I LOVE TAMIL


Tuesday, December 28, 2010

பசி போக்குவோம்!

பசி போக்குவோம் ! - டிச., 28 - மதுரையில் படியளந்தருளிய லீலை!

மார்கழி அஷ்டமியன்று மதுரை மீனாட்சியம்மன் கோவி லில் நடக்கும் படியளந்தருளிய லீலை நிகழ்ச்சி சிறப்பானது. கண்ணுக்குத் தெரியாத உயிர்களில் இருந்து மனித இனம் வரை, எல்லாருக்குமே ஆண்டவன் படியளக்கிறான். சிலருக்கு பெரும் பணத்தைக் கொடுத்திருக்கிறான். அது, அவர்களுக்காக மட்டுமல்ல, இல்லாதவர்களுக்கும் கொடுத்து உதவட்டுமே என்பதற்கும்தான். பசியுள்ள ஒருவனிடம் ஆன்மிகத்தைப் போதித்தால், அவனது காதுகளில் அது ஏறாது. முதலில் சாப்பாடு... பின்பு அவனிடம் என்ன சொன்னாலும் கேட்பான். 

உயிர்கள் பசியின்றி இருக்க தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விழாவே இது.
ஒரு கதை மூலம் இதை விளக்கலாம்... ஒரு ஏழை, கடும் பசியுடன் திரிந்தான். வழியில் ஒரு மாந்தோப்பு தென்பட்டது. பழங்கள் கண்ணைக் கவரும் வகையில் தொங்கின. தோட்டத்துக்குள் புகுந்து விட்டான் அந்த ஏழை. அது, அரசருக்குரிய தோட்டம் என்பது அவனுக்குத் தெரியாது. பசி வேகம் கண்ணை மறைக்க, கல்லை விட்டெறிந்தான்; பழம் கீழே விழுந்தது. ஆர்வமாக பழத்தைச் சாப்பிட்டான் அவன். ஆனால், வீசி எறிந்த கல், சற்று தூரத்தில், தன் மனைவியருடன் மரத்தடியில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அரசனின் தலையில் விழுந்தது. நல்ல வேளையாக அரசர் கிரீடத்துடன் இருந்ததால் தப்பித்தார். அவர், அதை பெரிதுபடுத்தவும் இல்லை. ஆனால், அங்கே காவலுக்கு நின்றவர்கள், அரசரிடம் நற்பெயர் பெறுவதற்காக உடனடி நடவடிக்கை எடுத்தனர். பழம் தின்று கொண்டிருந்த ஏழையைப் பிடித்து வந்து அமைச்சரிடம் நிறுத்தினர். அவர், அவனுக்கு மரணதண்டனை விதித்தார். இந்த தகவலை மன்னரிடம் ஓடோடி வந்து சொல்ல, மன்னர் அவனை தன் முன்னால் கொண்டு வரும்படி சொன்னார். அவனை இழுத்து வந்தனர். அவன் கல் வீசியதற்கான காரணம், பசி என்பதை புரிந்து கொண்டார். அவனை விடுவிக்கச் சொன்னார் அரசர். "அமைச்சரே... அறிவே இல்லாத இந்த மரம் கூட ஒரு கனியைக் கொடுத்து, இந்த மனிதனின் பசியைப் போக்கியிருக்கிறது. அறிவுள்ள ஜீவன்களான நாம், நம் நாட்டிலுள்ள இவனைப் போன்ற மக்களின் வறுமையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இவனை விடுதலை செய்யுங்கள். இனி, ஏழைகளே இந்நாட்டில் இருக்கக்கூடாது. அவர்களைக் கணக்கெடுத்து உரிய பணி கொடுத்து பசியை விரட்டுங்கள்...' என உத்தரவு போட்டார்.

பார்வதிதேவிக்கும், பரமேஸ்வரனுக்கும் ஒருமுறை வாக்கு வாதம் வந்தது. "நீங்கள் எல்லாருக்குமே படியளப்பதாக சொல்கிறீர்களே... இதோ... இந்த செப்புக்குள் ஒரு எறும்பை விடுகிறேன். இதற்கு எப்படி படியளக்கிறீர்கள் என பார்க்கலாம்...' என்றாள். சிவன், அந்த செப்பை திறந்து பார்க்கச் சொன்னார். செப்பின் ஓரத்தில் ஒரு அரிசித் துகள் கிடந்தது. அதை, எறும்பு வாயில் கவ்விக் கொண்டிருந்தது. இவ்வாறாக, உயிர்களின் பசி போக்குவதை இறைவன் தன் கடமையாகக் கொண்டுள்ளது போல, நாமும் பிறர் பசி போக்க வேண்டும் என்பதை உணர்த்த பவனி வருவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர். அந்த சப்பரத்தில் நெற்கதிர்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் இருந்து சிந்தும் நெல்மணிகளை சிறு உயிர்கள் எடுத்துக் கொண்டு உயிர் வாழும். இந்த நன்னாளில், பசியில்லாத உலகம் அமைய அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டுவோம். *** 


நன்றி : www.dinamalar.com - 26-Dec-2010

No comments: