I LOVE TAMIL


Tuesday, February 2, 2010

ரூ.180 கோடியில் தென்பெண்ணையாறு- செய்யாறு இணைப்பு

திருவண்ணாமலை, பிப். 1: ரூ.180 கோடி செலவில் தென்பெண்ணையாறு- செய்யாற்றை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனூரில் கட்டப்பட்டுள்ள அணையின் மொத்த உயரம் 119 அடியாகும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையில் மொத்தம் 107 அடி உயரம் நீர் உள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, தமிழக அரசு உத்தரவின்படி சாத்தனூர் அணையின் வலது, இடதுபுறக் கால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு திங்கள்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:

தமிழகத்தில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. மொத்த பாசனப் பரப்பு 35.6 லட்சம் ஹெக்டேராகும். ரூ.2,547 கோடி செலவில் 6.5 லட்சம் ஹெக்டர் நிலங்கள் பயன்பெறும் வகையில், மாநில நீர்வளத் திட்டம் 6 ஆண்டுகள் செயல்படுத்தப்படுகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ரூ.248 கோடி செலவில் 5,570 ஏக்கர் நிலங்கள் இத்திட்டத்தின் மூலம் புனமரமைப்பு செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.54.6 கோடி செலவில் 24,291 ஏக்கர் நிலங்கள் பயனபெறும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டு ரூ.197 கோடி செலவில் 14,633 ஏக்கர் நிலங்கள் சீர்ப்பெறும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தண்ணீர் வராததாலும் சாத்தனூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. வரும் ஏப்.24-ம் தேதி வரை 44 நாள்கள் 6 தவணைகளாக 2158 மில்லியன் கன அடி நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என்றார் வேலு.

விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் பேசியது:
சாத்தனூர் அணையின் இடது, வலதுபுறக் கால்வாய்கள் கடந்த ஜனவரி மாதமே திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போதிய நீர் இருப்பு இல்லை. மேலும் கடந்த ஆண்டு 90 நாள்கள் நீர் திறந்து விடப்பட்டது. நடப்பாண்டு 44 நாள்கள் மட்டுமே நீர் திறக்கப்படுகிறது.

வேலூருக்கு அடுத்து திருவண்ணாமலையில்தான் அதிக நீர்த்தேக்கங்கள் உள்ளன. செண்பகத்தோப்பு, குப்பநத்தம், மிருகண்டா நதி அணைகள் உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் வராக நதியின் படுகையில் உள்ள 30 ஏரிகள் ரூ.2.48 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 47 ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டன. வரும் ஆண்டு துரிஞ்சலாறு படுகையின் கீழ்  உள்ள செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் உள்ள 58 ஏரிகள், 38 அணைக்கட்டுகள் ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

மேலும் பாம்பனாறு மற்றும் வரட்டாறு படுகையில் உள்ள 20 அணைக்கட்டுகள், 3 ஏரிகளை ரூ.3 கோடியில் சீரமைக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என்றார் ராஜேந்திரன்.

மக்களவை உறுப்பினர் த.வேணுகோபால், எம்எல்ஏ கு.பிச்சாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.விஸ்வநாதன், கோட்டாட்சியர் பத்மா, நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், தண்டராம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவர் பன்னீர்செல்வம், துணைத் தலைவர் ஆர்.வணங்காமுடி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் குழந்தைவேலு, நீர்ப்பாசனத் சங்கத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


நன்றி: www.dinamani.com - 02 Feb 2010
 

No comments: