நல்ல விதைகளை சேர்த்து வைக்க வேண்டும்!
சூழலியலாளர் அழகேஸ்வரி: இப்போது அதிகளவில் நோய்கள் தாக்க காரணம் விதைகளே. சமீபத்தில், தமிழக அரசு வழங்கிய விதைகளை ஆர்வமுடன் வாங்கி சென்ற மாடித் தோட்ட ஆர்வலர்கள், பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேளாண் பல்கலைக்கழகம் வழங்கிய அந்த விதைகளுடன், இந்தோ - அமெரிக்க வீரிய விதைகளும் இருந்தது தான், இதற்கு காரணம்.
இந்த விதைகளால் என்ன ஆக போகிறது என, அவ்வளவு மெத்தனமாய் எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வளவு நாட்களாக நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து காய்கறிகளும், ரசாயன உரமிடப்பட்டவை தான்.
அதிலிருந்து மீள்வதற்காக தான், அவரவர் வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் வைக்க ஆரம்பித்தோம். இப்போது அதிலும், மண் அள்ளிப் போட்டிருக்கிறது மறைமுக அரசியல்.
இந்தோ - அமெரிக்க கலப்பின வீரிய விதைகள் என, அரசு வழங்கும் பாக்கெட்டிலேயே எழுதி உள்ளது. அதிலேயே, 'பாய்ஸன்' என, போட்டுள்ளது. இதை ஏன் வேளாண் அலுவலர்கள் கொடுத்தனர் என தெரியவில்லை.
தேவை அதிகம், உற்பத்தி பெருகும், எடை கூடும், நிறைய காய்க்கும் என, 'ஹைபிரிட்' விதைகளை விற்பவர்கள் கூறுகின்றனர். அதற்காக உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளும் கொடுக்கின்றனர். ஆனால், இவை வேண்டாம் என்று தானே, உலகம் முழுவதும் இயற்கை விவசாயத்துக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
நம் பயிரினங்கள் அதிக மழை, அதிக வறட்சி, பூச்சித் தாக்குதல் எல்லாவற்றையும் சமாளிக்கக் கூடியது. அதுமட்டுமின்றி, நம் நாட்டு காய்களுக்கு ஒரு குணம் உள்ளது. மண்ணுக்கேத்த குணம், நிலத்துக்கேத்த குணம் மற்றும் நீரின் குணம் என, அந்தந்தக் குணத்துடன் காய்கறிகள் விளைந்தன.
கலப்பின வீரிய விதைகளில் வளரும் காய்கறிகள், அதே நுண்ணுாட்டச் சத்துடன் வராது. சமீபத்தில், குஜராத்தில் ஒரு கண்காட்சிக்கு போனேன். அங்கே நாட்டு தக்காளி, கத்தரிக்காய் மற்றும் கொத்தமல்லி என, நாட்டுரகம் ஒன்றுமே கிடைக்கவில்லை.வட மாநிலம் முழுக்க மரபணு மாற்றப்பயிர்களே வந்துவிட்டது. இப்போது, ஒரு புடலங்காய் விதை, 20 ரூபாய், வெள்ளரி விதை, 12 ரூபாய் என விற்கின்றனர். 100 கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி போகப் போக, 1 கிலோ, 5,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படும்.ஆனால், இந்த விதையால் உருவாகும் பயிரில் வரும் காய்களில் இருந்து, திரும்ப விதையெடுக்க முடியாது. மீண்டும் விதைக்காக அவர்களிடம் போய் தான் நிற்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் வீடு, பணம், சொத்து சேர்த்து வைக்கின்றனரோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல விதைகளை சேர்த்து வைக்க வேண்டும். நமக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அப்போது தான் விதை பரவலாக்கம் இருக்கும்.
Thank - www.dinamalar.com - 04.03.2016 - Chennai Editon - Solkirakal
No comments:
Post a Comment