I LOVE TAMIL


Monday, April 21, 2014

Election

தமிழகத்தில் 103 கிரிமினல் வேட்பாளர்கள் போட்டி :கோடீஸ்வரர்கள் 178; கல்வியறிவு இல்லாதோர் 21 பேர்

சென்னை : 'தமிழக லோக்சபா தேர்தல் களத்தில் உள்ள, 844 வேட்பாளர்களில், 103 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்; 178 பேர் கோடீஸ்வரர்கள்' என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் பொறுப்பாளரும், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியருமான சுதர்சன் பத்மநாபன் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவுடன், அவர்கள் தெரிவித்த விவரங்கள் அடிப்படையில், குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு, கல்வி, மகளிர் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை தொகுத்துள்ளோம்.
குற்ற வழக்குகள்
தமிழக லோக்சபா தேர்தல் களத்தில் கட்சிகள், சுயேச்சைகள் என, 39 தொகுதிகளில், 845 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், 844 பேரின் விவரங்களைப் பெற்று தொகுத்துள்ளோம். மொத்த வேட்பாளர்களில், 103 பேர் மீது குற்ற வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. 2009 தேர்தலில், இந்த
எண்ணிக்கை, 63 ஆக இருந்தது.
குற்ற வழக்குகளில் தொடர்புடைய, 103 பேரில், 53 பேர், கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட கடும் குற்றங்களில்
சிக்கியுள்ளவர்கள். குற்ற வழக்குகளில்
சிக்கியவர்களில், 23 சதவீதத்தினர், காங்கிரசார்; 22 சதவீதத்தினர் பா.ஜ., கட்சியினர்.
அ.தி.மு.க., வேட்பாளர்களில் 18 சதவீதத்தினரும், தி.மு.க., வேட்பாளர்களில் 17 சதவீதத்தினரும், தே.மு.தி.க., வேட்பாளர்களில் 36 சதவீதத்தினரும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
கடும் குற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், இருவர் மீது கொலை வழக்குகள் உள்ளன. 14 பேர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தேச துரோக வழக்கு தொடரப்பட்டோர், ஐந்து பேர் உள்ளனர். ஏழு வேட்பாளர்கள் மீது, கடத்தல் வழக்குகள் உள்ளன.
கோடீஸ்வரர்கள்
மொத்தம் 844 வேட்பாளர்களில், 178 பேர் கோடீஸ்வரர்கள். முந்தைய, 2009 தேர்தலின்போது இந்த எண்ணிக்கை, 98 ஆக இருந்தது. கோடீஸ்வர வேட்பாளர்கள், காங்கிரசில் 85 சதவீதத்தினர், பா.ஜ.,வில் 67, அ.தி.மு.க., 80, தி.மு.க., 97, தே.மு.தி.க., 86, ஆம் ஆத்மியில் 52 சதவீதத்தினர்
உள்ளனர்.
இவர்களில், காங்கிரசின் கன்னியா
குமரி வேட்பாளர் வசந்தகுமார் முதலிடத்தில் உள்ளார். பா.ஜ.,வின் வேலுார் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இரண்டாவது இடத்தில் உள்ளார். அ.தி.மு.க.,வின் ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர் ராமச்சந்திரன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
சொத்து மதிப்பு 'பூஜ்ஜியம்'
அதேநேரத்தில், 15 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு குறைவாக சொத்து வைத்திருக்கும், 22 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்; இவர்கள் சுயேச்சைகள். 14 வேட்பாளர்கள், தங்களின் சொத்து மதிப்பை, 'பூஜ்ஜியம்' என தெரிவித்துள்ளனர்.
மொத்த வேட்பாளர்களில், 540 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை; 346 பேருக்கு, 'பான்' கார்டு இல்லை; 21 பேருக்கு கல்வி அறிவு இல்லை: 380 பேர் பட்டதாரிகள்; 396 பேர் 12ம் வகுப்புக்கு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்கள்.
வேட்பாளர்களில் இளைஞர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். லோக்சபா வேட்பாளர்களில், 25 - 50 வயதுக்கு உட்பட்டவர்கள் 545 பேர் இருக்கின்றனர். மொத்த வேட்பாளர்களில் இது, 65 சதவீதம். 51 - 70 வயதுக்கு உட்பட்டவர்கள் 33 சதவீதம்; 71 - 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 23 சதவீதம்.
மொத்தமுள்ள 844 வேட்பாளர்களில், பெண்கள் 53 பேர் மட்டுமே உள்ளனர். முந்தைய 2009 லோக்சபா தேர்தலில், 48 பெண்கள் போட்டியிட்டனர். இப்போது முதல்முறையாக, திருநங்கை ஒருவரும் தேர்தல் களத்தில் உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Dinamalar.com - பதிவு செய்த நாள்

21  April - 2014