I LOVE TAMIL


Monday, February 28, 2011

தலையங்கம்: துணிவுமில்லை, மனமுமில்லை

எந்தவொரு நாடும் உலக அரங்கில் மதிக்கப்படுவது அதன் ராணுவ பலத்தாலோ, பொருளாதார பலத்தாலோ, மக்கள்தொகை அல்லது நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமல்ல. அந்த நாடு தனது குடிமக்களை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது, அவர்களது உரிமைகளை மதிக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு நாடும் அதன் தலைமையும் மதிக்கப்படுகிறது, மரியாதை பெறுகிறது. சமீபகாலமாக நிகழும் சில சம்பவங்கள் இந்தியாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சீன சரக்குப் படகு ஜப்பானியக் கடலோரக் காவல்படையின் ரோந்துப் படகின்மீது மோதிவிட்டது. ஜப்பானியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் அந்தச் சீனப் படகின் கேப்டனைக் கைது செய்துவிட்டனர்.

சீனா கொதித்தெழுந்துவிட்டது. இது நமது நாட்டின் தன்மானத்துக்கே இழுக்கு என்று கருதி, அதை ஒரு தேசியப் பிரச்னையாக்கிவிட்டது. எல்லா விதத்திலும் ஜப்பானுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது சீனா.


முதலில், அனைத்து மட்டங்களிலுமான ஜப்பானியத் தொடர்புகளை நிறுத்தி வைத்தது. நிலக்கரி மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புக்கான கூட்டுமுயற்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஜப்பானிய எலெக்ட்ரானிக் தொழிலுக்குத் தேவைப்படும் முக்கியமான சில தாதுப்பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.

பயந்துபோய், நமக்கேன் வம்பு என்று ஜப்பான் அந்தப் படகின் கேப்டனை நிபந்தனையின்றி விடுவித்து, சீனாவுடன் சமாதானம் செய்துகொண்டது. ஏதோ ஒரு தனியார் படகின் கேப்டன் என்று பாராமல், ஒரு சீனக் குடிமகன் என்கிற கண்ணோட்டத்துடன்தான் பிரச்னையை அணுகியது அந்த அரசு.

ரெய்மண்ட் டேவிஸ் ஓர் அமெரிக்கப் பிரஜை. இவர் ஓர் அமெரிக்க ஒற்றர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் கிடையாது. பாகிஸ்தான் சென்றிருந்த இவரை இரண்டு பாகிஸ்தானியர்கள் பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்தவர்கள் என்றும், வரம்புமீறி ரெய்மண்ட் டேவிஸ் துப்பறிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை அந்த இருவரும் பின்தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. சிலர், அந்த இரண்டு பாகிஸ்தானியர்களும் சமூகவிரோதிகள் என்றும், ரெய்மண்ட் டேவிஸின் பர்சையும், கைப்பேசியையும் பறிப்பதற்குத்தான் 
பின்தொடர்ந்தார்கள் என்றும் கூறுகின்றனர்.

ரெய்மண்ட் டேவிஸ் தன்னைப் பின்தொடர்ந்த அந்த இருவரையும் குருவியைச் சுட்டுத் தள்ளுவதுபோல சுட்டுக் கொன்றுவிட்டார். ரெய்மண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலைக் குற்றமும் சாட்டப்பட்டிருக்கிறது. கொலைக் குற்றத்துக்கான எல்லா ஆதாரங்களும் பாகிஸ்தானிடம் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா தனது நாட்டுக் குடிமகன் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்கிறதா என்றால், இல்லை.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் நிதி உதவி முற்றிலுமாக முடக்கப்படும் என்று அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு விட்டன. ரெய்மண்ட் டேவிஸ் விஷயத்தில் பாகிஸ்தான் நடந்து கொள்வதைப் பொறுத்துத்தான் அமெரிக்க - பாகிஸ்தானிய உறவு இருக்கும் என்று அழுத்தம்திருத்தமாகப் 
பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தி விட்டிருக்கிறது அமெரிக்க அரசு.

தனது நாட்டு ஒற்றருக்காக, தனது நாட்டுக் குடிமகனுக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறது அமெரிக்கா. இது அந்த நாட்டின் சுயமரியாதைப் பிரச்னை. அமெரிக்க உதவியால் மட்டுமே உயிர் வாழும் நாடாக இருந்தாலும், கொலையுண்ட தனது நாட்டுக் குடிமக்கள் இருவருக்காகப் போராடுகிறது பாகிஸ்தான். இது பாகிஸ்தானின் தன்மானப் பிரச்னை என்றும், வெளிநாட்டவர் ஒருவர் தங்களது நாட்டில், தங்கள் நாட்டுப் பிரஜைகளை சுட்டுக்கொல்வதைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும் 
கூறுகிறது பாகிஸ்தான்.

முடிவில், அமெரிக்காவிடம் சரணாகதி அடையும் என்றாலும் முடிந்தவரை தனது நாட்டுப் பிரஜைகளுக்காகப் போராடுகிறது பாகிஸ்தான்.

இனி நமது இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள்மீது காரணமே இல்லாமல் நிறவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதுவரை நமது இந்திய மாணவர்களைத் தாக்கிய ஒருவரைக்கூட ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டித்ததாகத் தெரியவில்லை. இந்திய அரசும் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. இதுதான் ஓர் இந்தியக் குடிமகனுக்கு நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு 
தரும் மரியாதை!


அமெரிக்காவில், வனவிலங்குகளின் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கக் கட்டிவிடப்படும் கழுத்துப் பட்டைகளைப்போல, பல லட்சம் ரூபாய் செலவழித்துப் படிக்கப்போன இந்திய மாணவர்களுக்கு "ரேடியோ டாக்' அணிவித்து மகிழ்கிறது அமெரிக்க அரசு. நமது அரசு அதற்கு உரத்த குரலில் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடத் தயங்குகிறது. கேட்டால், அந்நிய முதலீடு பாதிக்கப்படும், அமெரிக்க உறவு சிதைந்துவிடும் என்று வியாக்கியானம் கூறுகிறார்கள். ஓர் இந்தியக் குடிமகனின் தன்மானத்தையும்,  சுயமரியாதையையும் விடவா, அந்நிய முதலீடு பெரியது? இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்?
பக்கத்தில் இருக்கும் "கண்ணீர்த் துளி' அளவிலான நாடு இலங்கை. இந்தியாவையே கேலிசெய்வதுபோல சர்வசாதாரணமாக நமது மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்கிறது அந்நாட்டு ராணுவம். நாம் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கிறோமே தவிர, நமது தன்மான ரத்தம் துடிக்கவில்லை. இதுவே, ஒரு சீன அல்லது அமெரிக்க மீனவருக்கு இலங்கை ராணுவத்தால் அப்படி ஏற்பட்டிருக்குமேயானால், இப்போது  
இலங்கை என்கிற ஒரு தீவே இருந்திருக்காது.
அதெல்லாம் போகட்டும். ஈழப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்காக, இந்தியாவிலிருந்து நமது வரிப்பணத்திலிருந்து, நம்மால் அனுப்பப்பட்ட 500 டிராக்டர்கள், இலங்கை அரசால் தென்னைமர வளர்ச்சிக் கழகத்துக்கும், முந்திரி கார்ப்பரேஷனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 50,000 வீடுகள் கட்ட நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு அளித்த நிதியுதவி வெறும் 1,000 பேருக்குத்தான் சென்றடைந்திருக்கிறது. இதை மேற்பார்வை இடவோ, கேள்வி கேட்கவோ நமது இந்திய அரசுக்குத் துணிவும் இல்லை, மனமும் இல்லை.

"அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ-கிளியே ஊமைச் சனங்களடீ'.


நன்றி: www.dinamani.com -   28 Feb 2011


No comments: