I LOVE TAMIL


Wednesday, March 11, 2009

வாக்குச் சீட்டின் வலிமை!

வாக்குச் சீட்டின் வலிமை!

இந்தியா தன்னை ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்துக் கொண்ட பிறகு நடக்கும் 15-வது பொதுத்தேர்தலில் 71 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். வருகிற ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி மே மாதம் 13-ம் தேதிவரை நீண்டு நிற்கும் ஐந்து கட்டத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களும் இணைந்து நடத்தப்படுகின்றன.

சுமார் 4 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் கடந்த பொதுத் தேர்தலைவிட அதிகமாகப் பங்குகொள்ள இருக்கின்றனர். 1,41,402 வாக்குச் சாவடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமா? 41 லட்சம் அரசு ஊழியர்கள் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், 21 லட்சம் பாதுகாப்புப் படையினருமல்லவா எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடக்க உதவ இருக்கின்றனர். உலகிலேயே இத்தனை வாக்காளர்கள், வாக்குச் சாவடிகள், பாதுகாப்புப் படையினர் என்று ஒரு தேர்தலில் பங்கு பெறுவது இந்தியாவில் மட்டும்தான்.

இந்தத் தேர்தலில் மிகவும் முக்கியமான அம்சம், தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 82 சதவீத வாக்காளர்களுக்கு, அவர்களது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதுதான். அசாம், நாகாலாந்து மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்கள் தவிர ஏனைய எல்லா மாநிலங்களிலும் முறையாகப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்ல. இந்த முறை, வாக்காளர் பட்டியலிலும் அவர்களது பெயர்களுடன் புகைப்படமும் இணைக்கப்பட இருக்கிறது.

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில், அத்தனை தொகுதிகளிலும் முதன்முதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால், கள்ள ஓட்டுப் போடுவது நின்றுவிடுமா என்றால், நிற்காது. ஆனால், குறையும். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் நான் ஓர் இந்தியன் என்று கூறிக்கொள்ள ஓர் அடையாளம் இப்போதாவது தரப்பட்டிருக்கிறதே, அதுவே பெரிய விஷயமல்லவா!

சுமார் 50 முக்கியமான அரசியல் கட்சிகள் பங்கு கொள்ளும், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்தச் செலவு சுமார் 16,000 கோடிக்குக் குறையாது என்று கருதப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் தேர்தலை நடத்துவதற்காக அரசுக்காகும் செலவு என்று 9,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள், ஒரு மக்களவைத் தொகுதிக்கு அவரவர் வசதிக்கேற்ப நான்கு முதல் பன்னிரெண்டு கோடி ரூபாய்வரை செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்களின் செலவுக்குத்தான் தேர்தல் ஆணையம் வரம்பு வைக்க முடியுமே தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் அனுதாபிகள் செலவழிப்பதைத் தடுக்க முடியாது.

அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு எதைச் செய்தாவது வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் போதும் என்கிற மனநிலையை மாற்றிக் கொள்ளாத வரையில், மக்கள் தங்களது பொன்னான நேரத்தையும், வாக்குகளையும் வீணாக்குவதைத் தவிர்க்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மக்களவையில் எந்தவித விவாதத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்தவர்கள், அளவுக்கு அதிகமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் சொத்து சேர்த்தவர்கள் போன்றவர்களை அரசியல் கட்சித் தலைமையே, மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காமல் இருப்பதன் மூலம் அரசியல் முதிர்ச்சி ஏற்பட வழிவகுக்க முடியும்.

மகளிர் ஒதுக்கீடு மசோதா பற்றி வாய்கிழியப் பேசும் அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர் பட்டியலில் மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கிப் புரட்சி செய்வதுதானே? இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பளித்து, வயதானவர்களைக் கட்சிப் பணியில் ஈடுபடுத்துவதைப் பற்றி ஏன் அரசியல் கட்சிகள் யோசிப்பதே இல்லை? ஜாதி ரீதியாக, மத ரீதியாகச் சிந்திப்பதை விட்டுவிட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் தேச முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் எண்ணம் ஏன் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படவில்லை?

வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் அந்த மாற்றத்தைத் தர எந்த அரசியல் கட்சியுமே, கட்சிகளின் கூட்டணியுமே தயாராக இல்லை. எது மோசம், எது படுமோசம் என்று தீர்மானிக்கும் நிலையில்தான் வாக்காளர்கள் இருக்கிறார்களே தவிர, நல்லதற்கும் கெட்டதற்கும் இடையே உள்ள தேர்வாக நமது தேர்தல்கள் இல்லை. அதுதான் வேதனை தரும் விஷயம்.

அதனால் என்ன? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற சுமார் 180 நாடுகளில், அதிக மக்கள்தொகை கொண்ட, மிக அதிகமான இன, மொழி, மத, ஜாதிப் பிரிவுகள் உடைய நாடு இந்தியாதான். ஆனால் 62 ஆண்டுகளாக சுதந்திர நாடாக, குடியரசாகத் தொடர்கின்ற, வலிமையான மக்களாட்சியாக 15-வது பொதுத் தேர்தலைச் சந்திக்கிற ஒரே நாடும் நமது பாரதம் மட்டுமே! தேர்தலுக்குத் தேர்தல் நமது மக்களாட்சி வலுப்பெறுகிறது. என்றாவது ஒருநாள் வாக்குச் சீட்டு வலிமை பெறும் காலம் வராமலா போய்விடும்?

மக்களாட்சியில் மாற்றங்கள் மெதுவாகத்தான் நிகழும்!

Thanks: www.dinamani.com - Saturday March 7 2009

No comments: