப்புகளின் மூலம் மக்களை மகிழ்விப்பதிலும் காட்டிய அளவு அக்கறையை உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பதில் காட்டவில்லை என்பதுதான் உண்மை. 9 சதவிகித வளர்ச்சி, 10 சதவிகித வளர்ச்சி என்று ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் காட்டிய முனைப்பை, விவசாயத்தில் காட்டாமல் போனதன் விளைவு, நமது விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவிகிதமாகப் பல ஆண்டுகளாய் தொடர்ந்து வருகிறது. இப்போதுதான் விழித்துக் கொண்டு விவசாய வளர்ச்சிக்கு என்ன செய்வது என்பதையே நமது மத்திய அரசு யோசிக்கத் தொடங்குகிறது.
விவசாய வளர்ச்சியில் முழு அக்கறை காட்டாமல் மானியங்களை மட்டுமே அள்ளி வழங்குவது என்கிற தவறான பொருளாதாரக் கொள்கை பயன் அளிக்காததில் வியப்பில்லை. கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு ஆசுவாசம் அளித்ததே தவிர, உற்பத்திப் பெருக்கத்துக்கோ, சந்தையில் விற்பனை விலை ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளவோ பயன்பட்டதா என்றால் இல்லை.
போதாக்குறைக்கு, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், முறையாகத் திட்டமிடப்படாமல், எல்லோருக்கும் பணப்பட்டுவாடா செய்யும் திட்டமாகிவிட்டதால், விவசாயத் தொழிலாளர்களை உழைக்காமல் சோம்பேறிகளாக்கி, உற்பத்தியைப் பல இடங்களில் ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. வறட்சியான பகுதிகளில் மட்டுமே அமல்படுத்த வேண்டிய திட்டத்தை, வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவ வேண்டிய திட்டத்தை, விவசாய சாகுபடியைப் பாதிப்பதற்காகப் பயன்படுத்துகிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது.
விவசாயம் சார்ந்த இந்தியா போன்ற பொருளாதாரங்கள் ஒரேயடியாக விவசாயத்தைக் கைவிட்டு, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாகத் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க முற்பட்டால், விவசாயமும் நலிந்து, ஏற்றுமதியும் வெற்றி பெறாமல் போய்விடும் என்பது கூடவா பொருளாதார மேதைகளால் நடத்தப்படும் நமது மத்திய அரசுக்குத் தெரியவில்லை? வேடிக்கையாக இருக்கிறது.
விவசாயிகள் உணவு உற்பத்திப் பெருக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபட உதவும் வகையில் நமது அரசு ஊக்கமளித்தால் ஒழிய இந்த நிலைமைக்கு விடிவுகாலம் இல்லை என்றே தோன்றுகிறது. தொழில்துறை வளர்ச்சியில் காட்டும் ஆர்வத்தை விவசாய வளர்ச்சியில் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதைச் செய்யாமல் போனால், உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
100 கோடி மக்கள் வாழும் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை இறக்குமதி மூலம் ஈடுகட்ட முடியாது. பஞ்சமும் பட்டினியும் விபரீதங்களுக்கு வழிகோலும் என்று அரசை எச்சரிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.