Thursday July 10 2008 00:00 IST
உலக மெகா திட்டங்கள்-ஒரு பார்வை
நெல்லை சு. முத்து
உலக அளவில் இன்று அதிகம் பேசப்படும் பெரிய திட்டங்களில் இந்தியாவின் சர்ச்சைக்கு உரிய அல்லது உள்ளான திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. "கான்வே டேட்டா இன்கார்ப்பரேசன்' என்கிற அமைப்பு அட்லான்டாவில் இயங்கி வருகிறது. அது தொகுத்து வைத்துள்ள 2,000 உலகளாவிய திட்டங்களில் முதல் பத்து இடங்களில் அமெரிக்கா (550), ஜப்பான் (190), சீனா (186), கனடா (95), தாய்வான் (83), ஜெர்மனி (59), இங்கிலாந்து (56), இந்தோனேசியா (51), ஆஸ்திரேலியா (49), ரஷியா (44) ஆகிய நாடுகள் பல திட்டங்களுடன் இடம்பெறுகின்றன.
முதலில் அமெரிக்காவும் ரஷியாவும் இணைந்து உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத்தான் பெரும் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளன. அணுக்கழிவுகள் அப்புறப்படுத்தும் திட்டம். அமெரிக்காவில் ஓக் ரிட்ஜ் (தென்னஸி) மற்றும் சாவன்னா ஆறு (தென் கரோலினா) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்களை அகற்றுவதற்கு 10,000 கோடி டாலர்கள். நம் கணக்கில் நாலு லட்சம் கோடி ரூபாய். அவ்வாறே, ராக்கி ஃப்ளாட்ஸ் (கொலொராடோ) அணுமின் உலையைப் பிரித்து அகற்ற 2,200 கோடி டாலர்கள். அணுசக்தித் துறையின் டெக்சாஸ் பான்டெக்ஸ் நிலையத்துக்காக 1,500 கோடி டாலர்கள். இப்படிப் போகிறது பணக்கார நாடுகளின் செலவு வீச்சு.
1986-ஆம் ஆண்டு 8,000 உயிர்களைப் பலி வாங்கிய செர்னோபிள் நிலையத்தைக் கழற்றி அகற்றுவதற்கு ரஷியாவின் செலவு மதிப்பீடு 5,000 கோடி டாலர்கள். இவை தவிரவும், அமெரிக்காவில் பெரும் ஏரிகள், துறைமுகங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தவும் கடலிலும் நிலத்திலும் எண்ணெய்க் கசிவுகளைத் துடைப்பதற்கும் எல்லாம் 2,500 கோடி டாலர்கள். பாருங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது கையைக் கடிக்கும் சமாசாரம்.
சீனா உலகின் மகத்தான ஆற்றல் வளங்களை மேம்படுத்தும் தேசியத் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. எரிபொருள் துறையில் புதிய சக்தி மூலங்கள் தேடும் ஏறத்தாழ 50 திட்டங்கள் சீனா வசம் உள்ளன. இவ்வகையில் 2020-ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 30 அணுமின் நிலையங்கள் நிறுவும் பணியில் ஈடுபட்டு உள்ளது. 2040-ஆம் ஆண்டிற்குள் 100 நிலையங்கள் அதன் இலக்கு. 1000 மெகாவாட் உற்பத்திக்கு 100 கோடி டாலர் மட்டுமே செலவாகும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா தனது அணுமின் நிலையங்களை கழற்றி வரும் வேளையில் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அணுமின் நிலையங்கள் கட்டமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
எப்படியோ, கனடாவின் இன்னொரு சக்தித் திட்டம் - லா கிராண்டே ஜேம்ஸ் வளைகுடா கூட்டமைவுத் திட்டம். அதாவது லா கிராண்டே நதியில் மான்டரீல் நகருக்கு 960 கிலோமீட்டர் வடக்கே 6000 கோடி டாலர் நீர்மின் சக்தித் திட்டம். பிரேசிலில் பிரேசில் - பராகுவே ஆகிய இடங்களுக்கு இடையே 2000 கோடி டாலர் செலவில் பரானா நதியின் குறுக்கே இத்தாய்ப்பு அணைத் திட்டம் (Itaipu project).
தண்ணீர்த் தட்டுப்பாடு இன்று சர்வதேசப் பிரச்னை. இதனைச் சமாளிக்க கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் பெரிய அளவில் சவூதி அரேபியா வசம் உள்ளது. குவைத் முதல் ஓமன் வரை பாலைவனம் நெடுகிலும் குடிநீர்க் குழாய்கள்.
எகிப்து நாட்டிலும் அஸ்வான் நீர்த் தேக்கத்தில் இருந்து 320 கிலோமீட்டர் நீளத்திற்கு "இரண்டாவது நைல்' என்ற பெயரில் புதியதோர் ஆறு பாய விடுகிறார்கள். நாமோ ஆற்றையே மணலாக அள்ளி வருகிறோம்.
துருக்கியில் தென்கிழக்கு அனடோலியா திட்டம் 2500 கோடி டாலர்கள் செலவில் நடைபெற்று வருகிறது. அதனால் 40 சதவிகிதம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். லிபியாவில் ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டி சகாரா பாலைவனம் முதல் கடலோரப் பகுதிகள் வரை நீர்பாய்ச்சவும் திட்டம்.
நம் நாட்டில் தேசிய நதிநீர் இணைப்பு குறித்துக் கோடை கால "ரே பான்' நடிகர்களும், பாதிக் குளியலில் அரை ஆடையுடன் மேடை ஏறிய நடிகைகளும் கூடி அறிவித்தால் போதுமா? வட இந்திய நதிகள் இணைப்பு குறித்து மத, கட்சி, மொழி மாச்சரியங்கள் இன்றி விவாதிக்கப்பட வேண்டிய சிக்கல்கள் நான்கு.
ஒன்று, கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் உயரத்துக்கு மேடான தக்காண பீடபூமிக்கு வடக்கே இருந்து தண்ணீர் கொண்டு வருவது. ஒரு நொடியில் 1500 கனசதுர மீட்டர் தண்ணீரை மேட்டில் ஏற்ற வேண்டும். நாலு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகச் செலவு ஒரு பக்கம் இருக்கட்டும்.
இரண்டாவது பிரச்னை - அங்கு 300 நீர்த்தேக்கங்களும் 1000 கால்வாய்களும் வெட்ட வேண்டும். கால்வாய் வெட்டுவதிலும் அணைகள் கட்டுவதிலும் 8000 சதுர கிலோமீட்டர் பரப்பைச் சீர்படுத்த வேண்டும். அங்கிருந்து 20 லட்சம் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டி வரும். அதுவும் பல மாநிலங்களின் பல்வேறு மொழி, இன மக்களை அப்புறப்படுத்த வேண்டுமே. இது நடக்கிற காரியமா?
மூன்றாவதாக, தேசிய ஒருமைப்பாடு என்று பேசினால் போதுமா? நம்மைச் சுற்றியுள்ள மாநிலங்கள் வெவ்வேறு நதிநீர்த் திட்டங்களில் தமிழகத்தைத் தனித்தீவாக மாற்றிவிட்டன. அந்நிலையில் அத்தகைய மாநிலங்கள் ஊடாகக் கடந்து நதி நீர் பாதுகாப்பாக நம்மை வந்து அடைய என்ன வழி?
அத்தனைக்கும் மேலாக இன்னொரு தீவிரப் பிரச்னை - மாசு. வழியில் பல்வேறு விதத்தில் நதிநீர் மாசு அடையும். காசியில் கங்கையில் கரைத்து விடப்படும் பாதிப் பிணங்களும், மத்தியப் பிரதேசத்தின் ஆலைக்கழிவுகளும், தொழிற்சாலை அழுக்குகளும் நமக்குத் தீங்கு தராதபடி இங்கே சுத்திகரிக்கவும் வேண்டி வருமே.
போகட்டுமே. மற்றொரு உலக மெகா திட்டம் - பெரும் உலகளாவிய நெடுஞ்சாலை. ஏறத்தாழ 100 நாடுகளை இணைக்க இருக்கிறது. ஸ்காண்டிநேவியா - ஐரோப்பா, ஜிப்ரால்டர் - ஆப்பிரிக்கா, இஸ்தான்புல் - தூரக் கிழக்கு நாடுகள், கனடா - வட அமெரிக்கா - மெக்சிக்கோ - மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா - பனாமா வரை சாலையிலேயே ஜம்மென்று சென்று வரலாம்.
இன்னொன்று - ரயில் போக்குவரத்து. பிரான்சில் பாரீஸ் முதல் மார்செல்லி வரையிலான "பெருவேகத் தொடர்வண்டி' திட்டம், ஜப்பானின் "ஷிங்கான்சென்' என்கிற சீறிப்பாயும் தொடர்வண்டி எனத் திட்டங்கள் பல.
அன்றி, வான்வழிப் போக்குவரத்திலும் ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையம் மகத்தானது. சேக் லாப் கோக் எனும் இடத்தில் உலகின் மிகப் பிரதான விமானத்தளம் அது.
ஒரு நாளில் 24 மணிநேரமும் இயங்கும் இந்த நிலையத்தில் மட்டும் ஓராண்டில் சராசரி நாலரை கோடி பயணிகள் வந்து போகிறார்கள் என்றால் சும்மாவா?
துறைமுகங்களை எடுத்துக் கொண்டால் ஹாங்காங் சரக்குத் துறைமுகம் மிகப் பிரமாண்ட உருவெடுத்து வருகிறது. இங்குதான் உலகின் மூன்றில் இரண்டு சரக்குக் கப்பல்கள் பொருள்களை ஏற்றி இறக்குகின்றன. சீனாவில் ஷாங்காய் துறைமுகம் 2000 கோடி டாலர்கள் செலவில் அதி நவீன விசுவரூபம் எடுத்து வருகிறது.
சூயஸ் கால்வாய்க்கும் ஓரியன்ட் துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தும் சுறுசுறுப்பாகி வருகிறதாம். ஓமன், ஜெபல் அலி துறைமுகங்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய சிங்கப்பூர் துறைமுகத்துடன், மலேசியாவின் ஜோஹோர், இந்தோனேசியாவின் பதாம் தீவு என சமர்த்தான துறைமுகங்கள் வேறு கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
நம் நாட்டில் சேது சமுத்திரத்தில் 35 கி.மீ. தொலைவுக்கு 12 மீட்டர் ஆழத்துக்குத் தோண்ட வேண்டும். அதில் 20 கி.மீ. தூரத்துக்கு 10 மீட்டர் ஆழம் தோண்டி ஆயிற்றாம்.
ஆனால் வங்காள விரிகுடா கடலும், இந்துமகா சமுத்திரமும் சந்திக்கும் இந்த ஜலசந்தியில் மீண்டும் இரு பக்க அலைகள் மோதி மண் திட்டு மீண்டும் உருவாக வாய்ப்பு உண்டே. அதாவது தோண்டப்பட்ட கடல் மீண்டும் தூர்ந்து போகும் அபாயம்.
ஆதம் பாலம் என்பது மனிதனால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையால் மணல் திட்டாக எழுந்து உயர்ந்ததா என்பது இருக்கட்டும். இந்தியத் தொலையுணர்வு செயற்கைக்கோள் படத்தில் இந்தியா - இலங்கைக்கு இடையே அகலமான திட்டாகத் தெரிகிறது. பேசாமல் சேதுவை மேடுறுத்தி வீதி சமைத்துவிடலாம். கால்நடையாய் அகதிகளாக இந்தியாவிற்குள் வருபவர்களுக்காவது உதவியாகி இருக்கும். பாரதி பாடியது போல மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்.
ஜப்பானின் அக்காஷி கெய்க்யோ பாலம் குறிப்பிடத்தக்கது. இது சேதுராம் பாலம் மாதிரி இல்லை. 1998-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தப் பாலம் 1991 மீட்டர்கள் நீளம். செலவோ 4,200 கோடி டாலர்கள் என்றால் பாருங்களேன். அதற்கு அடுத்தபடி டென்மார்க்கில் 1624 மீட்டர் நீளப்பாலம்.
நம் நாட்டில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் எதிரிக் கட்சிகளால் தடுக்கப்படுகின்றன. அதனைச் சமாளிக்கப் "பேச்சுவார்த்தை' நடக்கும். ஆனால், அரசியல் அகராதியில் "பேச்சுவார்த்தை நடக்கிறது' என்றால் "பெட்டி கைமாறுகிறது' என்று அர்த்தமாமே!
Source : www.dinamani.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment