பருவமழை பொய்ப்பதால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம். அடுத்து உடனடியாக எதிர்கொள்ள வேண்டியபிரச்னை குடிநீர். கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டைநோக்கி தமிழகம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.தமிழகத்தில் உள்ள 92,000 கிராமங்களில் 3,300 கிராமங்களில்கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நிலைமை 160 பேரூராட்சிகளிலும் 52 நகராட்சிகளிலும் உள்ளது.தமிழகத்தின் பல இடங்களில் கிராமப்புற மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவதும், அதிகாரிகளை முற்றுகையிடுவதும் அதிக எண்ணிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன.நாளுக்கு நாள் இதன்பிடி கிராமப்புற மக்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக மாறிக்கொண்டிருக்கிறது.நகராட்சி, மாநகராட்சிகளில் இத்தகைய குடிநீர்ப் போராட்டம் நடந்தால், இந்தப் போராட்டத்துக்கு அரசியல் மற்றும் அதிகார ஆதரவு கிடைக்கும். ஏனென்றால், இதைக் காரணம் காட்டி இரண்டு லாரிகளில் தண்ணீர் விநியோகம் என்று சொல்லி, ஒரு லாரியைஓட்டல்களுக்குத் திருப்பிவிட்டு நாள்தோறும் கணிசமான தொகையைப் பார்க்க முடியும். ஆனால் கிராம மக்களுக்காக குடிநீர் விநியோகம் என்பதை பேரூராட்சிகளால் செய்ய முடியாதே!மேலும், கிராம மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை. அந்தந்த ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடிநீர்க் கிணற்றிலிருந்து தண்ணீரை மேனிலைத்தொட்டிக்கு ஏற்றி, விநியோகம் செய்யப்படுகிறதே தவிர, இவைபல இடங்களில் சுத்திகரிக்கப்படுவதுகூட இல்லை. ஆனால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. கிணறுகள் வற்றிவிட்டன.தமிழக அரசின் கொள்கைப்படி, ஒரு தனிமனிதனுக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு கிராமத்தில் 40 லிட்டர், பேரூராட்சியில் 70 லிட்டர், நகராட்சியில் 90 லிட்டர், மாநகராட்சியில் 135 லிட்டர். இத்தகைய மாறுபட்ட அளவீட்டு முறையே அநியாயமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் குடிநீர்த் தேவை என்னவோ ஒரே அளவுதான். நகர மக்கள் குளிக்க, துணி துவைக்க, தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச, கழிவறைக்குப் பயன்படுத்த என்று எல்லா பயன்பாட்டுக்கும் சேர்த்துத்தான் மாநகராட்சி மக்களுக்கு அதிகமான அளவும், கிராமத்து மனிதனுக்குக் குறைந்த அளவும் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் கிராமத்து மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சத் தேவைகூடப் பூர்த்தியாகவில்லை.நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி வழங்கும் குடிநீரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிப்பதற்குப் பயன்படுத்துவதே இல்லை. இவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க் கேன்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். உள்ளாட்சி விநியோகம்செய்யும் பெருமளவு குடிநீர், குளியல் மற்றும் நவீன கழிவறைக்கே செலவிடப்படுகிறது என்பது மற்றொரு கசப்பான உண்மை.அண்மையில் கோவையில் ஒரு தனியார் கல்லூரி நடத்திய ஆய்வு, நீர்க் கசிவுகளும் குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் நீர்த் திருட்டும் மிக அதிகமாக இருப்பதால்தான் மக்களுக்குத் திட்டமிட்ட அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என்கிறது. நீர்த் திருட்டுஇழப்பும்கூட, இத்திட்டத்தில் பயன்பெறும் வழியோர கிராமங்களின் தலையில் விழுகிறது.கல்வியைத் தத்தெடுத்து வளர்க்கும் அரசியல்வாதிகள், குடிநீர் கேன் விநியோகத்தையும், அதற்கான ஆலைகளையும் தத்தெடுத்து சேவை செய்கிறார்கள். இவர்கள் உள்ளாட்சி விநியோகிக்கும் நீரை அப்படியே கேன்களில் பிடித்து, "பியூர் வாட்டர்' என்ற பெயரில்அடைத்து விற்கிறார்கள். "பியூரிபைடு ட்ரிங்கிங் வாட்டர்' என்று லேபிள் ஒட்டினால் சட்டப்படி குற்றம். ஆனால் "பியூர் வாட்டர்' என்பது திருட்டுக் குடிநீராக இருந்தாலும் தண்டனை இல்லை.இதில் வேடிக்கையானதும் வேதனையானதும் என்னவென்றால், ஏரிகளையும் குளங்களையும் அழித்த நகர, மாநகரங்கள், தங்களுக்குத் தேவையான குடிநீரை, உலகத்தில் மழையே பெய்யாவிட்டாலும்கூட தங்களுக்கு மட்டும் கிடைக்கும்படி செய்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், ஆட்சியாளர்களின் இருப்பிடமாக நகரம் இருக்கிறது. ஆனால் கிராம மக்கள் அப்படியல்ல. அவர்களது ஏரி மற்றும் நிலத்தடி நீரை அண்டை நகரங்கள் உறிஞ்சுவதால்தான் அவர்கள் கிணறு வற்றிப்போகிறது. அதனால்தான் அவர்கள் தாகத்துக்குத் தண்ணீர் இன்றித் தவிக்கிறார்கள்.தமிழக அரசு குடிநீர்ப் பிரச்னைக்காக மொத்தம் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ. 21 கோடி வழங்கியுள்ளது. குறைந்த பட்சம், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கைகளில்மட்டுமாவது நேர்மையாகவும் முறைகேடுகளால் நிதி ஒதுக்கீடு காணாமல் போகாதபடியும் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.நகர மக்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வதைச் சற்றே குறைத்துக்கொண்டு, கிராமங்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும்.ஒரு லிட்டர் குடிநீரை ஒரு ரூபாய்க்கு வாங்கும் சக்தி நகர மக்களிடம் இருக்கலாம். கிராம மக்களிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்குகிற அளவுக்குத்தானே கிராமப்புறப் பொருளாதாரம் இருக்கிறது!
Thanks : www.dinamani.com on 02 Sep 2009
No comments:
Post a Comment