I LOVE TAMIL


Monday, December 5, 2016

மண்ணானாலும் நாம் பாதுகாப்போம்!

1982லிருந்து 2007 வரை 14 மில்லியன் ஏக்கர் விதைநிலம் 'நாட்டின் வளர்ச்சி' என்னும் பார்வையில் தொலைந்து போனது. வளமான மண் அதிகளவு நீரினை சேமித்து வைக்கும்.

ஒரு ஏக்கரில் உள்ள 6 இன்ச் அளவு மண்ணில் உள்ள ஒரு சதவீத கரிம தாதுக்கள், ஒரு லட்சம் லிட்டர் அளவு நீரினை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நாம் நமது பூமிக்கு அதிகளவு தீங்கு விளைவித்து விட்டோம். அதை சரிசெய்யும் நிலையில் இப்போது உள்ளோம். ஒரு நாடு தனது மண் வளத்தை அழித்து விட்டால், அது அந்த நாட்டினையே அழிப்பதற்கு சமம் என்று சொன்ன அமெரிக்காவின் 32வது அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் கூற்று இப்பொழுது உண்மையாகிறது.

புயல் மற்றும் வெள்ளத்திற்கு காரணமான மண் அரிப்பு தடுக்கப்படவேண்டும் என அவர் தன் நாட்டின் அனைத்து கவர்னர்களுக்கும் 1937 பிப்., 26ம் நாள் கடிதம் எழுதினார். மண்ணே ஊட்டச்சத்து 95 சதவீத உணவானது நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவின் ஊட்டச்சத்து மதிப்பு, மண்ணின் வளத்தை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

மண் மாதிரியில் சராசரியாக 45 சதவீதம் தாது உப்புகளும், 25 சதவீதம் நீர், 25 சதவீதம் காற்று மற்றும் 5 சதவீதம் கரிமப் பொருட்களும் உள்ளன. மண்ணில் உள்ள ஒவ்வொரு கிராம் கரிமக் கார்பனானது, 8 கிராம் நீரினை தன்னகத்தே தேக்கி வைக்கும் திறன் உள்ளது. உலகினுடைய 10 சதவீத கார்பன் வெளியேற்றத்தை மண் தன்னிடையே தக்க வைத்துள்ளது.

மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் பிற உயிரிகளின் கூட்டு முயற்சியினால் மண் வளப்படுத்தப்படுகிறது.உயிரிகளினால் நீர் மண்ணில் செல்வதற்கும், தாது மற்றும் ஊட்டச்சத்து சுழற்சிக்கும் பயன்படுகிறது. பூஞ்சை, பாக்டீரியா மற்றும் மண்புழுக்கள் மண்ணில் உள்ள கரிமப் பொருட்களை வேதிமாற்றத்தினால் ஊட்டச்சத்து பொருட்களாக மறுசுழற்சி செய்து மண்ணிற்கு கொண்டுவருகிறது.

பருப்பே மண்வள ஆதாரம்

உலக மண் தினம் கொண்டாடப்படும் இந்நாளில், இந்த ஆண்டு, மண் மற்றும் பருப்பு வகைகள் கூட்டால் மண் அரிப்பை தடுக்கலாம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளது. ஆதலால் பருப்பு வகைகளை பயிரிடுவதன் மூலம், மண்ணின் வளத்தை நாம் திரும்பப் பெறலாம் எனவும் மண் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் பருப்பு வகைகள், உலர் விதைகள், உலர்ந்த பீன்ஸ் பருப்பு மற்றும்பட்டாணி பெரும்பாலும் அறியப்படும் மற்றும் பயன்படுத்தும் பருப்பு வகைகள் ஆகும்.

இந்த பருப்பு வகைகள், அதிக சத்துக்கள் நிரம்பிய மற்றும் ஒரு உயர் புரதம் அடங்கிய அத்தியாவசிய பயிர்கள். இறைச்சி மற்றும் பால் உணவை உண்ணாத பிரதேசங்களில், மனிதனுக்கு தேவையான புரதத்தினை கொடுக்கக்கூடியது. பருப்பு வகைகளில் கொழுப்பு குறைந்த மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும்.

இந்த குணங்களினால்தான் நீரிழிவு மற்றும் இருதய மேலாண்மைக்கு இந்த பருப்பு வகைகள் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. பயறு வகைகள் உடல் பருமனை குறைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிலம் வளமாகும்

விவசாயிகளுக்கும் பருப்பு வகைகள் ஒரு முக்கியமான பயறு வகையாகும். ஏனெனில் அவைகளை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் ஏற்றது. விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குகிறது. பருப்பு வகைகள் இழைச்சத்து பண்புகளை, மண்ணில் நிலைநிறுத்தி, விவசாய நிலத்தை வளப்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க
செய்கிறது.

இதனை ஊடுபயிராக பயன்படுத்துவதால், விவசாயிகள் விவசாய பல்லுயிர் மற்றும் மண் பல்
லுயிர்களை ஊக்குவிக்க முடியும். பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்க முடியும்.பருப்பு வகைகள் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதிலும், செயற்கையான உரங்களை நம்பி
யிருக்க வேண்டிய நிலையை குறைப்பதிலும் மிகப் பெரிய பங்காற்றுகிறது.

இந்த செயற்கை உரங்கள் உற்பத்தி சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். எனினும் பருப்பு வகைகள் இயற்கையாக மண்ணில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது மற்றும் மண்ணில் உள்ள பாஸ்பரஸ் சத்தினை விடுவித்து செயற்கை உரப்பயன்பாட்டினை குறைக்கிறது.

உணவு, வெப்ப அச்சுறுத்தல்

மண் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உணவு உற்பத்திக்கும், வெப்பநிலை மாற்றத்திற்கும் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளன. உணவு மற்றும் விவசாய அமைப்பு கூற்றின்படி, பூமியின் மண் கிட்டத்தட்ட 33 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கிறது. 40 சதவீதம் மண் சிதைந்த பகுதியானது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பிரதேசங்கள் ஆகும்.

அதே நேரத்தில் நமது பூமியின் மக்கட்தொகையானது இப்போதுள்ள 7 பில்லியன்களிலிருந்து, 9 பில்லியன்களாக 2050ல் உயரும் போது 70 சதவீதம் உணவு உற்பத்தி தேவைப்படுகிறது. இதற்கான தீர்வாக மக்களின் பிரதான உணவாகவும், குறிப்பிடத்தக்க சத்து நிறைந்ததாகவும் பயறு வகைகள் உள்ளன.

பல்வேறு வழிகளில் மண்ணின் வளத்தினை மேம்படுத்தி, மண் உயிர்மத்தினையும், மண் அமைப்பினையும் மண்ணில் வாழும் பல்லுயிர்களையும் பாதுகாக்கிறது.வளமான மண் மற்றும் பயறு வகைகள் மூலம் மட்டும்தான் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2030 குறிக்கோளான, உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு கொடுப்பதை செயல்படுத்தமுடியும்.

காலம் சென்ற தாய்லாந்து அரசர் பூமிபோல் அடல்தேஜ், என்ற மண் விஞ்ஞானியின் நினைவாக தான் அவரது பிறந்த தினம் உலக மண் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஏனெனில் அவர் நிலையான மண் மேலாண்மைக்காக போராடினார். இந்த உலக மண் நாள், சர்வதேச அளவில், மனித வாழ்க்கைக்கு முக்கியப் பங்காற்றும் முகமாக, மண்ணினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

'வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்'
என்ற அவ்வையார் கூற்றுப்படி, விவசாய நிலத்திற்கு தேவையான மண்ணை பாதுகாக்க, இந்நாளில் உறுதியேற்போம்.

- பேராசிரியர் எம். ராஜேஷ்
மதுரை. 94433 94233

Thanks - www.dinamalar.com - 05.12.2016

No comments: