I LOVE TAMIL


Monday, October 19, 2009

உணவுப் பற்றாக்குறை - காத்திருக்கும் ஆபத்து!

உலகம் வெப்பமயமாகி வரும் சூழல் காரணமாக ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்கள், விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகின்றன.

இதன் காரணமாக ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் வரலாறு காணாத மழை வெள்ளம் என மக்களை அச்சுறுத்தி வருகிறது இயற்கை.

இந்தியாவில் பெருகி வரும் மக்கள்தொகை காரணமாக, விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. இதனால் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போதிய மழை பெய்யாத காரணத்தால், உணவு தானியங்களின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

எனவே, உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விளைநிலங்களுக்குப் போதிய பாசன நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீர் வள கமிஷன் பரிசீலித்து வருவதாக அண்மையில் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். இரண்டு அல்லது மூன்று ஆறுகளை இணைப்பது சாத்தியம் என்றும் அது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாக இருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்பட்சத்தில் வெள்ளச்சேதம் தடுக்கப்படுவதுடன், வேளாண் பயிர்களுக்குக் குறைவின்றி பாசன நீர் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும். இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என நம்பலாம்.

இந்நிலையில், உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும், சீனாவும் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய 2050-ம் ஆண்டில் வேளாண் துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (எப்ஏஓ) தெரிவித்திருக்கிறது.

இத்தாலியின் தலைநகர் ரோமில் அண்மையில் நடைபெற்ற எப்ஏஓ உயர்நிலைக் கூட்டத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்து வரும் மக்கள்தொகையால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், எனவே அதற்கு ஏற்ப வேளாண் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், அதற்காக இப்போதே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்காக வேளாண் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலீடுகளை அதிகரிப்பது அவசியம் என்றும், அதற்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் உள்நாட்டில் விவசாயிகளை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான நவீன தொழில்நுட்பங்களின் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்கிறோம்.

ஆனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்ற கேள்வி வரும்போது, சாதகமான பதிலைச் சொல்ல முடிவதில்லை.

பிகார் மாநிலத்தின் கயா, சீதாமாரி ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்திருப்பதாக எழுந்துள்ள புகார்களைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது பாதகமான பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக, நீரில் மூழ்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட உணவு தானியப் பயிர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் சேதமடைந்துவிட்டன.

இதனால் உற்பத்தி பெருமளவில் குறையும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, உணவுப் பற்றாக்குறை அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அரசு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருள்களைச் சேதமின்றிப் பாதுகாத்து மக்களுக்கு விநியோகம் செய்ய முனைப்புக் காட்ட வேண்டும்.

வேளாண் உற்பத்திக்குத் தேவையான மின்சாரம், இடுபொருள்களைத் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்கி, தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை
அதிகரிக்க அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Thanks to : www.dinamani.com - 16.10.2009

No comments: