I LOVE TAMIL


Saturday, January 18, 2020

Money

#சுட்டது 

#நவீன_பொருளாதாரம்_vs_தற்சார்பு_பொருளாதாரம்

தற்சார்பு பொருளாதாரத்தைப பற்றி பேசுவதற்கு முன்னால் நிறைய அடிப்படை உண்மைகளை நாம் திரும்ப ஞாபகப் படுத்திக்கொள்ளல் வேண்டும். நான் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நாம் மறந்த வாழ்வியலை வழிமுறையை கோடிட்டு காட்டப்போகிறேன். அவ்வளவே. முதலில் ஆசைக்கும் அத்தியாவசிய தேவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் யோசிக்க வேண்டும். பிறகுதான் தேவையானவை மட்டும் எவை என்ற புரிதல் கிடைக்கும்.

பணப்பரிமாற்றம் முறையை முதலில் மெல்ல மெல்ல தவிற்க வேண்டும். குறைந்தபட்சம் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள்.

1.வங்கியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு குறைந்த வட்டியே தருவார்கள். உங்கள் பணத்தை ஊராருக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி பெருவார்கள்‌. இந்த வட்டி வித்தியாசம்தான் வங்கிக்கு லாபம். வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் கடனை திருப்பித் தரவேண்டுமானால் அவர்களின் தொழிலில் லாபத்தைக் கூட்ட வேண்டும், அதாவது அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் (காய்கறிகள், இறைச்சி, பழவகைகள், போன்றவை) விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு விலைவாசி உயர்வதற்கு பிள்ளையார் சுழியும் நீங்களே போடுகிறீர்கள்‌. இடையில் நோகாமல் நொங்கு தின்பது வங்கி. நீங்கள் மாதந்தோறும் வங்கியில் வாங்கும் வட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு சரியாக போய்விடும். நீங்களும் வங்கியில் பணம் டெபாசிட் பண்ணாமல் இருந்திருந்தால் இந்த விலைவாசி ஏற்றத்தை தாக்குபிடித்திருக்க முடியாது என்று நம்பிவிடுவீர்கள். பாவம் அந்த விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணமே வங்கிதான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

2.வங்கி முறை முதலில் சரியானதா ? நிச்சயம் இல்லை. உதாரணமாக ரிசர்வ் வங்கி 100 கோடி ரூபாய் அச்சடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். 10 தேசிய வங்கிகளுக்கு தலா 10 கோடி கடனாக தருகிறது. அந்த பத்து வங்கிகளும் இரண்டு ஆண்டுகள் கழித்து வட்டியுடன் 11 கோடியாக தரவேண்டும். பத்து வங்கிகளும் 11 கோடி தந்தால் மொத்தம் 110 கோடி. அச்சடிக்கப்பட்ட மொத்த தொகையே 100 கோடிதான். எப்படி 110 கோடி வரும்? என்ன நடக்குமென்றால், ஒன்பது வங்கிகள் பதினொரு கோடியை மக்களிடம் பெற்று தரும். மீதி ஒரு வங்கி ஒரு கோடி ரூபாய் வட்டியை மட்டும் கட்டிவிட்டு தனது கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மக்களின் தலையில் சுமையை வைத்துவிடும். அந்த இல்லாத பத்து கோடிக்குதான் ஊரே அடித்துக் கொள்ளும். இதன் பக்க விளைவுகளே சொத்துக்களை ஏலத்தில் விடுவது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகள். குழப்பமாக இருக்கிறதா? எளிதில் புரிந்துவிட்டால் வங்கியை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்களா? அதற்குத்தான் இந்த தெளிவற்ற தன்மையை வங்கிகள் பின்பறறுகின்றன.

3.பணத்தை என்னதான் செய்வது ? வங்கியில் போடுவதே பாதுகாப்பானது என்று உங்களை நம்ப வைத்திருப்பார்கள். அம்பானியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது வங்கிக் கணக்கில் கடன்தான் இருக்கும். ஏனெனில் லாபத்தை பண வடிவில் சேத்து வைப்பது முட்டாள்தனம். தொழில் வடிவத்தில் சேத்து வைப்பதே நலம். ஏனென்றால் பணத்தை மூட்டைகட்டி வைப்பதால் அது வளராது. திட்டமிட்டு ஒரு தொழில் தொடங்குங்கள். முதலீடு செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ ஒரு தொழிலில் வெற்றிபெருவதற்கான யுக்தி உங்களின் கைகளில் இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சுற்றத்தார் சிலரிடம் நல்ல தொழில் சிந்தனைகள் யோசனைகள் இருக்கும் அவரிடம் மூதலீடு செய்யுங்கள், கடன் வழங்குங்கள். ஏனென்றால் 501 என கலாய் வாங்கின ரிலயன்ஸ்சின் பாடமே ஜியோவின் வெற்றிக்கு வித்திட்டது. வங்கியில் கட்டுக்கட்டாக பணம் டெப்பாசிட் செய்வது உங்கள் வாழ்க்கை சக்கரத்தில் நீங்களே காற்றை இறக்கிக்கொள்வதற்கு சமம். தனிநபர் வளர்ச்சியை மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியையும் இது தடுக்கும்.

இப்படி மெல்ல மெல்ல உங்களின் சொத்துக்களை, பொருளாதார சுதந்திரத்தை உங்களிடம் இருந்து பறித்து ஏலத்தில் விட்டும், விலைவாசியை உயர்த்தியும், வளர்ச்சியை தடுத்தும் ஊளை சதைப்போட்டு வளரும் வங்கிகளின் துரித திருட்டு இதுதான்.

உணவு உடை இருப்பிடம் இது மூன்றும் அத்தியாவசியம் தான். ஆனால் நம் வாழ்க்கையை உற்று பார்த்தால் தெரியும், அதில் ஆடம்பர பொருட்களே அதிகம் என்று.

இன்னொரு முக்கியமான குறிப்பு, கீழே சொல்லியிருக்கும் ஒவ்வொரு செயலையும் முயற்சிக்க சில குறிப்பிட்ட நேரம் செலவாகும். (யோசித்துப் புரிந்து கொள்ளவே நிறைய நேரம் ஆகலாம்). எனக்கு time இல்ல. Office வேல பாக்கவும், வீட்ட கவனிக்கவுமே time சரியா இருக்குன்னு நொண்டி சாக்கு சொல்பவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புறேன். இதில்தான் தற்சார்பு பொருளாதாரத்திற்கான தேவை என்ன என்பதும் அடங்கியிருக்கு.

வேலைக்கு செல்வதற்கு நாம் பிறக்கவில்லை, வாழ்வதற்கு பிறந்திருக்கோம். வாழ்வது என்றால் உலகில் உள்ள அற்புதங்களை ஐம்புலன்களால் அனுபவிப்பது.

வேலைக்கு செல்வதே வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குதான். அதாவது வாங்குற சம்பளத்தில் என்ன வாங்குவீர்கள் ? வீட்டில் வாழ தேவையான பொருட்களைத்தானே வாங்குவீர்கள். அதில் பல உள்ளரசியல் இருக்கின்றன. அதை கவனியுங்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு உங்கள் மூலமாக கிடைக்கும் லாபம் கண்டிப்பாக உங்களின் சம்பளத்தைவிட சிலபல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். இல்லாவிடில் உங்களை வேலையில் வைத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக உங்கள் சம்பளம் பத்தாயிரம் என்று வைத்துக் கொள்வோம். உங்களால் உங்களின் கம்பெனிக்கு குறைந்தது முப்பதாயிரம் லாபம் இருக்கும். இல்லை முப்பதாயிரம் மிச்சப்படும். நீங்கள் எட்டு மணி நேரம் உழைப்பதில் உங்களுக்கு ஊதியமாக ஒரு நறுக்கு மட்டும் தரப்படும். மீதி முதலாளிக்கு லாபம். இப்போது அந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எதை வாங்கினாலும் அதில் பொருளின் மதிப்புடன் கூடுதலாக லாபம் வரி பேக்கிங் என மொத்தமும் உங்கள் தலையிலே விடியும். பத்தாயிரத்தில் நீங்கள் வாங்கிய பொருட்களின் மதிப்பும் பெற்ற சேவையின் மதிப்பும் கூட்டினால் தோராயமாக நாலாயிரத்தில் அடங்கிவிடும். மீதி ஆறாயிரமும் மற்றவர்களின் லாபத்திற்கும் அரசாங்க லாபத்திற்கும் சென்றுவிடும். எனவேதான், வேலைக்கு போய் சம்பாரித்து செட்டில் ஆனவர்கள் யாரும் இலர். மேலும் அன்பளிப்பாக உடல்நலக் குறைவு, மன அழுத்தம், டாக்டர் செலவு, பணப்பற்றாகுறை, கடன் தொல்லை என அத்தனை உயிர் கொல்லிகளும் வாரி வழங்கப்படும்.

இப்போது இப்படி வைத்துக் கொள்வோம், 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் சொந்த மற்றும் இதர வேலைகள் என்க. இந்த 8 மணி நேரம் வேலை பார்ப்பதை தவிர்த்து, உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்ய உழைத்தீர்களானால் ? உங்கள் உழைப்பின் பலன் உங்களுக்கே கிடைக்கும். ஏதோ பௌர்ணமி பிதற்றல் போல் தோன்றும்.

சற்று நிதானமாக நம் தாத்தா பாட்டி காலத்தை ஞாபகப் படுத்திப் பாருங்கள். அவர்கள் வேலை விவசாயமாக இருக்கும். சொந்த நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து விற்றும் உண்டும் வாழ்ந்தார்கள். அவர்களின் இதர தேவைகளுக்காக மட்டும் நெல் விற்ற பணத்தைப் பயன்படுத்துவார்கள். உழைப்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். லாபமும் கிடைக்கும். மருத்துவ செலவு என்பதே இருந்திருக்காது. “விவசாயிகளே தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுறாங்க, இதுல நம்மல போய் விவசாயம் பண்ண சொல்லுறானே”னு பயப்படாதீர்கள். எல்லோரையும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்க சொல்லவில்லை. சிலர் உணவு பொருட்கள் சிலவற்றை உற்பத்தி செய்யுங்கள். சிலர் உடைகளை உற்பத்தி செய்யுங்கள். சிலர் இருப்பிடம் கட்டிக் கொடுங்கள். இப்படி ஒரு ஊர் மக்கள் தங்கள் தேவைகளை தங்கள் ஊர் மக்களைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும் இதை நடைமுறைப்படுத்துவதில் உளவியல் பிரச்சினைகளும் உண்டு. என்னவென்றால், மக்களுக்கு சுகமான வாழ்க்கை என்றால் பீச்சோர பங்களாவில், swimming poolக்கு பக்கத்தில் நீட்டமான மரப்படுக்கையில் படுத்துக் கொண்டு நான்கைந்து வேலையாட்களை அடிமைகளைப் போல் ஏவியேவி வேலை வாங்குவதும், தேவையோ இல்லையோ மனதை வசீகரிக்கும் எல்லா டி.நகர் குப்பைகளையும் வாரந்தோரும் தன் வீட்டில் குவித்துக் கொள்வதும், பார்ப்பவரை பொறாமைப் பட வைக்கும் அளவிற்கு மிடுக்காய் உடையணிந்து கொள்வதுமாக எல்லாமுமே TV விளம்பரங்களில் வரும் காட்சிகள்தான். அந்த தவறான சித்தரிப்புகளை உங்கள் கற்பனையில் இருந்து நீக்குங்கள். அதில் வரும் முதலாளியாக நீங்கள் உங்களை நினைப்பீர்கள். ஆனால், சமூகத்தைக் கட்டுபடுத்தக் கூடியவர்கள் உங்களை அந்த வேலை ஆட்களாகவே வைத்திருப்பார்கள்.

பிறகு ஏன் அந்த ஆசையை காட்டுகிறார்கள் என்றால், அதன் விளைவாகவே உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு வந்தே தீருவீர்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சொகுசான வாழ்வை அனுபவிக்கலாம் என்று உங்களை நம்பவைத்து ஆசைப்பட வைப்பார்கள். “நீ நிம்மதியாய் இல்லை, மோசமான கஷ்டமான வாழ்வை அனுபவித்து வருகிறாய்” என்று மூளைச் சலவை செய்வார்கள். இப்படி மந்தை போன்ற சமூகத்தை பாத்திக்கட்டி திசைதிருப்பும் யுக்தி சில multi millionaireகளின் அதிகார மேசைக்கு மட்டுமே தெரியும். இந்த அதிபயங்கர அதிபுத்திசாலிகளின் சிலந்தி வலையில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான, நல்ல அனுபவகரமான வாழ்வை மேற்கொள்ளவே இந்த தற்சார்பு பொருளாதாரம்.

தோற்றம் அல்லது Image. இந்த சமூகத்தில் ஒரு தனிநபரின் தோற்றமே அவரை யாரென நிர்ணயிக்கிறது. இதன் விரிவான விளக்கங்களை புரிந்து கொள்ள Halo Effect மற்றும் Horn Effect பற்றி படியுங்கள். கருத்தவன்லாம் கலீஜு, செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்டி ஜீவா ஓடும் ? போன்ற எண்ணங்களுக்கு உளவியல் ரீதியாக பின்னாலிருக்கும் உண்மையை உணருங்கள்.

சமூகம் எதிர்பார்க்கும் அல்லது அங்கீகரிக்கும் image ஐ தூக்கி எறியுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தாற்போல் நீங்கள் மாற்றலாம். ஆனால் அனைவரும் ஒன்று திரள வேண்டும். குறைந்தது நூறு குடும்பங்கள் பண்ட மாற்று முறையையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் புரிந்து செயல்பட்டால் போதும், அவர்களின் வளர்ச்சி, வாழ்க்கை தரத்தை பார்க்கும் அனைவரும் தற்சார்பு பொருளாதாரத்தை பின்பற்றுவார்கள்.

வீட்டில் சமைப்பதற்குத் தேவையான மூலப் பொருட்கள் தோராயமா நூறு இருக்கு என்று கொள்வோம். இதில் எவையெல்லாம் localல் கிடைக்கும் என்று பாருங்கள். ஏறத்தாழ எண்பது பொருட்கள் இருக்கும். பல பொருட்கள் plastic packet ல் அடைத்து பெரிய brandன் பெயர் போட்டு ஜிகுஜிகுவென்று இருக்கும். அவற்றை வாங்காதீர்கள். அதே பொருட்கள் localல் அதைவிடவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதையே வாங்குங்கள். மீதி இருக்கும் இருபது பொருட்களும் நீங்களே உற்பத்தி செய்ய முடியும்.

உதாரணமாக மிளகாய்த்தூள் வேண்டும் என்றால் நீங்களே வரமிளகாய் மல்லி எல்லாம் வாங்கி வீட்டில் காயவைத்து அருகில் இருக்கும் மாவு அரைக்கும் கடைகளில் அரைத்து மிளகாய் தூள் தயாரிக்கலாம். இதைப் போலவே ஒவ்வொரு பொருளையும் trial and error முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். முயற்சியுங்கள் பிறகு உங்களுக்கே அது எளிதாகி விடும். ஒரே நாளில் இருந்து எல்லாவற்றையும் தயாரிக்க முயற்சிக்க வேண்டாம். ஒவ்வொரு பொருளாக தயாரிக்க தொடங்குங்கள். ஒரே வருடத்தில் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களில் எதுவும் பெரிய brandன் பொருட்களாக இருக்காது. அப்போது மாத budgetல் ஆயிரம் ரூபாய் மிச்சப் பட்டிருக்கும். மருத்துவ செலவு எதிர்காலத்தில் அறவே தவிர்க்கப்படும்.

இவை அனைத்தும் மூலப் பொருட்கள் அல்ல, உப பொருட்களே. நிலம் இருப்பவர்களின் அடுத்த நகர்வு விளைச்சலை நோக்கி இருக்க வேண்டும். சொந்த விவசாய நிலம் அற்றவர்கள் மற்ற அத்தியாவசிய தேவைகளான உடை மற்றும் இருப்பிடத்தின் கூறுகளை கவனியுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு jeans ஒரு சட்டை கூட நல்லதாக வாங்கிவிட முடியாது. ஆனால் அதே ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் எத்தனை மணி நேரம் உழைக்க வேணடும் என்பதை கணக்கிடுங்கள். ஏறத்தாழ பதினாறு மணி நேரம் உழைப்பீர்கள். இப்போது ஒரு வேட்டி ஒரு சட்டையின் மெட்டீரியல் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்களே சட்டையை தையுங்கள். அதிக பட்சம் நான்கு மணி நேர உழைப்பில் உங்களுக்கான சட்டையை நீங்களே தயாரித்துவிடலாம். முதலில் கோனல் மானலாகத்தான் வரும், பத்து சட்டை தைத்த பிறகு, கடைகடையாக தேடி வாங்கும் சட்டையை கடகடவென்று நீங்களே தைக்கலாம். சிரிப்பாக வரலாம். ஏனென்றால் பல வருடம் அறியாமையோடே இச்சமூகத்தில் வாழ்ந்துவிட்டு ஒரே நாளில் நன்மை தரும் சிந்தனைகளை உங்களுக்கு உள்ளில் இருந்து வெளிப்படுத்தினாலே சிரிப்பாகத்தான் இருக்கும். இந்த தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறையில் உள்ள நன்மைகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

இப்படி ஒவ்வொரு பொருளாக தயாரித்து, உங்கள் சமூகத்திற்கான தேவையை நீங்களே கட்டமைப்பீர்களானால், ஐந்து முதல் பத்து வருடங்களில் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியில் உங்களுக்கு தயாரிக்க ஏதுவான பொருள் எது என்பதை கண்டறிந்து, அதை சிறந்த முறையில் தயாரித்து சந்தைபடுத்தக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பீர்கள். சமூக வளர்ச்சியில் உங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதிருக்கும்.

தெளிந்த நல்லறிவு பெற தடையாக இருக்கும் போதை என்ன என்பதை அறியுங்கள்.

“வெளிநாடு போய் சம்பாரிசசிட்டு ஊருல வந்து செட்டில் ஆகலாம்.”

“நல்ல ஐ.டி. கம்பெனில சேந்து லட்ச லட்சமா சம்பாரிச்சு தண்ணியிருக்க காடா பாத்து வளைச்சுபோட்டு இயற்கை விவசாயம் பண்ணலாம்” போன்ற அதிமேதாவித்தனமான யோசனை கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு,

சந்தன மரம், செம்மரக் கட்டை, ஐம்பொன் சிலைகள் மட்டும் மதிப்புள்ளவை அல்ல. உங்களது மூலையும் தான். பிற நாட்டின் வளர்ச்சிக்காக உன்னுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு விட்டு வருடங்கள் கழித்து திரும்பிப்பார்க்கையில் உன் நாடு அங்கேயே நின்றிருக்கும். நீ வாழப் போகும் சமூகத்திற்காக நீ பாடுபடு. உன் குடும்பம் வம்சம் சமூகம் என எல்லாமும் செழிக்கும். அயல் நாட்டுக்கு மனித வளத்தை கடத்துவதும் தார்மீக ரீதியில் குற்றமே. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏன் இதை கண்டுக்கொள்ளவில்லையெனில் வரி வருவாய் அதிகம். அதாவது லஞ்சம் பெற்றுக் கொண்டு உன் திறனை நாடு கடத்துவதாகும். மேலும் பல லட்சங்களோ சில கோடிகளோ சேமித்து சிட்டிக்கு தூரத்தில் அமைதியான சூழலில் காடு வீடு பங்களா என செட்டில் ஆகும்போது நீங்கள் வீனடித்த மறைநீரை, வளத்தை சமன் செய்வதற்கு உங்களின் மீதி காலம் போதாது. உங்களின் அடுத்தடுத்த சந்ததிக்கு எதுவும் மிஞ்சாது.

மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.
From FB

No comments: