உலகப்பாரம்பரியச் சின்னமாகப் புகழ்பெற்று விளங்கும் தஞ்சைப் பெரிய கோயிலைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இச்சுற்றுலா தலத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான அயல்நாட்டினர் வருவதால் நம் நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கிறது. நம் நாட்டினரும் அயல்நாட்டினரும் இக்கோயிலின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள தொல்லியல்துறை தகுந்த ஏற்பாடுகளைச் செய்து சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.
பெரியகோயில் வளாகத்துக்குள் சுமார் 200 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு திரை அரங்கம் ஏற்படுத்தலாம். இவ்வரங்கு குளிர்சாதன வசதியுடையதாக இருந்தால் மிகவும் நன்று.
இக்கோயிலைப்பற்றிய செய்திகளையும் கதைகளையும், சிற்பங்களையும், ஓவியங்களையும், குறுந்தகடுகள் மூலம் பெரிய திரையில் ஒளிபரப்பலாம். குறுந்தகடுகள் 15 நிமிடங்கள், 30 நிமிடங்கள், ஒரு மணி நேரம் காணக்கூடியதாக இருத்தல் நன்று.
இதில் முக்கியமாகப் பலமொழிகளில் இக்குறுந்தகடுகள் இருத்தல் மிகமிக அவசியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, இந்தி, ஒரியா, உருது, ஆங்கிலம், பிரெஞ்சு, டச்சு, இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகீசு போன்ற மொழிகளில் இருக்கலாம்.
இக்கோயிலைக் காண ஏழைகளும், செல்வந்தர்களும், படித்தவர்களும், படிக்காதவர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் வருகின்றனர்.
இந்திய மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும், வருபவர்கள் பலருக்குத் தமிழோ, ஆங்கிலமோ தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கு தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதிவைத்துள்ள செய்திகளைப் படித்து அறிந்து கொள்ள முடியாது. எனவே, இக்கோயிலைப் பற்றிய செய்திகளையும், கதைகளையும் தங்கள் தாய்மொழியில் கேட்டும், கோயிலின் அழகையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் வெண்திரையில் பார்த்தும் மகிழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரையில் ஒரு மொழியில் செய்திகளைச் சொல்லும்போது அத்திரையின் அடிப்பகுதியில், அடிக்குறிப்பின் மூலம் வேறு ஒரு மொழியில் அதாவது தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ செய்திகளைத் தெரியப்படுத்தலாம்.
குறுந்தகடுகளின் நேரத்துக்கேற்றபடியும், அரங்கின் பராமரிப்புக்கேற்றபடியும் பார்வைக்கட்டணம் நிர்ணயிக்கலாம். குளிர்சாதன வசதியுடன் காட்டப்படும் காட்சிகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கலாம். பொதுவாக லாப நோக்கமில்லாமலும், பராமரிக்கும் செலவுக்கேற்றவாரும் கட்டணம் வசூலித்தல் நன்று. சுற்றுலா பயணிகள் தங்கள் பொருளாதார நிலைக்கேற்றவாரும், காலநிலைக்கேற்றவாரும் குறுந்தகடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அயல்நாட்டினரும், சுற்றுலா ஆர்வமுடையவர்களும், ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் ஒரு மணிநேர குறுந்தகட்டினைக் காண வாய்ப்புள்ளது. தனிப்பேருந்துகள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள அனுமதிக்கலாம். பள்ளி, கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் இவ்வரங்கில் காட்சிகளைக் காண்பிக்கலாம்.
குறுந்தகடுகளில் கூறப்படும் முக்கிய செய்திகளையும், காட்டப்படுகின்ற ஒளிப்பதிவுகளையும், வல்லுநர்களைக் கொண்டு இறுதிசெய்யலாம். காட்சிகளைக் காண்பிக்கும்போது, வாத்தியங்களின் இசையைப் பயன்படுத்துதல் நலமாக இருக்கும். மேலும் கீழ்க்கண்ட செய்திகளைப் பதிவுசெய்தல் நன்று.
சோழப்பேரரசின் தலைநகரான தஞ்சை மாநகரில் ஒரு பெரிய கோயிலை அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜசோழன் கட்டினான். இக்கோயில் வியத்தகு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டதால் அவனுடைய புகழ் உலகெங்கும் இன்றும் பரவியிருக்கிறது.
பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில், 793 அடி நீளம், 397 அடி அகலம் கொண்டது. நடுவிமானம் 216 அடி உயரத்தில் உள்ளது. உச்சியில் உள்ள கருங்கல்லின் எடை 80 டன் ஆகும். இவ்வாலயக் கட்டுமானப்பணி முடிய 4 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. கி.பி. 1010 -ம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டதால் கி.பி. 2010 -ம் ஆண்டில் ஆயிரமாவது ஆண்டுவிழா காண்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் மலைகளைக் காண முடியாது. ஆதலால் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தே கருங்கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இக்காலத்தில் உள்ளதுபோல் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை. ஆகையால் மிகவும் இன்னலுற்றே இக்கோயில் திருப்பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் நுழைந்தவுடன் நம் கண்முன்னே காணும் மிகப்பெரிய நந்தி காண்போரைக் கவரும் வகையில் உள்ளது. சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் இந்நந்தி, ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இது 19 1/2 அடி நீளமும், 8 1/4 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரே கல்லைக்கொண்டு செதுக்கப்பட்ட பெரிய நந்தி இதுவேயாகும்.
அக்காலத்தில் ராஜராஜன் இலங்கைமீது படையெடுத்து அந்நாட்டின் ஒரு பகுதியை தன் ஆட்சியின்கீழ் கொண்டு வந்துள்ளான். தன் ஆட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள சில கிராமங்களை தஞ்சைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளான். இச்செய்தி அங்குள்ள ஒரு கோயில் கல்வெட்டுமூலம் தெரியவருகிறது.
தஞ்சைக் கோயில் கல்வெட்டுகள் மூலம் ராஜராஜனின் மேலைச்சாளுக்கிய படையெடுப்புகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாலயத்திற்கு ராஜராஜன், அவனைப் பின்தொடர்ந்த அரசர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள் அளித்த அறக்கட்டளைகள் பற்றியும், நன்கொடைகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது.
மற்றொரு கல்வெட்டின் மூலம் ""ராஜராஜேச்சுவர நாடகம்'' இருந்ததாகத் தெரியவருகிறது. விழாக்காலங்களில் இந்நாடகம் தமிழ்மொழியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நாடகம் நடத்துவதற்கு 120 கலம் நெல் ராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டுள்ளது. இந்நாடகம் இப்போது கிடைக்கப் பெறவில்லை. ஆலயங்களின் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் எவ்வாறு சோழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையை விவரிக்கின்றன என்பதைத் தெரியப்படுத்தலாம்.
பெரியகோயிலில் உள்ள கருவறையைச் சுற்றிக் காணப்படும் ஓவியங்களையும், ஓவியங்களில் காணப்படும் கதைகளையும் கூறலாம். காலத்தால் அழியாத ஓவியங்களை அக்காலத்தில் மூலிகைகள், பூக்கள், வேர்கள், பட்டைகள், முட்டை, வச்சிரம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் நாட்டில் சிறப்புற்று விளங்கும் நடனக்கலை பற்றிய விளக்கங்கள் சிற்பவடிவில் இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சுமார் 400 நடன மங்கையர்களுக்குமேல் பணிபுரிந்துள்ளனர் என்ற செய்தி வியக்கத்தக்க ஒன்றாகும்.
தஞ்சை கோயிலில் 13 அடி உயரமுள்ள லிங்கமும், நந்தியும் மிகப்பெரிய உருவில் காட்சியளிப்பதால் இக்கோயிலை "பெருவுடையார்கோயில்' என்று அழைக்கின்றனர். இப்பெரிய சிவன்கோயிலைக் கட்டியதால் ராஜராஜன் சிவபாதசேகரன் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறான். இந்தச் சிவன்கோயிலில் ஒரு சிறிய புத்தர்சிலை செதுக்கப்பட்டுள்ளது விந்தையாக இருக்கிறது. மேலும் நாகப்பட்டினத்தில் அயல்நாட்டு அரசனால் கட்டப்பட்ட புத்தர் கோயிலுக்கு ராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரை தானமாக வழங்கிய செய்தியை செப்பேட்டில் செதுக்கியுள்ளான். மேலும் திருமாலுக்கு மணலூரில் ஒரு வைணவத் திருக்கோயிலும் எடுத்துள்ளான். இதிலிருந்து இவ்வரசனின் சமயப்பொறை தெளிவாகத் தெரிகிறது.
ராஜராஜனுக்குப்பின் அரசாண்ட அவனது மைந்தன் ராஜேந்திரன் தஞ்சைக்கோயிலைப் போலவே ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஒரு சிவன்கோயிலைக் கட்டியுள்ளான். இத்தலமும் தமிழகத்தில் ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளும், சிற்பங்களும், கலைக்கூடங்களும், கட்டடங்களும், ஓவியங்களும், செப்புப்படிமங்களும் சோழர்களின் இயல், இசை, நாடகம், கலை, பண்பாடு, கலாசாரம், நாகரிகம் போன்றவற்றின் பெருமைகளையும், பழமையையும் பறைசாற்றுகின்றன. ஓராயிரமாண்டு பழமையான தஞ்சை பெரியகோயிலின் புகழை இத்தரணி மக்களுக்குத் தெரியப்படுத்துவது அரசின் கடமையாகும்.
கட்டுரையாளர்: கல்லூரி முதல்வர் (ஓய்வு)
நன்றி: www.dinamani.com - 19 Feb 2010