I LOVE TAMIL


Friday, June 26, 2009

`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்


`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்
வெள்ளி, 26 ஜூன் 2009( 12:17 IST )
சென்னையைச் சேர்ந்த சன் ஸ்டார் டிரேடிங் நிறுவனம், பிரிட்டன் நாட்டின்தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட `பயோபின்' எனும் மக்கிப்போகும்தன்மையுடைய பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தவகை பைகள் அல்லது கவர்களால், சுற்றுச்சூழல் மாசு படுவதுபெருமளவுக்xகுத் தவிர்க்கப்படுவதாக நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜேஷ்கேதான், சி.எல். முத்தையா ஆகியோர் தெரிவித்தனர்.



இந்தியாவின் தற்போதைய முக்கியப் பிரச்சினையான `புவி வெப்பமடைதலை' ஓரளவுக்கு தவிர்க்க இந்த வகை பைகள் உதவும் என்று தெரிவித்த அவர்கள், வீடுகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இவற்றைப் பயன்படுத்துவதால் எதிர்கால சந்ததியினரை பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்றனர்.

இந்தவகை பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தடுக்கப்படுவதாக ராஜேஷ் குறிப்பிட்டார்.

மக்கும் தன்மைக்கான (ASTM 5208) ஏஎஸ்டிஎம் 5208, 5510, 5988-96, 6954-04 சான்றிதழ்களையும் இந்த பைகள் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரிட்டனின் `சிம்பொனி என்விரான்மென்ட் இங்' நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட d2W தொழில்நுட்பத்தில் `பயோபின்' பைகள் தயாரிக்கப்படுவதாக முத்தையா தெரிவித்தார்.

பல்வேறு அளவுகளில் இந்த வகை பைகள் கிடைப்பதாகவும், வழக்கமான பிளாஸ்டிக் பைகளைப் போன்றே தோற்றமளித்த போதிலும் சில மாதங்களில் மக்கும் தன்மை கொண்டவை என்பதோடு, பிளாஸ்டிக் பைகளுக்கே உரிய அனைத்து அம்சங்களும் கொண்டவை என்றார் அவர்.

மேலும் முழுக்க, முழுக்க மறுசுழற்சிக்கு ஏற்றவை. இவற்றை மறுசுழற்சி செய்யும்போது எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

பாலி எத்திலின் அல்லது பாலி புரோப்பிலின் முறையில் இவை தயாரிக்கப்படுவதாகவும் இயக்குனர்கள் கூறினர்.


இந்த வகை பைகளை மக்கச் செய்வதால் கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் மற்றும் கழிவுகளாக மாறி விடும் என்றும், கழிவுகளும் மிகவும் குறைந்த அளவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதுடன், கழிவுகளின் தன்மை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பயோபின் பைகளை ஐஎஸ்ஓ 9001 -2000 தரச்சான்று பெற்ற சிம்பொனி பாலிமர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்குகிறது.

நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா நிறுவனர் எம்.பி. நிர்மல் கலந்து கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான பைகளை அறிமுகப்படுத்தியமைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

எக்ஸ்னோரா எப்போதுமே பசுமையை நோக்கியே செயல்பட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். பசுமைப் புரட்சியை நோக்கிய மற்றொரு மைல்கல்லாக `பயோ பின்' பைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ப்ரிஸம் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யன் பட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

நன்றி : http://tamil.webdunia.com/newsworld/finance/news/0906/25/1090625091_1.htm

No comments: