மழை இனிது! மனிதன்..?
அண்மையில் பெய்த பலத்த மழையினால் சென்னை மாநகரமே நாறிக் கொண்டிருக்கிறது. காரணம் - மழை அல்ல; அது கலந்த மண்ணும் அல்ல. மனிதர்தம் வாழ்க்கை முறைதான் இந்த நாற்றத்துக்கும், அதைத் தொடரும் நோய்களுக்கும் காரணம்.
சென்னை மாநகர் மட்டுமன்றி, புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ள எல்லா நகரங்களிலும் மழைநீர் வடிவதற்கு முன்பே நாற்றமெடுத்து கிருமிகளை உற்பத்தி செய்வது ஏன் என்றால், குடியிருப்புகளின் அனைத்து மலஜலக் கழிவுகளும் புதை சாக்கடையில் கலக்கப்படுவதுதான்.
ஒரு நகரவாசி குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு, பாத்திரம் கழுவுதற்குப் பயன்படுத்தும் தண்ணீர் புதை சாக்கடையில் கலப்பதால் தீங்கு ஏற்படுவதில்லை. இதில் கழிவறைக் கழிவுகளைச் சேர்ப்பதால்தான் பிரச்னை ஏற்படுகிறது.
மாநகர, நகரக் கட்டடங்களில் உள்ள கழிப்பறைகள் இரண்டு வகைதான். ஒன்று, நிரம்பிய கழிவுத் தொட்டியை (செப்டிக் டேங்க்) மோட்டார் வைத்து இறைத்து புதை சாக்கடையில் சேர்த்துவிடுவது. இரண்டாவது, நேரடியாக புதை சாக்கடையில் கலக்கச் செய்வது. பலத்த மழையின்போது மழைவெள்ளமும் புதை சாக்கடையும் கலந்து நகரம் முழுவதும் திறந்தவெளி செப்டிக் டேங்க்-ஆக மாறிவிடுகிறது.
வீடுதோறும் கழிவறைகள் என்ற திட்டத்தை மத்திய அரசு மானியத்துடன் நிறைவேற்றியபோது, புதை சாக்கடைகள் இல்லாத சிறுநகரங்களில் ஒரு நல்ல, எளிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஒரு வீட்டின் கழிவறைக்கு இரண்டு கழிவுத்தொட்டிகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. ஆறு அடி உயரம், ஒரு மீட்டர் விட்டமுள்ள இரண்டு உறைகிணறுகள்தான் இந்தத் தொட்டிகள். மலஜலத்தால் ஒரு தொட்டி நிரம்பியவுடன் அதற்கான வழியை மூடிவிட்டு அடுத்த தொட்டிக்குள் கழிவுகள் சேரும்படி செய்வதும், நிரம்பிய தொட்டியானது இரண்டு, மூன்று மாதங்களில் காய்ந்து உரமாக மாறியதும் அதை விவசாயத்துக்கு விற்றுவிடுவதும்தான் அந்த எளிய தொழில்நுட்பம். இப்போதும்கூட, சாக்கடைவசதி இல்லாத கிராமங்களில் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம்தான் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
ஆனால் நகரவாசிகள்தான் எப்போதுமே "ஸ்பெஷல்' ஆயிற்றே. அவர்களுக்கு இத்தகைய தொழில்நுட்பத்தை அரசும் உள்ளாட்சிகளும் அறிமுகம் செய்யக்கூட முயற்சிக்கவில்லை.
ஓர் ஆண்டு காலத்தில் ஒரு மனிதனின் மலஜலக் கழிவுகளிலிருந்து 4.56 கிலோ நைட்ரஜன், 0.55 கிலோ பாஸ்பரஸ், 1.28 கிலோ பொட்டாஷியம் கிடைக்கின்றன. இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஓர் ஆண்டுக்கு 60 லட்சம் டன் உரம் (நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாசியம்) கிடைக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் உரத்தின் அளவே 20 லட்சம் டன்தான். எவ்வளவு வீணடிக்கிறோம் என்பது இப்போது புரியும்.
மனிதனின் நாற்றமெடுத்த உடல் இயந்திரத்தைக்கூட சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில்தான் இயற்கை படைத்திருக்கிறது. ஆனால் மனிதன்தான் தன்னைப் படைத்த இயற்கையை சுயநலத்தாலும் வன்மத்தாலும் நாசப்படுத்துகிறான்.
நிலத்தடி நீர் கீழே இறங்கிக்கொண்டே செல்லும் ஆபத்து தலைக்கு மேலாக வந்தபோதுதான், அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயம் என்ற விதிமுறையை அரசு கொண்டுவந்தது. அதேபோன்று கழிவுத் தொட்டிகளிலும் அரசு விதிமுறைகளை புகுத்த வேண்டும்.
நகரங்கள், மாநகரங்களில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் உள்ள கழிப்பறைக் கழிவுகள் புதை சாக்கடையில் கலக்கும்படி செய்யக்கூடாது என்றும், ஒவ்வொரு கட்டடமும் இரண்டு கழிவுத் தொட்டிகள் கட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க ஒரேயொரு அரசாணை போதுமானது. குடியிருப்பு, அடுக்ககம், அலுவலகம் எதுவானாலும் அங்குள்ள கழிப்பறை வசதிகளுக்கு ஏற்ப கழிவுத் தொட்டிகளின் அளவை அரசு தீர்மானிக்க வேண்டும். நிரம்பும் கழிவுகள் காய்ந்ததும் விவசாய உரமாக விற்பனை செய்வது எளிது.
மாநகரத்தில் இதை நடைமுறைப்படுத்துவதால் யாருக்கும் தீங்கு இல்லை; மாநகர சுற்றுச்சூழல் கெடாது; நாற்றமின்றி மழைநீர் வடியும்; தேங்கினாலும் உடனே கிருமிகள் உற்பத்தியாகாது; நோய்கள் பரவாது; மாநகரிலும் மழை இனிதாகவே இருக்கும்.
Source: www.dinamani.com - Monday December 8 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment