மக்கள் சக்தி
மக்கள் சக்தி மக்கள் சக்தி என்கிறார்களே, அது உண்மையாகவே எப்படிப்பட்டது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திவிட்டனர் திருவண்ணாமலை மக்கள்.
திருவண்ணாமலையை அடுத்துள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலை எனப்படும் இரண்டு மலைகளையும் இரும்புத் தாது எடுப்பதற்காக வெடிவைத்து தகர்க்கும் திட்ட அனுமதிக்காக டிசம்பர் 27-ம் தேதி நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில்தான் இந்த மக்கள் சக்தி வெளிப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலைக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த மலைகள் உள்ளன. இந்த இரு மலைகளிலும் 41 சதவீதம் அளவுக்கு இரும்புத் தாது இருப்பது உண்மையே. தமிழ்நாடு இரும்புத் தாது கனிமக் கழகம், தொழில்வளர்ச்சிக் கழகம், ஜே.எஸ். டபிள்யு ஸ்டீல் லிமிடெட் ஆகியன இணைந்து இந்த இரு மலைகளையும் தகர்த்து இரும்புத் தாது பெறும் திட்டத்துக்கு அரசுக்கு கருத்துரு கொடுத்துள்ளன.
இந்த இரு மலைகளில் வேடியப்பன் மலையும் இப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறது. மலையில் உள்ள வேடியப்பன் கோயிலின் மூலிகைத் தீர்த்தம் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தவிர, மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையை ஆன்மிக உணர்வுடன் மாதம்தோறும் சுமார் 5 லட்சம் பேர் கிரிவலம் வருகின்றனர்.
கிரிவலம் வருபவர்களின் வசதிக்காக மலையையொட்டி இன்னொரு சுற்றுப்பாதை அமைத்தால், கிரிவலப் பாதையின் தொலைவு குறையும், கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டபோது, "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி' என்று அனுமதி மறுத்த வனத்துறைதான் இப்போது இந்த இரு மலைகளிலும் 325 ஹெக்டேர் பரப்பில் இரும்புத் தாது வெட்டி எடுக்கவும் 2 லட்சம் மரங்களை வெட்டவும் அனுமதிக்கிறது. இது எப்படி?
இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால், ஆண்டுக்கு 10 லட்சம் டன் வீதம் 9.2 கோடி டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்படும்; மலையை தொடர்ந்து வெடிகள் வைத்து தகர்ப்பதும் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களைக் கொண்டு செல்ல தொடர்ந்து லாரிகள் இயக்கப்படுவதும் திருவண்ணாமலையின் சுற்றுச்சூழலை மோசமானதாக்கிவிடும் என்பது நிச்சயம்.
தமிழக மக்களின் மிக முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவண்ணாமலை கோயிலை "பாரம்பரிய நகரமாக' அறிவிக்கச் செய்து, அந்த நகரத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளை செய்ய வேண்டிய அரசு, அந்த நகரின் சூழலை அடியோடு அழிக்கத் துணை நிற்பது எதனாலோ?
திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுமார் 800 பேர் திரண்டு ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்த நேரத்தில் அங்கே இந்த மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள்-எம்பி, எம்எல்ஏ-க்கள்- யாருமே இல்லை. திமுக பிரதிநிதிகள் கட்சிப் பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றுவிட்டார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பாமக-1, காங்கிரஸ்-3, அதிமுக-1 எம்எல்ஏ-க்களும் இந்தக் கருத்துக்கேட்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த மாவட்ட மண்ணின் மைந்தரான உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு (தண்டராம்பட்டு), முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி (திருவண்ணாமலை) திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு தெரியாமல் இந்தத் திட்டம் கருத்துக்கேட்பு வரை வந்துவிட்டது என்றால், யாரால் நம்ப முடியும்? அவர்கள் நினைத்திருந்தால் அரசுத் துறை அளவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா?
""இந்த மலைகளில் வெட்டப்படும் 2 லட்சம் மரங்களுக்கு ஈடாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரு மடங்கு நிலம் வாங்கி 4 லட்சம் மரங்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன'' என்று ஜே.எஸ்.டபிள்யு. ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் அலுவலர் சமாதானம் செய்தபோது ஒரு படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்மணி கொதிப்புடன் கேட்ட கேள்வி: ""நீங்க அம்பாசமுத்திரத்துல மரம் நட்டா இங்க எனக்கு காத்தும் நெழலும் கெடைக்குமா?''
அவள் ரத்தம் கொதிக்கிறது; ஏனென்றால், அவளால் வேறு நகரத்துக்கு நிலமோ, வீடோ வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விட முடியாது; தன் பிள்ளைக்கு பெரியபடிப்பு கொடுத்து, வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ "செட்டில்' ஆகிவிட முடியாது; அவள் அந்த மண்ணில் தோன்றிய செடி, கொடி, மரம், விலங்குகள் போல மனுஷியாய் தோன்றி அதே மண்ணில் கலந்து கரைந்து போகப் போகிறவள் என்பதால்தான் அந்தத் துடிப்பு.
Thanks to www.Dinamani.com on 29.12.2008 - தலையங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment