I LOVE TAMIL


Friday, September 4, 2015

நெருங்கி வரும் ஆபத்து!

First Published : 28 August 2015 01:28 AM IST 

கத்திரி வெயில் காலம் நிறைவடைந்து மாதங்கள் சில ஆகிவிட்டநிலையிலும், ஓரிரு இடங்களில் மாலை வேளைகளில் மழை பெய்தபோதும்கூட, பல பகுதிகளில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் இன்றளவும் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது.

ஏற்கெனவே, கோடை வெயிலின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரம், கர்நாடகத்தில் நிகழாண்டில் மட்டும் சுமார் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தென் இந்தியாவில் எதிர்காலத்தில் அனல் காற்று அதிக அளவில் வீசக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், இந்தியாவில் கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது மும்பை ஐ.ஐ.டி.
இனிவரும் காலங்களில் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வை மும்பை ஐ.ஐ.டி.யின் சிவில் என்ஜினீயரிங் பிரிவு துணைப் பேராசிரியர் கபிமால் கோஷ் தலைமையிலான குழுவினர் நடத்தி, அதன் முடிவுகளை அண்மையில் வெளியிட்டனர். இந்த ஆய்வில்தான் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து கபிமால் கோஷ் கூறுகையில், உலகம் வெப்பமயமாகி வருவதால் நிகழவிருக்கும் மோசமான விளைவுகளின் அறிகுறியாக இந்த அனல் காற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, உலகம் வெப்பமயமாகி வருவதால் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று பிற ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.
20-ஆம் நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து உலகின் வெப்பம் 0.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும், 1906-ஆம் ஆண்டிலிருந்து 2005-ஆம் ஆண்டு வரை உலக அளவில் மேல்பரப்பு காற்றின் வெப்பநிலை 0.74 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும் காலநிலை மாற்றத்துக்கான அரசுகளுக்கு இடையிலான குழுவும் தெரிவித்துள்ளது.

புவி வெப்பமடைவது எதனால், என்ன காரணம் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடினால்.... அதற்கு நாம்தான் (மனிதர்கள்) முழுமுதல் காரணமாகத் திகழ்கிறோம். கடந்த காலங்களில் எங்கு பார்த்தாலும் மரம், செடி, கொடிகள் என பச்சைப்பட்டு போர்த்தியதுபோல் காட்சியளித்தாள் நமது பூமித்தாய்.
ஆனால், காலப்போக்கில் மனிதன் தனது தேவைகளுக்காக மரங்களை வெட்டியதால், காடுகளின் பரப்பளவு சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி புவி வெப்பமடைதலும் ஆரம்பமானது.
மேலும், காடுகளை அழித்ததால் போதிய மழை இல்லை. மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது. எங்கு பார்த்தாலும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

விவசாயம் செய்வதற்கு போதிய நீர் இல்லை. மூன்று போகம் விளைந்த தமிழகத்தின் நெல் களஞ்சியமான தஞ்சையில்கூட, இன்று ஒருபோகம் விளைவிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதனால், விளை நிலங்களை எல்லாம் விவசாயிகள் வீட்டுமனைகளாக்கி விற்று வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் புவி வெப்பமடைதல் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, காலம் மாறமாற மனிதனின் தேவைகள் அதிகரிக்கத் தொடங்கின.

இதற்காக, மனிதன் தொழில்நுட்ப வளர்ச்சிகளைத் தேடத் தொடங்கினான். கால்நடையாகத் திரிந்த மனிதன், தனது சுகபோகங்களுக்காக வாகனங்களை உருவாக்கினான்.

கைக்குத்தல் அரிசி காலம் மலையேறி நவீன அரிசி ஆலைகளை உருவாக்கினான். இப்படி படிப்படியாக வாகனப் பெருக்கமும், தொழிற்சாலை பெருக்கமும் அதிகரித்தன.

சரி, அதையாவது நாம் சரிவரச் செய்கிறோமா என்றால் அதுவும் இல்லை. பொதுவாக நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களுக்கு ஆயுள் காலமாக 15 ஆண்டுகளே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு, அந்த வாகனங்களை பழைய இரும்புக் கடைக்கு அனுப்பிவிட வேண்டும்.
அதையும் மீறி அந்த வாகனத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால், அந்த வாகனத்தைப் புதிதாகச் சீரமைத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்று, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காண்பித்து அனுமதிச் சான்றிதழ் பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும். ஆனால், நாம் இதைக் கடைப்பிடிப்பதில்லை.
விளைவு, தொழிற்சாலைகளில் இருந்தும், வாகனங்களில் இருந்தும் வெளியாகும் அளவுக்கு அதிகமான கரியமில வாயு சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டது.

இதனால், மனிதன் நல்ல காற்றை சுவாசிக்க முடியவில்லை. அது மட்டுமா? இந்தப் புகை மண்டலம் வளிமண்டலத்தைத் தாக்கி ஓசோன் படலத்தில் துவாரத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால், புவி வெப்பமடைதல் மேலும் அதிகரித்ததோடு, பருவநிலையும் மாறத் தொடங்கியது.

இன்றைய பருவநிலை மாற்றத்துக்கும், உலக அளவில் நேரிடும் இயற்கைப் பேரிடர்களுக்கும் இந்த புவி வெப்பமடைதலே முக்கியக் காரணமாகும்.
2004-இல் ஆசிய நாடுகளை உருக்குலைத்த சுனாமி, அண்மையில் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம், ஒடிஸô மாநிலத்தை 1999, 2014-இல் தாக்கிய புயல், உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களில் 2013-இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கெல்லாம் புவி வெப்பமடைதலே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

எனவே, ஆபத்து நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது, அதைத் தவிர்க்க மரங்களை வளர்த்து பூமித் தாயை குளிர்விப்போம்.

Thanks - www.dinamani.com - 28.Aug.2015