I LOVE TAMIL


Thursday, September 4, 2008

தேவை, மீண்டும் ஒரு பசுமைப்புரட்சி

தேவை, மீண்டும் ஒரு பசுமைப்புரட்சி

உ .ரா. வரதராசன்

இந்திய - அமெரிக்க அணுமின் ஒப்பந்தம், இடதுசாரிகள் ஆதரவு விலக்கல், நம்பிக்கை வாக்கெடுப்பு "வெற்றி'யின் வேடிக்கைகள், மக்களவைத் தேர்தல் ஆரூடங்கள், கூட்டணி மாற்றங்கள் என்ற பரபரப்பான செய்திகளுக்கு இடையில், சற்றும் தொய்வே இல்லாமல் விலைவாசி ஏறிக் கொண்டேயிருக்கிறது. பணவீக்கம் ஒற்றைப்படை இலக்கைத் தாண்டி, 13 ஆண்டுகால "வரலாற்று' உயர்வை எட்டியுள்ளது. அரசு கணக்கிடும் மொத்த விலைவாசிக் குறியீட்டெண் அளவீட்டில் பணவீக்கம் 12 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டாலும், அன்றாடம் காய்கறியும், மளிகைச் சாமான்களும் வாங்கப் போகையில், சந்தையில் நிலவும் விலைவாசி என்பது, சாதாரணக் குடும்பங்களைத் திகிலடைய வைப்பதாக உள்ளது.

இந்த விலைவாசி உயர்வு இவ்வளவு கடுமையான எல்லையை எட்டியிருப்பது, இந்தியாவில் இதுவரை இருந்திராத அளவு உணவு தானிய உற்பத்தியில் மிகப்பெரும் உயர்வு ஏற்பட்டுள்ள கட்டத்தில்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

மத்திய அரசின் வேளாண்மைத்துறை அமைச்சகம் தரும் விவரங்கள் இதோ:

2006 - 07-ம் ஆண்டு உணவு தானிய மொத்த உற்பத்தி 21.73 கோடி டன். அதுவே 2007 - 08-ம் ஆண்டில் 23.07 கோடி டன்னாக உயர்ந்து ஒரு புதிய மைல்கல்லைத் தொட்டது. சதவிகிதக் கணக்கில் இது 6.2 உயர்வாகும்.

அரிசி - கோதுமை உற்பத்தி 3 சதவிகிதத்தைத் தாண்டி உயர்ந்துள்ளபோது, இதர உணவு தானியங்கள், பருப்பு வகைகள், இதனினும் அதிகமாக உற்பத்தியாகியுள்ளன. எண்ணெய் வித்துகள் உற்பத்தியோ சுமார் 19 சதவிகிதம் உயர்வு; பருத்தி சாகுபடி 14 சதவிகிதம் உயர்வு.

ஒரு சிறிய அளவு (4 சதவிகித) வீழ்ச்சியைச் சந்தித்தது கரும்பு உற்பத்தி மட்டுமே!

இவற்றில் சமையல் எண்ணெய் உற்பத்தி மட்டுமே நம் உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்ய இயலாத குறைவான அளவு உள்ளது. இதனால்தான் ஆண்டுதோறும் சமையல் எண்ணெயை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

இந்த விவரங்கள் அலட்சியப்படுத்த முடியாத ஒரு கேள்வியை எழுப்புகின்றன. கிட்டத்தட்ட உணவுதானியங்கள் அனைத்திலுமே சுயதேவைப் பூர்த்திக்கு வழிவகுத்துள்ள உற்பத்தி உயர்வு உள்நாட்டிலேயே நடைபெற்று இருக்கிறபோது அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை அதீதமாக உயர்ந்தது ஏன்? என்பதே அந்தக் கேள்வி.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதற்கான விலை உயர்த்தப்பட்டிருந்தால், அது உணவுதானிய வகைகளின் விலை உயர்வுக்கு ஒரு நியாயமான காரணமாக அமையக்கூடும். ஆனால், இன்று விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்பதாலேயே, விவசாயம் ஒரு லாபகரமான தொழில் அல்ல என்று அதைக் கைவிடும் சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. நியாயமான விலையும் கிடைப்பதில்லை, விதைகள் - உரம் - பூச்சி மருந்து போன்ற விவசாய இடுபொருள்களின் விலையும் கடுமையாக உயர்வு, தாங்க முடியாத கடன் சுமை, கந்து வட்டிக்காரர்களின் நெருக்குதல் வேறு. இதனாலேயே விவசாயத்தைக் கைவிடும் நிலை.

அமோக விளைச்சல்; விவசாயிக்கும் நிறைவளிக்கக் கூடிய கொள்முதல் விலை இல்லை; வாங்கி உபயோகிக்கும் மக்களும் கொடுக்க வேண்டிய விலையோ பல மடங்கு உயர்வு - இவை ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நேரிட்டது என்றுதானே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு காலத்தில் இந்திய உணவுக் கழகத்தின் கிட்டங்கிகள் எல்லாம் நிரம்பி வழிந்து, வெட்டவெளியில் தார்ப்பாய் போட்டு நெல் - கோதுமை மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்த காட்சியைக் காண முடிந்தது. ஆனால் உபரிக் கையிருப்பு என்று சொல்லி, வெளிநாட்டுக்கு உணவு தானியங்களை - உள்நாட்டுக் கொள்முதல் விலைக்கும் குறைவான விலையில் - ஏற்றுமதி செய்ததன் விளைவாக, அவற்றின் கையிருப்பு குறைந்தது. மத்திய அரசு அரிசியையும் கோதுமையையும் சர்வதேசச் சந்தையில் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய நேரிட்டது; அந்த பேரங்கள் தொடர்பான கேள்விகளும் எழுந்தன.

1970 முதல் 1990 வரையிலான இருபதாண்டுகள் "பசுமைப்புரட்சி' நடைபெற்ற காலகட்டம். அப்போது இந்தியாவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, மக்கள்தொகை உயர்வை விடக் கூடுதலாக உணவுதானிய உற்பத்தி உயர்வு இருந்தது. ஆனால் 1990-ம் ஆண்டுக்குப் பிறகு உணவு தானிய உற்பத்தி உயர்வு, மக்கள்தொகை உயர்வு சதவிகிதத்தை விடக் குறைந்து போனது.

மக்களின் உணவுத் தேவைகளுக்கான உணவு தானிய உற்பத்தியை, பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக, தாவர எரிபொருள் உற்பத்திக்காக அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ச்சியடைந்த நாடுகள் திருப்பிவிட்டன. இது சர்வதேசச் சந்தையில் உணவு தானியங்களின் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியது; அதீத விலை உயர்வுக்கும் இட்டுச் சென்றது.

இந்த நிலைமையில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் தொலைநோக்கோடு செயல்பட்டிருந்தால் இன்றைய விலைவாசி உயர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஒரு சில நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஒன்று, உள்நாட்டில் உணவு தானியங்களின் கொள்முதலை அதிகப்படுத்தி, மத்திய அரசின் கையிருப்பைக் கூட்டியிருக்கலாம்; இரண்டு, சர்வதேசச் சந்தை விலைகள் உயர்வதற்கு முன்பாக உணவு தானிய இறக்குமதியைச் செய்து முடித்திருக்கலாம்; மூன்று, உணவுதானிய வர்த்தகத்தில் புரண்ட பணப்புழக்கத்தை முன்கூட்டியே குறைத்திருக்கலாம். இவை எதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேயில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

இங்கே, இன்றைய மத்திய அரசு நியமித்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை முழுமையாகச் செயல்படுத்த மறுத்துப் புறக்கணித்ததும் இன்றைய விவசாயத்துறை நெருக்கடியைக் கடுமையாக்கிவிட்டது என்பதையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

ஆனால், இன்றைய நிலைமையிலேயும் நம் நாட்டில் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏராளம் என்பது தான் உண்மை. சீனா வளர்ச்சியில் படைத்து வரும் சாதனைகளைச் சுட்டிக்காட்டும் நமது ஆட்சியாளர்கள் சீனத்தின் வளர்ச்சியை இந்தியா எட்டிப் பிடிக்க வேண்டும் என்று வாய்ப்பந்தல் போடுவதைக் காண்கிறோம். ஆனால், விவசாயத்துறையைப் பொருத்தவரையில் சீனாவுக்கு இன்றிருப்பதை விட அதிகமாகவே இந்தியாவுக்கு வளர்ச்சிக்கான அடிப்படைகள் உள்ளன என்பதை, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

""பயிர் சாகுபடிக்கு ஏற்ற நிலத்தின் பரப்பளவு இந்தியாவில் 16 கோடி ஹெக்டேருக்கு மேல்; இது சீனாவில் 13 கோடி ஹெக்டேர் மட்டுமே! இதில் நீர்ப்பாசன வசதி பெற்ற நிலப்பரப்பு இந்தியாவில் 5.58 கோடி ஹெக்டேர்; சீனாவில் இது 5.45 கோடி ஹெக்டேர் மட்டுமே! விவசாயிகள் கையில் உள்ள சராசரி நில அளவு இந்தியாவில் 1.4 ஹெக்டேர்; சீனாவில் 0.4 ஹெக்டேர் மட்டுமே!'' என்பன அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள்.

ஆனால் நம்மைவிடக் குறைந்த அடிப்படை வளங்களைப் பெற்றுள்ள சீனாவில் ஒரு ஹெக்டேருக்கு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் எல்லாமே சராசரியாக உற்பத்தியாகும் அளவு இந்தியாவைப் போல இரண்டு மடங்காக உள்ளன.

இன்றைய விலைவாசிக் கொடுமையின் சூட்டைத் தணிக்க வேண்டுமானால், புழக்கத்தில் உள்ள பணத்தைக் கட்டிப்போட்டு வைக்கும் ரிசர்வ் வங்கியின் பணவீக்கம் தொடர்பான நடவடிக்கைகள் பலனளிக்கும் வாய்ப்பு மிகக் குறைவே; நீண்ட கால அடிப்படையில் இன்றைய கிராமப்புற அவலங்களைத் துடைத்து விவசாயத் துறையை மேம்படுத்தப் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

மீண்டும் ஒரு பசுமைப்புரட்சியை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

Source : www.dinamani.com - Monday September 1 2008

No comments: