I LOVE TAMIL


Friday, September 16, 2016

உயர் ரத்த அழுத்தம் Vs ஆழ்நிலை தியானம்




சில வாழ்வியல் முறை மாற்றங்களினால் (life style changes) ரத்த அழுத்தத்தை மருத்துவமின்றி இயற்கையாகவே கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி, மன அழுத்தமில்லாத நிலை இவை போன்றவை உங்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் புதிய ஆராய்ச்சியொன்றில் முடிவு என்னவென்றால் ஆழ்நிலை தியானம் செய்வதன் மூலமாகவும் உங்கள் ரத்த அழுத்தத்தை சமன்படுத்தலாம்.
ஆழ்நிலை தியானமா அதென்ன? அது மிகவும் எளிமையானதுதான். சரியாக புரிந்து கொண்டு முறையாக பயிற்சி செய்தால் அதை தினமும் செய்யலாம். ஒரு வாகான இருக்கையில் வசதியான அமர்ந்து கண்களை மூடவும். ஆரம்ப கட்டத்தில் மனம் சஞ்சலமடைந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கும். தினமும் பழக பழக மனம் ஓரிடத்தில் நிலைக்கப் பழகிவிடும். இப்படி தினமும் இருபது நிமிடம் அந்நிலையில் இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தில் தினமும் இரண்டு தடவை அமர்ந்தால் சதா உழைத்துக் கொண்டிருக்கும் உடலுக்கும் எதையாவது யோசித்துக் கொண்டேயிருக்கும் புத்திக்கும் சற்று ஓய்வு கிடைக்கும். அந்நிலையில் டெலொமரேஸ் என்கின்ற நொதியின் உற்பத்தி அதிகரிக்கிறது, அதனால் ரத்த அழுத்தம் மட்டுப்படுகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. ரத்த அழுத்தம் அதிகரிப்பதனால் உண்டாகும் இறப்புக்கள் இதனால் தடுக்கப்படும்.
இதற்கு முன்னால் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தியானத்தின் பலன்களாக மன அழுத்தக் குறைவு, வயிற்று வலி நிவாரணம் என பட்டியல் இட்டுள்ளது. ஆழ்நிலை தியானத்தால் ரத்த அழுத்தமும் குறைகிறது என்ற இந்த சமீபத்திய ஆராய்ச்சியை நடத்தியவர் டாக்டர் ராபர்ட் ஷினைடர்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணம் மன அழுத்தம். தவிர தொடர் மன அழுத்தப் பிரச்னைகளால் இதய நோய்கள் வரவும் வாய்ப்புண்டு. இந்த ஆராய்ச்சியில் உயர் ரத்த அழுத்தமுள்ள 48 கறுப்பின அமெரிக்கர்களை சோதனைக்கு உட்படுத்தினார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதில் சரி பாதி நபர்களுக்கு ஆழ்நிலை தியானம் கற்றுக் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு வாழ்நிலை மாற்றங்கள் மட்டும் அறிவுறுத்தப்பட்டது, அதாவது எடை குறைக்கவும், உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும், உடற்பயிற்சி தவறாமல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டனர்.
பதினாறு வாரங்கள் கழித்து அவர்களை வரவழைத்துச் சோதித்த போது இரண்டு குழுவினருக்கும் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. டெலொமரேஸ் நொதியின் உற்பத்தி பெருகியிருந்தது. இதனால் அவர்களது ஆரோக்கியம் மேம்பட்டிருந்தது. இது குறித்து டாக்டர் ஷினைடர் கூறும்போது, ‘இந்த டெலோமரேஸ் நொதியின் உற்பத்தி அதிகரித்திருப்பதால் ரத்த அழுத்தம் குறைவதுடன், மன அழுத்தம், இதய நோய்கள் எல்லாமே கட்டுக்குள் வந்துவிடும். அவை ஒருவருக்கு வரும் முன் இதைத் தவறாமல் கடைபிடித்து தடுத்துவிடலாம். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் சரியான வாழ்க்கை முறைகளாலும் ஆழ்நிலை தியானத்தின் மூலமாகவும் ஒருவர் நல்ல ஆரோக்கியத்தை அடைந்துவிடலாம்’. அடுத்து அதிக நபர்களைப் பங்குபெற செய்து விரிவாக ஆராய உள்ளேன்என்றார்.
வாழ்க்கை முறை மாற்றங்களால் மட்டுமல்லாமல் ஆழ்நிலை தியானம் செய்வதாலும் ரத்த அழுத்தம் குறைவதுடன் டெலோமரேஸ் உற்பத்தி அதிகரிக்கிறது என்பது இந்த ஆராய்ச்சி மூலம் நிரூபணம் ஆகிவிட்டது. மேலும் தியானத்தின் பலன்கள் சில :
கவனம் அதிகரிக்கும்.
எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்
மன நலம் மேம்படும்
வலியைத் தாங்கும் உறுதி கிடைக்கும்
சக்தி நிலை உயரும்
பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும்
மன அழுத்தம் மறையும்.
வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்
சுவாசம் சீராகும்.
இதயம் பலப்படும்
புத்தி கூர்மையடையும்.
தியானம் மன மற்றும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்று புரிகிறது அல்லவா? தியானம் செய்ய முடிவெடுத்து விட்டீர்கள், ஆனால் எப்படி துவங்குவது, என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கலாம். புத்தகங்கள் படித்து ஓரளவு புரிந்து கொள்ளலாம், குறுந்தகடுகள், காணொலிகள் மூலமும் பயிலலாம். ஆனால் தியான வகுப்புக்குச் சென்று கற்றுக் கொள்வதே நல்லது.
மன அமைதியுடன் மகிழ்ச்சியாக வாழவே நாம் விரும்புவோம். அதற்கு ஆழ்நிலை தியானம் ஒன்றே சிறந்த வழி. எனவே நன்றே செய்க அதை இன்றே செய்க. வாழ்க வளமுடன்!

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2015/dec/16/B2-1241476.html
16th December 2015 12:19 PM

No comments: