I LOVE TAMIL


Tuesday, February 2, 2010

விதிகளை மறந்த கோபுரங்கள்

புதுதில்லியில் உள்ள நொய்டா பகுதியில் பல்வேறு தனியார் செல்போன் நிறுவனங்கள் அமைத்துள்ள 400 நுண்ணலை கோபுரங்களில் (செல்போன் டவர்ஸ்) அரசின் முறையான அனுமதி பெறாத 190  நுண்ணலை கோபுரங்களுக்கு மின்இணைப்பைத் துண்டித்த நொய்டா அதிகாரிகள், அவற்றுக்குப் பூட்டு போட்டு மூடியுள்ளனர் . 

இந்த திடீர் நடவடிக்கை ஒரே நாளில் நடத்தப்பட்டதால், அந்தப் பகுதியில் கைபேசி வைத்துள்ள 4 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு (அங்கு மக்கள் தொகை 7 லட்சம்) அழைப்புகள் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அனுமதி பெறாததுதான் இதற்குக் காரணம் என்ற உண்மையை மறைக்க முடியாத நிலையில், அதிகாரிகள் முறைப்படி நோட்டீஸ் கொடுக்காமல் மூடியதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவித்துள்ளது இந்திய கைபேசி நிறுவனங்களின் சங்கம்.  

இந்தியத் தலைநகர் புதுதில்லி பக்கத்திலேயே காணப்படும் இதே நிலைமைதான் தமிழ்நாட்டிலும் இருக்க முடியும். அதே தனியார் தொலைபேசி நிறுவனங்கள் அதே போன்றுதான் அனுமதி இல்லாமல் நுண்ணலை கோபுரங்களை அமைத்திருப்பார்கள் என்பது நிச்சயம். 

செல்போன் நிறுவனங்கள் தடங்கல் இல்லாத சேவை அளிக்க வேண்டும் என்றால் நுண்ணலை கோபுரங்கள் அவசியம் இருந்தாக வேண்டும். வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக, நுண்ணலை கோபுரங்கள் அமைப்பதில் வேகம் காட்டும் நிறுவனங்கள், இதற்காக எத்தகைய விதிமுறைகளையும் மீறத் தயங்குவதில்லை. தனியார் செல்போன் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால், எங்கே இடம் கிடைத்தாலும் நுண்ணலை கோபுரங்களை அமைத்து விடுகிறார்கள். இதற்காக அவர்கள் தரும் வாடகை நகரம் மற்றும் அதன் மையப் பகுதியைப் பொறுத்து ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை. அதோடு, இடத்தின் உரிமையாளருக்கு இலவச செல்போன் மற்றும் கட்டணமில்லா அழைப்புகள் செய்யும் வசதி எல்லாமும் கொடுத்து மயக்கி விடுகிறார்கள். 

இதற்கான அனுமதி அந்தந்த உள்ளாட்சிகளால் வழங்கப்பட வேண்டும். அதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்துவதைத் தவிர்க்க விழையும் இந்த செல்போன் நிறுவனங்கள், வீட்டு உரிமையாளருக்கு அளித்த அதே சலுகைகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் கொடுக்கிறார்கள். பல நேரங்களில் இந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளே இடம் பார்த்துக் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் உள்ளாட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. 

இத்தகைய நுண்ணலை கோபுரங்கள் குடியிருப்புப் பகுதியில் அமையும்போது, மிக அருகில் இருக்கும் குடியிருப்புகளில் வசிப்போருக்கு முதலில் தூக்கமின்மை நோயும் பின்னர் அதன் தொடர்ச்சியாக பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பறவைகள்கூட இந்த நுண்ணலை கோபுரங்களைத் தவிர்த்து, விலகிச் செல்கின்றன என்பதும் சூழலியல் வல்லுநர்களின் குற்றச்சாட்டு. 

இவற்றைச் சுட்டிக் காட்டிய மும்பை உயர் நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்கள், குடியிருப்புகளின் மீது இத்தகைய நுண்ணலை கோபுரங்களை அமைக்கும்போது, தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், செல்போன் நிறுவனங்கள் அதைப் பொருள்படுத்துவதே இல்லை.

இத்தகைய நுண்ணலை கோபுரங்களால் பாதிக்கப்படுவோர், இவை முறையான அனுமதி பெறவில்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டால் தகவல் தரப்படுவதில்லை. உள்ளாட்சிகளுக்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய முறைகேடுகள் தடுக்கப்படுவதுடன், இத்தகைய நுண்ணலை கோபுரங்களில் அரசின் அனுமதி பெற்றுள்ள நுண்ணலை கோபுரங்கள் எவையெவை என்பதை உள்ளாட்சி வாரியாக இணைய தளத்தில் அறிவித்தால், முறைகேடாக அமைக்கப்பட்ட கோபுரங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ளவும், புகார் கொடுக்கவும் அல்லது நீதிமன்றத்தை அணுகவும் முடியும். இதைச் செய்வது உள்ளாட்சித் துறைக்கு எளிமையானதும்கூட. மேலும், தமிழகத்தில் எத்தனை இடங்களில் முறைகேடாக இம் மாதிரியான  கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் மூலமாகவே தெரிந்துகொண்டுவிட நல்லதொரு வாய்ப்பு உருவாகும். 

செல்போன் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுபவையாக இருக்கின்றன. நுண்ணலை கோபுரங்கள் அமைக்க அனுமதிக்கப்படும் இடத்துக்கான சொத்துவரியைப் பல மடங்காக உயர்த்தினால், உள்ளாட்சிக்குக் கூடுதல் வருவாய் கிடைக்க வழி ஏற்படும். மேலும், இதற்கான மின்இணைப்புக் கட்டணத்தையும் உயர்த்தி நிர்ணயிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

நன்றி: www.dinamani.com - 01 Feb 2010 (தலையங்கம்)

No comments: