பசுமைப்புரட்சி தொடங்கப்பட்ட காலத்தில் 1960-களிலிருந்து கிராமங்களில் கிராமிய விவசாயக் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கி.பி. 2000-க்குப் பின் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசு வங்கிகளும் பிணை அடிப்படையில் விவசாயக் கடன்களை வழங்குவதில் சற்று வேகம் காண்பித்தன. ஒவ்வோராண்டும் விவசாயக் கடன் ஒதுக்கீடு உயர்ந்து வருகிறது. 2010-11 பட்ஜெட்டில் விவசாயக் கடன் ரூ.3,75,000 கோடி என்பதுகூட 2009-10 ஒதுக்கீட்டைவிட ரூ.50,000 கோடி அதிகம் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1990-லிருந்து 2008 வரை கிராமங்களில் விவசாயிகளின் கடன் நிலை பற்றிய ஒரு சர்வே எடுக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்திலும், விதர்பாவிலும் பருத்தி விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்களின் எதிரொலியாக இப்படிப்பட்ட சர்வேயை மத்திய அரசு எடுக்கப் பணித்தது. இதன் பெயர் "ஆல் இண்டியா டெப்ட் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் சர்வே'. இந்த சர்வே வழங்கிய தகவலின்படி,
1990-லிருந்து 2008 வரை விவசாயக் கடன் அதாவது ஒரு வட்டிக்கடன் வழங்குவதில் தேசிய வங்கிகளின் பங்களிப்பு குறைந்துவிட்டதால் தனியார்துறை ஃபைனான்சியர்களிடம் 3 வட்டி, 4 வட்டி, 5 வட்டி, 10 வட்டி போடும் கந்துவட்டிக்கு விவசாயிகள் கடன் வாங்கும் போக்கு அதிகம். அரசுத்துறை வங்கி 1992-ல் 64 சதவீதம் 1 வட்டிக்கடனாக வழங்கியது, 2008-ல் 57 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
ஆகவே, மொத்தக்கடன் வழங்கலில் தனியார் கந்துவட்டிக்கடன் 20 சதம் என்றால் எவ்வளவு லட்சம் கோடி இப்படிப்புரண்டு, வட்டிக்கு வட்டி என்று குட்டிபோட்டுப் பெருகும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
1990-ம் ஆண்டிலிருந்து 2008 வரை தேசிய வங்கிகள் யார் யாருக்கு விவசாயக் கடன் வழங்கின? விவசாயக் கடன்களை வழங்குவது நகர வங்கிகளா? கிராம வங்கிகளா? அப்படியிருந்தால் அதன் பங்கு என்ன? போன்ற புள்ளிவிவரங்களை "ஷெட்யூல்டு கமர்சியல் பாங்க்ஸ் இன் இண்டியா' வழங்கியுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பல்லவி சவான் என்ற பத்திரிகையாளர் ஆராய்ந்து ஹிந்து நாளிதழில் (13-8-2010) வழங்கியுள்ள ஒரு கட்டுரையில், "விவசாயக் கடன்களில் விவசாயம் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளைக் கந்து வட்டியாளர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றுதான் தேசிய வங்கிகள் மூலம் கிராமங்களுக்குக் கடன் வழங்கும் திட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இதன் பலனாக தேசிய வங்கிகளின் மொத்தக் கடன் வழங்கலில் கிராம-விவசாயக் கடன் 1990-2000 பத்தாண்டில் 2 சதவீதமாயிருந்த நிலை, 2001-2008-க்கு வந்தபோது 19 சதவீதமாக உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக நபார்டு மூலம் கிராமியக் கூட்டுறவு வங்கி மற்றும் நிலவள வங்கி (ரிசர்வ் வங்கி மூலம் பெறப்படும் நிதி) எல்லாம் சேர்த்து கிராமிய - விவசாயக் கடனின் பங்கு இதே காலகட்டத்தில் 31 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2004-ம் ஆண்டிலிருந்து 2008-க்கு வரும்போது கிராமிய - விவசாயக் கடன் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அந்த நாளிலிருந்து இந்த நாளுக்கு வரும்போது விவசாயக் கடன் பல்லாயிரங்கோடி என்பது பல லட்சங்கோடிகளாக உயர்ந்துள்ளது. ஆனால், கடன் பெறும் தகுதி என்று வரும்போது விவசாயம் புறந்தள்ளப்பட்டுள்ளது. தேசிய வங்கிகளின் விவசாயக் கடன் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மறைமுகமாகவே விவசாயம் பயன் பெறும். மறைமுக விவசாய உதவி என்றால் விவசாய உற்பத்திக்கு வித்திடும் தொழில் நிறுவனங்கள், உரநிறுவனங்கள், விதைநிறுவனங்கள், பூச்சிமருந்து நிறுவனங்கள், விவசாய எந்திரங்களான டிராக்டர், புல்டோசர், குழாய், மோட்டார், பம்பு செட், ஆழ்துளைக் கிணறு தோண்டும் எந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் தனியார் நிதி அமைப்புகள் ஆகியவற்றுக்கான உதவி. சொல்லப்போனால் யார், யார் விவசாயக் கடன் பெறலாம் என்ற வரையறையில் விவசாயி நீங்கலாக விவசாயத்துடன் மறைமுகத் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத்தான் முன்னுரிமை!
பசுமைப்புரட்சிக் காலகட்டத்தில் பயிர்க்கடன் என்பது நெல், தானியங்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்வோருக்கு மட்டுமே உண்டு. விவசாயக் கடன் பற்றிய புது வரையறையில் பயிர்க்கடன் இல்லை. வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பக்குவம் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விவசாயக் கடன் பெறுவதில் முன்னுரிமை உண்டு. நவீனப்படுத்தும் அரிசி ஆலை, கோதுமை ஆலை, சமையல் எண்ணெய் ஆலை பெறுவதும் விவசாயக் கடன். விவசாயக் கடன் பெறுவதற்கு கிராமம் அவசியமில்லை. ஏனெனில், விவசாயக் கடன்களில் பெரும்பகுதி பெரிய நகரங்களில் உள்ள தேசிய வங்கிகள் வழங்கியுள்ளனவாம். சென்னை, மும்பை போன்ற மெட்ரோபாலிட்டன் நகர்களிலும் விவசாயம் உண்டு. இதுகுறித்த புள்ளிவிவரங்களையும் வங்கி அமைப்புகளே வழங்கியுள்ளன. ""கிரீன் புராடக்ட்ஸ்'' ""அக்ரி புராடக்ட்ஸ்'' என்ற லேபிள்கள் போதுமானவை. ஏற்றுமதி செய்யும் பொருள்களாக இருக்க வேண்டும்.
பசுமைப்புரட்சி நிகழ்ந்து வந்த காலகட்டத்தில் விவசாயிகள் கிராமக் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் 12 சதவீத வட்டி (1 வட்டிக்கடன்) என்ற கணக்கில் கடன் பெற்றார்கள். அப்போது தரகர்கள் இல்லை. விலை இருக்காது. விளைச்சல் இருக்காது. வாங்கிய கடனைத் திருப்பிக்கட்ட முடியாது. ஆண்டுக்கணக்கில் வசூலாகாவிட்டால், வட்டிக்கும் வட்டி போடுவார்கள். மீண்டும் கடன் வாங்கினால் பழைய கடனை அடைத்துவிட்டு மிஞ்சுவது ஒன்றுமில்லை என்றாலும் எப்போது விவசாயக் கடன் ரத்தாகும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஓர் அறிவிப்பு வந்ததும், மீண்டும் கடன் வாங்குவது உண்டு. இப்போது வாங்கிய பயிர்க்கடனை 6 மாதத்தில் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி இல்லை என்ற சலுகை உண்டு. முன்புபோல் இப்போது பயிர்க்கடன் பெறுவது அவ்வளவு எளிதல்ல. தரகர் மூலமே பெறமுடியும். ஒரு வட்டிக்கடன் பெற 2 வட்டி செலவழிக்க வேண்டும். நிறைய அலைய வேண்டும். கிராமப்பகுதிகளில் விவசாயக் கடன் அதாவது பயிர்க்கடன் என்பது லேவாதேவி அதாவது ஃபைனான்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது.
கிராமங்களிலும் சிற்றூர்களிலும் விவசாயக்கடன், பணம் டெபாசிட் செய்யும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுகிறது. எந்தக் குழுவும் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் நிலமற்ற தொழிலாளர்களாக இருக்கலாம். அப்படி எதுவும் தொழில் செய்தால் அது விவசாயமாக இருக்காது. சிறுதொழில் வியாபாரமாகவோ சிறுதொழில் உற்பத்தியாகவோ இருக்கலாம். குழு அமைப்புகள் 1 வட்டிக்கடன் வாங்கி மறைமுகமாக கந்துவட்டிக்கு விடுவது உண்டு. அதற்கு ஆதாரம் இருக்காது. கிராமங்களில் உள்ள வங்கிகள் 1 வட்டிக்கடன் வழங்குவதற்கு ஆதாரங்கள் உண்டு. ஆனால், இன்னமும் மக்கள் 2 வட்டி, 3 வட்டி வழங்கும் கந்துவட்டிக்காரர்களை நாடுவது ஏன்?
ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் கந்துவட்டி வழங்குவோர் பெருகி வருகின்றனர். இதுதான் கசப்பான உண்மை.
உண்மையில் இத்தகைய சூழ்நிலையில்கூட, விவசாயம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வம் திக்குத் தெரியாத காட்டில் வாழும் அறியாமை நிரம்பிய விவசாயிகளிடம் உள்ளது. கந்து வட்டி வாங்கி விவசாயம் செய்யும் இவர்களுக்கு வங்கிக்கடன் வேண்டுமானால், தாதாவாக உள்ள தரகர்களைப் பிடிக்க வேண்டும். லேவாதேவி செய்யும் தாதாத் தரகர்கள் கட்சி செல்வாக்கு உள்ளவர்களாயிருக்கலாம்.
கி.பி. 2000-த்திலிருந்து இருபத்தியொன்றாம் நூற்றாண்டு தொடங்குகிறது. இதை விவசாயிகளின் தற்கொலை நூற்றாண்டு எனலாம். முதலில் ஆந்திரப்பிரதேசம், பின்னர் மகாராஷ்டிரம், பஞ்சாப் மாநிலங்களில் பருத்தி விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டனர். டிராக்டர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் பால்மாடுகளுக்குத் தீவனம் இல்லாமல் மாடுகளுடன், மாடுகளை வளர்த்த மனிதர்களும் இறந்தனர். இப்போது ஆந்திர மாநிலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டிக் கடனாகி, நீரும் கிட்டாமல், தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கூடி வருகிறதாம். கடந்த 10 ஆண்டுகளில் இப்படித் தற்கொலைச்சாவு, பட்டினிச்சாவின் எண்ணிக்கை 3 லட்சத்துக்குமேல் இருக்கலாம். இவர்களில் 2.9 லட்சம் விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களின் இம்சை தாங்காமல் இறந்துள்ளனர்.
இவர்களுக்குக் குறைந்த வட்டியில் பணம் வழங்குவோர் இல்லை. நகரத்து வங்கிகள் நகரங்களையே கிராமமாக எண்ணி விவசாயக்கடன் வழங்கும் "சமரசம் உலாவும்' இடமாகிவிட்டது. சிற்றூர்களில் ரியல் எஸ்டேட்டுடன் கந்து வட்டியும் செய்யும் கல் நெஞ்சங்களுக்கு மட்டுமே விவசாயக் கடன் கிட்டுவது எளிதாக உள்ளதால் "எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடாகிய வீட்டில் தொல்லையின்றித் தூங்கிவிட' முடிவுசெய்து அந்த விவசாயி தொங்கிவிட்டான். 64-வது ஆண்டு தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. தொங்குபவனைக் கொத்தக் கழுகுகள் காத்திருக்கின்றன.
No comments:
Post a Comment