I LOVE TAMIL


Thursday, March 17, 2016

30 - 40 வாட்ஸ் வெளிச்சம் கிடைக்கும்!

30 - 40 வாட்ஸ் வெளிச்சம் கிடைக்கும்!
 
சூரிய சக்தியால் இயங்கும், பகலில் ஒளி தரும் விளக்கை குறைந்த செலவில், 50 வீடுகளில் இலவசமாகப் பொருத்தி இருக்கும் செங்கல்பட்டைச் சேர்ந்த பொறியாளர் தாஜுதீன்: தென் அமெரிக்காவைச் சேர்ந்த அல் பெரடோ மோசர் என்பவர், பிரேசிலில் செய்து காட்டிய முறை தான் இது. அதை நான் இணையத்தில் படித்தபோது, 'இது நம்ம நாட்டுக்குத் தான் அவசியத் தேவை. நாம் ஏன் நம் மக்களுக்கு இதைச் செய்யக் கூடாது' என யோசித்தேன்.என் யோசனையை, கேப்லின்பாய்ன்ட் சி.சி.பார்த்திபனிடம் தெரிவித்தேன். அவர், 'செலவைப் பற்றிக் கவலைப்படாதீங்க. நம் மக்கள் இல்லங்கள் வெளிச்சம் பெறட்டும்' என்றதோடு, இதன் முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டார்.முதற்கட்டமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, மஹாராஷ்டிராவில் தாராவி உள்ளிட்ட பகுதிகளில், 50 வீடுகளில் சூரியசக்தி விளக்குகளைப் பொருத்தி இருக்கிறோம்.நாங்கள் பொருத்தியதைப் பார்த்து ஆயிரக்கணக்கானவர்கள், 'எங்கள் வீடுகளுக்கும் அந்த விளக்கைப் பொருத்துங்கள்' என கேட்டிருக்கின்றனர். அதனால், அந்தந்தப் பகுதி இளைஞர்களை ஒருங்கிணைத்து, செய்முறை பயிற்சியை இலவசமாகக் கொடுத்து, 10 ஆயிரம் வீடுகளுக்கு சூரியசக்தி விளக்குகளைப் பொருத்த இருக்கிறோம்.

இந்த சூரியசக்தி விளக்கை தயாரிக்க, 1 லி., குளிர்பான பெட் பாட்டில் தான் முதல் தேவை. அதில் முழு அளவில் தண்ணீரை ஊற்றி, நாங்கள் தரும் பிளீச்சிங் ஏஜன்டை, ௧௦ - ௨௦ மி.லி., சேர்க்க வேண்டும். பாட்டிலை மூடி, கூரை அல்லது ஓட்டு வீட்டின் மேல் ஓட்டைப் போட்டு பாதி பாட்டில் மேலே தெரியும்படி வைத்து, சுற்றிலும் மழைநீர் உள்ளே வராமல் சிமென்ட் போட்டு, 'பேக்' செய்ய வேண்டும்.காலையில், சூரிய ஒளி பட்டதும், 30 - 40 வாட்ஸ் வெளிச்சம் கிடைக்கும். பென்சால்கோனியம் குளோரைடு, லயரலால் சோலெதொக்ஸிலேட், சோடியம் பை கார்பனேட் போன்ற கெமிக்கல்கள் கலந்த கலவையே, நாங்கள் தரும் பிளீச்சிங் ஏஜன்ட். அதில் சூரிய ஒளி பட்டதும் தண்ணீர், ௫௦௦ மடங்கு வெளிச்சத்தைக் கூட்டிக் காட்டும் தன்மை கொண்டது. ஐந்தாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பாட்டில் மூடியை, 'சீல்' செய்து விடுவதால் தண்ணீர் வற்றாது.மேலும், இரவில் ஒளிரும் சூரிய சக்தி விளக்கு ஒன்று தயாரிக்க, 500 ரூபாய் ஆகிறது. இதற்கான சோலார் பேனல் மட்டுமே, 350 ரூபாய். மத்திய மற்றும் மாநில அரசுகள் சேவை மனப்பான்மையோடு செய்யும் எங்களுக்கு ஒரு பேனல், 20 ரூபாய் அளவில் வழங்கினால், நாங்கள் ஒரு விளக்கை, 100 ரூபாய்க்குள் தயாரித்து இலவசமாக வழங்க முடியும். அதற்கு முயற்சியும் எடுத்து வருகிறோம்.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93
Dinamalar - 17.03.2016 - சொல்கிறார்கள்

No comments: