I LOVE TAMIL


Wednesday, August 12, 2015

இயற்கை உரம்

சொல்கிறார்கள் - Dinamalar.com - 12.08.2015

இயற்கை உரம் பயன்படுத்துவோர் தமிழகத்தில் குறைவு! 




 இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் நர்சரிக்கு தேவையான தேங்காய் நார் தட்டுகளை தயாரிக்கும் கே.ரங்கசாமி: பொள்ளாச்சி அருகில் உள்ள கோபி செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவன் நான். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் தோட்டக்கலை துறையில் எம்.எஸ்சி., படித்து முடித்தவுடன், 'ஸ்பிக்' நிறுவனத்தில் வேலை கிடைத்தது.உயிரி தொழில்நுட்ப பிரிவில், 11 ஆண்டுகள் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றேன். ஆந்திர விவசாயிகளுக்கு, 'ஜிங்க் சல்பேட்'டின் தேவை இருப்பது தெரிந்து, தமிழகத்தில் இருந்து அதை வாங்கி, ராயலசீமாவில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.அத்துடன், இயற்கை உரம் தயாரிக்க வேண் டும் என்ற விருப்பம் இருந்து கொண்டே இருந்தது. நபார்டு வங்கியை அணுகி, இயற்கை உரத்திட்ட வரைவை கொடுத்தேன். 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தனர். முதலில், தர்மபுரி மாவட்டம், கரியமங்கலத்தில், 3 ஏக்கர் நிலம் வாங்கி, உர உற்பத்தியை ஆரம்பித்தேன்.நான், 'ஸ்பிக்' நிறுவனத்தில், ஓசூரில் பணிபுரிந்தபோது, அந்தப் பகுதியில் பழ சாகுபடி அதிகம் என்பதால், நர்சரிக்காக தேங்காய் நார் தட்டுகளை உருவாக்கிக் கொடுத்துள்ளேன். தேங்காய் நார் கழிவில் செய்த தட்டில் கன்றுகளை வளர்த்து, வேறு இடத்தில் நடுவர். தேங்காய் நாரின் இலகுத்தன்மையால் வேர் அறுந்து போகாததுடன், நீரின் தேவையும் குறைவாகவே இருக்கும். இதையெல்லாம் அனுபவப்பூர்வமாக அறிந்து இருந்ததால், தேங்காய் நார் தட்டுகள் உற்பத்திக்கும் தனியாக ஒரு யூனிட் போட்டு உள்ளேன். 


தேங்காய் நார் கழிவு, கரும்பு ஆலைக் கழிவு மற்றும் இப்பகுதியில் மாம்பழச் சாறு எடுக்கும் ஆலைகள் அதிகம் என்பதால், அவற்றின் கழிவுகளையும் வாங்கி, இயற்கை உரத்திற்கு பயன்படுத்துகிறேன். கரும்பு ஆலைக் கழிவு தான், இதில் பிரதானமாக இருக்கும். பெரும்பாலும் தோட்டக்கலை பயிர்களுக்கு தான், என்னிடம் இயற்கை உரத்தை வாங்கி, மக்கள் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், மஞ்சள், கரும்பு, வாழை மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களிலும், என் உரம் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு, 500 டன் தேங்காய் நார் கழிவில் செய்த நர்சரி தட்டுகளும், 200 டன் இயற்கை உரமும் விற்கிறேன். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்துவது குறைவு தான். விவசாயத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் உப தொழிலாகவோ, முக்கிய தொழிலாகவோ இதைச் செய்யலாம்.இன்னும் தமிழகத்தில் ஜவ்வரிசி, மரவள்ளிக்கிழங்கு, கோழிப்பண்ணை கழிவுகள், மாம்பழக் கழிவுகள் என்று பல தொழிற்சாலைக் கழிவுகள் கிடைக்கின்றன. இவற்றை எல்லாம் தாராளமாக பயன்படுத்தி, இயற்கை உரங்கள் தயாரிக்கலாம்.
தொடர்புக்கு: 94439 57542

No comments: