I LOVE TAMIL


Friday, July 25, 2008

விவசாய வளர்ச்சி வீழ்ந்தது ஏன்?

விவசாய வளர்ச்சி வீழ்ந்தது ஏன்?

என். முருகன்

விலைவாசி உயர்வு நம் நாட்டின் சராசரி மக்களை வெகுவாகப் பாதித்துள்ள இந்த வேளையில் உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு பற்றியும் அவற்றின் விலை ஏற்றம் குறித்தும் கவலையுடன் பல விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

விலைவாசியும் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடும் இரண்டு தனிப்பட்ட விஷயங்கள்.

சமீப காலத்தில் அரிசி, கோதுமை ஆகிய இரண்டு அத்தியாவசிய உணவு தானியங்களுக்கு உலகெங்கிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவற்றின் விலையும் சர்வதேச மார்க்கெட்டில் வெகுவாக உயர்ந்துவிட்டது. அதற்கு ஒரு காரணம் ஆஸ்திரேலியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவிய வறட்சியே!

அந்த நாட்டில் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகள் எல்லோரும் சேர்ந்து சன்ரைஸ் எனும் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளனர். அமோகமாக அரிசி உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த அமைப்பினர் இப்போது 98 சதவிகிதம் உற்பத்தியைக் குறைத்துவிட்டனர்.

ஒரு நாளைக்கு இரண்டு கோடி மக்களுக்குத் தேவையான அளவு அரிசி உற்பத்தி செய்யும் ஓர் அரிசி ஆலை, தெற்கு ஆஸ்திரேலியாவில் டெனிஸிக்கின் என்னும் ஊரில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இந்த அரிசி ஆலை தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது. இதன் விளைவாக கேமரூன், எகிப்து, எத்தியோப்பியா, ஹெய்ட்டி, இந்தோனேசியா, இத்தாலி, ஐவரிகோஸ்ட், மாரிட்டானியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து மற்றும் ஓமன் போன்ற பல நாடுகள் அரிசி சரியான விலைக்கு சரியான தருணத்தில் கிடைக்காமல் அவதியுறுகின்றன.

சென்ற ஆண்டு ஒரு டன் அரிசி ரூ.12,000 என்றிருந்த சர்வதேச விலை இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.34,000 முதல் ரூ.50,000 வரை உயர்ந்துவிட்டது. அரிசி கிடைக்காததால் ஹெய்ட்டியில் மக்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரிசி உற்பத்தி குறைவதற்கான பல காரணங்களில் மழை பொய்த்துப்போனது முதன்மையான காரணம். அதற்குக் காரணம் நமது பூமியின் வெப்பநிலை அதிகரித்ததுதான். சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் கரியமில வாயு பூமியில் இருந்து அதிகம் ஆகாயத்துக்குச் சென்றடைந்து நமக்குப் பழகிவிட்ட சீதோஷ்ண நிலையை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருப்பது நமக்குத் தெரியும். தேவைக்கு அதிகமான மழை பொழிந்து வெள்ளமும், தேவையான மழை வராமல் வறட்சியும் இனிவரும் காலங்களில் அதிகமாகும் என்பது சுற்றுப்புறச் சூழல் நிலைமையைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகளின் கருத்து.

ஆனால், இந்தியா போன்ற முதன்மை விவசாய நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உருவாகக் காரணம் நாம் விவசாயத்தின் மீது தேவையான அளவு கவனம் செலுத்தாதது தான். உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்குப் பயன்படும் நிலங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியாவே. நமது நிலங்களை சரியான முறையில் உபயோகித்தால் நமது உணவுத் தேவையையும் பூர்த்தி செய்துவிட்டு உணவு தானியங்களை ஏற்றுமதியும் செய்யமுடியும்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நாம் நடைமுறைப்படுத்திய பசுமைப்புரட்சி நமது நாட்டிலிருந்து பசியையும் பஞ்சத்தையும் விரட்டியடித்தது. ஆனால் அதன் பின்விளைவுகளை கணக்கில் எடுக்காமலும், அவ்வப்போது தேவையான நீராதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமலும், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அரசு விவசாயத்தை முழுமையாகக் கவனிக்காமலும் விட்டுவிட்டதால் நாடு மிகப்பெரிய பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.

பழைய காலங்களில் ஒரு விவசாயி கோதுமை அல்லது உருளைக்கிழங்கு பயிரிட கிராமத்தில் மாட்டுச் சாணத்தையும் மக்கிய குப்பையையும் வானம் பார்த்த தனது பூமியில் உரமாக இட்டு பயிர் செய்து வந்தார். பசுமைப் புரட்சி வந்தவுடன் மெக்சிகோவிலிருந்து வந்த குட்டை கோதுமைப் பயிரை விவசாயம் செய்தார் அதே விவசாயி. ரசாயன உரங்கள் வாங்க மானியங்கள், கிணறுவெட்ட குறைந்த வட்டியில் கடன் எல்லாம் கிடைக்க எல்லாமே வெற்றி! ஆனால் முப்பது ஆண்டுகளின் செழிப்பான விவசாயத்தின் பலனாக விவசாயக் கிணற்றில் தண்ணீர் மட்டம் 100 அடி கீழே சென்றுவிட்டது. ஏனென்றால் நிறைய நீர்வசதி இருந்தால்தான் புதிய பயிர்களை பயிர் செய்ய முடியும்.

பழைய காலங்களில் அரசுகள் நிறைய அணைகளைக் கட்டி, வாய்க்கால்களையும் குளம்குட்டைகளையும் தூர்வாரி நீராதாரங்களைப் பெருக்கிக் கொண்டே வந்தன. 1980-ஆம் ஆண்டுவாக்கில் இதுபோன்ற நடவடிக்கைகளை எல்லா அரசுகளுமே குறைத்துக் கொண்டன. இதனை மேலும் சிக்கலாக்க ஓட்டுவங்கி அரசியலைக் குறிவைத்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டதால் சகட்டுமேனிக்கு நிலத்தடி நீர் உபயோகம் அதிகரித்து நீராதாரம் குறைந்து கொண்டே போயிற்று.

நீராதாரம் குறைந்ததால் விவசாயிகள் அரிசி, கோதுமை போன்ற பயிர்கள் அல்லாமல் அதிக நீர் தேவையில்லாத மற்ற பயிர்களை விவசாயம் செய்ய ஆரம்பிக்கின்றனர். மக்காச் சோளம் பயிரிட்டு அது நம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் "பேபி கார்ன்' என விலை உயர்ந்த நவநாகரிக உணவாக மாறி அரிசி, கோதுமை பயிர்களைவிட அதிக வருமானத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகின்றன. அதிக தண்ணீர் தேவையுமில்லை.

நவீன சாகுபடி முறைகளைப் பின்பற்றி நிலத்திலிருந்து அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் சிறிய அளவிலான நிலங்களில் எடுபடாது. மேலை நாடுகளில் விவசாயம் பெரிய தொழிற்சாலைகள் போல் நடைபெறுவதை நாம் காணலாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மூன்று பேர் விவசாய வேலை செய்வதை நேரில் பார்த்தேன். அங்கு நிலத்தை விவசாயத்திற்குத் தயார் செய்வது ஒரு பெரிய வேலை. 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் டிராக்டர், புல்டோசர் வைத்து செப்பனிட்டு சிறிய சாய்மானத்துடன் உருவாக்கி ஒரு பெரிய குழாயில் சிறிய துவாரங்கள் செய்து மேல் மட்டத்தில் பதிக்கிறார்கள். குழாயில் உள்ள சிறிய துவாரங்களில் நீர் கசிந்து முழு நிலத்திற்கும் பாய்கிறது. வரப்பு கிடையாது. சிறிய நீர் ஓட்டங்கள் இல்லாமல் முழு நிலமும் நீரில் நனைந்து விடுகிறது. தாழ்வாகப் பறக்கும் ஹெலிகாப்டர் விதைகளைத் தூவுகிறது.

அங்கு வியாபார கன்சல்டன்ட்போல் விவசாய கன்சல்டன்ட்டுகள் உண்டு.

ஒரு விவசாயி தற்போது ஏக்கருக்கு இருபது டன் தக்காளி விளைவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் ஒரு கன்சல்டன்ட் ஓர் ஒப்பந்தம் செய்கிறார். தனது விஞ்ஞான முறையிலான விவசாய யோசனையைக் கேட்டு பயிர் செய்தால் ஏக்கருக்கு எண்பது டன் தக்காளி கிடைக்கும். அறுவடை வெற்றியுடன் நடந்தால் ஓர் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் கன்சல்டன்சி கட்டணம்! இது துல்லியமாக வெற்றி அடைகிறது.

நமது நாட்டில் நிலச்சீர்திருத்த விதிகளைக் கடைப்பிடித்த காரணத்தால் மேலை நாடுகளின் விஞ்ஞான முறையிலான விவசாயம் இங்கு எடுபடாது. நமது தேவை சிறிய நில உடைமைகளில் சாகுபடியை நவீனப்படுத்துதல்தான். ஆனால் இதற்கு நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். அதற்கு அரசு நிறைய நிதி ஆதாரங்களை அளிக்க வேண்டும்.

2001 - 2002 ஆம் ஆண்டு நமது திட்டச் செலவு ரூ. 4 லட்சத்து 47 ஆயிரத்து 448 கோடிகள். அதில் விவசாயத்துக்கு ரூ. 48 ஆயிரத்து 215 கோடிகள். (10.2 சதவிகிதம்). ஆனால் 2006-2007-ஆம் ஆண்டு திட்டச் செலவு ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்து 323 கோடிகள். அதில் விவசாயத் திட்டங்களுக்கு ரூ.60 ஆயிரத்து 762 கோடிகள்தான் ஒதுக்கப்பட்டன (5.8 சதவிகிதம்). விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் 10.2 சதவிகிதத்திலிருந்து 5.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்ட காரணத்தால் விவசாய வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் விளைபொருள்களுக்கு சரியான விலை பயிரிடுபவர்களுக்குக் கிடைக்காமல் இருப்பது மற்றொரு பிரச்னை. இதனை வினியோக சங்கிலிப் பிரச்னை என்கிறோம். உலக வங்கியின் கணக்குப்படி இந்தியாவில் பழங்கள், காய்கறிகள் போன்ற விவசாயப் பொருள்களின் விலையில் ஐந்தில் ஒருபங்கு விவசாயிக்கும், மீதம் இடையில் உள்ள வியாபாரிகளுக்கும் இதர செலவுகளுக்கும் போய்விடுகிறது.

நிறைய இடங்களில் இவற்றைச் சேமித்து வைக்கும் குளிர்சாதன வசதிகளும், கூட்ஸ் லாரிகளில் இவை இடமாற்றம் செய்யப்பட வேண்டிய வசதிகளும் தேவை. தாய்லாந்து போன்ற ஒரு நாட்டில்கூட இது மாதிரி வசதிகள் நிறைய செய்யப்பட்டு விவசாயி ஐந்தில் மூன்று பங்கு விலையைப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் விவசாயத்துக்கு நாம் செலுத்தும் கவனம் சமீப காலங்களில் மிகவும் குறைந்து வந்துள்ளது திண்ணம்.1990 - 91-இல் நம் நாட்டில் விவசாயத்தின் வளர்ச்சி சராசரி 4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் ஒன்பதாவது, பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட காலமாகிய 1997 முதல் 2007 வரை விவசாயத்தின் வளர்ச்சி சராசரி 2 சதவிகிதமாகக் குறைந்தது.

நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பண்டித ஜவாஹர்லால் நேரு 1963-ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சிக்கூட்டத்தில் முதலமைச்சர்களை நோக்கிக் கூறியது நினைவுக்கு வருகிறது. "விவசாயம் நம் நாட்டுக்கு முதலமைச்சர்களை விட மிகவும் முக்கியம்'' கவனிப்பார்களா இன்றைய ஆட்சியாளர்கள்?

Source : www.dinamani.com
Tuesday July 22 2008 00:00 IST

No comments: