I LOVE TAMIL


Thursday, August 25, 2011

சுனாமி பாதிப்பை சமாளிக்க ஜப்பானில் புதுமையான திட்டம்!

சமீபத்தில், ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும், சுனாமியும், அந்த நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. அணு மின் நிலையங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால், அங்கிருந்து கதிர் வீச்சு பரவி, சுற்றுச் சூழலுக்கு பெரும் கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அங்கு கடுமையான மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்களில், மற்ற நாடுகளுக்கு எப்போதுமே முன் மாதிரியாக செயல்படும் ஜப்பானியர்கள், இந்த விஷயத்திலும் அந்த போக்கை பின்பற்றத் துவங்கி விட்டனர். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், மின்சாரத்தை சேமிக்கும் வகையிலுமான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் குளிர்சாதன வசதி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

குளிர்சாதன வசதி இல்லாத நேரத்தில், எப்படி இருப்பது என்பதற்கும், சில ஆலோசனைகளை ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான, காற்றோட்டமான உடைகளை அணிந்து வரும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறுக்கம் இல்லாத டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்து வருவதற்கு ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கழுத்தில், "டை' அணிந்து வருவதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பெண் ஊழியர்கள், கால்களை முழுவதும் மறைக்கும் வகையிலான, "ஷூ'க்களை அணிய வேண்டாம் என்றும், சாதாரண செருப்பு மற்றும் ஷூக்களை அணிந்து வரும்படியும் கூறப்பட்டுள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, "கேட்வாக்' நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், 15 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும் என்கின்றனர், ஜப்பான் அதிகாரிகள். தங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்ட போதே, அசராமல் எழுந்து நின்று, சாதித்துக் காட்டிய தன்னம்பிக்கை மிக்கவர்கள் ஜப்பானியர்கள். அவர்களை இந்த சுனாமி என்ன செய்து விடும்?
— ஜோல்னா பையன். 



தலையங்கம்: பாழாகும் விளைநிலங்கள்!

சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்திருப்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். உண்மைதான். கடந்த இரு ஆண்டுகளாக உணவு உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. உணவுப் பொருள் கையிருப்பும்கூட வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது.


உணவு மற்றும் விநியோக அமைச்சகத்தின் அறிக்கையில் அரிசி கையிருப்பு 268 லட்சம் டன், கோதுமை கையிருப்பு 371 லட்சம் டன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 639 லட்சம் டன். இந்த அளவு வழக்கமான கையிருப்பாகிய 319 லட்சம் டன் உணவு தானியத்தைப்போல இரு மடங்கு! உணவுப் பொருள்கள் தற்போது கையிருப்பில் உள்ளதென்பது பிரதமருக்கு மட்டுமல்ல, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்திதான்.

இருப்பினும், இந்த வேளையில் நிகழ் நிதியாண்டில் இதுநாள் வரை உர நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உர மானியத்தின் அளவைப் பார்க்கும்போது மலைப்பாக இருப்பதோடு, கவலை தருவதாகவும் இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

இந்த உர மானியம் நேரடியாக உர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்போது, இதனால் நிறுவனங்கள் அடையும் லாபம் அதிகமாகவும், விவசாயி பெறும் நன்மை குறைவாகவும் உள்ளது என்பது முதல் காரணம்.

மானிய விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை மிக அதிகமாகப் போட்டு இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தைப் பாழாக்கி விட்டார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால், இதே உற்பத்தி நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என்று வேளாண் வல்லுநர்கள் தரும் தகவல்கள் இரண்டாவது காரணம்.

யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட் என அடிப்படை உரங்களுக்காக இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் 2009-10-ம் ஆண்டில் ரூ. 64,032 கோடி, 2010-11-ம் ஆண்டில் ரூ. 65,836 கோடி என்று உர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டாலும், இவை விநியோகத்துக்கு வந்து, விவசாயிகளைச் சென்றடையும்போது, அரசு நிர்ணயிக்கும் விலையைவிட அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலைதான் இன்றளவும் உள்ளது. இதற்காக எத்தனை புகார்கள், போராட்டங்கள் நடைபெற்றாலும் விவசாயி அதிக விலை கொடுப்பதும், உரங்கள் பதுக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்த உர நிறுவனங்கள் தரமான உரங்களைத் தயாரிப்பதில்லை என்கிற புகார்கள் ஒருபுறம், இவை தொழில்நுட்பத்தைப் புதுப்பிக்காமல் பழைய நிலையிலேயே உரங்களைத் தயாரித்து, சுற்றுச்சூழல் மாசுக்குக் காரணமாகின்றன என்பது இன்னொருபுறம். ஆனால், அதுபற்றி அரசு எந்தக் கவலையும் கொள்வதில்லை.


ரசாயனத் துறை மற்றும் உரங்கள் அமைச்சகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, சந்தை மதிப்பில் யூரியாவின் அதிகபட்ச விலையான ரூ.5,310 (ஒரு டன்) என்பதில் விவசாயிக்கு 27 முதல் 58 விழுக்காடு வரை பயன் கிடைக்கும் வகையில் மானியம் அளிக்கப்படுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த அதிகபட்ச விற்பனை விலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள், எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம்.

இந்திய விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உர ஆலைகளுக்கே நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவரச் சொல்லப்பட்ட காரணம், இந்தியா முழுவதும் சிதறியுள்ள விவசாயிகளுக்குத் தனித்தனியாக மானியம் நேரடியாகக் கிடைக்கச் செய்வது இயலாது என்பதுடன், அது ஊழலில் போய் முடியும் என்பதுதான். அதனால்தான் உர நிறுவனங்களுக்கே நேரடியாக மானியத்தை அளிக்க முடிவு செய்தது அரசு.


உரத்தின் அதிகபட்ச விலையைத் தீர்மானிக்கும்போது, அந்த நிறுவனத்தின் முதலீட்டுக்கு, வரிக் கழிவுகள் நீங்கலாக, 12 விழுக்காடு லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த அடிப்படையில்தான் உர நிறுவனங்களால் இந்த விலைகள் தீர்மானிக்கப்படுகின்றனவா என்பது பரம ரகசியம். அது பற்றிய கேள்விகள் எழாமல் இருப்பதற்காகவோ என்னவோ, உர நிறுவனங்கள் தங்களுக்கு 3 விழுக்காடு லாபம்தான் கிடைக்கிறது என்று தங்களுக்கான ஆதரவுக் குரலைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன, மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

விவசாயியின் நன்மைக்காகவும், உணவு உற்பத்தியை உறுதி செய்வதற்காகவும் உரத்துக்கு அரசு அளிக்கும் மானியத்தை, உர நிறுவனங்கள் அதிகமாகவே பெற்று நன்றாக இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை. இந்த உரத்தை, குறிப்பாக யூரியா உரத்தை, சலுகை விலையைவிடக் கூடுதலான விலைக்கு வாங்கி நிலத்துக்குப் போட்டு, தானும் பாழாகி, நிலத்தையும் பாழாக்கிக்கொண்டு வருகிறார்கள் நமது விவசாயிகள் என்பதும் கசப்பான உண்மை. இதுபற்றி எந்தவிதமான விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது அதைவிடக் கொடுமையான உண்மை.


இந்திய விளைநிலங்களில் யூரியாவின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால், நமது விளைநிலங்களின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3.4 டன் நெல் உற்பத்தியாகிறது என்றால், சீனாவில் இதே ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6.5 டன் நெல் உற்பத்தியாகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய விவசாயிகள் உரத்தை அதிகமாகப் போட்டதுதான் என்கிறார்கள்.

இந்த உர மானியத்தை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் அதே நேரத்தில், பாரம்பரிய வேளாண்மைக்கு இந்த மானியத்தை கொண்டுபோய்ச் சேர்த்து ஊக்கப்படுத்தவும் பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்கும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்தவும் தேவையான முயற்சிகளை அரசும், ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கி விட்டால், விளைநிலங்கள் முற்றிலும் பாழாகிவிடும் முன்பாக மீட்டு விடலாம். விவசாயியும் மீட்கப்படுவார். விவசாயி வாழ்ந்தால் மட்டும்தான் நாடு வாழும்! 

நன்றி: www.dinamani.com  -  23-Aug-2011






Wednesday, August 3, 2011

ஆக., - 2 ஆடிப்பூரம், 3-ஆடிப்பெருக்கு!



குருஷேத்ர போர்க்களத்தில், தன் உறவினர்கள் மீது, அர்ஜுனன் அம்பு விட தயங்கிய நேரத்தில், "அர்ஜுனா... தர்மம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அங்கே உறவுகளுக்கு இடமில்லை. இந்த உலகமே நான் தான். கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே! உடல் தான் அழியும், அதற்குள் இருக்கும் ஆத்மா, தன் வினைகளுக்கேற்ப இன்னொரு பிறவியை எடுக்கும். எவனொருவன் என்னைச் சரணடையும் சரணாகதி தத்துவத்தைக் கடைபிடிக்கிறானோ, அவனே பிறவியைக் கடந்த நிலையை அடைவான்...' என்றெல்லாம் போதித்தார்.
இந்த நிகழ்வு நடந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன; ஆனால், உலக மக்களிடையே மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. சரணாகதி தத்துவத்தை அவர்களுக்கே உரித்தான எளிய நடையில் கற்பிக்க, திருமால் முடிவெடுத்தார். அதற்காக, தன் மனைவி லட்சுமியிடம், "நீ பூலோகம் சென்று, இறைவனைச் சரணடைந்தால் தான் முக்தி நிலை கிடைக்கும்...' என்ற தத்துவத்தைப் போதிக்கும் வகையில் ஒரு பிறப்பை எடு...' என்றார்.
லட்சுமி மறுத்து விட்டாள். "ஏற்கனவே, சீதையாக அவதாரம் எடுத்து, என்னைத் தாங்கள் படுத்திய பாடு போதாதா... இனியும் மனிதப் பிறவியா? வேண்டாம் சாமி; ஆளை விடுங்கள்...' என, ஒதுங்கிக் கொண்டாள். தன் இன்னொரு மனைவி பூமாதேவி பக்கம் சுவாமி திரும்பினார்; அவர் பார்வைக்கென்றே அவள் காத்திருந்தது போல், உடனே சம்மதித்து விட்டாள்.
"எங்கே போய் பிறக்கப் போகிறாய்?' என்று கேட்டதற்கு, "உங்கள் முடிவுப்படி தான் எல்லாம் நடக்கப் போகிறது; எனவே, அதெல்லாம் உங்கள் கையில்...' என்று பிறக்கும் முன்பாகவே, திருமாலிடம் சரணடைந்து விட்டாள் அவள்.
பூலோகத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் அழகிய தலத்திலுள்ள துளசி வனத்தில், விஷ்ணுசித்தர் எனும் பக்தரின் பார்வையில் படும்படி குழந்தையாகப் படுத்திருந்தாள். இவரையே, "பெரியாழ்வார்' என்கிறோம். அவர், அவளைத் தன் மகளாக ஏற்று, "கோதை' என பெயர் சூட்டி வளர்த்தார். "கோதை' என்றால், "நல்வாக்கு தருபவள்' என்று பொருள். ஆம்... அவள் திருமாலை வணங்க, "மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...' எனத் துவங்கும், "திருப் பாவையை' நமக்கெல்லாம் அருளியிருக்கிறாள்; இதை, "வேதத்தின் சாரம்' என்பர். வேதத்தைக் கற்றுக் கொள்ளும் தகுதி எல்லாருக்கும் இல்லை. அதை எளிமைப்படுத்தி, முப்பது பாடல்களுக்குள் அடைத்து விட்டாள் கோதை.
எல்லாருக்கும் நல்ல பெயரை சூட்டியுள்ளனர் நம் பெற்றோர்; அந்த பெயருக்கேற்றாற் போல் நாம் நடந்து கொள்ள வேண்டும். அரிச்சந்திரன் என்று பெயர் வைத்துக் கொண்டவன், பொய் சொன்னால் நன்றாக இருக்குமா? ஆனால், கோதை, தன் பெயரின் பொருளுக்கேற்ப, நல்வார்த்தைகள் கொண்ட பாடல்களைத் தந்து, உலகமே இறைவனை அடைய வழிகாட்டினாள். அவளது அவதார நாளே ஆடிப்பூரம். இந்த நன்னாளில், ஆண்டாளைப் போல நாமும், நம் பெற்றோரின் பெயர் காக்க உறுதியெடுக்க வேண்டும்.
இவ்வாண்டில், ஆடிப்பூரத்திற்கு மறுநாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதுண்டு. குறிப்பாக, புதுமணத் தம்பதியர் காவிரியில் நீராடி, அந்த அன்னைக்கு பூ, பழம் முதலானவை அளித்து வழிபட்டு வருவர்.

அகத்தியரால் நமக்கு அளிக்கப்பட்ட வரமே காவிரி. மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பர். அகத்தியர் உருவத்தில் சிறியவர் என்றாலும், நமக்கு அவர் அளித்த நதியோ மிக நீண்டது. ஏராளமான மக்களுக்கு உணவளித்து தாகம் தீர்க்கும் புண்ணிய நதி இது. நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே, ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னோர் உருவாக்கினர்.
இந்த திருவிழாவை தமிழகமே கொண்டாட வேண்டும். காவிரி மட்டுமல்ல, தமிழகத்தின் பிற நதிகளும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை. நதிகளை அழிப்பதன் மூலமே எதிர்கால சந்ததிக்கு நாம் இன்னலை ஏற்படுத்திய பாவத்திற்கு ஆளாவோம். ஆடிப்பூர நன்னாளில், அவதரித்த பூமித் தாயையும், ஆடிப்பெருக்கு நன்னாளில், பெருக்கெடுக்கும் காவிரி தாயையும் வணங்கி, அவர்களின் நல்லருள் பெறுவோம்.
 
நன்றி: www.dinamalar.com - ஜூலை 31,2011