கு. குமாரவேலு
கடந்த 7,000 ஆண்டுகளில் சிற்றூர்கள் பேரூர்களாகவும், பேரூர்கள் நகரங்களாகவும், நகரங்கள் பெரு நகரங்களாகவும் மாறின. அவ்வாறு நிகழ்கையில், சோலைகள் அழிந்து நகரங்களாகி, நகரங்கள் நரகங்களாகிவிட்டன.
உலக வயதின் காலக்கணிப்பில், மற்ற உயிர்வகைகளை ஒப்பிட்டால், மனித இனம் தவழ்ந்திடும் மழலைதான். ஆனால், மனித இனம் அளவு கடந்த அறிவாற்றலால், மலைகளைப் பெயர்த்திடவும், நதிகளை நகர்த்திடவும், உயிர்ச் செல்களினுள் ஊடுருவி, அவைகளை உருமாற்றம் அடையச் செய்யவும் ஆற்றல் பல பெற்றுள்ளது.
இதே ஆக்க அறிவு, பல தாக்கங்களைப் பாரில் உள்ள பல்லுயிரின் பாலும் பாராமுகமாகப் பரப்பிக் கொண்டே உள்ளது. இப்பூவுலகில் தாவரங்கள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. பறவைகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. விலங்குகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. ஏன், நுண்ணுயிர் வகைகள் இன்றேலும் மனிதன் வாழ இயலாது.
ஆனால், மனிதன் என்ற இனம் இவ்வுலகத்தில் இல்லாவிட்டால் மற்ற உயிர் வகைகள் நிச்சயமாக வாழ முடியும் - வெறும் வாழ்வு அல்ல, மிக மகிழ்வாக வாழ இயலும்.
எனவே, மனித இனம் இவ்வுலகில் ஓர் இன்றியமையாத அங்கமன்று. மனித இனம் இயற்கை என்ற சிலந்தி வலையில் ஓர் இழை. இவ்விழை, தனித்து இருக்க முடியாது. பிரிந்தால் பஞ்சுபோல் பறந்து விடும்.
÷எனவே தான், நமது வளமான வாழ்வு, மற்ற உயிர் வகைகளின் நலமான வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்ப கூரறிவுடன் தமிழகத்துக்குத் தகுந்த இயற்கை மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றினால், அனைத்து உயிர்களின் வாழ்வு வளம் பெருகும். பல் உயிர் ஓம்பல் திட்டம் மலைகள் நலம், மக்களின் வளம் அனைத்து உயிர்வகைகளின் மகிழ்வான வாழ்வுதான், மனித இனத்தின் நலமான,வளமான வாழ்வுக்கு ஆதாரம். எனவே, பல்லுயிர்களும் பரவலாக வாழும் மலைப்பகுதிகள்,வனப்பகுதிகளிலே இவைகளின் மகிழ்வான வாழ்வை உறுதி செய்திடும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
மகரந்தச் சேர்க்கை, விதைகள் பரவுதல் போன்ற இயற்கைப் பணிகளை அனுதினமும் செய்து வரும் பறவைகள், பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்கள், பறவைகள் போன்ற விதைபரப்பும் உயிரினங்களுக்கு ஆண்டு முழுவதும், தேவையான அளவுக்கு, விருப்பமான உணவு தரும் மரவகைகளைக் கண்டறிய வேண்டும். கண்டறிந்து, தமிழக கிழக்குத் தொடர்ச்சிமலை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொழில்நுட்ப அறிவுடன் திட்டம் தீட்டி வளர்க்க வேண்டும். இதனால் மலைகளின் நலம் பெருகும்; பல லட்சக்கணக்கான இளம் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மழைநீரை உறிஞ்சி வைத்து, சுனை நீராக மாற்றிடும் மலைகளின் மறைந்து போன மாபெரும் திறன் மீண்டும் மீண்டு வரும். இதனால் சமவெளிகளில் நீர்வள ஆதாரம் பெருகும். எனவே நீர் உயரும்.
மேலும், இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியானது இளம் தாவரங்களின் இலைப்பசுமை, காற்றிலுள்ள கரியமிலவாயுவை, தற்போதைவிட இருமடங்கு அதிக அளவில் கிரகித்து, தன்னகப்படுத்தும், அதிக அளவு பிராணவாயுவை வெளிவிட்டு, உலகம் வெப்பமாவதைக் குறைத்திடும்.
அன்றாடம் அதிகரித்து வரும் பொருளாதார, கலாசார, தொழில் வளர்ச்சியால் இணைந்து வளர்ந்து, விசுவரூபம் எடுத்துவரும் இயற்கைப் பாதிப்பின், தெளிவான வெளிப்பாடு தான் உலகம் வெப்பமயமாதல் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் உலகின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வடதுருவம், தென் துருவப் பனிப்பாறைகளும், இமயமலை போன்ற நெடிதுயர்ந்த மலைப்பகுதியில் அடர்ந்து, படர்ந்து படிந்துள்ள பனிக்கட்டிகளும், மிக வேகமாக உருகிக் கரைந்து குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடல்மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகளில் பெருமளவு கடல்கொள்ளும் என உலக அறிவியல் வல்லுநர்கள் அனுதினமும் எச்சரித்துக் கொண்டே உள்ளனர்.
÷தமிழகத்தில் சுமார் 1000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப்பகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்கள், விளைநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் மிக அதிகம். தமிழகத்தில் உள்ள சுமார் 6.2 கோடி மக்கள்தொகையில் 2.9 கோடி மக்கள் 13 மாவட்டங்களின் கடற்கரைப் பகுதியில் வாழ்கிறார்கள்.
இந்தக் கடற்கரைப் பகுதிகளில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 810 பேர் வாழ்கிறார்கள். இது தமிழகத்தின் சராசரி மக்கள்தொகையான 512-ஐ காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். நாகை, கடலூர் மாவட்டங்கள் மிக அதிக சேதத்துக்கு உள்ளாகலாம்.
நாகை மாவட்டத்தில் சுமார் 56 சதவீதம் பரப்பு கடல்மட்டத்துக்குத் தாழ்வான உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுதவிர, தமிழகத்தில் மாறிவரும் பருவமழை, குறைந்த மழைநாள்களில் நிறைந்த மழை பொழிந்திடும் பாதகத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வறட்சி அதிகரித்து, விளைநிலங்கள் பாலைநிலங்களாக வருங்காலங்களில் மாறிவிடும் அபாயமும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களின் மகசூல் குறைவதுடன் நோய் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கையும், அவைகளால் சேதாரமும் அதிகரிக்கும்.
இக்குறைகள் அனைத்தையும் மிக விரைவில் கட்டுப்படுத்த, காற்றில் உள்ள கரியமிலவாயுவின் அடர்த்தியை இனியேனும் அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்தவல்ல ஆக்கபூர்வமான திட்டங்கள் செயலாக்கப்பட வேண்டும்.
வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் ஒரு சராசரி மனிதன் 14 டன் கரியமிலவாயுவை வான்வெளியில் பரப்பும் அளவுக்கு தனது நாகரிக, பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறான். இந்தியாவில் சராசரி இரண்டு டன் கரியமிலவாயு மட்டுமே ஒருசராசரி மனிதன் பயன்பாட்டினால் வெளிப்படுகிறது.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகரிக்க தேவைப்படும் எரிசக்தி, மின்சக்திக்காக நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவைகள் தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தப்படும் கட்டாயத்தால், அதிக அளவு கரியமிலவாயு வெளிப்படுத்தலை குறைக்க இயலாது.
ஆனால், இயற்கை வளங்களான தாவரங்களைக் கொண்டு தமிழகத்தில் அந்தச் சாதனையை நிகழ்த்த அதிக அளவு வாய்ப்புள்ளது. பொய்த்து வரும், மாறி வரும் பருவமழையையும், தொடர்ந்து வரும் வறட்சி, வளமிழக்கும் மண் போன்ற சோதனைகளைத் தாங்கி, சாதனை புரிய வல்ல தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளவை மரவகைகளே.
வறட்சியைத் தாங்கி, மிகவேகமாக வளர்ந்து அதிக அளவு மகசூல் வழங்கி, தொழிற்சாலைகளுக்கு ஏற்ற மூலப் பொருளாகவும் உள்ளவை அவையே, மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் சாதனமாகவும், விவசாயிகளுக்கு அதிக லாபம் தர சாதகமான பல இன, இந்நாட்டு, வெளிநாட்டு மரங்கள் தமிழகத்தின் வனத்துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
இவைகளைப் பெருமளவில் வளர்த்தால், ஒவ்வொரு சொட்டு நீரையும் ஒவ்வொரு துளி மண்ணையும் ஒவ்வொரு சூரியக் கதிரையும் ஒன்றிணைத்து மாபெரும் சத்தியாக மாற்றலாம்.
அதைத் தமிழக மக்களின் வளமான, நலமான வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடிப்படையாகவும் அமைத்திடலாம். இத்திட்டங்கள் பொருளாதார ரீதியில் வளமானதாகவும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பதாகவும், மாசு கட்டுப்பாட்டுக்கான மந்திரமாகவும் தமிழகத்தில் பரிமளிக்க வல்லவை.
தமிழக மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வின் தரத்தையும், வளத்தையும் உயர்த்த வல்ல வரம் தரும் மரம் நடும் திட்டத்துடன், நலம் காத்திடும் நல்ல திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்பூவுலகம் நமது மூதாதையரிடமிருந்து பெற்ற சொத்து என்று கருதாமல், நமது பிள்ளைகளிடமிருந்து பெற்ற கடன் என்று கருதி, பொறுப்புடன், முதலுடன் வட்டியையும் சேர்த்து, வளமிக்கதாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
இயற்கையே நமது எதிர்காலம் என்ற மாபெரும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். நமது வருங்காலச் சந்ததிகள் மற்றும் அனைத்து உயிர்வகைகளின் வளமான, வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.
(கட்டுரையாளர்: முன்னாள் வனத்துறைத் தலைவர்).
நன்றி: www.dinamani.com - 17 Jun 2010