I LOVE TAMIL


Friday, November 8, 2013

வீடு தேடி வந்த சிட்டுக்குருவிகள்!

வீடு தேடி வந்த சிட்டுக்குருவிகள்! 

சென்னையின் ஒரு வழிப் பாதைகள் பல நேரம் தலைசுற்ற வைக்கும் என்றாலும், அவை சில நேரம் ஆச்சரியமளிக்கும் அபூர்வ அனுபவங்களையும் தரக்கூடும். எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம், அப்படி ஆச்சரியமளிக்கும் ஒன்றுதான்.
அலுவலகம் செல்வதற்குச் சென்னை எழும்பூர் அருகிலுள்ள சிந்தாதிரிப்பேட்டையை அன்றைக்குக் கடக்க வேண்டியிருந்தது. சிந்தாதிரிப்பேட்டையின் முதன்மைச் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மாற்று வழியில் வண்டியைத் திருப்பினோம். அங்கு எங்களுக்கு ஒர் ஆச்சரியம் காத்திருந்தது.
மங்காபதி தெரு வழியாக வந்தபோது, ஒரு வீட்டின் முன்னால் ஏதோ ஒரு படரும் கொடி மூன்று மாடிகளுக்கு உயர்ந்து அடர்த்தியாக நிறைந்திருந்தது. அதில் 50க்கும் மேற்பட்ட சிறு பறவைகள் "ஷில்லவுட்" ஆகத் தெரிந்தன. அந்தப் புதர் அருகே நெருங்கி வந்தபோது, அங்கு அமர்ந்திருந்த பறவைகளை அடையாளம் காண முடிந்தது. அவை, சிட்டுக்குருவிகள்!
சிட்டுக்குருவிகளா? எங்களால் நம்ப முடியவில்லை. ஆச்சரியம் விலகாமலேயே, அடுத்த 2 மணி நேரத்தை அங்கே செலவழித்தோம். பெருமளவு காய்ந்துவிட்ட அந்தக் கொடியில் கிட்டத்தட்ட 50-70 சிட்டுக்குருவிகள் கூட்டமாக வந்து அமர்வதும், பிறகு எதிர்வீட்டு மாடி கட்டைச் சுவருக்குப் பறப்பதுமாக இருந்தன.
கடந்த 2-3 ஆண்டுகளாக அந்தச் சிட்டுக்குருவிகள் இந்தப் பகுதியில் வசித்துவருகின்றனவாம். ஒரே வீட்டில் இத்தனை சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வருவது, பறவை ஆர்வலர்களுக்கு நிச்சயம் புதிய செய்திதான். இவ்வளவு நாள் இந்த இடம் யார் கண்களிலும் எப்படிப் படாமல் இருந்தது?
கடந்த 2-3 ஆண்டுகளாக அந்தச் சிட்டுக்குருவிகள் இந்தப் பகுதியில் வசித்துவருகின்றனவாம். ஒரே வீட்டில் இத்தனை சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வருவது, பறவை ஆர்வலர்களுக்கு நிச்சயம் புதிய செய்திதான். இவ்வளவு நாள் இந்த இடம் யார் கண்களிலும் எப்படிப் படாமல் இருந்தது?
சிட்டுக்குருவிகள் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டன. குறிப்பாக, சென்னை போன்ற நகர்ப்புறங்களைவிட்டு அவை வெளியேறி ஆண்டுகள் பலவாகிவிட்டதாக செய்திகளைப் படித்திருக்கிறோம். அப்படியானால், இந்தச் சிட்டுக்குருவிகள் இங்கே கூட்டமாக வாழ்வது எப்படிச் சாத்தியமானது?
இதைச் சாத்தியப்படுத்தியதில் அந்த முல்லைக்கொடிப் புதருக்கும், அந்தப் புதரைப் பராமரித்துவரும் விஜயலட்சுமி-பூபாலன் தம்பதியினருக்கும் நிறைய பங்கு இருக்கிறது.
"இந்தச் சிட்டுக்குருவிகள், எங்கள் குழந்தை மாதிரி" என்கிறார்கள் வீட்டின் உரிமையாளர்களான அந்தத் தம்பதி. அரசு மருத்துவமனைக்குக் காய்கறி விநியோகம் செய்யும் ஏஜெண்டாக இருக்கும் பூபாலன் குடும்பத்தினர், 10 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டைக் கட்டி குடி வந்துள்ளனர். அப்போது வளர்க்க ஆரம்பித்த முல்லைக்கொடியை, மாடிக்கு ஏற்றி விட்டுள்ளனர். அந்தக் கொடி கடின மரம் போலாகி மிகப் பெரிய புதர் போல இப்போது வளர்ந்திருக்கிறது. அது பூக்கும் நிலையில் இல்லையென்றாலும், சீசன் நேரத்தில் மீண்டும் பூக்க ஆரம்பித்துவிடுமாம். அதை ஆதாரமாகக்கொண்டு இந்தச் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வருகின்றன.
"அந்தக் கொடி அடர்த்தியாகிக்கொண்டே போவதைத் தடுக்க, பக்கவாட்டில் வெட்டிவட்டு மாடியில் பந்தல் போட்டுப் படரவிட இருந்தோம். ஆனால், 2-3 ஆண்டுகளுக்கு முன் சிட்டுக்குருவிகள் வந்து அதில் அடைய ஆரம்பித்தவுடன், அப்படிச் செய்யும் முடிவைக் கைவிட்டோம்.
ஏற்கெனவே நாய், பச்சைக்கிளி, புறா, முயல் போன்றவற்றை வளர்த்திருக்கிறோம் என்பதால், இந்தச் சிட்டுக்குருவிகளின் வரவு எங்களுக்கு மகிழ்ச்சியே தந்தது. காலை 11 மணி, மாலை 4 மணி என இரண்டு முறை இந்தச் சிட்டுக்குருவிகளுக்குச் சாப்பாடும் வைப்போம். பொரி கடலை, சாதம் போன்றவற்றை வைப்போம். அந்த நேரத்தில் நாங்கள் எங்காவது வெளியே போய்விட்டால் சத்தம் போட்டுக் கத்தித் தீர்த்துவிடும். சில நேரம் பால்கனியிலும், இந்த மரத்திலும் கூடு வைக்கும்" என்கிறார் விஜயலட்சுமி.
சென்னையில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை தொடர்பாகக் கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்திய இ.எம்.ஏ.ஐ. (The Trust for Environment Monitoring and Action Initiating) நிறுவனத்தின் திட்ட இயக்குநர் த.முருகவேளிடம் இது பற்றி விசாரித்தோம்.
"தென்சென்னையுடன் ஒப்பிடும்போது வடசென்னையில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவே உள்ளது. ராயபுரம் (451), ராஜாகடை (484), மண்ணடி (193), திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை (தலா 130) சிட்டுக்குருவிகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த ஆண்டு நாங்கள் கணக்கெடுப்பு நடத்தியபோது சிங்கண்ணா தெரு, ஆதிகேசவலு தெரு, குருவப்பா தெரு, அருணாசலம் தெருவில் 20 சிட்டுக்குருவிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
வடசென்னையில் மின்சார மீட்டர் பாக்ஸ், ஷட்டரின் மேற்பகுதி, விளக்குக் கம்பங்களின் மேற்பகுதி, சுவர்ஓட்டைகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி குஞ்சு பொரிக்கின்றன. அதேநேரம், சிட்டுக்குருவிகள் பகலில் தங்கி ஓய்வெடுப்பதற்கு (roosting) அடர்த்தியான தாவரங்களையே நாடும். சாதாரணமாகப் போகன்வில்லா புதர், இல்லையென்றால் பூவரசு மரம், சில இடங்களில் வேப்ப மரத்தில் தங்கும்.
தங்கி ஓய்வெடுக்கவே இந்த முல்லைக்கொடிக்கு அவை வந்திருக்க வேண்டும். இப்படி ஒரே புதரில் இத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தும், எங்களைப் போன்ற பறவை ஆர்வலர்களின் கண்ணில் இதுவரை படாமல் இருந்தது ஆச்சரியம்தான்" என்கிறார் த.முருகவேள்.
இந்த இடத்தில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கான முக்கியக் காரணங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிப்பு, அயல் தாவரங்களின் பெருக்கத்தால் குஞ்சுகளுக்குப் புழுவும், ஞெகிழிப் (பிளாஸ்டிக்) பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதால் தானியங்களும் கிடைக்காமல் போவது, நவீன கட்டடங்களில் கூடு கட்ட இடமில்லாமல் போவது ஆகியவற்றுடன் ஓய்வெடுப்பதற்குப் புதர்ச் செடிகள் இல்லாமல் இருப்பது போன்றவைதான் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கியக் காரணம். இதற்கு மாறாகச் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் சிட்டுக்குருவிகள் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் எஞ்சியிருப்பதை, இந்தச் சிட்டுக்குருவிகள் கூட்டம் அடையாளப்படுத்துகிறது.
விஜயலட்சுமி, பூபாலன் தம்பதியைப் போலச் சிட்டுக்குருவிகள் உள்பட நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களுக்கு ஆதரவளித்தால், அவை நிச்சயம் பல்கிப் பெருகும். அவை நமது மனதுக்கு ஆசுவாசம் தருவதுடன், நம் வாழ்க்கைக்குப் புது வண்ணமும் சேர்க்கும்.

நன்றி: http://tamil.thehindu.com - 05.Nov.2013 - 

சிந்தனைக் களம்



Friday, July 12, 2013

கங்கை சொல்லும் பாடம்!

First Published : 12 July 2013 06:05 AM IST 

உலகத்தையே ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்த அந்தத் துயரச் சம்பவம் முடிந்து 26 நாள்களாகிவிட்டன. வீறுகொண்டு எழுந்த கங்கை சீறிப் பாய்ந்து, கேதார்நாத்திலிருந்து ஹரித்வார் வரையிலுள்ள நமது புனித யாத்திரையைப் பலரின் இறுதி யாத்திரையாக்கிய இயற்கைப் பேரிடர், உலக சரித்திரத்தின் பக்கங்களில் இதுவரை கண்டறியாத பேரழிவாகப் பதிவாகி இருக்கிறது.
கங்கையின் கோர தாண்டவம் எப்பேற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள, அங்கே நேரில்போய்ப் பார்த்தால்தான் தெரியும். இன்னமும்கூட நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்பதைப் பார்த்தால் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும்.

சுனாமியின்போதும், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின்போதும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை, தாங்கள் இழந்து நிற்கும் உடமைகளையும், உறவுகளையும் பற்றிய தகவல்களைச் சொல்ல பலர் இருந்தனர். உயிரை இழக்காமல் தப்பியவர்கள் இதயத்தை உலுக்கும் சோகங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அதற்குக்கூட இடம் வைக்கவில்லை கங்கையின் சீற்றம்.

கேதார்நாத் அவலத்தைச் சுற்றிலுமுள்ள பகுதிகளிலிருந்து சடலங்களை அகற்றும் பணி இன்னும் முடிந்தபாடில்லை. எடுக்க எடுக்க சடலங்கள் வந்துகொண்டே இருப்பதாகக் கூறுகிறார்கள். மழைவேறு பெய்து கொண்டிருப்பதால், நெருங்கவே முடியாத அளவுக்குப் பிண நாற்றம் வேறு. இதற்கிடையில் ராணுவத்தினரும், ராமகிருஷ்ண மடத்தின் தொண்டர்களும், பாபா ராம்தேவின் சீடர்களும் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மனித குலத்தின் சார்பில் நாம் அவர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தத் தலையங்கம் எழுதும் இந்த நிமிடம் வரை இன்னும் பல கிராமங்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரில் உணவுப் பொட்டலங்களும், தண்ணீரும் கிடைப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அப்படிப்பட்ட பகுதிகள் மட்டுமே நூறுக்கும் மேல் என்கிறார்கள் ராணுவத்தினர்.
உத்தர காசிக்குப் பிறகு சாலைகள் புதிதாகப் போடப்படுகின்றன. பத்ரிநாத், ஸ்ரீநகர், கோவிந்த்காட், கேதார்நாத் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. சாலைகள் எங்கே இருந்தன என்பதைக்கூடக் கண்டறிய முடியாமல் நிலச்சரிவுகள் ஏற்பட்டு விட்டதால், புதிதாகத்தான் சாலைகள் போட்டாக வேண்டும் என்கிற நிலைமை.
ஹரித்வார் வரையிலான கங்கையின் இரு கரைகளிலுமாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் என்று கருதப்படுகிறது. எரிவாயு உருளை நுகர்வோராக 60,000 குடும்பங்கள் இருந்திருக்கின்றன. கங்கையின் இரு கரைகளிலும் உள்ள அந்த ஒன்றரை லட்சம் குடும்பங்களும் இப்போது இல்லை. அங்கே வீடுகள் இருந்ததற்கான சுவடு கூட இல்லை. வீட்டிற்கு நான்கு பேர் என்று எடுத்துக் கொண்டால் மடிந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உத்தரகண்ட் பேரழிவு பற்றிய நிஜ நிலைமை!
÷சுவாமி சிவானந்தாவின் தெய்வ நெறிக் கழகத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், "60 ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகேசத்திற்கு நான் இளைஞனாக வந்தபோது இருந்த கங்கையை இப்போது பார்க்கிறேன்' என்று கூறியதன் பின்னால் இருக்கும் உண்மையை உணர முடிகிறது. பல அப்பாவிகள் உயிரிழந்திருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் கங்கையால் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
÷கடந்த 60 ஆண்டுகளாக, கங்கையின் இரு கரைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லோருமே இந்த ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். கங்கையை ஆக்கிரமித்து, ஆற்றுப் படுகையில் விடுதிகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டன. அதைப் பார்த்து, அப்பாவிப் பொதுமக்களும் விதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் கட்டடங்களை எழுப்பினர். வீடுகள் அமைத்துக் குடியிருக்க முற்பட்டனர். கங்கையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இனியும் வாளாவிருந்தால் இவர்கள் என்னை ஓடையாக்கி விடுவார்களோ என்று பயந்து விட்டிருக்கலாம்.
அளவுக்கு மீறி கங்கையின் பொறுமை சோதிக்கப்பட்டபோது, சீறிப் பார்த்தது கங்கை. கங்கையின் இரு கரைகளிலும் இருந்த குடும்பங்கள் கொத்துக் கொத்தாக ஜல சமாதி அடைந்துவிட்டனர். மனசாட்சி என்கிற ஒன்று இருந்தால், அவர்களது மரண ஓலம் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வாழ்நாள் முழுக்க உறங்கவிடாது!
கங்கையின் கரையில் மட்டுமா ஆக்கிரமிப்புகள்? இந்தியாவிலுள்ள எல்லா நதிகளும் ஓடைகளாக அல்லவா மாறிவிட்டிருக்கின்றன. ஓடைகள் காணாமலே அல்லவா போய்விடுகின்றன. ஏரிகள், குளங்கள் என்று எல்லா நீராதாரங்களும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவே... அங்கே எல்லாம் குடியிருப்புகளை எழுப்பி இருக்கிறோமே...
விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள் நிலநடுக்கத்தில் சரிந்து விழுந்தால், பாதிக்கப்படப் போவது அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, குடியிருப்புகளைக் கட்டிய அல்லது வணிக வளாகங்களின் உரிமையாளர்களான வியாபாரிகளோ அல்ல... அப்பாவிப் பொதுமக்கள்!
இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு, ஏரிகள், குளங்கள் போன்றவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படக்கூடாதா? விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் எதுவாக இருந்தாலும், யாருடையதாக இருந்தாலும் இடித்து எறியக்கூடாதா?
இயற்கையைச் சீண்டினால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு கங்கையின் சீற்றம். புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி! 
 
நன்றி: www.dinamani.com  -  12-Jul-2013 - தலையங்கம்
 


Tuesday, January 8, 2013

எந்தக் காயை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?


பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப்பெட்டியான "பிரிட்ஜ்" என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர்.  எனினும், பிரிஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் 4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது அவசியம்.

பிரிட்ஜில் வைக்கும் உணவு பொருட்கள் பற்றி தகவல்:
பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் 
ஆப்பிள் - ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் - 2 வாரங்கள்
அன்னாசி - 1 வாரம்
காய்கறிகள்:
பிரோக்கோலி, காய்ந்த பட்டாணி  3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் - ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் - 1 வாரம்
காளான்  1-2 நாட்கள்
அசைவ உணவுகள்:
சமைத்த மீன்  3-4 நாட்கள்
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு - 2 நாட்கள்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்

 நன்றி  : http://dinamani.com/health/article1404710.ece      02 January 2013 03:30 PM IST