சென்னை சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் தேவை!
By ஆர்.ஜி.ஜெகதீஷ் |
Published on : 20th December 2016 01:06 PM | அ+அ அ- |
ஆனால், பல்வேறு காரணங்களால் மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதால், சென்னையில் இப்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வர்தா புயலுக்கு முன்பாக 3.75 மரங்கள் இருந்ததாகவும், வர்தா புயல் தாக்கத்துக்கு பின் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே உள்ளதாகவும் தனியார் தொண்டு அமைப்பின் கணக்கெடுப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சென்னை மாநகரில் சுவாசக் கோளாறுகள், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, கண் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜி.பி.எஸ். கணக்கெடுப்பு: இந்தியாவின் அனைத்து முக்கிய மாநகரங்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மரங்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வை "ட்ரீ பேங்க்' தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து அண்மையில் மேற்கொண்டன.
மக்கள் நெருக்கத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு மாநகரிலும் எத்தனை மரங்கள் இருக்கவேண்டும் என்பதைக் கணக்கிடவும், குறைவாக உள்ள மாநகரங்களில் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இந்த ஆய்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகரில் மக்கள் நெருக்கத்துக்கும், மரங்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்தது.
அதாவது, சென்னை மாநகரில் 65 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இத்தனை மக்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சுத்தமான காற்று கிடைக்க, 15 லட்சம் மரங்கள் இருப்பது அவசியம். ஆனால், இப்போது இருப்பதோ வெறும் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்ததற்கான காரணம் என்ன? பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 10 லட்சம் மரங்கள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிறகு, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மேம்பாலப் பணி, மெட்ரோ ரயில் பணி, சாலை அகலப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்படியாக மரங்கள் வெட்டப்பட்டதன் காரணமாகவும், அண்மையில் தாக்கிய வர்தா புயலின் காரணமாகவும் இப்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே சென்னை மாநகரில் எஞ்சியிருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரங்கசாமி கூறியது:
ஒரு மரம் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் வாழ் நாளுக்குத் தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. அதாவது, ஒரு மரம் 118 கிலோ அளவிலான பிராண வாயுவை நாள்தோறும் வெளியிடுகிறது.
சென்னையைப் பொருத்தவரை இப்போது 20 வகையான மரங்கள் உள்ளன. பல்வேறு நகரமயமாக்கல் பணிகளுக்காக வெட்டப்பட்டதன் காரணமாக, 19,865 கிலோ ஆக்ஸிஜனை நாம் இழக்க வேண்டியச் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால், 104 பேர் தங்கள் வாழ்நாள் முழுவதற்குமான ஆக்ஸிஜனை இழக்க நேரிடும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த அபாயத்தை உணர்ந்து வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றார் அவர்.
மரக் கழிவுகளை அப்புறப்படுத்த ஒரு வாரமாகும்..!
சென்னையில் வர்தா புயலால் விழுந்த மரங்களையும், அதன் குப்பைகளையும் அகற்ற இன்னும் ஒரு வாரமாகும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியின் கணக்குப்படி வர்தா புயலால் விழுந்த 17,133 மரங்களில் இதுவரை 12,135 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களை அகற்றும் பணியில் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சியின் 19,411 பணியாளர்கள், பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3,200 பணியாளர்கள் என மொத்தம் 22,611 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 743 லாரிகள், 416 ஜே.சி.பி. வாகனங்கள், 560 மர அறுவை இயந்திரங்களைக் கொண்டு மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வீடுகள், தனியார் அலுவலகங்கள், பண்ணைகளில் விழுந்திருப்பவை கணக்கில் வராது. மேலும், மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தனியாரும் ஈடுபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மரங்கள் மற்றும் மரக்கழிவுகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள 54 இடங்களில் கொட்டலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் மரங்களின் வகைகள்!
1. தென்னைமரம்
2. புளிய மரம்
3. மா
4. வேலி காத்தான்
5. சீமை வேலிகாத்தான்
6. செம்மயிற்கொன்றை (குல்மொஹர்)
7. மழை மரம்
8. வேம்பு
9. சாம்பல்
10. செப்புநெற்று
11. இந்தியக் கடற்கரை மரம்
12. கருவேலம்
13. மஸ்து மரம்
14. வளைகுடா மரம்
15. எலுமிச்சை
16. கொய்யா
17. அரசு
18. ஆல்
ஏற்ற மரங்கள் எவை?
வர்தா புயலின் தாக்குதலில் சென்னையில் வளர்க்கப்பட்ட பலவிதமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் பல மரங்கள் சென்னை மண்ணின் தன்மைக்கு ஒவ்வாத மரங்களாகும். இந்தக் கடும் புயலிலும் நம்நாட்டு மரங்கள் இன்னும் கம்பீரத்துடன் செழித்து வளர்ந்து நிற்கின்றன. நிழல் எனும் தன்னார்வ மரம் வளர்ப்பு நிறுவனம் சென்னை மாநகர் கடலோரப் பகுதி என்பதால் அதற்கேற்ப 16 விதமான மரங்களை பட்டியலிட்டுள்ளது.
அவை வருமாறு:
1. புன்னை
2. புங்கை
3. பூவரச மரம்
4. புரசை மரம்
5. நுணா
6. நாட்டு பாதாம்
7. வேப்ப மரம்
8. காட்டு பூவரசம்
9. வால்சுரா
10. சமுத்திரப்பழம்
11. வன்னி
12. குட்டிப்பலா
13. துரிஞ்சி
14. வேப்பாலை
15. வென்னாங்கு அல்லது தடா
16. கல்யாண முருங்கை ஆகியவையாகும்.
Thanks: www.dinamani.com - 20.12.2016