I LOVE TAMIL


Wednesday, June 11, 2008

`செல்போன்' கோபுரங்களால் ஏற்படும் ஆபத்தை தடுக்க நடவடிக்கை

புதுடெல்லி, ஜுன் 10-


`செல்போன்' கோபுரங்களால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சில பரிந்துரைகளை தொலை தொடர்பு கமிஷன் அளித்துள்ளது.



செல்போன் கதிர்வீச்சு

நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு பல்வேறு நிறுவனங்கள் சார்பாக ஆங்காங்கே `செல்போன்' கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இத்தகைய கோபுரங்கள் மற்றும் செல்போன்களில் இருந்தும் வெளியாகும் கதிர் வீச்சுகளால் உடல் நலத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.


சட்டைப் பையில் வைத்திருக்கும் செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மாரடைப்பு ஏற்படும் என்றும், இடுப்பு பகுதியில் வைத்தால் ஆண்மை குறைவு ஏற்படும் என்றும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



தொலை தொடர்பு கொள்கை


அதுபோல செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சுகளும் மிகவும் ஆபத்தானவை ஆகும். அந்த கதிர் வீச்சுகளின் (நான் அயோனைசிங் கதிர்வீச்சு) 200 மெகா ஹெர்ட்ஸில் இருந்து 4 ஆயிரம் மெகா ஹெர்ட்ஸ் வரை இருந்தால் மூளைக் கட்டி, உறக்கமின்மை, காது கேளாமை, மறதி போன்ற குறைபாடுகள் ஏற்படும்.



இந்த நிலையில் தொலை தொடர்புத் துறையின் கொள்கைகள் குறித்து முடிவு எடுக்கும் தொலை தொடர்பு கமிஷன் சார்பாக, கடந்த 27-ந் தேதி அன்று ஒரு வழிகாட்டு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான கமிஷன் அளித்துள்ளது.



கட்டுப்படுத்த நடவடிக்கை

அதன்படி, செல்போன் கோபுரங்களை அமைக்கும்போதே, அவற்றில் கதிர் வீச்சுக்களை கட்டுப்படுத்த வேண்டும். கதிர் வீச்சுக்கு எதிரான கருவிகளை `பி.டி.எஸ்.' மையங்களில் பொருத்த வேண்டும் என்று அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கும் கூட இந்த விதி பொருந்தும். இனிமேல், இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்பதற்கான சான்றிதழை உற்பத்தி நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

அருகில் வசிக்கும் மக்கள்

இதற்கிடையே, குஜராத்தை சேர்ந்த ஒரு பொதுநல அமைப்பு ஒரு சர்வே நடத்தியது. அப்போது, டெல்லியில் மட்டும் 4 ஆயிரத்து 500 செல்போன் கோபுரங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும், செல்போன் கோபுரங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு மூளை கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.


இதையடுத்து, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை இந்த அமைப்பு தொடர்ந்துள்ளது.

Source : www.dailythanthi.com on 10-06-2008

No comments: