I LOVE TAMIL


Saturday, April 11, 2009

கொடுத்ததை திருப்பிக் கொடுக்கும்

இந்திய தீபகற்பத்தில் 7500 கி.மீ. நீளக் கடற்கரை இருக்கிறது. ஆனால், இந்த கடற்கரையை நாம் எந்த அளவுக்கு அழகாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க அக்கறை செலுத்துகிறோம் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

கடற்கரையில் மனிதர்கள் போடும் பிளாஸ்டிக் பை குப்பைகளை எடுக்க மாணவ, மாணவியரைப் பயன்படுத்துகின்றன பெருநகர அமைப்புகள். ஆனால், கடலின் மடியில் கொண்டு சேர்க்கும் கழிவுகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

இந்தியக் கடற்கரையின் பெரும்பகுதி சுகாதாரமானவை அல்ல என்பது வெறும் மனிதக் கழிவுகளைப் பற்றியது அல்ல. கடலோரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளும், பெரு நகரங்களும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடலை மாசுபடுத்துவதால் நேர்ந்துவரும் அவலம்தான் இது! தற்போது நாம் கடலை மாசுபடுத்தும் வேகத்தைப் பார்த்தால், அடுத்த தலைமுறையினர் நம் பெருநகரத்தின் கடற்கரையில் நிற்பதற்கும் முகமூடி அணிந்து, கால்களுக்கு உறை அணிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.

இந்தியக் கடலுக்குள் ஒரு நாளைக்கு 1,600 மில்லியன் டன் சாக்கடைமண் கலக்கிறது. தொழில்துறை கழிவுகள் 50 லட்சம் மில்லியன் டன் எனப்படுகிறது. மும்பை, சென்னை, கோல்கத்தா போன்ற பெருநகரங்களில் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 23 கோடி லிட்டர் தொழிற்கழிவுகள் கடலில் கலக்கின்றன. சாக்கடை நீர் 220 கோடி லிட்டர் கலக்கிறது. இவை சாதாரண நாட்களில்! மழைக் காலத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை அப்படியே நதிகளில் கலந்து விடுகின்றன. அவை யாவும் நேராகக் கடலுக்குத்தான் வந்து சேர்கின்றன. சென்னை நகரவாசிகளுக்கு கூவம் நதி எவ்வாறு ஒவ்வொரு மழைக்காலத்திலும் இயல்பாகத் தூய்மை பெறுகிறது என்பது தெரிந்த ஒன்றுதான். நாம் கலக்கும் நச்சு போதாதென்று, வெளிநாட்டு கதிர்வீச்சுக் குப்பைகளை கப்பலில் ஏற்றிவந்து கொட்டிவிட்டுப் போவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு பெருநகரின் மொத்த அழுக்கையும் சாக்கடை மற்றும் நச்சுக்கழிவையும் காலடியில் இருக்கும் கடலில் கலந்துவிட்டு, சுகாதாரம் தேடி கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வதுபோல வாழ்க்கையின் முரண் வேறு ஏதும் இருக்க முடியாது.

இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் அனைத்தும் ஆபத்தான நச்சுகளைக் கொண்டவை என்பதுடன், இந்த நீரில் வாழும் கடல் மீன்கள் மக்களுக்கு உணவாக வந்து சேரும்போது, மீன்களில் தேங்கியுள்ள நஞ்சு, மனிதருக்கு பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது. இது மனிதர்களுடன் நின்றுபோவதில்லை. அருகிவரும் உயிரினங்களையும் பாதிக்கிறது.

ஒரிசா கடற்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள தொழிற்கழிவு மாசுகளாலும், மீன்பிடி இயந்திரப் படகுகளாலும் ஆலிவ் ரெட்லீ என்று அழைக்கப்படும் ஆமைகளின் இனப்பெருக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இந்த கடல் ஆமைகள் அருகிவரும் உயிரினப் பட்டியலில் இடம் பெற்றவை. இலங்கைக்கு அருகிலிருந்து பல ஆயிரம் மைல்கள் நீந்தி வந்து, ஒரிசா கடற்கரையில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன.

ஆனால், ஒரிசா அரசுக்கு ஆலிவ் ரெட்லீ ஆமைகளைவிட, தொழிற்கூடங்கள்தான் மிக முக்கியமாக இருக்கிறது. ஒரிசாவின் கடற்கரை நகரமான கலிங்கநகர் என்ற இடத்தில் 1300 ஹெக்டேர் நிலப்பரப்பில் டாடா நிறுவனம் மிகப் பெரிய தேனிரும்புத் தொழிற்சாலையை அமைக்க மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, பணிகளைத் தொடங்கிவிட்டது. இதுகூடாதென்று பலத்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும்கூட, இந்தப் போராட்டங்களில் சுமார் 13 பேர் இறந்த பிறகும்கூட, இந்தத் தொழிற்சாலையை அமைக்கும் பணி நிற்கவே இல்லை.

இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான மீனவர்கள் கடலை நம்பித்தான் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் சுமார் ரூ.7000 கோடி அன்னியச் செலாவணியை கடல்மீன்கள் ஆண்டுதோறும் பெற்றுத்தருகின்றன. ஆனால் இதுபற்றிய எந்த உணர்வும் இல்லாமல் இந்திய நகர மக்களும், தொழிற்கூடங்களும் நதிகளையும், கடலையும் நாசம் செய்து வருகின்றனர்.

கடற்கரையை மாசு இல்லாமல் வைத்துக் கொள்வதில் வெளிநாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பிரமிப்பைத் தருகின்றன. நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து எண்ணெய் கசடுகள் கரையொதுங்கினால், நாம் அதைப் பற்றி கவலைப்படவே மாட்டோம். ஆனால், வெளிநாட்டினர் சும்மா இருப்பதில்லை. கரையொதுங்கும் அந்த எண்ணெய்க் கசிவுகளை அகற்றும் முயற்சிகளில் இறங்குகின்றனர். கடற்கரையையும் கடலையும் சுத்தமாக வைத்திருக்க பொருள்செலவு பாராமல் அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர்.

ஏனென்றால் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது: "கடல் எதையும் தன்னிடத்தில் வைத்துக்கொள்வதில்லை; மனிதரும் நதிகளும் கொண்டு வந்து கொட்டும் அதே சாக்கடையை, அதே நஞ்சினை, கடலலையில் எற்றுண்டு கரையொதுங்கும் பிணத்தைப் போலவே, மீண்டும் வந்த வழியிலேயே திருப்பி விடும்' என்று!


Thanks to www.dinamani.com -April 11 2009

No comments: