I LOVE TAMIL


Friday, July 12, 2013

கங்கை சொல்லும் பாடம்!

First Published : 12 July 2013 06:05 AM IST 

உலகத்தையே ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்த அந்தத் துயரச் சம்பவம் முடிந்து 26 நாள்களாகிவிட்டன. வீறுகொண்டு எழுந்த கங்கை சீறிப் பாய்ந்து, கேதார்நாத்திலிருந்து ஹரித்வார் வரையிலுள்ள நமது புனித யாத்திரையைப் பலரின் இறுதி யாத்திரையாக்கிய இயற்கைப் பேரிடர், உலக சரித்திரத்தின் பக்கங்களில் இதுவரை கண்டறியாத பேரழிவாகப் பதிவாகி இருக்கிறது.
கங்கையின் கோர தாண்டவம் எப்பேற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள, அங்கே நேரில்போய்ப் பார்த்தால்தான் தெரியும். இன்னமும்கூட நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்பதைப் பார்த்தால் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும்.

சுனாமியின்போதும், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின்போதும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை, தாங்கள் இழந்து நிற்கும் உடமைகளையும், உறவுகளையும் பற்றிய தகவல்களைச் சொல்ல பலர் இருந்தனர். உயிரை இழக்காமல் தப்பியவர்கள் இதயத்தை உலுக்கும் சோகங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அதற்குக்கூட இடம் வைக்கவில்லை கங்கையின் சீற்றம்.

கேதார்நாத் அவலத்தைச் சுற்றிலுமுள்ள பகுதிகளிலிருந்து சடலங்களை அகற்றும் பணி இன்னும் முடிந்தபாடில்லை. எடுக்க எடுக்க சடலங்கள் வந்துகொண்டே இருப்பதாகக் கூறுகிறார்கள். மழைவேறு பெய்து கொண்டிருப்பதால், நெருங்கவே முடியாத அளவுக்குப் பிண நாற்றம் வேறு. இதற்கிடையில் ராணுவத்தினரும், ராமகிருஷ்ண மடத்தின் தொண்டர்களும், பாபா ராம்தேவின் சீடர்களும் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மனித குலத்தின் சார்பில் நாம் அவர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தத் தலையங்கம் எழுதும் இந்த நிமிடம் வரை இன்னும் பல கிராமங்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரில் உணவுப் பொட்டலங்களும், தண்ணீரும் கிடைப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அப்படிப்பட்ட பகுதிகள் மட்டுமே நூறுக்கும் மேல் என்கிறார்கள் ராணுவத்தினர்.
உத்தர காசிக்குப் பிறகு சாலைகள் புதிதாகப் போடப்படுகின்றன. பத்ரிநாத், ஸ்ரீநகர், கோவிந்த்காட், கேதார்நாத் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. சாலைகள் எங்கே இருந்தன என்பதைக்கூடக் கண்டறிய முடியாமல் நிலச்சரிவுகள் ஏற்பட்டு விட்டதால், புதிதாகத்தான் சாலைகள் போட்டாக வேண்டும் என்கிற நிலைமை.
ஹரித்வார் வரையிலான கங்கையின் இரு கரைகளிலுமாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் என்று கருதப்படுகிறது. எரிவாயு உருளை நுகர்வோராக 60,000 குடும்பங்கள் இருந்திருக்கின்றன. கங்கையின் இரு கரைகளிலும் உள்ள அந்த ஒன்றரை லட்சம் குடும்பங்களும் இப்போது இல்லை. அங்கே வீடுகள் இருந்ததற்கான சுவடு கூட இல்லை. வீட்டிற்கு நான்கு பேர் என்று எடுத்துக் கொண்டால் மடிந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உத்தரகண்ட் பேரழிவு பற்றிய நிஜ நிலைமை!
÷சுவாமி சிவானந்தாவின் தெய்வ நெறிக் கழகத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், "60 ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகேசத்திற்கு நான் இளைஞனாக வந்தபோது இருந்த கங்கையை இப்போது பார்க்கிறேன்' என்று கூறியதன் பின்னால் இருக்கும் உண்மையை உணர முடிகிறது. பல அப்பாவிகள் உயிரிழந்திருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் கங்கையால் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
÷கடந்த 60 ஆண்டுகளாக, கங்கையின் இரு கரைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லோருமே இந்த ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். கங்கையை ஆக்கிரமித்து, ஆற்றுப் படுகையில் விடுதிகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டன. அதைப் பார்த்து, அப்பாவிப் பொதுமக்களும் விதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் கட்டடங்களை எழுப்பினர். வீடுகள் அமைத்துக் குடியிருக்க முற்பட்டனர். கங்கையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இனியும் வாளாவிருந்தால் இவர்கள் என்னை ஓடையாக்கி விடுவார்களோ என்று பயந்து விட்டிருக்கலாம்.
அளவுக்கு மீறி கங்கையின் பொறுமை சோதிக்கப்பட்டபோது, சீறிப் பார்த்தது கங்கை. கங்கையின் இரு கரைகளிலும் இருந்த குடும்பங்கள் கொத்துக் கொத்தாக ஜல சமாதி அடைந்துவிட்டனர். மனசாட்சி என்கிற ஒன்று இருந்தால், அவர்களது மரண ஓலம் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வாழ்நாள் முழுக்க உறங்கவிடாது!
கங்கையின் கரையில் மட்டுமா ஆக்கிரமிப்புகள்? இந்தியாவிலுள்ள எல்லா நதிகளும் ஓடைகளாக அல்லவா மாறிவிட்டிருக்கின்றன. ஓடைகள் காணாமலே அல்லவா போய்விடுகின்றன. ஏரிகள், குளங்கள் என்று எல்லா நீராதாரங்களும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவே... அங்கே எல்லாம் குடியிருப்புகளை எழுப்பி இருக்கிறோமே...
விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள் நிலநடுக்கத்தில் சரிந்து விழுந்தால், பாதிக்கப்படப் போவது அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, குடியிருப்புகளைக் கட்டிய அல்லது வணிக வளாகங்களின் உரிமையாளர்களான வியாபாரிகளோ அல்ல... அப்பாவிப் பொதுமக்கள்!
இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு, ஏரிகள், குளங்கள் போன்றவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படக்கூடாதா? விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் எதுவாக இருந்தாலும், யாருடையதாக இருந்தாலும் இடித்து எறியக்கூடாதா?
இயற்கையைச் சீண்டினால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு கங்கையின் சீற்றம். புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி! 
 
நன்றி: www.dinamani.com  -  12-Jul-2013 - தலையங்கம்