I LOVE TAMIL


Saturday, February 22, 2020

தமிழ் தாய் மொழி


World Language Day _ February 21

*உலகத் தாய்மொழி தினம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.*

1. முடிந்தவரை ஆங்கிலச் சொல் தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்களை நீங்களே உருவாக்குங்கள். அது ஓரளவுக்குத்தான் பொருந்தும் என்றாலும் பழுதில்லை. எல்லாச் சொற்களும் நூறு விழுக்காடு பொருந்தி வரவேண்டியதில்லை.

2. வடமொழி உள்ளிட்ட பிறமொழிச் சொற்களை இயன்றவரை தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். தொடக்கத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் மிகவும் இயல்பாகிவிடும்.

3. முடிந்தவரை நல்ல தமிழில் பிழையில்லாமல் எழுதுங்கள். பிழை நேர்ந்துவிடுமே என்ற அச்சத்தால் எழுதாமலும் இருந்துவிடாதீர்கள். எழுதிக்கொண்டே இருக்கையில்தான் நம்முடைய பிழைகள் தெரியவரும். அவற்றினைக் கண்டறிந்து நீக்கிக் கொள்ளலாம். துணிந்து எழுதுவதும் பிறகு உரிய பிழைகளைக் களைவதும் இரட்டைச் செயல்பாடுகள்.

4. பொதுத்தமிழ்ப் பேச்சுமுறைக்கு வாராமல் முடிந்தவரை உங்களுடைய வட்டார வழக்கில் பேசிக்கொண்டிருங்கள். அதனை இழிவாகக் கருதாதீர்கள், பெருமையாகக் கருதுங்கள். வட்டார வழக்கில் இன்னும் கண்டறியப்படாத அருஞ்சொற்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வட்டார வழக்கினை வாழவைப்பது மொழியின் ஒரு கிளையை வாழவைப்பதாகும்.

5. அறிவிப்புப் பலகை, விளம்பரம் என எங்கேனும் எழுதி அறிவிக்க வேண்டும் என்றால் இயன்றவரைக்கும் தமிழில் எழுதுங்கள். ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்றாலும் கீழே தமிழிலும் எழுதி வையுங்கள். தமிழில் எழுதத் தேவையில்லை என்றாலும் எழுதுங்கள்.

6. பிள்ளைகளுக்கு, நிறுவனங்களுக்கு எனப் பெயரிட வேண்டிய நிலைமைகள் அனைத்திலும் நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டுங்கள். நாகரிகம், பிறர்நகைப்பு, பொதுப்போக்கு என எவற்றுக்கும் அஞ்சாமல் தமிழ்ப்பெயர்களையே ஆளுங்கள்.

7. பிள்ளைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியைத் தேர்ந்தெடுங்கள். இன்றைய சூழலில் அது இயலவில்லை என்றால் தமிழில் வெளிவரும் இதழ்கள், நூல்கள் என அவர்கள் படிப்பதற்கு வாங்கிக்கொடுங்கள். ஆங்கிலத்தில் கல்வி இருப்பினும் அன்றாடம் ஐந்தாறு பக்கங்களையேனும் நம் பிள்ளைகள் தமிழில் படித்து வளரட்டும்.

8. தமிழில் நன்கு செயல்படுகின்ற இணையத்தளங்கள், தமிழ்க் காணொளிகள், சமூக ஊடகவியலாளர்களின் பக்கங்கள் ஆகியனவற்றைத் தொடர்ந்து பாருங்கள், படியுங்கள். தமிழில் சிறப்பாகச் செயல்படுகின்ற ஒரே காரணத்திற்காக அவற்றுக்குக் கேள்வியின்றி விருப்பமிடுங்கள்.

9.. அன்றாடம் பத்து வரிகளேனும் எழுதப் பாருங்கள். தனியாக நாமே எண்ணி எழுதுவது கடினமாயிருப்பின் பிறருடைய எழுத்தாக்கங்களில், காணொளிகளில், என்வினவிக் குழுக்களில் உங்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருங்கள். நாளடைவில் உங்கள் மொழி செம்மையடைவதை உணர்வீர்கள்.

10. அடிக்கடி ஏதேனும் ஒரு தமிழ்ப்பாடலைப் பாடிக்கொண்டிருங்கள். அது தமிழ்ப்பாட்டாக இருக்க வேண்டும். முணுமுணுப்பாகக்கூட இருக்கலாம். அவ்வாறு பாடுவதால் மொழிமனம் பண்படும். சொல்லறிவு திறக்கும். திரைப்பாடலாயினும் சரி, வேறு பாடல்களாயினும் சரி, இப்போது உங்களுக்குப் பத்துப் பாடல்களேனும் மனப்பாடமாகத் தெரியவேண்டும்.

11. புதிய பொருள், புதிய செய்தி ஒன்றினைப் பிறர் வழியாகவோ, பிறமொழியிலோ, பிற இடங்கள் சென்றோ அறியக் கிடைத்தால் அதனை எப்பாடுபட்டேனும் தமிழில் பதியுங்கள். இன்றைய பாய்ச்சல் உலகில் தமிழ்வளம் சிறிதளவும் பின்தங்காதிருக்க இச்செயல்பாடு ஒன்றே உதவும்.

12. உங்களைச் சுற்றிலும் பாமர மக்கள், அடித்தட்டு வாழ்க்கையினர், தமிழ்மொழியை மட்டுமே அறிந்த மூத்தவர்கள் இருந்தால் அவர்களோடு நேரமெடுத்துப் பேசுங்கள். அவர்கள் வாய்மொழியில் வாழும் புதிய சொற்கள், கூறுமுறைகள், கருத்துகள் ஆகியனவற்றை மனத்தில் கொள்ளுங்கள். அவற்றினைப் பயன்படுத்துங்கள். பதிவு செய்யுங்கள்.

*- கவிஞர் மகுடேசுவரன்-நன்றி*

No comments: