மு. முரளீதரன்
""அன்றாட வாழ்வில், நாம் காண்போர் அனைவருமே மகிழ்வுடன் வாழ்கிறார்களா?'' என்று திடீரென்று எனக்கு ஓர் ஐயம் ஏற்பட்டது! ஒவ்வொருவரின் முகத்திலும், ஏதோ ஒரு கவலை தெரிகிறது! நேற்றைய விஷயங்கள், இன்றைய நிகழ்வுகள் பற்றித்தான் நம்மவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்களே தவிர, "நாளைக்கு என்ன செய்வது'? என்ற எதிர்காலச் சிந்தனை பெரும்பாலோர்க்கு இல்லை! சிலரிடம் உண்டு! ஏனெனில், "இன்று நல்லபடியாக நாள் முடிந்தால் போதும்'! என்ற எண்ணமே மேலோங்குகிறது! அவ்வளவு இடர்ப்பாடுகள்!
நான் அண்மையில் என் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஓர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவர் பணியிலிருக்கும் போதே, முதல் தேதி சம்பளம் பெறும் நாளில் இருக்கும் முகமலர்ச்சி, மாதக் கடைசியான முப்பதாம் தேதியிலும் மாறாது! "இது எப்படி அவருக்குச் சாத்தியமாகிறது?' என்று நெடுநாள்களாக அவரைக் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது!
அவர் சொன்னார். ""நாம் படிக்கும் நீதி நூல்களும், நம்மைச் சுற்றி வாழ்வோரின் செயல்பாடுகளும் நம்மை மிகவும் எச்சரிக்கின்றன. ஆனால், நாம்தான் அதைக் கண்டுகொண்டு, நம் அன்றாட வாழ்வோடு பொருத்திக் கொள்வதில்லை! நாமும் சிந்தித்து, நம் குடும்பத்தினரையும் சிந்திக்கச் செய்துவிட்டால், அமல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம்! இதுவே சத்தியம்!
ஊரைத் திருத்தப் புறப்படுவதற்கு முன்பு, உன்னை நீ திருத்திக் கொண்டாலே போதும்! பிறருக்கு உபதேசிக்க உனக்கொரு தகுதி வந்தாலும்கூட, யாராவது கேட்டாலொழிய நீயாகச் சென்று ஆலோசனை தரவேண்டியிராது'' - என்றதும், நான் என்னுள்ளே மெதுவாக ஒரு மாற்றம் தோன்றுவதை உணர்ந்தேன்!
வேண்டாத விஷயங்களிலும்கூட, நாமே முந்திக்கொண்டு, பிறர்க்கு அறிவுரை கூறுவோர் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்? வீண் பகட்டாக வாழ்ந்து, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல், ""வாய்தா'' வாங்கிக் கொண்டு, ஒரு கடனை வாங்கி, மற்றொரு கடனை அடைத்து, எந்தக் கடனிலிருந்தும் மீளாமல், விழிகள் பிதுங்கி, மொழிகள் பதுங்கி, அவதிப்படுகிறோமே, இதற்கு மாற்றாக நல்வழி ஏதுமில்லையா? நண்பர் சிரித்துக் கொண்டே சொன்னார்: ""இல்லறத்தில் துறவறம்'' என்று வாழ்ந்து பாருங்கள்; எந்தக் கவலையும் யாருக்கும் எப்போதும் இல்லை! உங்கள் அவசியமான தேவைகளுக்காக மட்டும் செலவிடுங்கள். அனாவசியமான ஆசைக்காக உங்களை அடிமையாக்கிக் கொள்ளாதீர்கள். ""இவை இல்லாமலும்கூட நம்மால் வாழ இயலும்'' என்ற மனப்பக்குவம் நமக்கு வளர்ந்துவிட்டால், நமது வருவாய்க்குள்ளே வாழ முடியும். சிக்கனமாய் வாழ்வதால், சிறுதொகை மீதமாகும். அதைப் பெருந்தொகையாக மாற்றுவதே சேமிப்பு'' என்றார்.
எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை இவ்வளவு அனாயசமாகச் சொல்கிறாரே! என்று வியந்தேன்! என் நண்பர் தொடர்ந்தார். ""வங்கியில் Term Deposit என்று குறுகியகால வைப்பும்; Fixed Deposit என்று நீண்டகால வைப்பும் உள்ளன. அதைப்போல நம்மிடம் "நேரமேலாண்மை' என்ற TIME DEPOSITm, ‘Financial Discipline என்ற "பண ஒழுங்கும்' இருக்க வேண்டும். இதுவே மனிதனின் TD, FD ஆகும்!
""உரிய நேரத்தில் உரியவற்றைச் செய்வது காலத்தினை நாம் மதிப்பதாகும். உரியவற்றுக்கு மட்டுமே செலவிடுவது பணத்தை நாம் மதிப்பதாகும். இவை இரண்டும்தான் நம் "நாநயத்திற்கு உதவும் நாணயங்கள்'' என்றதும், எனக்கு ஆயிரம் வாட்ஸ் பல்ப் ""பளிச்'' என்று என் உள்ளத்தில் ஒளியேற்றியதைப் போல உணர்ந்தேன்! சிலரின் வாக்கு, இருள் நீக்கும் ஒளிவிளக்கு!
"நமக்கு உபதேசிப்பதுபோல, வாழ்ந்து காட்டுவார் எவருமில்லையே!' என்று இதுவரை தவறாக எண்ணினேன்! ஆனால் அவரைச் சந்தித்த பின்பு, ""நாமே ஏன் ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டக்கூடாது?'' என்ற திடமான மன உறுதி எனக்கு ஏற்பட்டது! சிந்தனையும் செயலும் இரட்டைத் தண்டவாளங்கள் அல்லவா!
Thanks - www.dinamani.com - Monday June 5 2006 00:00 IST
No comments:
Post a Comment