I LOVE TAMIL


Monday, October 26, 2009

நாட்டுப்பற்று எங்கே?

விகடன் பொக்கிஷம்


ந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு காலத்தில் மாஸ்கோதான் வழிபடும் கோயி லாக விளங்கியது. ஸ்டாலின்தான் அவர்கள் தலைவணங்கி வந்த கடவுள். புரட்சி, வர்க்கப் போர், முதலாளித்துவ ஒழிப்பு, ரத்தக்களறி ஆகிய வார்த்தைகள் அவர்களு டைய மூலமந்திரங்களாக விளங்கின.

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு சீனாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமலுக்கு வந்தது. உடனே பீகிங் நகரை மாஸ்கோவுடன் தங்கள் இரண்டாவது கோயிலாகச் சேர்த்துக்கொண்டனர். மாஸேதுங் மற்றொரு கடவுளானார்.
திடீரென்று கம்யூனிஸ்டு சீனா, இந்திய எல்லையில் ஊடுருவி பன்னிரண்டாயிரம் சதுர மைல்களைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டுவிட்டது. இந்த ஆக்கிரமிப்புக் காரணமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாட்டில் அதற்கிருந்த சிறிதளவு ஆதரவை யும்கூட இழக்க நேர்ந்தது. கேரளத்தில் நடைபெற்ற மறு தேர்தலிலும் சரி, நாட்டின் பொதுத் தேர்தலிலும் சரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அடியோடு குடை சாய்ந்தது.
''இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதெப்படி?'' என்பதைச் சென்ற வாரம் ஹைதராபாத்தில் கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் யோசிக்க லாயிற்று. சீனா பற்றி மிக நாசூக்கான வகையில் ஒரு தீர்மானம் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பைப் பெரிதுபடுத்தாமலும், அதே சமயத்தில் இந்திய அரசாங்கத்தின் 'சீன'க் கொள்கையை ஆதரித்தும் அத்தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. ஆனால், 'சீனா பலாத்காரமாக இந்திய மண்ணை ஆக்கிரமித்துள்ளது அநியாயம்' என்று கண்டித்து ஒரு வார்த்தைகூடக் காணப்படவில்லை.
''ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பகுதியிலிருந்து சீனப் படைகள் பின் வாங்கி, எல்லையில் ஒரு ராணுவ சூன்யமான பிரதேசம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மேலும் சம்பவங்கள் நடைபெறாமலிருக்கும். இதற்கு ஒப்புக் கொண்டால்தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும்'' என்ற இந்தியப் பிரதமரின் கோரிக்கைக்கு சீனா இணங்க வேண்டுமென்று தீர்மானம் வற்புறுத்தாதது ஏன்? நாட்டின் பாதுகாப்பைவிட, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சீனாவின் நல்லெண்ணம்தான் முக்கியமாகத் தோன்றுகிறது.

'நம் எல்லை எதுவோ அது நமக்கே சொந்தம். அதை விட்டுக் கொடுக்க மாட் டோம்' என்று புதிர் போடுகிறார் கம்யூனிஸ்டு தலைவர் டாங்கே. ஆனால், எது நம் நாட்டின் எல்லை என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஒருவேளை, சீனப் படங்களில் குறிப்பிட்டுள்ள எல்லையைத்தான் சொல்லுகிறாரோ?

Thanks to : www.vikatan.com - 28.10.2009

Thursday, October 22, 2009

விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?


லேனாவின் ஒரு பக்கக் கட்டுரை
  
பொறுமை என்பது இயலாமையின் மறுவடிவமே. “நான் நன்றாக இல்லை; இவன் மட்டும் நன்றாக இருக்கிறானே; நான் இப்படி வீணாய்ப் போனேனே!’ என்கிற சிந்தனைக் கோணத்தில் உள்ள பொறாமை உணர்வு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அத்துணை ஆண் மக்களும் செல்வ நிலையில் ஒரே மாதிரியாக இல்லை. இவர்களுள் வளர்ந்து உயர்ந்து வாழ்பவர்கள் மூவர் என்றால், மூவருக்கும் அதிர்ஷ்டம் இருந்தது; நல்ல மாமனார் வீடு வாய்த்தது; அவர்கள் கைதூக்கி விட்டார்கள்; இவர்கள பிடித்துக் கொண்டார்கள் என்று நான்காவது மகனோ ஐந்தாவது மகனோ வயிறு எரியலாம்; நாம் தோற்றதற்கான - வளராததற்கான வியாக்யானங்களும் சொல்லலாம்.
ஆனால் நல்ல வாய்ப்புகள் (மாமனார் வீட்டினரால்) கிடைத்தும் அவற்றை நழுவ விட்டுவிட்டு, நல்லுறவைக் கெடுத்துக் கொண்டு தோல்வியை அணைத்துக் கொண்ட மாப்பிள்ளைகளும் உண்டு.
அதே நேரத்தில், எவரது துணையும் ஆதரவும் உதவியும் பக்க பலமும் இன்றி சுயமாக உழைத்து, போராடி முன்னேறிய தனிமகன்களும் உண்டல்லவா? களங்களைக் காரணங்களாக்குகிறவர்கள் மேல் இரண்டு பாராக்களுக்கும் நமக்கு என்ன சமாதானம் சொல்லிவிடமுடியும் - முயற்சியின்மையைத் தவிர? ஆக, அதிர்ஷ்டம் வாய்த்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் ஒருவிதத் திறமையும் முயற்சியும் தேவைப்படுகின்றன.
பல்லக்கில் பயணிக்கிறவனுக்கு அரச குடும்பத்தில் பிறந்த அதிர்ஷ்டம் வாய்த்து இருக்கலாம். ஆனால் அதைத் தூக்க நேருகிறவன் பொறாமைப்பட்டுச் சாகாமல், நானும் ஒரு நாள் பல்லக்கில் பயணிப்பேன் என்று எண்ணி ஏன் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை? இந்த முயற்சியில் உண்மையும் நேர்மையும் இருந்தால் குறைந்த பட்சம் பல்லக்குத் தூக்குகிற வேலையை விட்டுவிட்டு, ஒரு குதிரையிலாவது பல்லக்கிற்கு இணையான உயரத்தில் பயணிக்கலாமே! எல்லாத் திறமைகளும் இருந்தும் வீணாய்ப் போகிறவர்கள் உண்டு. ஏன்? நேர்மை இல்லை; செயல்களைவிட வாய்ப்பேச்சு அதிகம்; உழைப்பு இல்லை. சரியான களங்களில் சரியான நேரத்தில் விதைகளை விதைக்காமல் நம் நிலத்தில் விளைச்சல் இல்லையே என்று ஏங்குபவர்கள் இனியாவது மனமாற்றம் பெறுவார்களா?


Thanks to : www.tamilvanan.com - 18.09.2009



Monday, October 19, 2009

உணவுப் பற்றாக்குறை - காத்திருக்கும் ஆபத்து!

உலகம் வெப்பமயமாகி வரும் சூழல் காரணமாக ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்கள், விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகின்றன.

இதன் காரணமாக ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் வரலாறு காணாத மழை வெள்ளம் என மக்களை அச்சுறுத்தி வருகிறது இயற்கை.

இந்தியாவில் பெருகி வரும் மக்கள்தொகை காரணமாக, விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. இதனால் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போதிய மழை பெய்யாத காரணத்தால், உணவு தானியங்களின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

எனவே, உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விளைநிலங்களுக்குப் போதிய பாசன நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீர் வள கமிஷன் பரிசீலித்து வருவதாக அண்மையில் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். இரண்டு அல்லது மூன்று ஆறுகளை இணைப்பது சாத்தியம் என்றும் அது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாக இருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்பட்சத்தில் வெள்ளச்சேதம் தடுக்கப்படுவதுடன், வேளாண் பயிர்களுக்குக் குறைவின்றி பாசன நீர் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும். இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என நம்பலாம்.

இந்நிலையில், உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும், சீனாவும் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய 2050-ம் ஆண்டில் வேளாண் துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (எப்ஏஓ) தெரிவித்திருக்கிறது.

இத்தாலியின் தலைநகர் ரோமில் அண்மையில் நடைபெற்ற எப்ஏஓ உயர்நிலைக் கூட்டத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்து வரும் மக்கள்தொகையால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், எனவே அதற்கு ஏற்ப வேளாண் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், அதற்காக இப்போதே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்காக வேளாண் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலீடுகளை அதிகரிப்பது அவசியம் என்றும், அதற்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் உள்நாட்டில் விவசாயிகளை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான நவீன தொழில்நுட்பங்களின் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்கிறோம்.

ஆனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்ற கேள்வி வரும்போது, சாதகமான பதிலைச் சொல்ல முடிவதில்லை.

பிகார் மாநிலத்தின் கயா, சீதாமாரி ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்திருப்பதாக எழுந்துள்ள புகார்களைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது பாதகமான பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக, நீரில் மூழ்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட உணவு தானியப் பயிர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் சேதமடைந்துவிட்டன.

இதனால் உற்பத்தி பெருமளவில் குறையும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, உணவுப் பற்றாக்குறை அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அரசு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருள்களைச் சேதமின்றிப் பாதுகாத்து மக்களுக்கு விநியோகம் செய்ய முனைப்புக் காட்ட வேண்டும்.

வேளாண் உற்பத்திக்குத் தேவையான மின்சாரம், இடுபொருள்களைத் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்கி, தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை
அதிகரிக்க அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Thanks to : www.dinamani.com - 16.10.2009