சென் னைப் பெருநகரின் அகண்ட சாக்கடைகளாக உள்ள கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மூன்றையும் தூய்மைப்படுத்தி, சிங்காரச் சென்னையை உருவாக்குவதற்காக சென்னை நதிகள் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். 1967-ல் முதன்முதலாகத் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தபோதே, கூவத்தில் படகுவிடும் திட்டத்தைத் தொடங்கினார் அன்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த இன்றைய முதல்வர் மு. கருணாநிதி. அதற்காகக் கட்டப்பட்ட படகுத்துறைகளின் சிதைந்த மிச்சங்களை இப்போதும் சில இடங்களில் காண முடிகிறது. அப்போது அவரால் அத்திட்டத்தை செய்துமுடிக்க முடியவில்லை. "மகன் தந்தைக்காற்றும் உதவி' அவர் தொடங்கிய பணியை நிறைவு செய்வதுதான். இந்த ஆணையம் எத்தகைய பணிகளை முதலில் செய்யப்போகிறது; இதற்கான மதிப்பீடு என்ன, இச்செலவுக்கான நிதியை எங்கிருந்து பெறப்போகிறார்கள் என்ற விவரங்கள் விரைவில் இதுபற்றிய அறிவிப்புகளாக வெளியாகும். முதலில் கூவத்தைத்தான் எடுத்துக்கொள்ள இருக்கின்றனர். கூவம் மிகமிக மோசமாக மாசடைந்து, கழிவுகள் நகரவும் முடியாதபடி தேங்கிக் கிடக்கிறது. கூவத்தில் உள்ள தண்ணீரை எடுத்து, தெளியவைத்து, வடிகட்டிய நீரில் மீன்களை விட்டால், 4 மணி நேரத்தில் மீன்கள் செத்துவிடுகின்றன என்பதுதான் கூவம் குறித்து ஆய்வுமுடிவுகள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்ஸிஜன் இல்லை. வெறும் நச்சு உலோகக் கலப்பும், சேறும் சகதியும்தான் உள்ளன. அடையாறும் அந்தவிதமாகவே படுமோசமாக மாசடைந்து கிடக்கிறது. மணப்பாக்கம் தடுப்பணை வரை அடையாறு கொஞ்சம் தூய்மையாக இருந்தாலும், சென்னை பெருநகரத்தில் நுழைந்தவுடன் அதன் மேனியில் வெறும் குப்பைகளும் நச்சுக் கழிவுகளும்தான் கொட்டப்படுகின்றன. "அடையாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதே நம்ப முடியாத விஷயமாக ஆகிவிட்டது. அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் 1950 களில் இருந்த நிலை உருவாகவும், படகுகள் ஓடவும், நீர்வாழ் உயிரினங்கள் அவற்றில் காணப்படும் சூழல் மீண்டும் வரவேண்டும். இது முக்கியமான பணி என்பதிலும், இதை எப்பாடு பட்டாகிலும் செய்தாக வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இருப்பினும், இத்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், இது தேர்தல் கால அரசியல் பிரசாரமாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படிச் சொல்லக் காரணம் இருக்கிறது. சென்னையின் நதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தேவை. இதற்குள் 3 சட்டப்பேரவை தேர்தல்களையும் 2 உள்ளாட்சித் தேர்தல்களையும் சென்னை சந்திக்க நேரலாம். இத்திட்டம் அரசியல் கட்சியின் சாதனையாக முன்வைக்கப்படுமானால், இத்திட்டத்தை எதிர்க்கட்சிகள் குறைகூறும், விமர்சிக்கும் என்பதோடு, ஆட்சி மாற்றம் ஏற்படுமேயானால், இத்திட்டத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பார்கள், கிடப்பில் போடுவார்கள். இதனால் மக்களுக்கும் இழப்பு, சென்னை நகருக்கும் இழப்பு.சிங்கப்பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்தான். இந்த நதி கூவம் போல மிகமிக மோசமாகாத நிலையிலேயே, 1977-ம் ஆண்டில், "சிங்கப்பூர் நதி மற்றும் கலாங் கழிமுகத் தூய்மைத் திட்டம்' தொடங்கப்பட்டு 10 ஆண்டு கால அவகாசத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டு, அதன்படி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டதன் முழுமுதற் காரணம்- அது அரசியல் வெற்றியாக ஆக்கப்படவில்லை என்பதுதான். சிங்கப்பூர் நதியின் கரையிலும் கழிமுகப் பகுதியிலும் குடியிருந்த 26,000 ஏழைக் குடும்பங்கள் பாரபட்சமின்றி ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டனர். 2,800 குடிசைத்தொழில் மற்றும் சிறுதொழில்கூடங்களும் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டன. நடைபாதை வணிகர்கள், தெருவோர உணவகங்கள் எல்லாமும் கழிவுநீர் போக்கிகள் கொண்ட தனியிடங்களுக்கு மாற்றப்பட்டன. பிளாஸ்டிக் பொருள் போன்ற திடக்கழிவுகள் சிங்கப்பூர் நதியில் கலக்காதபடி சிறப்புத் தடுப்பு அமைப்புகள் கரையோரங்களில் ஏற்படுத்தப்பட்டன. இதற்கான திட்டச் செலவு 20 கோடி டாலர்கள். கூவத்தை அதன் உற்பத்தி இடத்திலிருந்து கழிமுகம் வரை சுமார் 65 கி.மீ. தொலைவுக்குத் தூய்மைப்படுத்தவும், அடையாறு (சுமார் 48 கி.மீ.), பக்கிங்காம் கால்வாய் எல்லாவற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பையும் குடிசைப் பகுதிகளையும் நீக்க வேண்டுமானால் மிகக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் குடிசைகளை அகற்றி, புறநகர்ப் பகுதியில் மாற்றிடம் தந்தாக வேண்டும். பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தொழில்நிறுவனம் மற்றும் மருத்துவமனைக் கழிவுகள் இதில் கலப்பதைத் தடுக்க வேண்டும். இத்தனையும் செய்ய வேண்டுமானால், அரசியல் சாய்வு இல்லாத அரசின் உறுதிப்பாடு தேவை. வாக்கு வங்கிகள் பற்றிய எந்த நினைப்பும் இல்லாமல், கடமையைச் செய்யும் உணர்வு மட்டுமே இருந்தால்தான் இத்திட்டம் வெற்றி அடையும். மேலும், தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை பெருநகரின் நதிகளுக்கு மட்டும் ஆணையம் அமைத்திருப்பதைக் காட்டிலும், ஏன் தமிழக நதிகள் ஆணையம் என அமைக்கவில்லை என்பது சற்று வருத்தம் தருகிறது. தமிழகத்தின் நதிகள் அனைத்துமே ஏறக்குறைய கூவம், அடையாறு போல தூய்மை கெட்டுப்போய் கிடக்கின்றன. மணல்கொள்ளையாலும் தொழில்துறைக் கழிவுகளாலும் மேனி மெலிந்து, நோயுற்றுக் கிடக்கின்றன. இவற்றையும் தூய்மைப்படுத்துவது தமிழக அரசின் பணிதானே? வாஷிங்டனுக்கு ஒரு பொட்டோமேக். லண்டனுக்கு ஒரு தேம்ஸ். பாரீசுக்கு ஒரு ரைன். சென்னைக்கு ஒரு கூவம் என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியுடைய கனவு மட்டுமல்ல. ஒவ்வொரு சென்னைவாசியின் கனவும்கூட. நல்லதொரு முயற்சி துணை முதல்வர் தலைமையில் செயல்படத் தயாராகிறது. இந்த ஆக்கபூர்வமான திட்டம் அரசியலாக்கப்படக் கூடாது!
Thanks to : www.dinamani.com - 07 Dec 2009
No comments:
Post a Comment