I LOVE TAMIL


Monday, June 7, 2010

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காதுக்​குக் கடி​வா​ளம் தேவை!

மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் பேருந்தில் திரும்பி வரும்போது, செல்போன் ஒயரைக் காதில் சொருகி பாடல்களை ரசித்துக் கேட்டுக் கொண்டே வீடு வந்து சேர்கிறேன். இரவு 11 மணி வரை செல்போன் எஃப்எம் ரேடியோவில் பாட்டுக் கேட்கிறேன். இதனால் எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஆனால் என் வீட்டில் கூடுதல் நேரம் காதில் ஒயரைக் காதில் சொருகி பாட்டுக் கேட்பதை ஆட்சேபிக்கின்றனர். நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?  ராகேஷ், சென்னை-17. 

பாட்டுக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். தொலைக்காட்சி, ஒலிபெருக்கி, ரேடியோ போன்றவற்றின் மூலம் நாம் பாடல்களைக் கேட்கும்போது மேம்போக்காகக் கேட்டு ரசிக்கிறோம். காதினுள் ஒயரைச் சொருகி பாட்டு கேட்கும்போது, அந்தப் பாடல் வரிகள் தெள்ளத் தெளிவாகக் கேட்பதால், அந்த வரிகளிலுள்ள அர்த்தம் புரிவதால், உங்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படலாம். தொடர்ந்து ஒலி காதினுள் எழுப்பப்படுவதால், காதிலுள்ள நரம்புகள், நுண்ணிய எலும்புகள், ஒலியின் வழியாகச் சீற்றமடையும் வாயுவினால் வறண்டு துவண்டு விடுகின்றன.  

பாடல் வரிகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவதால், மனம் அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப செயல் வடிவம் கொடுத்துவிட்டால், வாழ்க்கையின் பாதையே மாறும்படி செய்துவிடும் வாய்ப்பு இருப்பதால் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படக் கூடும். ஆக,இன்று எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதுவே பின்னாளில் துயரத்திற்குக் காரணமாகலாம்.  

நம் முன்னோர், மனித உடலை ஒரு தேராகவும் புலன்களை அதில் பூட்டிய குதிரைகளாகவும், ஆன்மாவைச் சாரதியாகவும் விளக்கியுள்ளனர். குதிரையை அடக்குவது கடினம். அது சதா துள்ளிக் கொண்டேயிருக்கும். அதற்குக் கடிவாளம் தேவை. உங்களுடைய செவிப்புலன் எனும் குதிரைக்கு உங்கள் உறவினர்கள் "அதிகம் கேட்காதே' எனும் கடிவாளம் போடப் பார்க்கின்றனர். பாட்டை அதிகம் கேட்காமல் அவர்கள் கூறும் நல்ல உபதேசத்தைக் கேட்டால் உங்களுடைய மூளை நரம்புகள் பாதிப்படையாமல், செவிப்புலனின் செயல்பாடு இறுதிவரை தொய்வை அடையாமல் பாதுகாக்கலாம். 

 சிலர் பாட்டை ரசித்துக் கேட்கும்போது தலையை ஆட்டோ ஆட்டு என்று ஆட்டுகின்றனர். தலையைத் தாங்கும் கழுத்துப் பகுதியிலுள்ள முதுகுத் தண்டு வட எலும்புகளின் இடையே அமைந்துள்ள சவ்வுகள் இதனால் இடம் பெயர்ந்துவிடலாம். கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் காது மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர்கள் எந்நேரமும் படுபிஸியாக இருக்கிறார்கள். வேறு சிலர் இரவில் காதினுள் ஒயரைச் சொருகி பாட்டைக் கேட்டுக் கொண்டே குறட்டை விட்டு உறங்குகின்றனர். புலனும் மனமும் சோர்வுற்று உறங்கினாலும், காதினுள் இசை வழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மூளை மற்றும் காது நரம்புகள் பலவீனமாகக் கூடும்.

 இதற்கு மாற்று வழிதான் என்ன?  
செல்போனிலுள்ள ஸ்பீக்கர் பகுதியைக் குறைந்த அளவில் ஆன் செய்துவிட்டால், நீங்கள் பெறும் இன்பத்தை அருகிலுள்ளவர்களும் பெறக் கூடும். உங்களுக்கும் உடல் மனப் பாதிப்பு குறைந்துவிடும்.   

நெய்ப்பு எனப்படும் எண்ணெய்ப் பசையினால்தான் காதினுள்ளே உள்ள நரம்புகளும் எலும்புகளும் துடிப்புடன் செயல்படுகின்றன. எண்ணெய்க் குளியலை மறந்துவிட்டு இந்நாளில் காதினுள் நெய்ப்பு ஏற்படக் காரணமாக நெய், பால், வெண்ணெய், மாமிசங்கள், மீன் வகையறாக்களைக் குறிப்பிடலாம். அதாவது ஒரு வகையில் குறைவுபடும் எண்ணெய் இன்னொரு வகையில் வெண்ணையாகவும் மாமிசமாகவும் மீன் தினுசுகளாகவும் உடலில் அளவுக்கு மிஞ்சி ஈடு கட்டப்படுகின்றது. வறட்சி தரும் உணவைச் சாப்பிட்டு, எண்ணெய்யும் தேய்த்துக் குளிக்காமல், தொடர்ந்து காதினுள் ஒயரைச் சொருகிப் பாடல்களைக் கேட்கும் நபர் விரைவில் டமாரச் செவிடாக ஆகிவிடுவார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.   

அதனால் நீங்கள் செவிப்புலனைப் பாதுகாக்க, வாரம் இருமுறையாவது நல்லெண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்து, வெதுவெதுப்பாக பொறுக்கும் சூட்டில் இதமாகக் காதுகளினுள்ளே நிரப்பி, காதுகளைச் சுற்றி எண்ணெய்யைத் தடவித் தேய்த்து, அரை மணி நேரமாவது காலையில் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். அன்றைய தினங்களில் முடிந்தவரை ஏஸி அறையில் அமர்வதைத் தவிர்க்கவும். உணவை வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். ஏஸி அறையில் அமர வேண்டிய கட்டாயம் இருந்தால், காதுகளில் மெலிதான பஞ்சை அடைத்து வைக்கலாம்.  

காதுகளைப் பாதுகாக்க வசாலசுனாதி எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலம் உபயோகிக்கச் சிறந்தது. பொறுக்கும் சூட்டில், இதமாக இருக்கும்படி காதினுள் இந்த மூலிகைத் தைலத்தை நிரப்பி சுமார் 3-5 நிமிடங்களுக்குப் பிறகு, தலையை ஒருக்களித்து மூலிகைத் தைலத்தை வடித்துவிட்டு, பஞ்சினால் காதுகளைத் துடைத்துவிடலாம். காதினுள் நெய்ப்பைப் பாதுகாத்து, வாத தோஷத்தின் வறட்சி மற்றும் அதன் சீற்றத்திலிருந்து இந்த மூலிகைத் தைலம் நல்ல பாதுகாப்பைத் தருகின்றது. காலையில் பல் தேய்த்த பிறகு இந்தத் தைலத்தைப் பயன்படுத்தலாம்.

நன்றி: www.dinamani.com - 06 Jun 2010 (Dinamani Kathir - Supplement)

No comments: