I LOVE TAMIL


Tuesday, August 12, 2008

ஆடிப்பட்டம் தேடி விதை

Tuesday August 12 2008 00:00 IST

உரத்தின் சுமையுடன் உற்பத்தி உயர...

ஆர்.எஸ். நாராயணன்

""ஆடிப்பட்டம் தேடி விதை'' என்பது பழமொழி. ஆடி பிறந்துவிட்டால் தானிய விதைகளைத் தேடி விதைப்பவர்கள் குறைந்தும், பக்தி விதைப்பவர்கள் பெருகியும் வருகிறார்கள். ஒரு பக்கம் பார்த்தால் கிராமங்களில் ஆடி மாதம் அம்மன் திருவிழாக்கள்.

மறுபக்கம், டி.வி.யைத் திருப்பினால், ஊருக்கு ஊர் திருவிழா நடத்தும் அதே விவசாயிகள், ""விதை உண்டு, மழை உண்டு, ஆனால், உரம் இல்லையே'' என்று உரத்த குரலில் பேட்டி தருகின்றனர் ஆமாம். இந்த ஆண்டு உரத்தட்டுப்பாடு மிகவும் கடுமையாகத்தான் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உரப் போராட்டம் வீதிக்கு வந்துவிட்டது.

ஏன் இந்த உரத் தட்டுப்பாடு? சொல்லப்படும் பல காரணங்களில் உரத்தின் விலையேற்றம், உரத்தில் கள்ளச்சந்தை, உரம் அழுத்தும் நிதிச்சுமை, தேவையுள்ள இடத்தில் கிட்டாத நிலை. பசுமைப்புரட்சி தொடங்கிய காலகட்டத்தில் ஒரு விவசாயியின் சம்மதம் இல்லாமலேயே இலவசமாக வயல்களில் யூரியா தெளித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று கேட்டாலும் கிடைப்பதாக இல்லையாம். இப்படி ஒரு சோகம் இருந்தாலும் இந்த உரத்தட்டுப்பாட்டால் தமிழ்நாடு காவிரி டெல்டா பகுதிகளில் பல விவசாயிகள் இயற்கை உரத்துக்கு மாறியுள்ளனர்.

ரசாயன உரம் என்பது புதைவு எரிசக்தி நெருக்கடியுடன் தொடர்புடையது. பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்தால் யூரியா விலையும் உயரும் என்ற உண்மையை முன்கூட்டியே உணர்ந்து விழிப்புணர்வுடன் என்றுமே கிடைக்கும் இயற்கை உரங்களை நம்பியவர்கள் விழித்துக் கொண்டவர்கள் என்றாலும்கூட, குறட்டை விட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டிய யதார்த்தங்களைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும்.

யூரியா, அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களுக்குரிய மூலப்பொருள் நாஃப்தா. இதுவும் ஒரு பெட்ரோலியப் பொருள். இது முழுக்கவும் இறக்குமதி செய்துதான் யூரியா உற்பத்தியாகிறது. இது நான்கு மடங்கு விலை உயர்ந்துவிட்டது. மைய அரசு நாஃப்தாவுக்கு மானியம் வழங்குகிறது. அப்படியும் உரம் ஒரு டன் அடக்கவிலை ரூ. 17,000. நாஃப்தா விலை உயர்வால் இன்றைய அடக்கவிலை டன் ஒன்றுக்கு ரூ. 50,000.

நிதிச்சுமை காரணமாக விலையேற்றத்திற்கு ஏற்ப மைய அரசின் மானியச் சலுகை நின்றுவிட்டதால் உரக் கம்பெனிகள் உற்பத்தியைக் குறைத்துவிட்டன என்று கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை காரணம் கூறியுள்ளார். மைய அரசு வழங்கும் தகவலின்படி உரமானியம் 2004 - 05 - இல் 15,779 கோடி ரூபாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து 2008 - 09-இல் 95,000 கோடி ரூபாய் என்றாகிவிட்டது. இது மொத்த இந்திய வருமான மதிப்பில் (எ.ஈ.ட.) 1.9 சதம். இந்த நிலை நீடித்தால், வரும் ஆண்டுகளில் உர மானியம் 2,00,000 (இரண்டு லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு உயர்ந்துவிடும். மைய அரசின் கஜானா காலியாகிவிடும். சுகத்தைத் தரவேண்டிய உரம் இன்று விவசாயிகளுக்கும் அரசுக்கும் சுமையாகிவிட்டது. இதனால் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது. இச்சுமையை நீக்கி உற்பத்தி உயர என்ன செய்ய வேண்டும்?

புதைவு எரிசக்தி (Fossil Energy) இருப்புக்குறைவதால் ஏறும் பெட்ரோல் விலைக்கு மாற்றாகக் கண்ணுக்குத் தெரியும் காளை மாட்டையும், கரும்பு எத்தனாலையும் மறந்துவிட்டுக் கவைக்கு உதவாத காட்டாமணக்கையும் ஆபத்தான அணுசக்தியையும், சுற்றாத காற்றாடிகளையும், சுடாத சூரிய ஒளி சாதனங்களையும் நினைக்கத் தெரிந்த மனம், ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உர உற்பத்தியை மறப்பது ஏனோ புரியவில்லை.

உற்பத்தித்திறன் மிகுந்த அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் அதிகபட்சமாக இயற்கை உரம் இட்ட பின்னர் அளவோடு ரசாயன உரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு மிகவும் குறைவாக இயற்கை உரத்தை இட்டு, அதிகபட்சமாக ரசாயன உரம் இடும் ஒரு தவறான மரபால் மண் வளம் இழக்கப்பட்டு உணவு உற்பத்தி குறைகிறது.

மண் பற்றிய ஓர் அடிப்படையான விஷயத்தை நமது விவசாயப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்குக் கற்பிப்பது இல்லை. விவசாயிகளிடமும் சொல்வது இல்லை. ஒரு பிடி மண்ணில் நுண்ணுயிரிகள் மில்லியன், பில்லியன் அளவில் இருந்து பணிபுரிந்தால்தான் உற்பத்தி உயரும். சத்துள்ள மண் பொலபொலப்பாகவும், அதேசமயம் ஈரமண் பிள்ளையார் பிடிக்கும் அளவில் சற்று கெட்டித் தன்மை (ஈரம் காக்க) யுடையதாகவும் இருக்க வேண்டும். நீர் விட்டால் வேர் சுவாசிக்க வேண்டும். மண்புழு, எறும்பு, கரையான் உள்ள மண்களில் இந்நிலை கிட்டும். இக்கால நுண்ணுயிரிப் படிப்பில் (Micro Biology) மண்ணில் பயன் தரும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா, காளான், வைரஸ் போன்றவற்றின் பெருக்கம் போதிக்கப்படுகிறது. அதை மண்ணில் செயல்பட வைக்கும் நடைமுறை பலவீனமாயுள்ளது.

வேதகாலத்தில் மைக்ராஸ்கோப் இல்லாமலேயே மண்ணில் நுண்ணுயிரிகளைப் பெருக்கும் வித்தைகளை சித்தர்களும் முனிவர்களும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளதை விருட்சாயுர் வேதம் கூறுகிறது. மண்ணில் குணபம் - (அதாவது இறந்து நொதித்த உடலி, இறைச்சி, மீன், கோழி) செயல்படுகிறது. நுண்ணுயிரிப் பெருக்கத்திற்கு இறந்த உடலிகளில் கழனீர், சாணம், புளிப்பு ஏறிய சாத்தூத்தம், மது, கள், பால், மோர், நெய், தேன், பிண்ணாக்கு (எள், கடுகு) போன்றவற்றை எவ்வாறு சேர்த்து நொதிக்க வைத்துப் பக்குவம் செய்யும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கால நுண்ணுயிரிப் படிப்பில் பெருக்கம் தரவேண்டிய அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ஈ.எம். திறமி நுண்ணுயிரி சூடோமோனோபாஸ், விருடி போன்றவை எல்லாமே குணபஜலத்தில் அடக்கம்.

ரசாயன உரப் பயன்பாட்டில் உள்ள பல தவறான எண்ணங்கள் மாறினால்தான் வேளாண் உற்பத்தித் திறன் கூடும். ரசாயன உரம் என்பது எரியும் தன்மையுள்ள மெழுகுத்துகள் ஊட்டங்களாயுள்ளன.

உதாரணமாக மணிச்சத்து என்ற அமோனியம் பாஸ்பேட்டில் நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்வரம் உண்டு. அதில் ட3ஞ5 என்ற ஃபார்முலாவில் பாஸ்வரம் (எரியம்) பணி செய்தாலும்கூட இந்த வடிவில் 5 சதம் உரம் மட்டுமே வேர் எடுத்துக் கொள்ளும். மீதி 95 சதம் உரம் மண்ணை இறுக்கி நுண்ணுயிரிகளை அழிக்கும். இவ்வாறே யூரியா, பொட்டாஷ் உரம் எல்லாமே முழுமையாகப் பயனுறாமல் மண்ணைக் கெட்டிப்படுத்தி வேர் வளராத நிலை உருவாகிறது. ஆகவே, பன்மடங்கு இயற்கை உரங்களை இட்டு சிறிது ரசாயன உரம் மட்டும் வழங்குவது நல்லது. மெல்ல மெல்ல அந்தச் சிறு அளவு ரசாயனத்தையும் நிறுத்திவிட்டால், மண்ணில் நுண்ணுயிரிகள் சிறப்புடன் பணிபுரியும்.

ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் நுண்ணுயிரிகளின் பண்பாடு நன்கு செயல்பட்டு உற்பத்தித்திறன் உயர்வாயுள்ளது. ஒழுங்குடன் திட்டமிட்டால் நகரக்குப்பைகளை உயிர் உரங்களாக மாற்றலாம்.

நகரக்குப்பைகளையும், அறுவடைக் கழிவுகளையும், காய்கறி அங்காடி, பழ அங்காடிக் கழிவுகளையும் வீணாக்காமல் உரமாக்கினால் இன்றுள்ள ரசாயன உரத் தட்டுப்பாட்டிலிருந்து இன்று இல்லாவிட்டாலும் நாளை மீளும் வழி உண்டு. ஆனாலும் அது இன்னமும் தேடுதலாயுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் பச்சை வைரம் என்ற திட்டம் நகராட்சிக் குப்பைகளை மக்கிய உரமாக மாற்றி வருவது ஒரு தொடக்கம். தமிழ்நாட்டில் இங்குமங்குமாக ஒரு சில ஊராட்சி, நகராட்சிகளில் அற்ப சொற்பமாக இப்பணி நிகழ்கிறது. புதுச்சேரி பச்சை வைரம் ஆண்டுக்கு 70 டன் உரம் உற்பத்தி செய்கிறது.

ஊர் - நகரக்குப்பை குறித்த புள்ளிவிவரம் நம்மைச் சிந்தையில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியா 1,20,000 டன்கள் குப்பைகளைக் குவித்து சுகாதாரக் கேடுகளை உருவாக்குகிறது. இவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் யோசனைகள் ஒப்புதல் பெற்றுச் சில பெருநகரங்களில் ""ஆஸ்திரேலியத் தொழில்நுட்பம், அது இது'' என்று அமர்க்களம் செய்து, கோடிகளைச் சுருட்டி, ஆலைகளைக் கட்டி முடித்துச் செயல்படும்போதுதான் ஒன்று புரிந்தது. ""இக்குப்பைகளில் உள்ள ஈரத்தைப் போக்கிப் பக்குவப்படுத்துவதற்குத் தேவையான மின்சாரம், இக்குப்பைகளிலிருந்து பெறக்கூடிய மின் உற்பத்தியை விடக் குறைவு'' என்பதால், அது தோல்வியில் முடிந்தது. எனினும் தேங்காய் உரிமட்டை மற்றும் செக்கு மட்டைகளை எரித்துச் செய்யும் அனல் மின்சாரம் வெற்றி தருகிறது என்றாலும், அதே உரிமட்டைகளைப் பொடி செய்து தூவினால் பொட்டாசிய உர இறக்குமதியை நிறுத்திவிடலாம்.

""திடக்கழிவு மேலாண்மை'', ""கிளீன் சிட்டி'' என்றெல்லாம் திட்டம் தீட்டிப் பல தொண்டு நிறுவனங்கள் உண்டு கழிக்கின்றனவே தவிர, ஊர்க்குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் உருப்படியாக எதுவும் இல்லை. ஊர்க்குப்பைகள், பெருநகரக் குப்பைகளில் உள்ள நச்சுப்பொருள், பிளாஸ்டிக் ஆகியவற்றை நீக்கிவிட்டு கவனித்தால் ஒவ்வொரு நாளும் 50,000 டன் மக்குப்பொருள் கிட்டும் வாய்ப்பு உள்ளது. ஊர்க்குப்பைகளை உரமாக மாற்றும் விஷயத்தில் தென் அமெரிக்க நாடுகளும், மத்திய ஆசிய நாடுகளும், வளர்ச்சி பெற்ற வடக்கு நாடுகளும் சிறப்பாகச் செயல்படுவதைக் கவனிக்க வேண்டும். மென்பொருள், சாஃப்ட்வேர், செல்ஃபோன், கார் ஆகியவற்றில் அவர்களைப் பின்பற்றும் நாம், அதே நாடுகளிலிருந்து குப்பைகளைச் செல்வமாக்கி எவ்வாறு ரசாயன உர இறக்குமதியையும், பயன்பாட்டையும் குறைக்கலாம் என்பதையும் கற்றுக்கொள்வது நன்றல்லவா? மறுசுழற்சி நுட்பங்களை உகந்தவாறு பயன்படுத்தினால் ஒருபோதும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. உற்பத்தி உயர்ந்திடும்.

(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொருளியல் நிபுணர்)

Source : www.dinamani.com on 12.08.2008

No comments: