லேனாவின் ஒரு பக்கக் கட்டுரை
பொறுமை என்பது இயலாமையின் மறுவடிவமே. “நான் நன்றாக இல்லை; இவன் மட்டும் நன்றாக இருக்கிறானே; நான் இப்படி வீணாய்ப் போனேனே!’ என்கிற சிந்தனைக் கோணத்தில் உள்ள பொறாமை உணர்வு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அத்துணை ஆண் மக்களும் செல்வ நிலையில் ஒரே மாதிரியாக இல்லை. இவர்களுள் வளர்ந்து உயர்ந்து வாழ்பவர்கள் மூவர் என்றால், மூவருக்கும் அதிர்ஷ்டம் இருந்தது; நல்ல மாமனார் வீடு வாய்த்தது; அவர்கள் கைதூக்கி விட்டார்கள்; இவர்கள பிடித்துக் கொண்டார்கள் என்று நான்காவது மகனோ ஐந்தாவது மகனோ வயிறு எரியலாம்; நாம் தோற்றதற்கான - வளராததற்கான வியாக்யானங்களும் சொல்லலாம்.
ஆனால் நல்ல வாய்ப்புகள் (மாமனார் வீட்டினரால்) கிடைத்தும் அவற்றை நழுவ விட்டுவிட்டு, நல்லுறவைக் கெடுத்துக் கொண்டு தோல்வியை அணைத்துக் கொண்ட மாப்பிள்ளைகளும் உண்டு.
அதே நேரத்தில், எவரது துணையும் ஆதரவும் உதவியும் பக்க பலமும் இன்றி சுயமாக உழைத்து, போராடி முன்னேறிய தனிமகன்களும் உண்டல்லவா? களங்களைக் காரணங்களாக்குகிறவர்கள் மேல் இரண்டு பாராக்களுக்கும் நமக்கு என்ன சமாதானம் சொல்லிவிடமுடியும் - முயற்சியின்மையைத் தவிர? ஆக, அதிர்ஷ்டம் வாய்த்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் ஒருவிதத் திறமையும் முயற்சியும் தேவைப்படுகின்றன.
பல்லக்கில் பயணிக்கிறவனுக்கு அரச குடும்பத்தில் பிறந்த அதிர்ஷ்டம் வாய்த்து இருக்கலாம். ஆனால் அதைத் தூக்க நேருகிறவன் பொறாமைப்பட்டுச் சாகாமல், நானும் ஒரு நாள் பல்லக்கில் பயணிப்பேன் என்று எண்ணி ஏன் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை? இந்த முயற்சியில் உண்மையும் நேர்மையும் இருந்தால் குறைந்த பட்சம் பல்லக்குத் தூக்குகிற வேலையை விட்டுவிட்டு, ஒரு குதிரையிலாவது பல்லக்கிற்கு இணையான உயரத்தில் பயணிக்கலாமே! எல்லாத் திறமைகளும் இருந்தும் வீணாய்ப் போகிறவர்கள் உண்டு. ஏன்? நேர்மை இல்லை; செயல்களைவிட வாய்ப்பேச்சு அதிகம்; உழைப்பு இல்லை. சரியான களங்களில் சரியான நேரத்தில் விதைகளை விதைக்காமல் நம் நிலத்தில் விளைச்சல் இல்லையே என்று ஏங்குபவர்கள் இனியாவது மனமாற்றம் பெறுவார்களா?
Thanks to : www.tamilvanan.com - 18.09.2009