I LOVE TAMIL


Friday, June 20, 2008

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்

www.dinamani.com on 19.06.2008

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்

என். முருகன்


நம் எல்லோரின் கவனத்தையும் முழுமையாக ஈர்த்துள்ள சமீபத்திய பிரச்னை பணவீக்கம். வேறு எந்த அம்சமும் உண்டாக்காத தலைவலியை ஆளும் கட்சிக்கு உருவாக்கும் பிரச்னை இது.

காரணம், இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் ஏழைகள் நிறைந்த நாட்டில் மிக அதிகமாக மக்களைப் பாதிப்பது பொருள்களின் விலைவாசிதான்.

பணவீக்கம் என்பது பொருள்களின் விலை ஏற்றத்தைக் குறிக்கும் என்பதால் தான் இவ்வளவு அதிகமான விளம்பரத்துடன் அன்றாடம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அது அலசப்படுகிறது.

வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத ஒன்று பணவீக்கம் என்பது பொருளாதாரம் பற்றி ஓரளவு விவரம் தெரிந்தவர்களுக்குப் புரியும். இரண்டு முக்கியமான காரணங்களினால் பணவீக்கம் உருவாகிறது. மக்கள் பொருள்களை அதிகம் வாங்குவதால் உருவாகும் விலை ஏற்றம் முதலாவது ஆகும்.

பொருளாதாரம் பற்றிய பாடங்களைக் கல்லூரிகளில் கற்பிக்கும் போது இரண்டு அடிப்படை விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒன்று டிமாண்ட் எனப்படும் பொருள்களின் தேவை. மற்றொன்று அப்பொருள்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் சப்ளை எனப்படுவதாகும். மக்களின் தேவை அதிகமாகி விநியோகிக்கும் பொருள்கள் குறைவாகத்தான் கிடைக்கும் எனில் அவற்றின் விலைவாசி உயர்ந்துவிடும். இதனை டிமாண்ட் விலையை மேலே இழுத்துச் சென்று விட்டதால் உருவான பணவீக்கம் (Demand- Pull Inflation) என்கிறோம்.

இரண்டாவதாக உற்பத்தியாகும் பொருள்களுக்கு உபயோகிக்கப்படும் மூலப்பொருள்களின் விலை அதிகமாகும்போது, அப்பொருள்களின் விற்பனை விலை தானாக ஏறி அதனால் உண்டாகும் பணவீக்கம் (Cost- Push Inflation). பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஓரளவு பணவீக்கத்தை நாம் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று சொல்லலாம். அல்லது நமது நாட்டை வேறு எந்த அன்னிய நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளும் தொடாதவகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தனியாக நமது பொருளாதாரம் இருக்க வேண்டும்.

1990-க்கு முன்னர் நமது பொருளாதாரத்தை அடைபட்ட ஒரு பொருளாதாரம் (Closed- Economy) என கூறுவார்கள். ஏற்றுமதி- இறக்குமதி கட்டுப்பாடுகள், சில பொருள்களை பொதுத்துறையில், பல தொழில்களை சிறு தொழில்களாக தனியாரிடம், எல்லா தொழில்களையும் லைசென்ஸ் முறையில் என பல கடுமையான சட்டதிட்டங்களை நாம் நிறைவேற்றிக் கையாண்டோம். இதில் பல நன்மைகள் உண்டு. நமது பொருளாதாரத்தின் முழுப்பலனும் நமது மக்களைச் சென்றடையும்படி பல வளர்ச்சித் திட்டங்களுடன், ஏழை எளிய மக்களுக்கு மானியச் சலுகைகளும் வழங்கப்பட்டன.

ஆனால், மற்றைய நாடுகளில் தாராளமயமாக்கலின் மூலம் வேகமான வளர்ச்சி ஏற்பட்டதை, நமது மூடி அடைக்கப்பட்ட பொருளாதாரத்தில் இறக்குமதிக்கு அதிகமான அன்னியச் செலாவணி தேவை என்பதால் நமது டாலர் கையிருப்பு குறைந்து நமது வெளிநாட்டுக் கடன்களுக்கு வட்டியும் முதலும் செலுத்தப்படாத ஒரு நிலைமையில் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தி அன்னிய முதலீடுகள் வரவேற்கப்பட்டன. உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டது.

இதன் பலனாக தேசிய வருமானம் பெருகி நிறைய வேலை வாய்ப்புகள் உருவாயின. உலகின் பல நாடுகள் போல இங்கேயும் ஆண்டு வளர்ச்சி விகிதாசாரம் 8, 9 சதவிகிதங்கள் என்ற உயரிய இலக்குகள் அடைந்த பெருமிதம் நம் எல்லோரிடமும் பரவியது.

பலர் நாம் சுதந்திரம் அடைந்த பின், 1990 வரை கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள் தவறு எனவும், அப்போதிருந்தே நாம் இப்போது கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால் நாம் இதைவிட அதிகமான முன்னேறிய நிலையில் இருந்திருக்கலாமே என கூறினார்கள். ஆனால், நமது பணவீக்கம் திடீரென நாலுகால் பாய்ச்சலில் சென்றதால் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறோம்!

பணவீக்கமும் பொருளாதார வளர்ச்சியும் பிரிக்க முடியாதவை. ஆனால் வளர்ந்துவிட்ட பல மேலை நாடுகளில் மக்களுக்கிடையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டில் அதிகம் இல்லை என்பதால் விலை ஏற்றத்தை மக்கள் எளிதாகச் சமாளிப்பார்கள். அதாவது, சிறிது காலம் விலையேற்றம் இருக்கும். பின்னர் அது சரிக்கட்டப்பட்டுவிடும். ஆனால் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள நமது நாட்டில் விலைவாசி ஏற்றம் என்பது மிகக் கடுமையாக ஏழை மக்களை வெகுவாகப் பாதித்து விடும் என்பதால்தான் நாம் இவ்வளவு அதிகமாக பணவீக்கம் பற்றிக் கவலைப்படுகிறோம்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம். பணப்புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், பணவீக்கம் ஓரளவு குறையும். ஆனால், இதனால் பொருளாதார வளர்ச்சி உடனடியாகப் பாதிக்கப்படும். ஏனென்றால் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம் பொருள்களின் உற்பத்தியையும், தனியார் கடன் பெறுவதையும் பாதித்து பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் குறைத்து விடும்.

எனவே மிக கவனமாக இப் பிரச்னை கையாளப்பட வேண்டும். பணவீக்கம் அரசியல் ரீதியாக பல பிரச்னைகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு உருவாக்கும். இது தேர்தல் காலம் என்பதால் ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு கடுமையான சோதனைகளையும், எதிர்க்கட்சியினருக்கு ஆளும் கட்சியினரைச் சாட ஒரு சரியான ஆயுதத்தையும் பணவீக்கம் அளிக்கிறது.

ஆனால் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியது பணவீக்கம் கட்டுப்படமுடியாமல்போய் பழங்காலத்தில் சிதறுண்டுபோன அரசுகள் பற்றிய தகவல்கள்தான். இதைக் ""கட்டுப்படுத்த முடியாத ஹைபர்இன்ஃப்ளேஷன் (Hyper inflation) மற்றும் பொருளாதார வீழ்ச்சி (Economic Collapse) என கூறலாம்.

1946- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹங்கேரியில் நிலவிய பணவீக்கம்தான் இதுவரை உலகிலேயே அதிகமான பணவீக்கம் என கணக்கிடப்பட்டுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவாக பெங்கோ எனும் ஹங்கேரிய பணம் வீழ்ச்சியடைந்து, ஒரு பெங்கோ பின்னர் 828,000,000,000,000,000,000,000,000,000 பெங்கோவுக்கு சமமானது. (ஆம்! 828 எனும் நம்பருக்கு அடுத்து 27 சைஃபர்கள்)

அதேபோல் 1920 ஆம் ஆண்டில் ஜனநாயக முறையில் வெய்மெர் குடியரசு ஜெர்மனியில் மிக மோசமான அரசாங்க நடவடிக்கைகளின் சின்னமாக விளங்கி, அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் முதல் உலகப்போர் முடிந்த பின்னர் ஜெர்மனியின் மீது 132 கோடி மார்க் நஷ்டஈடு வழங்க போரில் வெற்றி பெற்ற நாடுகள் வலியுறுத்தியதால் பணவீக்கம் அதிகரித்தது. 1922- ஆம் ஆண்டு பணவீக்கம் 5470 சதவிகிதம் ஆனது! (நமது பணவீக்கம் தற்போது 8.2 சதவிகிதம்). இதனால் ஜெர்மனியில் பொருள்களின் விலையேற்றம் 1,300,000,000,000 மடங்கு அதிகமானது. (ஆம்,13 எனும் நம்பருக்கு அடுத்து 11 சைஃபர்கள்தான்).

ஜெர்மானியர் ஒருவர் 1923- ஆம் ஆண்டு ஒரு சாதாரண கடிதத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப ஆன ஸ்டாம்ப் செலவு 2 லட்சம் மார்க். ஒரு பவுண்டு வெண்ணெயின் விலை 15 லட்சம் மார்க். 1 கிலோ மாமிசம் 20 லட்சம் மார்க். ஒரு முட்டையின் விலை 60 ஆயிரம் மார்க். பொருள்களின் விலை எவ்வளவு வேகமாக மாறியது என்பதைக் குறிக்க, ஒரு ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போதே உணவுப் பண்டங்களின் விலையைக் கூட்டி சர்வர்கள் கூறுவதை எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள். ஆக, ஹோட்டலுக்குள் நுழையும் போது இருந்ததைவிட அதிகம் விலையை ஒருவர் சாப்பிட்ட பண்டத்திற்கு வழங்க வேண்டியிருந்தது.

இவை சரித்திரபூர்வமான உண்மைகள். இவ்வளவு கடுமையான பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும் இனி நடக்காது எனலாம். ஆனால் நம் நாட்டில் 83 கோடியே 60 லட்சம் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20- க்கு கீழே வருமானம் உள்ளவர்கள் என மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா கமிட்டி சொல்லியிருப்பதை கருத்தில் கொண்டால் சிறிதளவு பண வீக்கமும் அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வும் நமக்கு எவ்வளவு பாதகம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!

(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி).

No comments: