I LOVE TAMIL


Thursday, June 3, 2010

தலையங்கம்: வீணாகும் வரிப்பணம்...

கடந்த 63 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அளிக்கப்படுகின்றன. அவை மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செலவிடப்படுகின்றன. மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகள் வேறு. இவ்வளவெல்லாம் செய்தும் இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை எட்டாதது ஏன் என்கிற கேள்விக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை.

1947-ல் சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை, அன்றைய நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தபோது, நமது மொத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? வெறும் 171.15 கோடி ரூபாய். மொத்தப் பற்றாக்குறை 26.24 கோடி ரூபாய். அரசின் மொத்தச் செலவினங்களின் வகையில் உள்ள 197.39 கோடி ரூபாயில், ராணுவத்துக்கான செலவு மட்டுமே 92.74 கோடி ரூபாய்.

2010-ல் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின்படி நமது மொத்த வருமானம் 10,20,838 கோடி ரூபாய். இதில் மானியங்களுக்கான ஒதுக்கீடு மட்டும் 1,11,276 கோடி ரூபாய். இந்த அளவுக்கு வருவாய் அதிகரித்திருப்பது மட்டுமல்ல, வளர்ச்சித் திட்டங்களுக்கும், பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கும், நலிந்த பிரிவினருக்கான உதவிகளுக்குத் தரப்படும் மானியங்களும் பெருமளவில் நமது செலவினங்களில் பங்கு பெறுகின்றன.

பல்லாயிரம் - தவறு... பல லட்சம் கோடிகள் கடந்த பல ஆண்டுகளாகச் செலவு செய்யப்பட்டும், எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டிய பிறகும், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி என்கிற பெயரில் ஒதுக்கீடுகள் தொடர்ந்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது கண்கூடு. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சுகாதார மருத்துவ வசதிகள் போன்றவை குறைந்தது 20 விழுக்காடு இந்திய மக்களுக்கு இன்னும் தலையாய பிரச்னையாகத் தொடர்கிறது என்பதுதான் நிஜம்.

இந்தச் சூழ்நிலையில், மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்றத் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி ஹைதராபாதில் ஒரு மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியிருப்பது மேலே சொன்ன பிரச்னைக்கான அடிப்படைக் காரணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைகிறது.

மத்திய அரசின் பல திட்டங்கள் சேர வேண்டியவர்களை முறையாகப் போய்ச் சேர்வதில்லை என்பது இணையமைச்சர் நாராயணசாமியின் கருத்து. மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், மாநில அரசின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. முறையான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் மத்திய அரசால் இதுபோன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 60 விழுக்காடு மட்டுமே, பயனாளிகளைச் சென்றடைகிறது என்பதுதான் இணையமைச்சரின் வருத்தம்.

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம், ஒரு விளையாட்டு அரங்கத்தைச் சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக ஒதுக்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் வேலை செய்தவர்களைச் சென்றடையாமல் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற ஊழல்கள் ஒருபுறம் இருக்க, பல முறைகேடுகளும் பல்வேறு திட்டங்களில் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் பல முறைகேடுகள் நடப்பதாகப் பத்திரிகைச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தும், அதை யாரும் பொருள்படுத்துவதாகத் தெரியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றமே இந்த முறையற்ற திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கும் நிலையில், யாரிடம் போய் முறையிடுவது?

கால் நூற்றாண்டுக்கு முன்னால் மும்பை நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவரும் பிரதமருமான ராஜீவ் காந்தி கூறியதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் வெறும் பத்தே காசுகள்தான் பயனாளிகளைச் சென்றடைவதாகக் கூறினார் அவர். இப்போது, மத்திய இணையமைச்சரின் கூற்றுப்படி 60 விழுக்காடு பயனாளிகளைச் சென்றடைகிறது. அந்தவகையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

இணையமைச்சர் நாராயணசாமி மேலும் கூறுகையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாகப் பயனாளிகளைச் சென்றடையாமல் போவதற்குக் காரணம் மத்திய அரசு இந்தத் திட்டங்களை மாநில அரசுகளின் மூலம் நிறைவேற்றுவதுதான் என்றும் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 

இதுபோன்ற திட்டங்களை மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் துணையில்லாமல் மத்திய அரசால் ஒருநாளும் நிறைவேற்ற முடியாது என்பது அமைச்சருக்குத் தெரியாதா என்ன? அவர் கூறுவதுபோல, ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்தால் கூட்டணிக் கட்சிகளே அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவார்களே! மத்திய அரசால் அதை எதிர்கொள்ள முடியுமா?

பல நிதி ஒதுக்கீடுகள், திசைதிருப்பி விடப்படுவது என்பது இந்திய அரசியலிலும், நிர்வாகத்திலும் சகஜமாகி விட்டிருக்கிறது. முறையான நிதிநிர்வாகம் இல்லாமல் இருப்பதும், பொதுப்பணம் என்பது கேள்வி கேட்பாரற்ற பணம் என்பதுபோன்ற மனப்போக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்கள் மத்தியில்கூட ஏற்பட்டிருப்பதுதான் மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.

முறையான திட்டங்கள், கண்காணிப்பான அரசு, நேர்மையான அதிகாரிகள், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட அரசியல்வாதிகள், விழிப்புடன் செயல்படும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள்... இவையெல்லாம் இருந்தால் ஒரே ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியா இமாலயச் சாதனைகளைச் செய்துகாட்ட முடியும். தெரிந்தும் செய்யத் தயாராக இல்லையே, ஏன்? தீர்வு இதிலிருந்து தொடங்க வேண்டும்!           

நன்றி: www.dinamani.com  03-Jun-2010  

No comments: