I LOVE TAMIL


Thursday, August 25, 2011

சுனாமி பாதிப்பை சமாளிக்க ஜப்பானில் புதுமையான திட்டம்!

சமீபத்தில், ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும், சுனாமியும், அந்த நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. அணு மின் நிலையங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால், அங்கிருந்து கதிர் வீச்சு பரவி, சுற்றுச் சூழலுக்கு பெரும் கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அங்கு கடுமையான மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்களில், மற்ற நாடுகளுக்கு எப்போதுமே முன் மாதிரியாக செயல்படும் ஜப்பானியர்கள், இந்த விஷயத்திலும் அந்த போக்கை பின்பற்றத் துவங்கி விட்டனர். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், மின்சாரத்தை சேமிக்கும் வகையிலுமான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் குளிர்சாதன வசதி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

குளிர்சாதன வசதி இல்லாத நேரத்தில், எப்படி இருப்பது என்பதற்கும், சில ஆலோசனைகளை ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான, காற்றோட்டமான உடைகளை அணிந்து வரும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறுக்கம் இல்லாத டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்து வருவதற்கு ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கழுத்தில், "டை' அணிந்து வருவதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பெண் ஊழியர்கள், கால்களை முழுவதும் மறைக்கும் வகையிலான, "ஷூ'க்களை அணிய வேண்டாம் என்றும், சாதாரண செருப்பு மற்றும் ஷூக்களை அணிந்து வரும்படியும் கூறப்பட்டுள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, "கேட்வாக்' நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், 15 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும் என்கின்றனர், ஜப்பான் அதிகாரிகள். தங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்ட போதே, அசராமல் எழுந்து நின்று, சாதித்துக் காட்டிய தன்னம்பிக்கை மிக்கவர்கள் ஜப்பானியர்கள். அவர்களை இந்த சுனாமி என்ன செய்து விடும்?
— ஜோல்னா பையன். 



தலையங்கம்: பாழாகும் விளைநிலங்கள்!

சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்திருப்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். உண்மைதான். கடந்த இரு ஆண்டுகளாக உணவு உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. உணவுப் பொருள் கையிருப்பும்கூட வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது.


உணவு மற்றும் விநியோக அமைச்சகத்தின் அறிக்கையில் அரிசி கையிருப்பு 268 லட்சம் டன், கோதுமை கையிருப்பு 371 லட்சம் டன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 639 லட்சம் டன். இந்த அளவு வழக்கமான கையிருப்பாகிய 319 லட்சம் டன் உணவு தானியத்தைப்போல இரு மடங்கு! உணவுப் பொருள்கள் தற்போது கையிருப்பில் உள்ளதென்பது பிரதமருக்கு மட்டுமல்ல, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்திதான்.

இருப்பினும், இந்த வேளையில் நிகழ் நிதியாண்டில் இதுநாள் வரை உர நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உர மானியத்தின் அளவைப் பார்க்கும்போது மலைப்பாக இருப்பதோடு, கவலை தருவதாகவும் இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

இந்த உர மானியம் நேரடியாக உர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்போது, இதனால் நிறுவனங்கள் அடையும் லாபம் அதிகமாகவும், விவசாயி பெறும் நன்மை குறைவாகவும் உள்ளது என்பது முதல் காரணம்.

மானிய விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை மிக அதிகமாகப் போட்டு இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தைப் பாழாக்கி விட்டார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால், இதே உற்பத்தி நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என்று வேளாண் வல்லுநர்கள் தரும் தகவல்கள் இரண்டாவது காரணம்.

யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட் என அடிப்படை உரங்களுக்காக இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் 2009-10-ம் ஆண்டில் ரூ. 64,032 கோடி, 2010-11-ம் ஆண்டில் ரூ. 65,836 கோடி என்று உர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டாலும், இவை விநியோகத்துக்கு வந்து, விவசாயிகளைச் சென்றடையும்போது, அரசு நிர்ணயிக்கும் விலையைவிட அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலைதான் இன்றளவும் உள்ளது. இதற்காக எத்தனை புகார்கள், போராட்டங்கள் நடைபெற்றாலும் விவசாயி அதிக விலை கொடுப்பதும், உரங்கள் பதுக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்த உர நிறுவனங்கள் தரமான உரங்களைத் தயாரிப்பதில்லை என்கிற புகார்கள் ஒருபுறம், இவை தொழில்நுட்பத்தைப் புதுப்பிக்காமல் பழைய நிலையிலேயே உரங்களைத் தயாரித்து, சுற்றுச்சூழல் மாசுக்குக் காரணமாகின்றன என்பது இன்னொருபுறம். ஆனால், அதுபற்றி அரசு எந்தக் கவலையும் கொள்வதில்லை.


ரசாயனத் துறை மற்றும் உரங்கள் அமைச்சகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, சந்தை மதிப்பில் யூரியாவின் அதிகபட்ச விலையான ரூ.5,310 (ஒரு டன்) என்பதில் விவசாயிக்கு 27 முதல் 58 விழுக்காடு வரை பயன் கிடைக்கும் வகையில் மானியம் அளிக்கப்படுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த அதிகபட்ச விற்பனை விலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள், எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம்.

இந்திய விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உர ஆலைகளுக்கே நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவரச் சொல்லப்பட்ட காரணம், இந்தியா முழுவதும் சிதறியுள்ள விவசாயிகளுக்குத் தனித்தனியாக மானியம் நேரடியாகக் கிடைக்கச் செய்வது இயலாது என்பதுடன், அது ஊழலில் போய் முடியும் என்பதுதான். அதனால்தான் உர நிறுவனங்களுக்கே நேரடியாக மானியத்தை அளிக்க முடிவு செய்தது அரசு.


உரத்தின் அதிகபட்ச விலையைத் தீர்மானிக்கும்போது, அந்த நிறுவனத்தின் முதலீட்டுக்கு, வரிக் கழிவுகள் நீங்கலாக, 12 விழுக்காடு லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த அடிப்படையில்தான் உர நிறுவனங்களால் இந்த விலைகள் தீர்மானிக்கப்படுகின்றனவா என்பது பரம ரகசியம். அது பற்றிய கேள்விகள் எழாமல் இருப்பதற்காகவோ என்னவோ, உர நிறுவனங்கள் தங்களுக்கு 3 விழுக்காடு லாபம்தான் கிடைக்கிறது என்று தங்களுக்கான ஆதரவுக் குரலைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன, மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

விவசாயியின் நன்மைக்காகவும், உணவு உற்பத்தியை உறுதி செய்வதற்காகவும் உரத்துக்கு அரசு அளிக்கும் மானியத்தை, உர நிறுவனங்கள் அதிகமாகவே பெற்று நன்றாக இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை. இந்த உரத்தை, குறிப்பாக யூரியா உரத்தை, சலுகை விலையைவிடக் கூடுதலான விலைக்கு வாங்கி நிலத்துக்குப் போட்டு, தானும் பாழாகி, நிலத்தையும் பாழாக்கிக்கொண்டு வருகிறார்கள் நமது விவசாயிகள் என்பதும் கசப்பான உண்மை. இதுபற்றி எந்தவிதமான விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது அதைவிடக் கொடுமையான உண்மை.


இந்திய விளைநிலங்களில் யூரியாவின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால், நமது விளைநிலங்களின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3.4 டன் நெல் உற்பத்தியாகிறது என்றால், சீனாவில் இதே ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6.5 டன் நெல் உற்பத்தியாகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய விவசாயிகள் உரத்தை அதிகமாகப் போட்டதுதான் என்கிறார்கள்.

இந்த உர மானியத்தை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் அதே நேரத்தில், பாரம்பரிய வேளாண்மைக்கு இந்த மானியத்தை கொண்டுபோய்ச் சேர்த்து ஊக்கப்படுத்தவும் பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்கும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்தவும் தேவையான முயற்சிகளை அரசும், ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கி விட்டால், விளைநிலங்கள் முற்றிலும் பாழாகிவிடும் முன்பாக மீட்டு விடலாம். விவசாயியும் மீட்கப்படுவார். விவசாயி வாழ்ந்தால் மட்டும்தான் நாடு வாழும்! 

நன்றி: www.dinamani.com  -  23-Aug-2011






Wednesday, August 3, 2011

ஆக., - 2 ஆடிப்பூரம், 3-ஆடிப்பெருக்கு!



குருஷேத்ர போர்க்களத்தில், தன் உறவினர்கள் மீது, அர்ஜுனன் அம்பு விட தயங்கிய நேரத்தில், "அர்ஜுனா... தர்மம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அங்கே உறவுகளுக்கு இடமில்லை. இந்த உலகமே நான் தான். கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே! உடல் தான் அழியும், அதற்குள் இருக்கும் ஆத்மா, தன் வினைகளுக்கேற்ப இன்னொரு பிறவியை எடுக்கும். எவனொருவன் என்னைச் சரணடையும் சரணாகதி தத்துவத்தைக் கடைபிடிக்கிறானோ, அவனே பிறவியைக் கடந்த நிலையை அடைவான்...' என்றெல்லாம் போதித்தார்.
இந்த நிகழ்வு நடந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன; ஆனால், உலக மக்களிடையே மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. சரணாகதி தத்துவத்தை அவர்களுக்கே உரித்தான எளிய நடையில் கற்பிக்க, திருமால் முடிவெடுத்தார். அதற்காக, தன் மனைவி லட்சுமியிடம், "நீ பூலோகம் சென்று, இறைவனைச் சரணடைந்தால் தான் முக்தி நிலை கிடைக்கும்...' என்ற தத்துவத்தைப் போதிக்கும் வகையில் ஒரு பிறப்பை எடு...' என்றார்.
லட்சுமி மறுத்து விட்டாள். "ஏற்கனவே, சீதையாக அவதாரம் எடுத்து, என்னைத் தாங்கள் படுத்திய பாடு போதாதா... இனியும் மனிதப் பிறவியா? வேண்டாம் சாமி; ஆளை விடுங்கள்...' என, ஒதுங்கிக் கொண்டாள். தன் இன்னொரு மனைவி பூமாதேவி பக்கம் சுவாமி திரும்பினார்; அவர் பார்வைக்கென்றே அவள் காத்திருந்தது போல், உடனே சம்மதித்து விட்டாள்.
"எங்கே போய் பிறக்கப் போகிறாய்?' என்று கேட்டதற்கு, "உங்கள் முடிவுப்படி தான் எல்லாம் நடக்கப் போகிறது; எனவே, அதெல்லாம் உங்கள் கையில்...' என்று பிறக்கும் முன்பாகவே, திருமாலிடம் சரணடைந்து விட்டாள் அவள்.
பூலோகத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் அழகிய தலத்திலுள்ள துளசி வனத்தில், விஷ்ணுசித்தர் எனும் பக்தரின் பார்வையில் படும்படி குழந்தையாகப் படுத்திருந்தாள். இவரையே, "பெரியாழ்வார்' என்கிறோம். அவர், அவளைத் தன் மகளாக ஏற்று, "கோதை' என பெயர் சூட்டி வளர்த்தார். "கோதை' என்றால், "நல்வாக்கு தருபவள்' என்று பொருள். ஆம்... அவள் திருமாலை வணங்க, "மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...' எனத் துவங்கும், "திருப் பாவையை' நமக்கெல்லாம் அருளியிருக்கிறாள்; இதை, "வேதத்தின் சாரம்' என்பர். வேதத்தைக் கற்றுக் கொள்ளும் தகுதி எல்லாருக்கும் இல்லை. அதை எளிமைப்படுத்தி, முப்பது பாடல்களுக்குள் அடைத்து விட்டாள் கோதை.
எல்லாருக்கும் நல்ல பெயரை சூட்டியுள்ளனர் நம் பெற்றோர்; அந்த பெயருக்கேற்றாற் போல் நாம் நடந்து கொள்ள வேண்டும். அரிச்சந்திரன் என்று பெயர் வைத்துக் கொண்டவன், பொய் சொன்னால் நன்றாக இருக்குமா? ஆனால், கோதை, தன் பெயரின் பொருளுக்கேற்ப, நல்வார்த்தைகள் கொண்ட பாடல்களைத் தந்து, உலகமே இறைவனை அடைய வழிகாட்டினாள். அவளது அவதார நாளே ஆடிப்பூரம். இந்த நன்னாளில், ஆண்டாளைப் போல நாமும், நம் பெற்றோரின் பெயர் காக்க உறுதியெடுக்க வேண்டும்.
இவ்வாண்டில், ஆடிப்பூரத்திற்கு மறுநாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதுண்டு. குறிப்பாக, புதுமணத் தம்பதியர் காவிரியில் நீராடி, அந்த அன்னைக்கு பூ, பழம் முதலானவை அளித்து வழிபட்டு வருவர்.

அகத்தியரால் நமக்கு அளிக்கப்பட்ட வரமே காவிரி. மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பர். அகத்தியர் உருவத்தில் சிறியவர் என்றாலும், நமக்கு அவர் அளித்த நதியோ மிக நீண்டது. ஏராளமான மக்களுக்கு உணவளித்து தாகம் தீர்க்கும் புண்ணிய நதி இது. நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே, ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னோர் உருவாக்கினர்.
இந்த திருவிழாவை தமிழகமே கொண்டாட வேண்டும். காவிரி மட்டுமல்ல, தமிழகத்தின் பிற நதிகளும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை. நதிகளை அழிப்பதன் மூலமே எதிர்கால சந்ததிக்கு நாம் இன்னலை ஏற்படுத்திய பாவத்திற்கு ஆளாவோம். ஆடிப்பூர நன்னாளில், அவதரித்த பூமித் தாயையும், ஆடிப்பெருக்கு நன்னாளில், பெருக்கெடுக்கும் காவிரி தாயையும் வணங்கி, அவர்களின் நல்லருள் பெறுவோம்.
 
நன்றி: www.dinamalar.com - ஜூலை 31,2011

Friday, June 10, 2011

தலையங்கம்: பேச்சைக் குறை...!


மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல். புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.  

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.  

14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது. 2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. 

 இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்! 

 உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன. அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.

செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது.  

அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம். 

 இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட-செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை- பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .  

நன்றி: www.dinamani.com  -  10-Jun-2011

Saturday, May 7, 2011

தலையங்கம்: நீரின்றி அமையாது...

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா உலக வல்லரசாகிறதோ இல்லையோ, மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்க இருக்கிறது. பனிபடர்ந்த இமயமலைச் சாரலில் உள்ள பல கிராமங்களில்கூட சமீபகாலமாகத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏன்? ஆண்டு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும் என்று நாம் பூகோளப் பாடத்தில் படித்த சிரபுஞ்சியில் குடிநீர் தட்டுப்பாடு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுதான் எதார்த்த நிலைமை. 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஏறத்தாழ 250 லட்சம் நீர்நிலைகள் இருந்ததுபோக, இப்போது முறையாகப் பாதுகாக்கப்படும் நீர்நிலைகளின் எண்ணிக்கை வெறும் 40,000 மட்டுமே என்கிறது சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கை ஒன்று. 2008-ல் "நாசா' நடத்திய ஓர் ஆய்வின்படி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், பிகார் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிவேகமாகக் குறைந்து வருவதாகவும், அது மழையால் முழுவதுமாக ஈடுகட்டப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவின் மொத்த நீர் வரவு 1,123 பில்லியன் கியூபிக் மீட்டராகத் தேக்கமடைந்திருக்கும் நிலையில், சுமார் 800 பில்லியன் மீட்டர் தேவை அதிகரித்திருக்கிறது. இது மேலும் அதிகரித்தவண்ணம் இருப்பதால் உற்பத்தியாகும் தண்ணீர் நமது தேவைக்குப் பற்றாக்குறையாகவே தொடர்கிறது. இப்போதே இந்தியாவின் பல பகுதிகள் வறட்சிப் பிரதேசங்களாக மாறிவிட்டிருப்பதன் காரணம் இதுதான். 

நகர்ப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் இதற்கு முக்கியமான காரணம். நீர் மேலாண்மை என்பதற்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிட்டதால், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கிரிமினல் குற்றமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. சொல்லப்போனால், மாநில அரசுகளேகூட இந்த ஆக்கிரமிப்பை நடத்தி முன்னுதாரணமாகத் திகழும்போது, பொதுமக்களை மட்டும் குற்றம் சொன்னால் எப்படி?

அநேகமாக எல்லா மாநிலங்களிலும், பல பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது நீர்நிலைகளின் மீதுதான். அரசு அலுவலகங்கள் பல குளங்களையும், ஏரிகளையும் நிரப்பிக் கட்டப்பட்டவை என்பது உலகறிந்த உண்மை. வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை அமைப்பதில் தொடங்கி, நீர்நிலைகளில் மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளராக இருப்பது அரசாங்கம் எனும்போது, அரசியல் செல்வாக்குப் படைத்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களும் நீர்நிலைகளையும், ஏரிகளையும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க இயலாமல் போய்விட்டது. 

நகர்ப்புறங்களில் நடக்கும் குடிதண்ணீருக்கான போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, விவசாயிகளின் பாடு அதைவிடத் திண்டாட்டம். சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளாகியும் இன்னும் முறையான நீர் மேலாண்மைக்கான திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் ரூ. 1,20,000 கோடி செலவழித்திருக்கிறோமே தவிர, இன்னும் இந்தியாவிலுள்ள 30% விளைநிலங்கள்தான் பாசன வசதி பெற்றவை என்கிற புள்ளிவிவரம் தலைகுனிய வைக்கிறது. எங்கே போயிற்று இத்தனை கோடி மக்களின் வரிப்பணம் என்று கேள்வி கேட்கக்கூட ஆளில்லாத நிலைமை.

திட்டக் கமிஷன் இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது. திட்டக் கமிஷன் உறுப்பினரான மிகிர் ஷா என்பவரை நீர் மேலாண்மைக் கொள்கையை வரையறுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் பணித்திருப்பதாகத் தெரிகிறது. 

விவசாய நீர் மேலாண்மையைப் பொறுத்தவரையில், மகாராஷ்டிரம் இந்தியாவுக்கு முன்மாதிரியாகப் பல பரிசோதனைகளைச் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்தச் சோதனைகள் அனைத்தையுமே செய்பவர்களும், செய்து வெற்றி பெற்றிருப்பவர்களும் காந்தியவாதிகளான மோகன் தாரியா, அண்ணா ஹஸôரே போன்றவர்கள். "பானி பஞ்சாயத்' (தண்ணீர் பஞ்சாயத்துகள்) என்று ஆங்காங்கே அமைக்கப்பட்டு, நீர்நிலைகளைத் தூர்வாருவது, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை நிறைவேற்றுவது, கால்வாய்களுக்கு சிமென்ட் பூசப்பட்டு கசிவைத் தடுப்பது என்று அவை செயல்படுகின்றன.

1960-ல் கிருஷ்ணா நதியின் தண்ணீர் உற்பத்தி 57 பில்லியன் கியூபிக் மீட்டராக இருந்தது. இப்போது, அநேகமாக ஒன்றுமே இல்லாத நிலைமை. 1892-ல் 1,85,000 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர்வரத்து இருந்த சிந்து நதியின் நீர்வரத்து 1990 புள்ளிவிவரப்படி வெறும் 12,300 மில்லியன் கியூபிக் மீட்டர் மட்டுமே. யமுனை நதி அநேகமாக வற்றிவிட்ட நிலைமை. ஆக்கிரமிப்புகளாகவும், கழிவு நீர் கலப்பதாலும் அதை நதி என்று அழைப்பதைவிடச் சாக்கடை என்று அழைக்கலாம் போலிருக்கிறது. 

தட்பவெப்பநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு என்று இமயமலையிலுள்ள பனிச்சிகரங்கள் பாதிக்கப்பட்டு கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா நதிகள் மெல்ல மெல்ல வற்றத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நீர்நிலைகளில் 36% நச்சுக் கழிவுகள் கலப்பதால் குடிநீராகப் பயன்படுத்தும் தகுதியை இழந்துவிட்டிருக்கின்றன.

2020-ல் இந்தியாவின் தண்ணீர்த் தேவை சுமார் 1,000 பில்லியன் கியூபிக் மீட்டர்களாகவும், மொத்த நீர்வரத்து வெறும் 700 பில்லியன் கியூபிக் மீட்டர்களாகவும் இருக்கப் போகிறதே, நாம் என்ன செய்யப் போகிறோம்? 

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என்று எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில், அவர்கள் பகுதியிலுள்ள, இன்னும் ஆக்கிரமிப்புக்கு உள்படாத, நீர்நிலைகளையும், கோயில் குளங்களையும் முறையாகத் தூர்வாரிச் செப்பனிட்டுப் பாதுகாத்தாலேகூட ஓரளவுக்கு நாம் சமாளிக்க முடியலாம்.

இனியும் தாமதிக்காமல், அரசு ஆறுகளில் மணல் அள்ளும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தால், மக்கள் மத்தியில் தண்ணீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், சமாளிக்க முடியலாம். 

இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால், நீர்நிலைகள் வற்றுவதுபோல நமது தொண்டைகளும் வற்றக்கூடும்!


நன்றி: www.dinamani.com  -  07-May-2011

Friday, April 15, 2011

சிட்டுக்குருவி பற்றி உனக்கு சேதி தெரியுமா?


First Published : 14 Apr 2011 12:34:00 AM IST

உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 அன்று சந்தடியின்றி கடந்து சென்று விட்டது. ஏன் இந்தச் சிறிய பறவைக்கு உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது? காரணம் இருக்கிறது. உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில்தான் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சிட்டுக்குருவிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் அதன் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும் தான் இந்த நாள் உலக சிட்டுக்குருவிகள் நாளாக 2010-ம் ஆண்டிலிருந்து மார்ச் 20 அன்று நினைவுறுத்தப்படுகிறது.
மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக்குருவிதான்.

உலகம் போற்றும் பறவையியலார் டாக்டர் சலீம் அலி சிறுவனாக இருந்தபோது தன் வீட்டில் சிட்டுக்குருவிக் கூட்டில் இருந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகளின் அழகில் மயங்கி, பின்னாளில் தன் வாழ்நாளையே பறவைகள் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். அந்தப் பறவையியல் மாமேதையை இந்தியாவுக்குத் தந்ததும், உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.

உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தச் சிட்டுக்குருவிகள் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது.

முதன்முதலில் வட அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மற்றும் நியூயார்க் நகரங்களில் 1851, 52-ம் ஆண்டுகளில் இவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதற்கு முக்கிய காரணம், அவைகள் பூச்சியினங்களைப் பிடித்துச் சாப்பிட்டு, உணவுத் தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், உண்மையில் இளம் குஞ்சுகளுக்கு உணவூட்ட மட்டுமே அவைகள் பூச்சிகளைப் பிடித்து வருகின்றன.

பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.

கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும். ஆனால், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனோ, அழகோ அதன் வடிவமைப்பில் உள்ள நேர்த்தியோ இவை கட்டும் கூடுகளில் இருக்காது.
பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.

மனிதனோடு நெருங்கிப் பழகுபவை என்று அறியப்பட்ட சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன.

சிதறும் தானியங்கள்தான் இந்தச் சிங்கார சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு. இன்று நவீனமயமானதன் விளைவு, எல்லா தானியங்களும் ஆலைகளிலேயே கல், மண் நீக்கிய பிறகு உடனே சமையல் செய்யும் விதமாக பாலிதீன் பைகளில் வந்துவிட்டன.
முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கி , புடைத்து உணவு சமைக்க உதவுவாள் அன்றைய பாட்டி. இன்றைய பாட்டி கருணை இல்லங்களில் அடைக்கலமானதால் இன்று பாட்டியும் இல்லை. முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை.

இரண்டாவதாக, தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன.

முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். நமது வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள செடிகளையெல்லாம் அழித்து கான்கிரீட் காம்பவுண்டுகளாக மாறிவிட்ட நகரச்சுழலில் எங்கே புதர்ச் செடிகளையும், உயிர் வேலிகளையும் காண முடிகிறது?அதையும் மீறி இப்போது நகரங்களில் காணப்படும் தோட்டங்களில் அழகுச்செடிகள் என்ற போர்வையில் வேற்றிடத்துத் தாவர இனங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக, நமது நாட்டுத் தாவரங்களும், புற்களும் இல்லாததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன.
மிக முக்கியமாக விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நாம் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம். ஆம், நாம் சிட்டுக்குருவிகளின் செல்லக் குழந்தைகளுக்கு உணவாக உள்ள பூச்சிகள், புழுக்களை பூச்சிக்கொல்லிகள் பதம் பார்த்து விடுவதால் அங்கே அவற்றுக்கு நிரந்தரமான உணவுப் பஞ்சம். சிட்டுக்குருவிகள் யாரிடம்தான் முறையிடும்?

மூன்றாவதாக, உணவுக்குத்தான் இப்படிப் போராட்டம் என்றால் மனிதனின் குறுகிய சிந்தனையின் விளைவாக கான்கிரீட் காடுகளாகிவிட்ட நிலையில் சிட்டுக்குருவிகள் எங்கே போய் வீடு கட்ட முடியும்? அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிய வீடுகள், எப்போதும் மூடியே இருக்கும். முழுவதும் மூடிய வீட்டுக்குள் எப்படி இவைகள் புதுக்குடித்தனம் புகுந்து குடியிருக்க முடியும்?

நான்காவதாக, இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு தன் சிறிய கூட்டைக் கட்டி வாழ்க்கையைத் தொடங்கலாம் என நினைத்தால் அங்குதான் சிட்டுக்குருவிகளுக்கு காத்திருக்கிருக்கிறது பேரதிர்ச்சி.
மனிதனின் நாகரிக வளர்ச்சியில் கைப்பேசி பிரதானமாகிவிட்டது. இவைகள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. மாநகரங்கள், நகரங்களில் கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதன் விளைவு கைப்பேசி கோபுரங்களில்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது.

கைப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியிடப்படும் "மின்காந்தக்' கதிர்வீச்சுகள் பறவைகளின் முட்டைகளை அதன் கருவிலேயே பதம் பார்த்து வருவதாக ஆராய்ச்சிகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

கைப்பேசிக் கோபுரங்கள் வெளியிடும் மிகக் குறைந்த அளவு கதிரியக்க அதிர்வலைகள் 900 முதல் 1,800 மெகாகர்ஸ். இவை மைக்ரோ அலைகள் என்று சொல்லக்கூடிய மின் காந்த அலைகள் என அழைக்கப்படுகின்றன.

இவை முட்டையின் மேல் தட்டின் கடினத்தன்மையை முற்றிலும் பாதித்து ஒரு மெல்லிய சவ்வு போன்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கைப்பேசிக் கோபுரங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவை பறவையினத்துக்கும் தேனீக்களுக்கும் அடிக்கப்பட்ட சாவு மணியாகின்றன.

ஏனெனில் பறவைகள் மிகவும் நுண்ணறிவு கொண்டவை. இந்த மின்காந்த அலைகள் பறவைகளின் உணர்வுத் திறனைப் பாதித்துத் தவறாக வழிகாட்டி தங்கள் உணவைத் தேடுவதில் சிக்கல் ஏற்படுத்தி மற்ற உயிரினங்களுக்கு எளிதில் உணவாக்கி விடுகின்றன.

சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் உதவியுடன் எந்தச் செலவுமில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகள் பெருகி பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், நாம்தான் அதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் ரசாயன பூச்சிக்கொல்லிகள்தான் ஒரே தீர்வு என தவறாகப் புரிந்துகொண்டு நம் மண்ணையும், நம் வாழ்வையும் நஞ்சாக்கி வருகிறோம்.

அழிவது சிட்டுக்குருவிகள்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்த அபாய ஒலியாகப் பாவித்து நம் குழந்தைகளுக்குச் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அவைகளைப் பாதுகாக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தானியங்கள், கொஞ்சம் தண்ணீர். அவை உங்கள் வீட்டில் தங்குவதற்கு ஒரு சிறிய பெட்டி. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நாட்டுச் செடிகள். மரம் நடும்போது மறந்தும் அழகுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வேற்றிடத்து மரங்களை நட வேண்டாம். பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் அறவே தவிர்த்திடுவோம். இயற்கை முறையில் பயிரிட முயல்வோம். இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம். சிட்டுக்குருவிகள் பாதுகாப்பின் அவசியத்தை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அவர்களை இதில் ஈடுபடுத்துவோம்.
கிராமங்களில் அன்று, சிட்டுக்குருவிகள் தங்கள் வீடுகளில் கூடு கட்ட ஆரம்பித்தால், அதைப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். அவைகள் கட்டும் கூட்டுக்குக் குழந்தைகளால் எந்தவிதமான ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

சிட்டுக்குருவிகள் என்னும் இந்த சின்னத் தேவதைகள் தங்கள் வீட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என திடமாக நம்பினார்கள். இது கோடைகாலம் ஆதலால் சிட்டுக்குருவிகள் முதல் மற்ற பறவைகள் வரை உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவியாய்த் தவித்துப் போகின்றன. இந்த அடைக்கலத்தான் குருவிகள் மனிதரிடம் அடைக்கலம் வேண்டி நம் வீட்டின் கதவைத் தட்டி நிற்கின்றன. இவ்வளவு கஷ்டங்களிலும் இந்தச் செல்லச் சிட்டுகள் நம்மிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் செலவில்லாத சின்ன விஷயங்களை மட்டும்தான்.

நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் தானியம், கொஞ்சம் தண்ணீர், தங்க சிறிய இடம், முடிந்தால் சிறிய இயற்கை காய்கறித் தோட்டம், அப்புறம் பாருங்கள் இந்தச் சின்னச் சிங்காரத் தேவதைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். அத்துடன் உங்கள் குடும்பத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டுவரும்.

(கட்டுரையாளர்: பசுமை உயிரினப்பன்மை சரணாலயத்தின் செயல் இயக்குநர்.)

நன்றி: www.dinamani.com