I LOVE TAMIL


Saturday, January 30, 2010

முயன்றுதான் பார்ப்போமே!

வாக்களிக்கத் தகுதியுடைய அனைவரும் பொதுத் தேர்தலின்போது கட்டாயமாக வாக்களிக்கும்படி செய்வது இந்தியாவில் சாத்தியமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றம் மட்டுமே விவாதித்து, ஆலோசனை நடத்தி, அமல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் குஜராத் மாநிலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று இந்தியா முழுவதும் பொதுத்தேர்தலிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிக்கும் கடமையை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்று பரவலாக கருத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய கேள்விக்கு ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போதுதான், இந்தியாவில் இது சாத்தியமில்லை என்ற பதிலை நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்தியாவில் வாக்குப்பதிவு சராசரியாக 60 சதவீதமாகத்தான் இருக்கிறது. இதில் ஆளும்கட்சி அல்லது அக்கூட்டணிக்குக் கிடைக்கும் வாக்குகளையும் எதிர்க்கட்சிக்குக் கிடைத்த வாக்குகளையும் பிரித்துப் பார்த்தால், ஆளும் கட்சிக்கு ஆதரவான நபர்கள்- வாக்களித்த மற்றும் வாக்களிக்கத் தவறிய மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்காகவே இருக்கின்றனர்.

மூன்றில் ஒரு பங்கு மக்களின் விருப்பம் எப்படி ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக இருக்க முடியும். மக்களாட்சியில் மக்களின் முழுமையான பங்கேற்பு இல்லாவிட்டால் அது எந்த அளவுக்கு மக்களாட்சியாக இருக்க முடியும்? தேர்தலின்போது வாக்களிக்காமல், ஆனால் அதேநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விமர்சனம் செய்து கொண்டிருப்பது அர்த்தமற்ற புலம்பலாகத்தான் இருக்க முடியும். மக்களாட்சியில் மக்கள் அனைவருடைய பங்கேற்பும் இருப்பதும் அவசியம்.

உலக அளவில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கியுள்ள நாடுகள் 32 உள்ளன. அவற்றில்  ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பெரு, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் முக்கியமானவை. ஆனால் இவை மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகள். இங்கு 18 வயது முதல் 70 வரையிலான அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். உடல்நலம் குறைவு காரணமாக வாக்களிக்கவில்லை என்றால் மருத்துவச் சான்றிதழும், ஊருக்கு வெளியே வரமுடியாத தொலைவில் இருந்தால், அப்பகுதியின் காவல்நிலையச் சான்றிதழையும் காட்டி, விதிவிலக்கின் பயனைப் பெறலாம். இல்லாவிட்டால் அபராதம் செலுத்தியாக வேண்டும். பெரு நாட்டில் இதற்கான அபராதமாக அரசு நிறுவனத்தின் மூலம் அத்தகையோர் பெற்றுவரும் குடிமைப்பொருள் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பேச்சுரிமை, எழுத்துரிமைபோல, வாக்களிப்பதும் அல்லது அதைத் தவிர்ப்பதும் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை. ஐனநாயகத்தில் மக்களின் விருப்பமும் அரசின் கட்டாயப்படுத்தலும் நேர் எதிரானவை என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியென்று தெரியவில்லை.

 வாக்களிக்க விரும்பவில்லை என்றாலும் அதை வாக்குச்சாவடிக்கு வந்து 49 ஓ மூலம் பதிவு செய்ய சட்டப்படி வழிவகை இருக்கும்போது, வாக்குச் சாவடிக்கு வராமலேயே இருப்பது ஒரு குடிமகனின் உரிமை என்று சொல்வது சரியாக இருக்க முடியுமா?

வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். ஏனென்றால் இந்த அட்டைக்குப் பயன்பாடு இருக்கிறது. பல்வேறு ஆவணங்களுக்கு இந்த வாக்காளர் அடையாள அட்டை தேவையாக இருக்கிறது. ஆனால் தேர்தலின்போது வாக்களிக்கும் கடமை மட்டும் தேவையற்றதாகக் கருதப்படுகிறது.

தொடர்ந்து சில மாதங்களுக்குக் குடிமைப் பொருள் வாங்காத குடும்ப அட்டைகளை போலியாகக் கருதி, ரத்து செய்ய அரசினால் முடியும் என்றால், வாக்களிக்காதவர்களின் பெயர்களையும் இதேபோன்று பட்டியலிலிருந்து நீக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?

வாக்காளர் பட்டியலைத் தயார் செய்யவும், அதற்காக அடையாள அட்டைகள் தயாரிக்கவும் இந்திய அரசு எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கிறது என்பதைப் பார்க்கும்போது, வாக்களிப்பதைக் கட்டாயமாக்கினால் என்ன என்ற எண்ணம் எவருக்குமே தோன்றுவது இயல்பு.

அண்மைக்காலங்களில் நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்ததற்குக் காரணம், வாக்குச்சாவடிக்கு வராவிட்டால் -கொடுத்தவர்களுக்கு- பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அச்சம்தான் என்பதைப் பார்க்கும்போது, வாக்களிப்பது கட்டாயம் என்று செய்தால், அபராதம் அல்லது அரசு சலுகை மறுப்புக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் இருந்தால் அனைவரும் வாக்களிப்பார்கள் என்பது நிச்சயம்.

மக்கள் அனைவருடைய பங்கேற்பும் இல்லாமல் நல்லாட்சி என்பது சாத்தியமில்லை. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாலும் அதை வாக்குச் சாவடிக்கு வந்து பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவது இன்றைய காலத்தின் தேவையும்கூட.

நன்றி: www.dinamani.com - தலையங்கம் - 30.Jan.2010


No comments: