I LOVE TAMIL


Friday, April 15, 2016

செம்பு பாத்திரத்தில் வைத்த நீர் அருந்தலாம்!

செம்பு பாத்திரத்தில் வைத்த நீர் அருந்தலாம்!


வெயிலின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வழிமுறைகளை கூறும், சித்த மருத்துவர் மு.சத்தியவதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர் யாழினி: வாரம் ஒருமுறை, மிதமாக சூடுபடுத்திய நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து குளித்துவர, உடற்சூடும், கண் சூடும் தணியும். எண்ணெய்க் குளியலன்று பகல் உறக்கம் கூடாது; புளிப்பு, பழையது, அசைவம் சாப்பிடக் கூடாது.இரவில், உள்ளங்காலில் பசு நெய் தேய்த்து துாங்குவது, உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பது, தொப்புளில் எண்ணெய் விடுவது, கண்களின் சூட்டை தணிக்கும்.வியர்க்குரு, துர்நாற்றம், சரும பாதிப்பை தவிர்க்க, நலங்குமாவு கைகொடுக்கும். வெட்டிவேர், விளாமிச்சை வேர், 
சந்தன சிராய், கோரைக்கிழங்கு, பூலாங் கிழங்கு, கார்போக அரிசி தலா, 100 கிராமுடன், பச்சைப்பயறு, 500 கிராம் சேர்த்து அரைத்து, சோப்புக்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம்.கற்றாழை சதையை கை, கால், முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்துக்கு பின் குளிக்க, 'சன் டேன்' பிரச்னை நீங்கும். அதேபோல், புளித்த தயிரை சருமத்தில் பூசினாலும், இழந்த நீர்தன்மையை ஈடுகட்டி, சருமம் பளபளக்கும்.
இதுதவிர, 100 கிராம் நன்னாரி வேரை ஒன்றிரண்டாக இடித்து, 400 மில்லி நீரில் இரவு ஊறவைக்க வேண்டும். காலையில் தண்ணீரை கொதிக்கவிட்டு, 100 மி., ஆக்கவும். சுவைக்கு பனை வெல்லத்தை சேர்த்து பாகுபோல காய்ச்சினால், நன்னாரி மணப்பாகு ரெடி.

இதை தினமும் சிறிதளவு எடுத்து, நீர் கலந்து குடிக்கலாம். நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை இது குணமாக்கும்.
நீராகாரம், கூழ் வகைகள் நல்லது. வெயிலுக்கு உகந்த சிறுதானியங்களை பானை சோறாக வடித்து சாப்பிடலாம்; குக்கர் வேண்டாம். மண் பானை நீர், சீரகம் சேர்த்து கொதிக்கவைத்த நீர், செம்பு பாத்திரத்தில் வைத்த நீர் அருந்தலாம். தாளித்த நீர் மோருடன், ஒரு சிட்டிகை மிளகுத்துாள் சேர்த்து தினமும் அருந்தலாம். ஒரு பட்டை, ஒரு ஏலக்காய், சிறிதளவு சுக்குடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சுவைக்கு வெல்லம் சேர்த்து மண் சட்டியில் ஒருநாள் வைத்து, மறுநாள் அதை சிறுக சிறுக குடிக்க, உடற்சூடு தணியும். இரவில் பனஞ்சர்க்கரை சேர்த்த பால் குடிக்கலாம்.

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால், அதில் உள்ள அமிலத்தன்மை புண்களை ஏற்படுத்தவோ, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டவோ செய்யலாம். மேலும், அதில் உள்ள பொட்டாசியம், குளூக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல், சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, காலை உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்தோ அல்லது முற்பகல் வேளையிலோ இளநீர் அருந்தலாம்.

Thanks to - www.dinamalar.com on 15.Apr.2016